இலண்டனில் பிரபுக்கள் சபையில் பொங்கல் விழா!
– கி. வீரமணி
லண்டனில் நடக்க இருந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, ஜி.யு. போப் நினைவுச் சொற்பொழிவு, பொங்கல் விழாக்களில் பங்கேற்க சனவரி 14ஆம் தேதியன்று லண்டன் புறப்பட்டுச் சென்றோம். லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். மிக முக்கியமாக சனவரி 18 (2004) அன்று பெரியார் பன்னாட்டு மய்யம் (Periyar International – U.K. Chapter) அமைக்கப்பட்டது குறிப்பிடத் தகுந்ததாகும்.
இலண்டன் ஆக்ஸ்போர்டு தமிழ்ச் சங்கத்தின் பிரபுக்கள் சபையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
“தமிழர் தம் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழாவை ஆக்ஸ்போர்டு தமிழ்ச்சங்கத்தினர் வெகு புதுமையாகக் கொண்டாடி புதிய வரலாறு படைத்தனர்.
இங்கிலாந்திலிருந்து 19-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்கு வந்த கிறித்துவ பாதிரியரான டாக்டர் ஜி.யு.போப் ஒரு தமிழ் மாணவனாக வந்து, படிக்கத்த தெரியா ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்குக் கல்வி அறிவை ஊட்டியதற்காகவே, அங்குள்ள மக்கள் அவரை ஊரை விட்டுப் போகச் செய்தனர்.
அவரது கல்லறை ஆக்ஸ்ஃபோர்டில் தான் உள்ளது. அவர் 1908இல் மறைவதற்கு முன்பு இங்கே ‘யாலியோல்’ கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். திருக்குறளை முதலில் தமிழிலிருந்து இங்கிலீசுக்கு மொழி பெயர்த்தவர். அது போலவே, திருவாசகம், நாலடியார் போன்ற இலக்கியங்கள் அவரால் இங்கிலீசில் மொழி பெயர்க்கப்பட்டன! ‘தன்னை தமிழ் மாணவன்’ என்றே கல்லறையில் பதிக்கச் சொன்ன அரிய தமிழ்த் தொண்டர் அவர்!
ஜி.யு. போப் பெயரில் ஆண்டு தோறும் ஒரு சிறப்பு நினைவுச் சொற் பொழிவிற்கு தக்காரைக் கொண்டு ஏற்பாடு செய்திருந்தது ஆக்ஸ்ஃபோர்டு தமிழ்ச் சங்கம்.அதன் தலைவர் செயல்மிகு ஆற்றலாளர் சாம்சேகரன் அவர்கள், இவ்வாண்டு அந்த நிகழ்வினை லண்டனில் பிரபுக்கள் சபை என்ற House of Lords பார்லிமென்ட் கட்டடத்தில் உள்ள ஒரு அரங்கில் அரசு அனுமதி பெற்று, மிகச் சிறப்பாக நடத்தினார். அவருக்கு மிகவும் உறுதுணையாக அதன் துணைத்தலைவர் மானமிகு டாக்டர் என். சீனுவாசன் அவர்களும், மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு தமிழ்ச்சங்க முக்கிய பொறுப்பாளர்களும் இருந்தனர்!
டாக்டர்ஜி.யு. போப் நினைவுச் சொற் பொழிவை ஆற்ற இவ்வாண்டு (இரண்டாம் ஆண்டு பொழிவு) எம்மைத் தேர்வு செய்தனர். ஜி.யு. போப்பும் – பெரியார் ஈ.வெ.ராவும்’ என்ற தலைப்பில் உரையாற்றுமாறு அழைத்திருந்தனர்.
