பாரதியாரும் பார்ப்பனர்களும்
என்ற தலைப்பில் குடிஅரசில் தோழர் அ.பொன்னம்பலம் அவர்கள் எழுதியவை.
நேயன்
‘பாரதியார் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களும் தமிழர்களா? தமிழர்கள் ஏன் பாரதியார் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை?’ என்பதாக பாரதியார் தினக் கொண்டாட்டத்-தன்று கனம் மந்திரி டாக்டர் ராஜன் அவர்கள் பேசும்பொழுது கேட்டாராம். காங்கிரஸ் பார்ப்பனக் கும்பல்கள் கொண்டாடும் கொண்டாட்டங்களிலெல்லாம் தமிழர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்பது கனம் மந்திரியாரின் கபடமற்ற ஆசைபோலும்! காலஞ் சென்ற சுப்பிரமணிய பாரதியார் ஒரு பார்ப்பனர். அவர் உயிரோடிருந்த காலத்தில் அவருக்கு உதவி செய்தவர்கள் மிகச் சிலர். அவர் அடிக்கடி வறுமையால் பீடிக்கப்பட்டு கலக்கமடைந்த காலங்களுண்டு. அடிக்கடி அவருக்கு பணம் உதவும் சில குறிப்பிட்ட நண்பர்களிடமே அவர்உதவி பெற்று குடும்பத்தைக் காப்பாற்றினார். அவருக்கு கஞ்சா, அபின் இல்லாமல் காலம் கடத்துவது பெரிதும் கஷ்டமாகவே இருக்கும்.
கடன்காரர்கட்கு அடிக்கடி தவணை கூறும் சமயங்களில் மட்டும் அவர் நாஸ்திக வெறியடைவ துண்டு. மற்ற சமயங்களில் அவருக்கு மதபக்தி, தேச பக்தி, கடவுள் பக்தி, காளி பக்தி, மாரியம்மன் பக்தி, ஆரியர் மோகம் யாவும் ஒருங்கே ஏற்படும். பாரதியார் மன எழுச்சியுள்ள சமயங்களில் பாடிய பாட்டுகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டி அவர் காலத்திற்குப் பிறகே பாரதியார் கீதங்கள் என்ற பெயருடன் சில புத்தகங்கள் வெளியிட்டனர். இப்புத்தக விற்பனைகூட அவரது மனைவி செல்லம்மாள் அவர்களின் குடும்ப உதவிக்காக என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது.
பாரதியார் பாட்டு தமிழில் எளிய நடையோடு கூடியது. அவர் பாட்டில் பல உயர்ந்த கருத்துகளுமிருக்கின்றன என்றாலும் ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) மேன்மையைப் பற்றியும் புராண இதிகாச தத்துவங்களைப் பற்றியும், கடவுள் மத நம்பிக்கைகளைப் பற்றியும் அதிகம் பாடியுள்ளார். சிற்சில இடங்களில் பார்ப்பனர்களின் நடவடிக்கைகளை நன்றாகக் கண்டித்துமிருக்கிறார். பாரதியார் பார்ப்பனர்களின் நடவடிக்கைகளைக் கண்டித்துப் பாடிய சில பாட்டுகள் இப்பொழுது பாரதியார் கீதங்களிலிருந்து மறைந்து வருகின்றன. இதற்கு பார்ப்பனர்களும் பாரதி பிரசுராலயத்தார்களும் பாரதியார் கீதச் சுருக்கத்தில் அப்பாட்டுகள் இல்லாமலிருக்கலாம் என்று சமாதானம் கூறக்கூடும்.
பாரதியார் கீதங்கள் ஒரு மாதிரி கதம்பமாகயிருக்கிறது. பாரதியார் கீதத்தை எல்லாப் பார்ப்பனரும் தங்கள் வீட்டில் வைத்து பூஜிக்கத் தகுந்தது என்று கருதுவதற்கு உண்மையாகவே அதில் பொருளிருக்கின்றது.
பாரதியார் பாடல்கள் தமிழ் இலக்கிய இலக்கணத்தோடு பாடப்பட்டவையல்ல. பாரதியாருக்கிருந்த படிப்புத் திறமையில் அவர் சமூகத்தின்மீதும் இந்து மதம், கடவுள், புராணம், தேசம் இவை மீதும் கொண்ட அளவற்ற அன்பாலும், பக்தியாலும், வறுமையால் பாதிக்கப்பட்டபொழுதும், கஞ்சா, அபின் போதை உணர்ச்சியாலும் மனோ எழுச்சி பெற்றபொழுதும் வீரப் பாடல்களும் காதல் பாடல்களும் காளி பாடல்களும், முத்துமாரி பாடல்களும் அல்லா மீது பாடல்களும் வேள்விப் பாடல்களும் தாய் வணக்கப் பாடல்களும் கொடி வணக்கப் பாடல்களும் எல்லாப் பாடல்களும் பாடிவிட்டுப் போய்விட்டார். இவரை வரகவி, தேசியகவி, தெய்வீகக் கவி என்றெல்லாம் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் புகழ ஆரம்பித்தார்கள்; புகழ்ந்து கொண்டிருக்-கிறார்கள். தமிழ்நாட்டில் தோன்றிய வள்ளுவர், கபிலர், கம்பர், ஒட்டக்கூத்தர், திருமூலர், இளங்கோ, தாயுமானவர், வடலூரார், அருணகிரியார் ஆகியவர்களைப் பற்றியும் அவர்களியற்றிய தமிழ் நூல்களைப் பற்றியும் தென்னாட்டுப் பார்ப்பனர்கட்கு ஒன்றுமே தெரியாது என்று கூறிவிட முடியாது. பாரதியாரைக் காட்டிலும் பல கோடி மடங்கு மதிக்கத் தகுந்த தமிழ்ப் பேரறிஞர்கள் தோன்றி மறைந்த இத்தமிழ் நாட்டில் பாரதியார் தினம் கொண்டாட பார்ப்பனக் கும்பல்கள் முன்வருகிறார்கள்.
வள்ளுவர் தினம், கபிலர் தினம், கம்பர் தினம், அவ்வையார் தினம், திருமூலர் தினம் கொண்டாடுவதற்கு எந்தப் பார்ப்பனர்களாவது முன்வந்தார்களா? இனிமேல்தான் முன்வருவார்களா? இவற்றை நாம் எடுத்துக் கூறினால், தென்னாட்டுப் பார்ப்பனர்களும் காங்கிரஸ் பார்ப்பனர்களும் அவர்கள் கூலிகளும் நம்மை வகுப்புத் துவேஷி என்றும், தேசத் துரோகி என்றும் கூறி, கூச்சல் போட ஆரம்பிக்கிறார்கள்.
காலஞ்சென்ற பாரதியார் அவர்களைப் பற்றி காங்கிரஸ் பார்ப்பனர்கள் செய்த விளம்பரம் சொல்ல முடியாததாகும். பாரதியார் பார்ப்பனராய்ப் பிறவாமல் மட்டும் போயிருந்தால் அவர் எவ்வளவு கீதங்கள் பாடிவிட்டுப் போயிருந்தாலும், தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அவர் பெயரை உச்சரிக்கக்கூட முன்வர மாட்டார்கள். இது அனுபவ உண்மையாகும். ஏன்? சரித்திர உண்மையாகும். இந்தப் பாரதியார் பாடல்களை சர்க்கார் பொதுப் பள்ளிக் கூடங்களிலும் பொதுச் சட்ட சபையிலும் தேசிய கீதங்கள் என்கிற பெயரால் பாட வேண்டுமென்று தென்னாட்டுக் காங்கிரஸ் பார்ப்பனர்கள் கிளர்ச்சி செய்து வருகிறார்கள்.
அவர்கள் அக்கிளர்ச்சியைத் தொடர்ந்து நடத்துவதற்காகவேதான் பாரதியார் தினம் கொண்டாடுகிறார்கள். பல ஜில்லா போர்டு பள்ளிக்கூடங்களிலும், பாரதியார் கீதத்தைக் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்யப்படுகிறது. சில இடங்களில் பாரதியார் பள்ளிக் கூடங்களும், பாரதியார் நிலையங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன. பாரதியார் கீத புத்தகம் விலை ரூபாய் ஒன்று என்றாலும் மூன்று ரூபாய் என்றாலும் (அதிக விலை கொடுத்து மடித்துப்போன கதர்வேஷ்டி-யையும் கதர்வேடத்திற்காக தெரிந்தே வாங்குவதுபோல்) பார்ப்பனரல்லாத தேசபக்தர்கள் பாரதியார் கீதப் புத்தகங்கட்கு கேட்ட ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராயிருக்கிறார்கள்.
இவை யாவும் பார்ப்பனர்களின் கட்டுப்-பாடான விளம்பரங்களினால் நடக்கின்றன. மற்றொரு தேசியக்கவி நாமக்கல் தோழர் ராமலிங்கம் பிள்ளை அவர்களிருக்கிறார். இவரைப் பற்றி காங்கிரஸ் பார்ப்பனர்கட்கு நன்கு தெரியும். பார்ப்பனர்கள் விரும்பினால் இவரைக் கருவேப்பிலை மாதிரி உபயோகப் படுத்திக்கொண்டு வேண்டாத பொழுது வெளியில் ஒதுக்கி விடுவார்கள்.
நாமக்கல் தேசியக் கவியார் தினம் கொண்டாட வேண்டுமென்று நாம் கூற வரவில்லை. அவரும் விரும்பமாட்டார் என்பது நமக்குத் தெரியும். நமது நாட்டுப் பார்ப்பனர்-களின் மன உணர்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காகவே உதாரணமாகக் கூறினேன். கிருஷ்ணஜயந்தி, ராமஜயந்தி கொண்டாடு-வதைப் போன்றே இப்பொழுது ஆரியப் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தி, திலகர் ஜயந்தி கொண்டாடி வருகிறார்கள். அதைப் பின்பற்றி பாரதியார் தினம் கொண்டாடுகிறார்கள்.
(‘குடிஅரசு’ – 31.10.1937)
ஆக, பெரியார் முதற்கொண்டு பொன்னம்பலனார் வரை, அறிஞர்கள், சிந்தனையாளர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் பாரதியார் பற்றித் திறனாய்வு செய்து கூறிய கருத்துகள் அனைத்தும், நாம் முன்னமே பாரதி பற்றி எழுதிய முடிவுகளோடு நூறு விழுக்காடு ஒத்துப் போவதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
எனவே, பாரதியின் ஆழ்மனத்தில் ஆழப் பதிந்தவை, ஜாதி, வருண வேறுபாடு வேண்டும் என்பதும், சனாதனமே சிறந்த தருமம் என்பதும், பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டு கடமை செய்ய வேண்டியவள் என்பதும், பொதுவுடைமை கூடாது என்பதும், திராவிட இயக்க எதிர்ப்பு என்பதும் ஆகும்.
பொன்னம்பலனாரும், மற்றவர்களும் கூறுவது போல, கஞ்சா மயக்கத்தில், கடன் தொல்லையில், பார்ப்பனர்கள் தனக்கு உதவவில்லை என்ற வெறுப்பில் கூறிய, பாடியவையே பார்ப்பன எதிர்ப்பும், பெண்ணுரிமையும், ஜாதி உயர்வு தாழ்வு இல்லை என்பதும், அவையும் பாரதியால் தொடக்க காலத்தில் கூறப்பட்டவை. பின்னாளில் அவர் முழுக்க முழுக்க சனாதனவாதியாகவே மாறி கருத்துகளைக் கூறினார் என்பதே நாம் இதுவரை உறுதி செய்த உண்மைகள். எனவே, பாரதி ஆர்.எஸ்.எஸ். முன்னோடி என்பது அய்யத்திற்கு இடமில்லா அப்பட்டமான உண்மையாகும்!ஸீ