Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இறுதி வெற்றி நமதே!- முனைவர் வா.நேரு

08.04.2025, ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்று தமிழ் நாட்டு வீதிகளில் எல்லாம் மக்கள் இனிப்புக் கொடுத்துக் கொண்டாடினார்கள். தமிழ்
நாட்டு ஆளுநரின் ஆணவப் போக்கிற்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினைக் கொண்டாடித் தீர்த்தது, தமிழ்நாடு.

தமிழ்நாட்டுப்  பல்கலைக்கழகங்களின் வேந்தர் இனி முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் உணர்ச்சிபொங்க இந்தத் தீர்ப்பினைச் சட்டப்பேரவையில் அறிவித்தார்கள். 92 வயதாகும் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று முதலமைச்சர் அவர்களை உச்சி முகர்ந்து பாராட்டி, பொன்னாடை போர்த்தியிருக்கிறார்கள். அனைத்துக் கட்சித்தலைவர்களும், சங்கிகள் தவிர அனைவரும் இந்தத் தீர்ப்பினை வரவேற்று, முதலமைச்சரைப் பாராட்டி இருக்கிறார்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

ஏன் தமிழ்நாட்டு மக்கள் மனதில், தலைவர்கள் மனதில்  இவ்வளவு மகிழ்ச்சி? ஏன் இப்படி எல்லோரும் கொண்டாடுகிறார்கள் என்று கேட்டால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான, கல்விக்கான பெரிய தடை நீங்கியிருக்கிறது.புறவாசல் வழியாக வந்து நம் பிள்ளைகளின் கல்வியில் மண்ணைப்போட முயற்சித்தவர்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. புதிய கல்விக்கொள்கை, நீட் நுழைவுத்தேர்வு, இந்தியை ஏற்காவிட்டால் ஒன்றிய அரசு பணம் தரமாட்டோம் என்னும் இறுமாப்புக்கு எல்லாம் ஒரு நல்ல பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதால்தான் இத்துணை மகிழ்ச்சி!

ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ். சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றும் அரசாக இருக்கிறது. மோடி நாக்பூரில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்குச் சென்று அறிவுரை பெற்று வருகிறார்.ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டங்களில் ஒன்று- கல்வியைக் காவிமயமாக்குவது; வெறும் புரட்டுப் புராணங்களை வரலாறு ஆக்குவது.அதற்கு இந்தியா முழுவதும் இருக்கும் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றவேண்டும்.தங்களுடைய வர்ணாசிரமக் கொள்கையைத் திணிக்க
வேண்டும். 3, 5, 8, 10, 11, 12 எனத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்குத் தேர்வு நடத்தி, படிப்பு வரவில்லை என்று சொல்லி மீண்டும் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த  மாணவ, மாணவிகளைக் குலக்கல்வித் திட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதும், அவரவர் வர்ணத்திற்குரிய தொழில்களை, இந்திய நாட்டில் பிறந்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களைச் செய்ய வைக்கவேண்டும்  என்பதும்தான் அவர்களுடைய திட்டம். அதற்கான மிகப்பெரிய வாய்ப்பாக இன்றைக்கு அமைந்திருக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசைக் கருதுகிறார்கள்.அதனை மும்முரமாகச் செயல்படுத்த முனைகிறார்கள்.

ஆனால், ஒன்றிய அரசுக்கு மிகப்பெரிய சவாலாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. அவர்களின் நோக்கத்தினை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு சட்டப்படியான போராட்டத்தை, மக்களிடம் கொண்டு செல்லும் வழிமுறையை மிகச் சரியாகக் கடைப்பிடிக்கும் அரசாக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைந்த அரசு இருக்கிறது.

ஆளுநர் என்பவரை வைத்து தமிழ்நாட்டிற்குள் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மறைமுகமான ஸனாதன ஆட்சிக்கான வேலைகளைச் செய்தனர். அதற்குக் கைப்பாவையாக மாறிய ஆளுநர் பொது மேடைகளிலேயே தமிழ்நாட்டின் கல்வி முறையைக் கேள்விக்கு உள்ளாக்கினார். தனது வேலை எது என்பதை மறந்து எதிர்க்கட்சி அரசியல்வாதிபோலப் பிரசங்கம் செய்தார். சில படித்த விபூஷணர்கள் பதவிக்காக அவருக்கு ஒற்றர்களாக மாறியுள்ளனர். காட்டிக் கொடுக்கும் வேலைகளைச் செய்துவருகின்றனர்.

தமிழ்நாடு பெயர் சரியில்லை, தமிழகம் தான் சரி என்றார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரைக் காவி உடையில் காட்டிக் தன் அலுவலகத்தில் வைத்தார். இப்போக்கு தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட இயக்கத்தினரை மட்டுமல்ல, பொதுமக்கள் பலரையும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது. யார் இவர்கள்? எதற்காக உலகப் பொது மறையாம் திருக்குறளைக் காவி வர்ணத்திற்குள் அடக்கப் பார்க்கிறார்கள்  எனக் கோபமுற்றார்கள்.

ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அநீதியானது என்ற கருத்தை மாண்பமை நீதி அரசர்கள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளாய் வந்த மசோதாக்கள் எல்லாம் ஒப்புதல் கொடுக்காமல் வேண்டுமென்றே நிறுத்தி வைத்திருக்கிறார் ஆளுநர் என்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். எனவே, நம்மைப் பொறுத்தளவில் ஆளுநர் தன் கடமையைச் செய்யாமல் தமிழ்நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய வஞ்சகத்தைச் செய்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம், படிகள் இவையெல்லாம் தமிழ்நாட்டு மக்களால் கொடுக்கப்பட்ட வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்பட்டவை. எனவே, அவற்றையெல்லாம் அவரிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். இந்தத் தாமதத்திற்கு, பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளின் படிப்புப் பாதிப்பு ஏற்பட்டதற்கு இந்த மாநிலத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களைப் பொறுப்பு ஏற்கச் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏப்ரல் மாதம் என்பது திராவிட இயக்கத்தவருக்குப் பெருமைக்குரிய மாதம்.அரசமைப்புச் சட்டத்தினை இயற்றுவதற்குத் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் இந்த மாதத்தில்தான். தீர்ப்பினை அளித்த மாண்பமை நீதிபதி அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்தினைச் சொல்லித்தான் தீர்ப்பு அளித்திருக்கிறார். அதனைப்போலப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த நாள் ஏப்ரல் 29; அவரின் நினைவு நாள் ஏப்ரல் 21. திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தன்னுடைய கவிதைகளில் எல்லாம் படிக்கவேண்டியதன் தேவையை வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.

“காலையில் படி – கடும்பகல் படி

மாலை இரவு முழுவதும் படி”

என்று படி,படி என்று முழங்கினார். 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போர் முதல் இன்றைக்கு நடைபெறும் ஆரியத்திற்கு எதிரான போர் வரை தன்னுடைய கவிதை வரிகளையே, திராவிட இயக்கப் போராளிகளுக்கு ஆயுதங்களாகக் கொடுத்துச் சென்றவர். பெண்கல்வி, ஆடவர் கல்வி, சிறுவர் கல்வி, முதியோர் கல்வி, உடல் ஊனமுற்றோர் கல்வி என அனைவரும் கற்கவேண்டும் என்பதற்கான கவிதைகளைக் கொடுத்தவர் புரட்சிக்கவிஞர்.

ஸனாதானம் பெண் கல்விக்கு எதிரானது.
பெண்கள் வீட்டுக்குள் மட்டுமே இருக்கவேண்டும்
எனச் சொல்வது. ஆனால், திராவிட இயக்கம் தோன்றிய நாள்முதல் பெண் கல்வியை வலியுறுத்தி வருவது.

இன்றைக்கு ‘புதுமைப் பெண்’ திட்டத்தின்படி, பெண்களைப் படிக்கவைக்கும் பொறுப்பைத் தமிழ்நாடு அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. உயர் கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவ- மாணவியர்க்கு ரூ.1000 மாதத்தொகை கொடுத்துப் படிக்கவைக்கிறது இன்றைய திராவிட மாடல் அரசு.

தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பின்படி அனைத்து மாநில சட்டப் பேரவைகளின் உரிமை காப்பாற்றப்பட்டு, ஜனநாயகம் பிழைத்துள்ளது.பல பல்கலைக்
கழகங்களுக்கும் ஒரு விடியல் இதன் மூலம் கிடைக்கும் என்பது உறுதி’ என்று திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி இருக்கின்றார்.(8.4.2025 விடுதலை) தமிழ்நாட்டில் இருக்கும்  நாம் ஒவ்வொருவரும் பாராட்டி மகிழ்வோம்.தொடரட்டும் தமிழ் மாணவர்களின் கல்விக்கான போராட்டம்.இறுதி வெற்றி நமதே! m