(‘திராவிடப் பொழில்’ அக்டோபர்- – டிசம்பர் 2023 ஆய்விதழில் “Names of the Nation – A Comparative Study’ என்னும் தலைப்பில்
வெளிவந்த பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ்ப் பெயர்ப்பின் சுருக்கம்.
-தமிழ்ப் பெயர்ப்பு : பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்.)
‘இந்தியக் குடியரசு’ என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான அதிகாரப்பூர்வப் பெயரானாலும், உள்நாட்டிலும் உலகளவிலும் பொதுமக்களால் இந்தியா என்றே அழைக்கப்படுகிறது. இந்தியா விடுதலை பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா என்னும் பெயர் வரலாற்றின் பக்கங்களில் காணக்கிடக்கின்றது.
ஆனால், பல்லாண்டு காலமாகப் ‘பாரத்’ என்னும் பெயரும் இந்திய நாட்டின் பெயராக அழைக்கும் வழக்கம் உலக அளவில் இல்லையென்றாலும் உள்ளூர் அளவில் அவ்வாறும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தியா என்னும் பெயர்ச்சொல் அயற்சொல் என்றும் அந்தப் பெயர் காலனியாதிக்கத்தால் நம்மீது திணிக்கப்பட்ட பெயர் என்றும் ஒரு புரிதலற்ற தவறான கருத்து சிலரின் சிந்தையிலே தேங்கியுள்ளது.
இந்தக் கட்டுரை ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ ஆகிய இரண்டு பெயர்களையும் ஆய்ந்திடும் நோக்கில் வரலாறு, மொழியியல், தொன்மவியல், நிலவியல், இலக்கியங்கள், கல்வெட்டுகள், மதப் புராணங்கள் போன்ற பலதரப்பட்ட மூலங்களிலிருந்து அறிவுபூர்வமாகத் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டு உண்மை நிலையை உணர்த்த முயல்கின்றது.
இந்தியா என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்
இந்திய அரசமைப்புச் சட்டம் நமது இந்திய ஒன்றியத்தின் உச்ச உயர்நிலைச் சட்டம் ஆகும். இந்த அரசமைப்புச் சட்டத்தின் விதி 1இன்படி இந்திய ஒன்றியத்தால் ஆளப்படுகின்ற நிலப்பரப்பின் பெயர் இந்தியா என்று அறிவிக்கப்படுகின்றது. அதன்படி நமது நாடு இறையாண்மை கொண்ட இந்தியக் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
India that is Bharat, பாரத் என்றும் அறியப்படும் இந்தியா என்று விதி ஒன்றில் (Clause1) நாட்டின் பெயர் சுட்டப்படுகின்றது. இந்த இடத்தைத் தவிர அரசமைப்புச் சட்டத்தின் மற்ற எல்லா இடங்களிலும் நாட்டின் பெயர் இந்தியா என்றே சுட்டப்படுகின்றது.
இவ்வாறு அரசமைப்புச் சட்டம் ஏற்பட்ட காலம் தொட்டு இந்தியா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அறியப்பட்டிருந்தாலும் இந்த இந்தியா என்னும் சொல்லாடல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
அகவழக்கு – புறவழக்கு (Endonym & Exonym)
மொழியியல் கோட்பாடுகள் :
அக வழக்கு (Endonym)
ஒரு சமூகம் தனது ஆளுகைக்கு உட்பட்ட கூறுகளை எந்தப் பெயரால் எப்படி சொல்லி அழைக்கும் என்பது அகவழக்காகும்.
புற வழக்கு (Exonym)
ஒரு சமூகம் பிற சமூகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பின் அக வழக்கின்படி அழைக்கப்படும் பெயரை எப்படி வேறுபட்ட உச்சரிப்பால் அழைப்பார்கள் என்பது புற வழக்கு ஆகும்.
உலகத்தில் பல மொழிகளும் தனக்கே உரித்தான சிறப்பு ஒலியியல் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஓர் இனக்குழுவினர் தங்கள் மொழியின் ஒரு சொல்லை உச்சரிக்கும் முறையே ஒலியியல் கொள்கை ஆகும். அதே சொல்லைப் பிற மொழி பேசுவோர் உச்சரிக்கும் போது அந்த உச்சரிப்பில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. தமிழர்கள் அன்றி வேறு எவரும் தமிழின் சிறப்பு ‘ழ’கரத்தை உச்சரிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
இந்த உச்சரிப்பு வேறுபாட்டின் காரணமாக அகவழக்கிலே அறியப்படுகின்ற ஒரு சொல் பிற இனக்குழுவினரால் சற்றொப்ப ஒத்து வருகின்ற வேறொரு உச்சரிப்பைக் கொண்ட சொல்லால் அறியப்படும். இந்த உச்சரிப்பு இடர்ப்பாடே அகவழக்கு புற வழக்கு (Endonym & Exonym) என்னும் மொழியியல் கொள்கையின் தோற்றுவாயாகும்.
சில எடுத்துக்காட்டுகளை இங்கு பார்க்கலாம் :
அகவழக்கு புறவழக்கு
சூங்வா சைனா
பார்சி பெர்சியன்
ஐயோனியன்
(கிரேக்கம்) யவனம்
கேடா கடாரம்
ஜாவ் (ஜாவா) சாவகம்
நக்கவரம் நிகோபார்
மாலத்தீவு மால்தீவ்ஸ்
தமிழ் திரமிடம், திராவிடம்
இப்படி உலகின் பல மொழிகளும் பிற மொழிச் சொற்களை தங்களின் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்கின்றன.
இந்தியா என்னும் சொல்லாடல் இந்திய மரபில் வந்ததா?
இந்தியா என்னும் பெயர்ச்சொல் பழைய கிரேக்கத்தின் இவ்டியா (Ivdia) என்ற சொல்லிலிருந்து வந்திருந்தாலும் அது ‘சிந்து’ என்னும் இந்திய மரபுச் சொல்லின் புறவழக்காகும். அதாவது இந்திய அகவழக்கிலே வழங்கப்பட்ட சிந்து என்னும் பெயர்ச் சொல்தான் புறவழக்கிலே இந்தியா என்று திரிந்து வந்துள்ளது.
சிந்து என்னும் இந்திய அக வழக்குச் சொல் கிரேக்கத்திற்குச் செல்வதற்கு முன்பாக அதன் பயணத்திலே இந்தோ ஆரியன், இந்தோ ஈரானியன் ஆகிய மொழிக் குடும்பங்களின் ஊடாகப் பரவிய பின்னரே அந்தச் சொல் கிரேக்கத்தைச் சென்றடைகின்றது.
பழைய பாரசீக மொழியும் அவெஸ்டன் மொழியும் சொல்லாடலிலும் இலக்கணத்திலும் வேதகால சமஸ்கிருதத்தோடு பெரிதும் ஒத்திருக்கிறது என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
சிந்து என்னும் சொல் பொதுவாக நீர் நிலைகளைக் குறித்தாலும் ஒரு நதியின் பெயராக பழைய வேத காலத்தில் ரிக் வேதத்தில் ( மண்டலம் 10, சூக்தா 75, ரிக்ஸ் 1&2) குறிப்பிடப்படுகின்றது. பின்னர் அந்தச் சொல்லே சிந்து நதிக்கு அப்பால் உள்ள நிலப்பரப்பைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகவும் பிறப்பெடுக்கின்றது
சிந்து என்று பழைய வேதகால சமஸ்கிருதத்தில் உச்சரிக்கப்படும் சொல்லானது ஹிந்து என்று பழைய பாரசிக மொழியிலே உச்சரிக்கப்படுகின்றது. சமஸ்கிருதத்தின் ‘ச’கரம் பாரசீகத்தில் ‘ஹ’கரமாகத் திரிகிறது. இந்த உச்சரிப்பு மாறுபாடானது கிமு 850-600 காலத்தில் தோன்றியது என்பது தமிழ் சமஸ்கிருத அறிஞர் அஸ்கோ பார்போலாவின் கருத்தாகும்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட பாரசீக மன்னன் டாரியஸ்-1 (DARIUS-1) அவர்களின் சிலைப் பீடத்திலே முதன்முதலாக ஹிந்து என்னும் சொல் கண்டறியப்படுகின்றது. இன்றும் இந்தச் சிலை ஈரானின் டெக்ரான் நகர அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இப்படியாகச் சிந்து நதி என்பது ஹிந்து நதி என்று இந்தோ ஈரானிய மொழியில் மாற்றம் பெறுகின்றது.
சிந்து நிலப்பகுதி என்பது வேதத்தில் ‘சப்த சிந்து’ என்று அறியப்படுகின்றது. அதுவே ‘ஹப்த ஹிந்து’ என்று ‘ஜெண்ட் அவஸ்தாவில்’ (Zend Avesta) அறியப்படுகிறது.
கிரேக்கக் கடலோடி சைலாக் (Shylock) என்பார் டேரியஸ் மன்னனின் ஆணைப்படி சிந்து நதியைக் கடந்து சென்றார் என்னும் செய்தியைக் கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹீரோடாட்டஸ் (Herodotus) பதிவு செய்துள்ளார். இவற்றிலிருந்து சிந்து நிலப்பரப்பு என்பது கிரேக்கத்திலும் பாரசீகத்தின் வாயிலாக அறியப்பட்டுள்ளது.
சிந்து என்பது பாரசீகத்தில் ஹிந்துவாக மாறிப் பின்பு அது கிரேக்கத்தில் இண்டோஸ் ஆக மாறுகிறது. ஏனென்றால் கிரேக்கத்தில் ‘H’ என்னும் ஒலியை கிரேக்கர்கள் ஒலிப்பதில்லை. எனவே. ஹிந்து என்பதை இண்டோஸ் என மாற்றி கிரேக்கத்தில் ஒலித்திருக்கிறார்கள்.
(SINDU – HINDU – INDU – INDOS)
பின்னர் இந்தச் சொல் லத்தீனிலும் கொய்ன் கிரேக்கத்திலும் (Koine Greek) இந்தியா என்றும் பிரெஞ்சு மொழியில் இண்டே என்றும் இண்டி என்று பழைய ஆங்கிலத்திலும் தற்கால ஆங்கிலத்திலும் இந்த பெயர்ச் சொல் இந்தியா என்று மாறி ஒலிக்கின்றது.
இந்தச் சொற்களை ஒப்பு நோக்கி உணருங்கால் இவை அனைத்தும் வேதத்தில் குறிப்பிடப்பட்ட சிந்து நிலப் பகுதியையே குறிக்கின்றது என்பது புலனாகும். உச்சரிப்பு வேறுபாட்டால் பிற சொற்களால் வேற்று மொழியில் வழங்கப்படுகின்ற அந்தச் சொற்கள் அந்தச் சொல்லின் வேத மூலத்தை மாற்ற இயலாது அதே பொருளைக் குறிக்கவே பயன்பட்டது. எனவே, ரிக் வேதத்தில் தனது வேர்ச்சொல்லைக் கொண்டுள்ள இந்தியா என்னும் சொல் இந்திய மரபின் சொல்லே! அது அயலவர் சொல் இல்லை என்பது திண்ணம்.
(தொடரும்…)