விளம்பர மாடலும் – திராவிட மாடலும்! – வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

கட்டுரைகள் மற்றவர்கள்

தந்தை பெரியாரின் கொள்கைகளில் முதன்மையானவை ஜாதி ஒழிப்பும் – பெண் விடுதலையும் தான். மிகத் துணிச்சலாக “உங்கள் வீட்டில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தால் , முதலில் அப்பெண்ணைப் படிக்க வையுங்கள்” என்றார் பெரியார். அவரின் கொள்கை வழி வந்த நாம் இன்று வரை பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், இதற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாததாகவும், பெண் உரிமை, மகளிர் விடுதலை ஆகிய சொற்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் எதிராகவும் இருக்கும் மனுதர்மம், வேதங்கள், புராண இதிகாசங்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, பெண்கள் என்றாலே அடிமைகள் தான் என்ற கொள்கையைக் கொண்ட பாசிச ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்ற இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கடந்த சில மாதங்களாக, தான் பேசும் அனைத்து மேடைகளிலும்,‘நாரி சக்தி’ (Nari Sakthi), ‘பெண்களைப் பாதுகாப்போம்’ என்று தொடர்ந்து பேசி வருகிறார். பேசுவது மட்டுமல்ல, 2015ஆம் ஆண்டு அவரது ஆட்சியில் “Beti Bachao, Beti padhao” என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்! பெண் கல்வியைப் பாதுகாப்போம்!”

இதுதான் திட்டத்தின் நோக்கம் என்றனர். அடடா! எவ்வளவு பெரிய முயற்சி என்று அவர்கள் தரப்பினர் பாராட்டு பத்திரம் எழுதத் தொடங்கும்போதுதான், ஒரு தகவல் வெளியானது. 2016 – 2019 ஆகிய ஆண்டுகளில் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 442.62 கோடி. இதில், இத்திட்டத்தினை ஊடகங்கள் மூலமாக விளம்பரப்படுத்தப் பயன்படுத்திய தொகை 78.91%. நரேந்திர மோடி அவர்களின் முகத்துடன் கூடிய விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வளவு கோடி செலவா? என்ற கேள்விக்கு, “இதுவும் இத்திட்டத்தின் ஓர் அங்கம் தான்” என்றனர். இந்தத் திட்டத்தை மட்டும்தான் ஒழுங்காகச் செயல்படுத்தாமல் வீண் விளம்பரம் செய்தார்களா என்றால் அதுதான் இல்லை. அடிப்படையிலேயே பெண் கல்விக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் மறைமுகமாகச் செயல்படுத்தினர்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்! பெண்களின் கல்வியைப் பாழ்படுத்தும் தேசியக் கல்விக் கொள்கை 2020(National Education Policy), நீட் நுழைவுத் தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் CUET தேர்வு என்று அனைத்தையும் கொண்டு வந்து அதனை மூடி மறைக்க இப்படிப்பட்ட விளம்பரங்கள் செய்வது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? இதன்மூலம் ஆரியம் – திராவிடம் நேர் எதிர் சித்தாந்தங்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களின் கல்விக்குத் தடையாக எது இருப்பினும் அதை உடைப்பது திராவிடம். அத்தடைகளை உருவாக்குவது ஆரியம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சமூகத் தடைகளைத் தாண்டி, தகர்த்துக் கடந்து, திராவிடர் இயக்கத்தின் போராட்டத்தால், தந்தை பெரியாரின் பேருழைப்பால் தமிழ்நாட்டில் பெண்களின் கல்வி நிலை உயர்ந்தது.

பொருளாதாரம் என்பதைத் தாண்டி பெண்களின் பாதுகாப்பினைக் காரணமாகக் கூறி அவர்களின் கல்விக்கு குடும்பமும், சமூகமும் தடை விதித்தபோது , அவர்கள் எளிமையில் கல்விச் சாலையை அடையும் வண்ணமும், பயணத்தூரத்தைக் குறைக்கும் முறையிலும், சுலபமாக அணுகும் வகையில் (Easy Access) திராவிடக் கட்சிகள் குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்து கொடுத்தது. பெண்களை இடைநிற்றல் இன்றி பள்ளிப் படிப்பை முடிக்க வைக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தினை” கலைஞர் அறிவித்தார். தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 என்ற “புதுமைப் பெண்” திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். கல்வி நிலையங்களுக்குப் பெண்களை அழைத்து வரும் முயற்சிகள் இவை. இதற்கு நேர் எதிராக பெண் குழந்தைகளைக் கல்வி கற்கும் சூழலில் இருந்து வெளியேற்றும் பல்வேறு வகையான கல்விக் கொள்கைகளைக் கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, எப்படி பெண்களின் கல்வியைப் பாதுகாக்கும் என்பதை ஆழமாகச் சிந்தியுங்கள்! விளம்பரம் மட்டும் செய்வது ஆரிய மாடல்; திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவது திராவிட மாடல்!

அடுத்தது பெண்களின் பாதுகாப்பு. பத்து ஆண்டுகால (2014 – 2024) பா.ஜ.க. ஆட்சியில் எந்த எல்லைக்குச் சென்றுள்ளது பெண்களுக்கான பாதுகாப்பு என்பதை அடுத்த இதழில் காண்போம். 