விழிப்புணர்வு : பெற்றோர் அறிந்து கொள்ளவேண்டிய சட்டம்

ஏப்ரல் 16-31,2021

அண்மைக் காலமாக இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இந்த வன்முறைகள் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் ஆசிரியர் மூலமாகவும், நெருங்கிய உறவினர்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் நிகழ்ந்தபடி இருக்கின்றன. நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறி சில பேரிடம்  நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தாது இருக்கவும், பெற்றோர்கள் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கரோனா காலத்தில் இதுபோன்று குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தி வந்தாலும், அதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் கூறுகளையும் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

போக்ஸோ சட்டம் கூறுவது என்ன?

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது.

¨           இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், அதற்கான தண்டனைகளும் என்னவென்று பார்ப்போம்.

¨           போக்ஸோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம்: இதற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாகவும் உள்ளது. கூடவே அபராதமும் விதிக்கப்படும்.

¨           போக்ஸோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6இன் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

¨           போக்ஸோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி, தொடவைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டணையாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

¨           போக்ஸோ சட்டம் பிரிவு 9 மற்றும் 10ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

¨           போக்ஸோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாகப் பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

¨           போக்ஸோ சட்டம் பிரிவு 13 மற்றும் 14ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்குக் கொடுப்பது குற்றம். இது இணைய தளம், கணிணி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும்.

¨           போக்ஸோ சட்டம் பிரிவு 18இன் படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

¨           குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும்.

¨           குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21இன் படி குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

¨           இதில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத்திருத்தத்தை அவசரச்சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வயது வரம்பும் 18இல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு

¨           போக்ஸோ வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், பாதிக்கப்பட்டோரின் தேவையைப் பொறுத்து தாமாகவோ அல்லது அவர்கள் அளிக்கும் மனுவின் அடிப்படையிலோ, இடைக்கால நிவாரணம் வழங்கலாம் என்பது சட்டமாகும்.

¨           குழந்தை பாதிக்கப்பட்டிருக்கும் நிலைமையில் வழக்கின் இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கலாம். பாதிக்கப்பட்டோரின் உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத்தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

¨           மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை வழக்குக்குச் செல்வதற்கும் பள்ளிக்குச் செல்லவும் முடியாத நிலைமை ஏற்பட்டால் அதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

¨           எச்.அய்.வி. தாக்கியிருந்தால், கர்ப்பமாகி விட்டால், ஊனமடைந்துவிட்டால் அவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

¨           மாநில அரசே இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாள்களுக்குள் இது அளிக்கப்பட வேண்டும்.

¨           பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் பெற்றோருக்கும் இச்சட்ட விதிகள் கூறப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தேசிய/மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம்தான் இச்சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும்.

சட்டப் பிரிவு 33(8)இன்படி வழக்கின் நீதிபதி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம். ஆனால்,

மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் பரிந்துரை

¨           பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ற சூழல் நீதிமன்றத்தில் நிலவ வேண்டும்.

¨           போக்சோ சட்டப் பிரிவு 35(2)ன்படி, வழக்கு பதியப்பட்ட ஒரு வருடத்திற்குள், இதற்கான தீர்ப்பு விரைந்து வழங்கப்பட வேண்டும்.

¨           32(1)இன்படி, இப்படிப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கென்றே, தனியாக சிறப்பு அரசு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

¨           ஜனவரி 8, 2020 அன்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பதினாறு மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் மட்டும் கவனம் செலுத்தி வாதாடுவதற்காக, பதினாறு அரசு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதுபோல் இந்தியா முழுவதும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

                                                                – ச.குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *