முனைவர் கடவூர் மணிமாறன்
மக்கள் ஆட்சியின் மாண்பெலாம் தொலைத்தே
மனம்போன போக்கில் நடக்கிறார் – ஒருவர்
மதிப்புப் போனதும் துடிக்கிறார்!
சிக்கல் நாற்புறம் சேர்ந்துமே வளைத்திடச்
செய்வ தறியாது தவிக்கிறார் – பொல்லாச்
சினத்துடன் ஆட்சிகள் கவிழ்க்கிறார்!
சொன்னதை எல்லாம் காற்றில் விடுகிற
சூத்திரம் நன்றாய்க் கற்றவர் – நல்லோர்
சொற்களை நடுத்தெரு விற்றவர்!
மன்னரைப் போலவே மகுடம் தொடரவே
மந்திரப் புன்னகை செய்கிறார்! – ஏழை
மக்களோ வரிகளால் நைகிறார்!
மூடரின் கைகளில் முடமெனச் சிக்கியே
மூளையை அடகாய் வைத்தவர் – மனம்
முழுவதும் முட்களைத் தைத்தவர்!
கேடர்கள் கைத்தடி ஆகியே நாட்டினர்
கிழக்கெனும் விடியலை வெறுக்கிறார்! – மாநிலம்
கேட்டிடும் உரிமைகள் மறுக்கிறார்!
வேதப் புரட்டினர் வேள்வி நெருப்பினில்
வீழ்ந்து பொசுங்கிக் கிடக்கிறார் – மக்கள்
வீணரின் சொற்கேட்டுத் துடிக்கிறார்!
தீதினை நன்றெனச் செப்பிடும் வஞ்சகர்
தீயினுள் புரண்டே நெளிகிறார் – வீண்
வாயுரம் பெற்றதால் அழிகிறார்!
சாதியை மதவெறி சாத்திரச் சழக்குடைச்
சங்பரி வார்தமைப் போற்றுவார் – மக்களில்
சமநிலை ஏதெனச் சாற்றுவார்!
நீதியின் குரல்வளை நெறித்துமே மகிழ்பவர்
நேர்மை மறந்துமே கதைப்பாரே – பலர்
நெஞ்சினில் வெறுப்பினை விதைப்பாரே!