செய்தி : 1
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சனி பகவான் மனைவி ஜேஷ்டா தேவியை வணங்கினால் தூக்கம் வரும். ஜேஷ்டா தேவிக்குக் கோவில் ஹரிகேசவநல்லூரில் உள்ளதாம். இதைச் சொன்னவர் ஜோதிடர் ஹரிகேசவநல்லூர் வெங்கட்ராமன்.
– ‘மங்கையர் மலர்’ – 16.03.2021, (‘கல்கி’, குழுமம்)
சிந்தனை :
ஓ, தூங்குமூஞ்சிக் கடவுள் என்று சொல்லுங்கள். தூங்குவதற்கு ஒரு கடவுள், விழிப்பதற்கு ஒரு கடவுள், சாப்பிடுவதற்கு ஒரு கடவுள், செரிமானத்துக்கு ஒரு கடவுள் _ கடவுள்களில்தான் எத்தனை எத்தனை டிபார்ட்மெண்ட்?
செய்தி : 2
ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய பாரதி எழுதாத ஒரு பாடல் -_ தாலாட்டுப் பாடல்!
– ‘மங்கையர் மலர்’ 16.03.2021
சிந்தனை :
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு! என்று பாடியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
செய்தி : 3
பெரியார் சிலை இழிவுபடுத்தப்படும்போது அதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் திருநீறு, குங்குமம் பூசியவர்களைப் பெருவாரியாகப் பார்க்கலாம். “தங்கள் மத நம்பிக்கை வேறு; அரசியல் வேறு; பகுத்தறிவுக்கும் மதம் குறித்த விமர்சனங்களுக்கும் உரிமை உண்டு’’ என்ற அளவிலேயே தமிழர்கள் இதுவரை நடந்துள்ளனர்.
– ‘ஆனந்தவிகடன்’ – 17.3.2021 – பக்கம் 105
சிந்தனை :
சரியாகத்தான் சொல்லியிருக்கிறது ஆனந்தவிகடன்.
இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டு என்று சொன்ன பிறகு, இந்து மதக் கடவுளை விமர்சித்தால் ‘குய்யோ முறையோ’ என்று கத்துவதில் அர்த்தம் உண்டா?
தந்தை பெரியாரின் உருவப் படத்தை ‘கல்கி’ இதழ் அட்டைப் படத்தில் போட்டு ‘தென்னாட்டு காபாலி’ என்று பாராட்டியதுண்டே!
தசரதர் அமைச்சரவையில் அவர் இருந்தார் என்கிறதே வால்மீகியின் இராமாயணம்.
இந்து மதத்தில் கடவுள் இல்லை என்பது நாத்திகமல்ல; மாறாக வேதங்களை மறுப்பதுதான் நாத்திகம் என்கிறாரே _ மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.
– “தெய்வத்தின் குரல்” பாகம் -2,
பக்கம் 407 – 408
வேதம், தரும சாஸ்திரம் இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகன்
– மனுதர்மம், அத்தியாயம் 2, சுலோகம் 11)
– மயிலாடன்