Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தூக்கம் – தூக்கமின்மை-மனமின்றி அமையாது உலகு 21

மருத்துவர்
சிவபாலன் இளங்கோவன்
மனநல மருத்துவர்

தூக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை. சமீப காலங்களில் தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. நாம் பார்க்கும் மனிதர்களில் மூன்றில் ஒருவருக்குத் தூக்கம் சார்ந்த ஏதேனும் ஒரு பிரச்சினையாவது இருக்கும் என்கின்றன தூக்கம் தொடர்பான சர்வதேச அமைப்புகள்.

தூக்கத்தைப் பற்றி நாம் நிறைய புரிந்து வைத்திருக்கிறோம். தூக்கம் தொடர்பாக நம்மிடம் ஏராளமான கருத்துகள் உள்ளன. நம்பிக்கைகள் உள்ளன. தினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? எப்படி தூங்க வேண்டும்? தூங்கவில்லை என்றால் என்ன ஆகும்? என்ற அத்தனை கேள்விகளுக்கும் நம்மளவில் ஒவ்வொரு விளக்கம் கொடுப்போம். ஆனால், தூக்கம் பற்றிய பெரும்பாலான எண்ணங்கள் தவறானவையே என்கின்றன ஆய்வுகள். தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருவதற்கு தூக்கம் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கைகளும், அதற்காக கறாராக நாம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளும் முக்கியமான காரணங்கள்.

இன்றைய நாளில் தூக்கம் தொடர்பாக தெரிந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உண்மையில் அவற்றை நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் இல்லையென்றால் “எட்டு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களா நீங்கள்? முதலில் இதைப் படியுங்கள்” போன்ற ஏதாவது உணர்ச்சிப்பூர்வமான போலி அறிவியல் செய்திகளுக்கு நாம் பலியாக நேரிடும்.

பல பொய்யானச் செய்திகளால் அவர்கள் தூக்கத்தைப் பற்றி பெரும் கலக்கத்தை அடைந்திருக்கிறார்கள். தூங்காததை விட தூங்கவில்லையே என்ற கவலை அவர்களைக் கொல்கிறது. எந்த நேரமும் இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘நலமாக இருப்பது எப்படி?’ என்ற விவாதங்கள் பொதுமக்கள் மத்தியில் பரவலாகி வரும் காலகட்டத்தில் தூக்கமும், தூக்கமின்மையும் விவாதப் பொருளாகியிருக்கின்றன. மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் ஆரோக்கியத்தைத் தூக்கத்தை வைத்தே மதிப்பிடுகிறார்கள். நிம்மதியான தூக்கம் என்பது ஒட்டு மொத்த
உடலின் சீரான செயலோடு இணைத்து பார்க்கப்டுகிறது, சரியான தூக்கம் இல்லையென்றால் அது வெறும் தூக்கமின்மையாக மட்டும் பார்க்கப்படுவதில்லை ஒட்டு மொத்த ஆரோக்கியமின்மையாகவும் பார்க்கப்படுகிறது. இதில் ஓரளவிற்கு உண்மையும் இருக்கிறது.

தூக்கம் என்பது ஒரு நல்வாழ்க்கையின் அளவீடு. இங்கு நலம் என்பது உடல் நலம் மட்டுமே அல்ல. உடல், உள்ளம் மற்றும் சமூகத்தின் நலமே முழுமையான நலம். ஒருங்கிணைந்த உடல், உள்ளம், சமூகத்தின் ஆரோக்கியம் சரியாக இருக்கிறபோது தூக்கமும் சரியாக இருக்கும், இவற்றில் ஏதாவது பிரச்சினைகள் வரும்போது தூக்கமும் பாதிக்கும். எனவே, தூக்கமின்மைக்குக் காரணம் உடலிலும் இருக்கலாம், உள்ளத்திலும் இருக்கலாம், சமூகத்திலும் இருக்கலாம்.

அன்றாட வாழ்க்கையில் நாம் ஏராளமான சவால்களைக் கடந்து வருகிறோம், தினமும் நிறைய பிரச்சினைகளை எதிர் கொள்கிறோம், அதன் காரணமாக பல்வேறு மனவுளைச்சலுக்கு ஆளாகிறோம். ஆனால், ஒவ்வொரு நாள் முடியும்போதும் ஏதாவது ஒரு நம்பிக்கையுடன் தான் தூங்க செல்கிறோம். நாம் சந்திக்கும் பிரச்சினைகளையும் தாண்டி நமது குடும்பமும், நண்பர்களும், இந்தச் சமூகமும் ஏதாவது ஒருவகையில் நமக்கு பக்கபலமாக இருப்பதாக நினைப்பதன் வழியாகவே நாம் இந்த நம்பிக்கையைக் கொள்கிறோம். அன்றைய நாளின் அடுக்கடுக்கான சிக்கல்களையும் தாண்டி அடுத்த நாள் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் தான் நமக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கின்றன. எவ்வளவு நேரம் தூங்கினாலும் கூட தூக்கம் தொடர்பாக நாம் திருப்தி கொள்வதற்கு இந்த நம்பிக்கைகள் தேவையானதாக இருக்கின்றன.

ஒருவேளை இந்த நம்பிக்கைகள் எதுவும் இல்லாத சூழலில் நம்மால் நிம்மதியாக உறங்க முடியாது. அப்போது நீண்ட நேரம் உண்மையில் தூங்கினாலும் கூட, அந்தத் தூக்கம் நமக்குப் போதுமானதாக இருக்காது. அது தான் தூக்கத்தின் தனித்த இயல்பு. தூக்கம் என்பது எவ்வளவு நேரம் என்பதில் அல்ல, எவ்வளவு திருப்தி என்பதில் தான் இருக்கிறது. இந்த திருப்தியைத் தூங்கும் நேரம் மட்டும் கொடுக்காது, நல்ல மனநிலை தான் கொடுக்கும்.

தூக்கத்திற்கென்று சில விதிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது தூக்கம் என்பது இயல்பாக வரக்கூடியது. எந்த ஒரு மெனக்கெடலும் அல்லாமல், எந்த வித முயற்சியும் இல்லாமல் திடீரென பெய்யும் மழை போலத்தான் தூக்கமும். எந்த வித சஞ்சலமுமற்ற நிம்மதியான மன நிலையில் தூக்கம் இயல்பாக வந்து உங்களைத் தழுவிக்கொள்ளும். அதே நேரத்தில் தூங்குவதற்கு என்று நீங்கள் முயற்சி செய்தால், அதைப் பற்றிக் கவலைப்பட்டால் தூக்கம் உங்களை விட்டு விலகிச் செல்லும். இன்னும் எளிதாகச் சொல்ல
வேண்டுமென்றால், தூங்க வேண்டும் என்று நீங்கள் கவலைப்படும்போது தூக்கம் வராது, தூக்கத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத நேரத்தில் தூக்கம் அத்தனை இயல்பாக வந்து சேரும்.

சமீப காலங்களில், இப்படிதூக்கத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பல பொய்யானச் செய்திகளால் அவர்கள் தூக்கத்தைப் பற்றி பெரும் கலக்கத்தை அடைந்திருக்கிறார்கள். தூங்காததை விட தூங்கவில்லையே என்ற கவலை அவர்களைக் கொல்கிறது. எந்த நேரமும் இதைப் பற்றியே யோசித்துக் கொண்டி
ருக்கிறார்கள். தூக்கம் தொடர்பாக வேறு வேறுசெய்திகளை, காணொளிகளைத் தொடர்ந்து பார்க்கிறார்கள், போதாதற்கு நவீன ஸ்மார்ட் வாட்ச், செல்போன் போன்றவற்றை வைத்து தங்களது தூக்கத்தைக் கண்காணிக்கிறார்கள், அதில் வரும் முடிவுகளைப் பார்த்து பதற்றமடைகிறார்கள். ஒரு கட்டத்தில் மாலை வேளை வந்தாலே இவர்களுக்குப் படபடப்பு வந்து விடுகிறது, “இன்றைக்காவது தூங்குவோமா?” என்ற கேள்வி மனதைப் போட்டு அரிக்கிறது. இப்படி ஒரு மனநிலையில் இயல்பான தூக்கம் எப்படி வரும்? இவர்களுக்குத் தூக்கம் பிரச்சினை அல்ல, தூங்கவில்லையென்ற கவலையும்,பயமும் தான் பிரச்சினை. இவர்களுக்கு நான் எப்போதும் சொல்வது ஒன்று தான் “எவ்வளவு
நேரம் தூங்குகிறோம் என்பதைப் பார்க்காதீர்கள், எவ்வளவு திருப்தியாகத் தூங்கினோம் என்பதே முக்கியமானது”. தூக்கத்தைப் பற்றிக் கவலை கொள்வதை நிறுத்தினாலே போதும் தூக்கம் நன்றாக வரும். அப்படி வரும் தூக்கமே போதுமானது, திருப்தியானது”.