மிகவும் அருமையாக அந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது; அந்தச் சிறு அரங்கம் முழுவதும் – அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டும் கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே பார்லிமென்ட் கட்டடத்தின் உள்ளே 4ஆம் எண் உள்ள அந்த அறை – அரங்கில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
பகல் 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. பேரன்னஸ் லேடி ஃபிளாத்தர் (Baroness Lady Flather) என்ற பிரபுக்கள் சபை உறுப்பினரான அந்த மூதாட்டியான பெருமாட்டி வந்து கலந்து விழாக்களைத் தொடங்கி வைத்து, தமிழர்களின் திருவிழாவான பொங்கலைக் கொண் டாட இங்கு வாய்ப்பேற்பட்டது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று வந்திருந் தவர்களுக்கு வாழ்த்துகள் கூறினார்.
இந்த அம்மையார் லேடி பிளாத்தரின் மூதாதையர்கள் இந்திய வம்சாவளியினர்; அவர்கள் இந்தியர்கள்மீது மிகவும் பற்றுள்ளவர்கள். பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்து இங்கு வந்தவர்கள்! தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கில் பவுன்கள் செலவு செய்து இந்தியப் போர் வீரர்களுக்கு நினைவுச் சின்னத்தை நிறுவிய பெரு மாட்டியார்!
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் மான்ஸ்ஃபீல்ட் கல்லூரி ஃபெல்லோவும் (Fellow), இந்திய வம்சா வளியான பிரிட்டிஷ் குடிமக்கள் சங்கத் தலைவருமான டாக்டர் பால் பிளாத்தர் என்ற சீரிய கல்வி அறிஞர் அவர்கள் தலைமை ஏற்றார்! (இவர் அம்மையாரின் மகனாவார்).
பிரிட்டிஷ் கேபினட் அமைச்சரவையில் உள்ள ஓர் முக்கிய அமைச்சர் (Secretary of State for Works and Pensions) ரைட் ஹானரபிள் ஆண்ட்ரூ ஸ்மித் எம்.பி. அவர்களும், மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ‘நியூவேவ்’ பத்திரிகை ஆசிரியருமான பாரிஸ்டர் கே. சீலாதாஸ் அவர்களும் கலந்துகொண்டு விழாக்களின் பெருமையை உணர்த்தினர்.
ஆக்ஸ்ஃபோர்டு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தொண்டறச் செம்மல், சாம்சேகரன் அவர்கள் அந்த விழாக் கூட்டத்தில், ஜி.யு. போப், – பெரியார் இவர்களின் பெயர்களை இணைத்து “ஜி.யு. போய் – பெரியார் மனித உரிமை அமைப்பு” ஒன்றினைத் தொடங்குவதாக அமைச்சர் முன்னிலையில் ஒரு பிரகடனத்தை வாசித்து உரையாற்றினார்!
வந்திருந்தவர்களில் முக்கியமாக பிரிட்டிஷ்காரர்கள் பெரியார் பற்றி இப்போதுதான் அறிந்து கொண்டனர். ஆர்வம் அதிகமாகக் காட்டினர். அதற்கு ஓர் சிறு எடுத்துக்காட்டு.
எனது உரை, ஆங்கிலத்தில் அச்சிட்ட உரை என்றாலும், அதிலி ருந்தும் தாண்டி, பல்வேறு நிகழ்ச்சிகளை பெரியார் பற்றி நாம் கூறியபோது, மேடையில், அரங்கில் உள்ள சகோதரிகள் உள்பட மிகவும் சுவைத்துக் கேட்டனர்.
கேள்விகளுக்குப் பதில் கூறும் வாய்ப்பும் எமக்கு ஏற்பட்டது; அப்போது முக்கிய விருந்தினர்களில் ஒருவரான லேடி பிளாத்தர் என்ற பெருமாட்டி என்னிடம், “நீங்கள் பேசிய தலைப்புக்குரிய பெரியார் பற்றியும், இதற்குமுன் ஏதும் தெரிந்து வைத்திருக்கவில்லை; இப்போது தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது குறித்து மிக்க நன்றி! ஒரு சந்தேகம், பெரியார் ஈ.வெ.ரா. என்பதில் பெரியார் என்றால், என்ன என்பது எனக்கு விளங்கவில்லை, தயவு செய்து விளக்குங்கள்” என்று கேட்டார்!
நான் ஆங்கிலத்தில் அவருக்கு நன்கு புரியும்படி, பெரியார் என்பது அவருக்கு 1938-இல் பெண்கள் மாநாடு கூட்டி, அதில் அவரது தொண்டைப் போற்றி அளித்த சிறப்புப் பட்டம், ‘Great Man’என்று பொருளை உடையது. அதோடு, தந்தை என்பதையும் இணைத்துத்தான் கூறுவர். எந்தத் தலைவருக்கும் கிட்டாத அவ்வளவு சிறப்பு அவருக்கு என்று நாம் கூறியதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து கைதட்டினர். அவர் குடும்பம் செல்வந்தர் குடும்பம் அந்தச் செல்வத்தோடு அவரிடம் மக்கள் அளித்த நன்கொடைகள், அன்பளிப்பு களைத் திரட்டி அவர் பொதுவுக்கே ஓர் அறக்கட்டளையாக மக்களுக்குப் பயன்படும் வண்ணம் ஆக்கிவிட்டார். அந்த டிரஸ்ட்டில் அவரது ஜாதி, உறவினர் எவரையும் இடம்பெற வைக்கவில்லை அவர்! அதன் சார்பாக 50 கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, பகுத்தறிவுப் பிரச்சார நிறுவனங்கள் எல்லாம் நடைபெறுகின்றன என்பதையும், உலகின் முதல் பெண்கள் பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர் வல்லத்தில் நடைபெற்று வருகிறது என்று கூறியதும் அதையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
டாக்டர் சீனுவாசன் அவர்கள், ஒரு கேள்வி கேட்டார்; “தமிழர்களில் எந்த அறிவாளி அங்கே வந்தாலும், அவர்கள் பார்ப்பன ரத்த சம்பந்தமுள்ளவர் என்பதுபோல எழுதி வைத்துவிடுகின்றனரே – உதாரணம் திருவள்ளுவர் கதை! அதுபோல, பெரியாரையும் ஆக்க ஏதாவது முயற்சி கள் நடைபெற்றனவா?” என்று கேட்டார்!
“இதுவரை இல்லை; இனிமேலும் அவ்வளவு எளிதாக அது ஆக முடியாது. அதற்குக் காரணங்கள்,
(1) பெரியார் தொண்டர்களின் விழிப்புணர்வு – கட்டுப்பாடு. எதிரிகள் இதனைச் செய்ய அனுமதிக்க மாட் டார்கள்.
(2) பெரியார் தத்துவங்கள் மிகவும் தெளிவானவை, உறுதியானவை; எதிரிகள் திரிபு வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு ஆழமானவை. ஆகவே அம்முயற்சி வெற்றி பெறமுடியாது” என்றேன்.
பிரிட்டிஷ் அமைச்சருக்கும், மற்ற அறிஞர்களுக்கும் தந்தை பெரியார் நூல் களையும், நமது கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல் நூல்களையும் பெரியாரின் 100ஆம் ஆண்டின் அஞ்சல் தலை, 125ஆம் ஆண்டின் சிறப்பு அஞ்சல் உறை இவைகளையும் அளித்தபோது அவர்கள் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது!
தொடக்கப்பள்ளி படிப்பைக் கூட முடிக்காத பெரியார், எப்படி 247 தமிழ் எழுத்துகளை 54 எழுத்துகளாகக் குறைக்க முடியும் என்று நடைமுறைப்படுத்திக் காட்டி, அரசே பல ஆண்டுகளுக்குப் பிறகு அதை ஏற்கும் அளவுக்கு நிலைமை மாறியது என்பதை விளக்கினேன். அதையும் கேட்டு அனைவரும் வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தனர்!
