– தந்தை பெரியார்
“எனதருமைத் துணைவி, ஆரூயிர்க் காதலி நாகம்மாள் 11.05.1933இல் ஆவி நீத்தார். நாகம்மாளை நான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனோ என்பது எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை.
நான் சுயநல வாழ்வில் ‘மைனராய்’, ‘காலியாய்’, சீமானாய் இருந்த காலத்திலும், பொது வாழ்வில் ஈடுபட்டு தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ _ போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது எனதருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.
நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து வந்தேன்… ஆகவே, நாகம்மாள் மறைந்தது என்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா எதுவுமே விளங்கவில்லையே!
நாகம்மாளை அற்ப ஆயுள் என்று யாரும் சொல்லிவிட முடியாது. அவருக்கு 48 வயதே ஆனபோதிலும் அது இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய 23.5 வயதுக்கு இரட்டிப்பு என்றே சொல்லவேண்டும். நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு கஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகிறேன்.
… கடந்த 2, 3 வருஷங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் (சங்கராச்சரிகள் போல… ஆனால் அவ்வளவு ஆடம்பரத்துடன் பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பயணத்திலேயே இருக்க வேண்டும் என்றும், நமக்கென்று ஒரு வீடோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ இருப்பது கூடாதென்றும் கருதி வந்ததுண்டு. ஆனால், அதற்கு வேறு எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை யென்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள். இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகும்.’’
இதை இரங்கல் உரை என்பதா? காதல் காவியம் என்பதா? பகுத்தாய்வின் உச்சநிலை என்பதா? எழுத்தாண்ட விதத்தில் இலக்கியச் சிகரம் என்பதா? என்னவென்று சொல்வது என்று நமக்கே அலைவெய்தும் அற்புத எழுத்தோவியம் இது! அவரின் அன்பு கசியும் உள்ளத்தை அடையாளங் காட்டிய அரிய தடயம் இது!