ஆக்ஸ்ஃபோர்டு தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலரும் சுமார் 60 மைல்களுக்கு அப்பாலிருந்து தனியே ஒரு பேருந்து ஏற்பாடு செய்து வந்தனர். அதில் நாங்கள் எல்லோரும் வந்து, ஒரு குடும்பம்போல வெஸ்ட் மினிஸ்டர் – லண்டன் பார்லிமென்ட், பிரபுக்கள் சபை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரவு மீண்டும் ஆக்ஸ்ஃபோர்டு நகரத்திற்கே திரும்பினோம்.
பொங்கல் நிகழ்ச்சி ஜி.யு. போப் – பெரியார் சிறப்புரை நிகழ்வு ஆகியவற்றை இணைத்த இந்த நிகழ்ச்சிக்கு ஆக்ஸ்ஃ போர்டு லண்டன் ஈஸ்ட் ஹாம் (East Ham), கிராய்டன் (Croyden) மற்றும் பல பகுத்தறிவாளர்கள் பலரும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி முடிந்தவுடன் (சரியாக 5:05-க்கு) பார்லிமென்ட் கட்டடத்தினை விட்டு வெளியேறி, எதிர்ப்புறத்தில் அந்த உறுப்பினர்களுக்கான தேநீர் விருந்து மற்றும் உணவு பரிமாறல்களுக்கென உள்ள தனிக் கட்டடத்தில், சகோதரிகள் தயார் செய்து கொண்டு வந்த பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வடை, கேக் முதலிய பலவற்றையும் பரிமாறினர்.
ஆக்ஸ்ஃபோர்டு தமிழ்ச்சங்க மகளிர் உறுப்பினர்களான திருமதி சாரதா சேகரன், திருமதி விமல் ஜென்னிங்ஸ், திருமதி சரஸ்வதி சீனுவாசன், திருமதி சுஜாதா, திருமதி உமா சுப்பிரமணியன் முதலிய பல சகோதரிகள் சமைத்து, எடுத்து வந்த இந்த அறுசுவை உணவை பொங்கல் வாழ்த்துகளுடன் பரிமாறி, ‘தமிழ்ச்சாதி ஒன்றே!’ என்று அறிவிப்பதுபோல் ஆர்வம் காட்டினர்.
பள்ளி, பல்கலைக்கழகங்களில் படிக்கும்போது, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ‘நாடாளுமன்றங்களின் தாய்’ என்று வர்ணிக்கப்பட்டபோது அதைப் பற்றிப் படித்த நான், ஒரு நாள் பிரபுக்கள் சபை அரங்கில், அதிலும் எனது வாழ்நாள் பணியான அறிவு ஆசான் பெரியாரின் பெருமைகளை எடுத்து, வெள்ளைக்காரர்களுக்கும் இயம்பும் வாய்ப்பினைப் பெறுவேன் என்று நினைக்கவே இல்லை! இவ்வாய்ப்பு கிடைத்தமைக்குக் காரணமான நமது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தந்தை பெரியாரை நினைத்தேன்; திரும்பும்போது என் கண்களில் நன்றித் துளிகள் பனித்தன வெளியில் பனித்துளிகள் விழும் நிலையில்!
ஆக்ஸ்போர்டு தமிழ்ச்சங்க உறுப்பினர்களுடன் ஆசிரியர்.
தந்தை பெரியாரை உலக மயமாக்கும் பணியில் இந்த 2004இல் தொடக்கம் நல்ல தொடக்கமாக அமைந்தது. அதற்கு சீரிய பெரியார் பெருந்தொண்டர்களான ஆக்ஸ்ஃபோர்டு தமிழ்ச்சங்கத் தலைவர் சாம்சேகரன், டாக்டர் சீனுவாசன், திருமதி சாரதாசேகரன் மற்றும் அதன் பொறுப்பாளர்களுக்கும், பெரியார் தொண்டர்களின் பாராட்டும், நன்றியும் என்றென்றும் உண்டு!
ஒருவார சுற்றுப்பயணம் முடிந்து (21.1.2004) சுமார் 1:45 மணியளவில் “பிரிட்டிஷ் ஏர்வேஸ்” விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினோம். எம்முடன் முதல்வர் டாக்டர் ச. இராசசேகரன் வந்தார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், பெரியார் திடல் மேலாளர் ப. சீதாராமன், திராவிடன், புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராசன், தமிழர் தலைவரின் சுற்றுப்பயணச் செயலாளர் சாமி. திராவிடமணி, தி. பெரியார் சாக்ரடீஸ், வீ. அன்புராஜ் ஆகியோர் விமான நிலையத்தில் அன்புடன் எங்களை வரவேற்றார்கள்.
லண்டன் பயணம் முடித்து தமிழர் தலைவர் சென்னை திரும்பினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் பார்ப்பனரல்லாத பெண்களுக்குப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை 22.01.2004இல் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து நாம் ஆற்றிய உரையில், இன்றைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம் ஒரு சமூகநீதிக்குரிய போராட்டமாகும்.
இந்திய அரசியல் சட்டத்தின் பீடிகையிலே எல்லா மக்களுக்கும் சமூகநீதி வழங்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டத்தின் பீடிகையிலேயே முதலாவதாக சமூகநீதியைப் பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கின்றது.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சமூகநீதியை ஆட்சியாளர்கள் செய்யத் தவறுகின்ற நேரத்திலே அதற்குப் பரிகாரம் காண நீதிமன்றத்தை நாடுகின்றோம்.
அந்த நீதிமன்றத்திலேயே சமூகநீதி இல்லை என்று சொன்னால், நாம் எங்கே செல்வது? யாரிடம் சென்று கேட்பது? வேலியே பயிரை மேயக்கூடிய நிலை ஏற்படலாமா?
தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தின் சார்பில் 8 பேர் காலியாக உள்ள நீதிபதி பதவிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் பார்ப்பனர்கள் என்ற தகவல் எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. சமூகநீதிக்கு எதிரான கொடுமை இதைவிட வேறு என்ன இருக்க முடியும்?
எங்களுடைய நோக்கமென்ன? எல்லா மக்களுக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும். அவரவர்களுடைய விகிதாச்சாரத்திற்கேற்ப வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
சென்னை உயர்நீதிமன்ற பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…
ஒரே பார்ப்பன ஜாதியில் 4 பேரை உயர்நீதிமன்ற பதவிக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.மலைவாழ் மக்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்கவேண்டாமா?
நாங்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு உரிய மரியாதையோடு தெரியப்படுத்திக் கொள் கின்றோம். சென்னை உயர்நீதிமன்றம் பார்ப்பனர்களின் ஆதிக்க நீதிமன்றமாக ஆகிவிடக்கூடாது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி யான நியமனங்கள் நியாயமான முறையில் நடைபெறவேண்டும். எனவே, இங்க நடைபெறுகின்ற போராட்டம் இதோடு முடிந்துவிடக்கூடிய போராட்டம் அல்ல. இதுதான் தொடக்கம்.
வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி – சரசுவதி ஆகியோருடைய செல்வனும் போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவருமானஇரா. அப்புவுக்கும், நல்லூர் மு. துரைராஜ் மகளும் திருப் பெரும்புதூர் மரியானா பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவருமான து. நித்யாவுக்கும் திருமணம் கடந்த 23.1.2004 அன்று காலை தஞ்சாவூர் சிவசிதம்பரம் பிள்ளை திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமையேற்று பேசினார். துளசி அய்யா வாண்டையார் மணமக்களுக்கு மாலை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி திருமதி பார்வதி நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், “தமிழரசி” ஆசிரியர் நடராசன், மேனாள் அமைச்சர் கோ.சி. மணி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக நாம் உரையாற்றினோம்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மறைந்த துரை. சக்ரவர்த்தி அவர்களின் நினைவு போற்றும் நிழ்ச்சி – தஞ்சை வல்லத்தில் (23.1.2004) அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தனர். அவரது உறவினர்களும் ஏராளம் வந்திருந்தனர்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மறைந்த துரை. சக்கரவர்த்தி அவர்களின் நினைவைப் போற்றும் நிகழ்ச்சி.
திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு நிகழ்ச் சிக்குத் தலைமை
வகித்தார். திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த தலைவர்கள் உரை யாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் (மார்க் சிஸ்ட்) கட்சியின் தஞ்சை
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோ. நீலமேகம்,தஞ்சை ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் சிங். இராமச்சந்திரன், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பம்பைப் படையூர் கல்யாணசுந்தரம், சமூகநீதிக் கட்சியின் தலைவர்கா.ஜெகவீர பாண்டியன், சிறுபான்மை அய்க்கியப் பேரவையின் தலைவர் பேராசிரியர் மரியநல்லு,
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப. சுப்பிரமணியம், அம்மா பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிங்கப்பெருமாள், திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, தமிழ்த்தேசப் பொது வுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் மணியரசன், ‘தமிழரசி’ ஆசிரியர் மா. நடராசன் ஆகியோர் மறைந்த சக்ரவர்த்தி அவர்களின் சிறப்புகளையும், குணநலன்களையும் விரிவாக எடுத்துரைத்தனர்.
துரை. சக்ரவர்த்தி அவர்களின் உருவப் படத்தினை திறந்துவைத்து அவரது நினைவைப் போற்றி உரையாற்றினோம்.
எமது உரையில்,
தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமையவிருக்கும் மாணவர்களுக்கான (ஆடவர்) விடுதிக்கு சக்ரவர்த்தி அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தோம். அதுபோலவே விடுதியைச் சுற்றிய
வளாகத்துக்கு மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருட்டினசாமி அவர்களின் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்தோம்.
துரை. சக்ரவர்த்தி அவர்களின் மகன் வெற்றிச் செல்வன் இறுதியாக நன்றி கூறினார். ‘எங்கள் தந்தையின் வழியில் தமிழர் தலைவர் தலைமையில் எங்கள் குடும்பத்தின் இயக்கப் பணி தொடரும்’ என்று தமது நன்றி உரையில் குறிப்பிட்டார்.
காயல்பட்டினம் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எம். ஜக்கிரியா அவர்கள் சென்னையில் 24.1.2004-இல் மறைவுற்றார். அவருக்கு வயது 92.
தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராக நம்பிக்கைக்குப் பாத்திர மானவராக விளங்கியவர். ஒருமுறை சென்னை மாவட்டக் கழகத்தை கலைத்தபோது, சென்னை மாவட்ட திராவிடர் கழக சர்வாதிகாரியாக தந்தை பெரியாரால் நியமனம் செய்யப்பட்டவர்.
பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எம். ஜக்கிரியா
வயது முதிர்ந்த நிலையிலும் தந்தை பெரியாரைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் ‘பொலபொல’வென்று அவர் கண்ணீர் வடிப்பார். அந்த அளவுக்கு அய்யாவின் உணர்வுகளோடு சங்கமமானவர். ‘கதிரவன்’ இதழைத் தொடங்கி நடத்தியவர்.
அன்னை மணியம்மையார் அவர்களிடத்திலும், என்னிடத்திலும், இயக்கத் தோழர்களிடத்திலும் பாசமழை பொழிந்த அந்த முதுபெரும் பெரியார் பெருந்
தொண்டர் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்தார்.
அவருடைய ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எல்லாம் அவரைச் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தேன். வெளியூர் சுற்றுப் பயணத்தில் இருக்கும் எனக்கு இந்தத் தகவல் கிடைத்தது. இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லையே என்கிற ‘உறுத்தல்’ எனக்கிருந்தது.
எமது சார்பில் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் சென்னை மாவட்டக்
கழகத் தோழர்கள் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.
(நினைவுகள் நீளும்…)