Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வீரமணியின் தொண்டு தொடர வேண்டும்!

 

 

 -பழ.கருப்பையா

பல நூற்றாண்டுகளாக இருண்டு கிடந்த தமிழகத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு பகுத்தறிவுப் பகலவனாகப் பெரியார் தோன்றினார்!

பெரியாரின் தோற்றமும், அவர் ஆற்றிய பயன்கருதாப் பணிகளும் தமிழகத்தின் தோற்றத்தையே மாற்றிவிட்டன.

இந்தியாவின் பிற மாநிலங்கள்போல், தமிழகமும் மூடத்தனத்தையே வாழ்க்கைப் போக்காகக் கொண்டிருந்த காலக்கட்டம் அது!

மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போர் தொடுத்த பெரியார் அவற்றைத் தாக்கித் தகர்த்தார்!

கடவுளைச் ‘சாமி’ என்று குறிப்பிடுவது போல், பார்ப்பனர்களையும் ‘சாமி’ என்றே அன்றைய நாட்களில் குறிப்பிடலாயினர்!

கோயிலில் திருநீறு வழங்கும்போதுகூட, அவர்களின் கை நம் கையில் பட்டுவிடாதவாறு பார்ப்பனர்கள் விழிப்போடிருந்தனர். தெருக்களில் அவர்களின் மீது நாம் பட்டு-விடாதவாறு நாம் விலகிச் செல்ல வேண்டும் என்பதைச் சமூக ஒழுகலாறாக ஆக்கி நம்மையும் அதை ஏற்றுக்கொள்ளும்படி செய்திருந்தனர்!

வேத கால நாகரிகத்தினும் மேலான நாகரிகம் படைத்திருந்த திராவிடர்கள் பொட்டு பூச்சிகளாய் ஆக்கப்பட்டிருந்தனர்.

இதுபோன்ற நிலை தமிழகத்-திற்குப் புதியதில்லை! சோழர்கள் காலத்திலேயே பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கித்தான் இருந்தது!

சோழர்களின் காலத்தின் இறுதிக் கட்டத்தில் வாழ்ந்த சித்தர்கள் ‘பறைச்சி போகமும் பார்ப்பனத்தி போகமும் வேறு வேறானவையா?’ எனக் கேள்வி எழுப்பினர்.

‘சாத்திரங்கள் ஒதுகின்ற சட்டநாத பட்டரை வேர்த்து இரைப்பு வந்தபோது, வேதம் வந்து காப்பாற்றியதா?’ எனக் கூரிய அம்புகளை வீசினர்!

பார்ப்பனியம் திகைத்தது; தமிழர்களிடையே அசைவுகள் ஏற்பட்டன என்றாலும் அதை வேரோடு பெயர்த்தெடுக்கின்ற ஆற்றலை அவர்கள் பெற்றிருக்கவில்லை.

சித்தர்கள் தனிச் சிந்தனையாளர்கள்; அவர்கள் நிறுவன வயப்பட்டவர்களில்லை; மக்களைச் சேர்த்துக் கொண்டு இயக்க வயமாக எதிர்த்தவர்களில்லை. ஆகவே அவர்களின் குரல்கள் தனிக் குரல்களாகவே ஒலித்தன. எட்டிய மட்டிற்குப் பயனை விளைவித்ததோடு களைத்து ஓய்ந்துவிட்டன! சித்தர்கள் அனைவருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-தாம்!

அதே பணியை இன்னும் பேரளவிற்கு விரிவாகப் பெரியார் செய்ய முன்வந்தார்.

ஈரோட்டுப் பூகம்பத்தால் பார்ப்பனியம் தகர்ந்தது. ‘பிராமணாள் ஓட்டல்’ என்று தனித்து அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், பார்ப்பனரல்லாத சமையற்காரர்கள் சமைக்கும், பார்ப்பனரல்லாதார்களான ரெட்டியார், நாடார் கடைகளில் விரும்பி உணவு உண்ணும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டது!

சமமாக உட்கார்ந்து சாப்பிட மறுத்தவர்-களை, சமமில்லாதவர்கள் சமைத்த உணவை உண்ணும்படி செய்தது மிகப் பெரிய காலப் புரட்சி! அத்தகைய கருத்துப் புரட்சியை அந்தக் காலத்தின் மீது ஏற்றியவர் பெரியார்தான்! காலங்கள் தாமாக உருவாவதில்லை!

பெரியாரின் அடிப்படைக் கொள்கை நிறைவேறக் கருவறைக்குள் பார்ப்பனன் அல்லாதவனும் தமிழும் நுழையச் சட்ட வடிவம் தந்தார் ஆட்சியாளர் கலைஞர். அடுத்து வந்த பார்ப்பனப் பெண்ணின் ஆட்சியால் அது இன்றுவரை செயல்வடிவம் பெறாமலிருக்கிறது.

வியர்வை சிந்தி வயலை உழுது, விதைத்து, நீர்ப் பாய்ச்சிக் களை எடுத்து, கதிர்கொண்ட நெல்லை அறுவடை செய்து, அரிசியாக்கிச் சோறாக்கிய பின்னர் ‘இனி இலையில் போட்டு எடுத்துண்ண வேண்டிய அந்த வேளையில்’, அடுத்துப் பொறுப்புக்கு வந்தவர்கள் சோற்றுப் பானையைத் தூக்கி உள்ளே வைத்துப் பூட்டி-விட்ட கொடுமைக்கு எங்கு போய் முட்டிக் கொண்டு அழுவது?

கலைஞர் சொன்னதுபோல் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அப்படியே நீடிக்கிறது!

யாகங்கள், பூசனைகள், தர்ப்பனங்கள், மாயமந்திரங்கள், அலகு குத்தல்கள், பால்-குடங்கள் என்று மூடத்தனங்களின் முடை-நாற்றத்தில் பிறந்த சடங்குகள் கடந்த இருபது ஆண்டுகளாகத் தலைவிரித் தாடுகின்றன!

மதங்கொண்ட நிகழ்கால அரசின் மதம் இது! பெரியார் சிலைக்கு மாலை அணி-வித்துவிட்டு, பெரியார் படத்தைப் பின்புலத்தில் வைத்துக்கொண்டு, பெரியார் தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் வழிவந்ததாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு பிரிவின் பேரால் இத்தகைய எதிர்நிலைகளும் இழிவுகளும் அரங்கேறுகின்றன.

இரண்டு தலைமுறைக்காலப் பெரியாரின் உழைப்பை, தன்னுடைய ஒருதலைமுறைக் கால அரசியலாலும், சில கால ஆட்சியாலும் முற்றாக ஒழித்துவிட முனைந்து நிற்கிறார் செயலலிதா!

பயிர் நிலத்தில் மண்டிய களை அவர்!

திராவிட இயக்கக் கொள்கைகள் நீர்த்து விட்ட காலம் இது. அதன் கூனை நிமிர்க்க வல்லவர்-கள் மூவர்! பெரியாரோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் அவர்கள்! பெரியாரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அவர்கள்! பெரியாரின் புரட்சி வெற்றி பெற அவரோடு சேர்ந்து களமாடியவர்கள் அவர்கள்!

இயற்கை எய்திய அறிஞர் அண்ணா அனைய எண்ணற்றோர் மறைவுக்குப் பின்னர் எஞ்சி நிற்பவர்கள் இந்த மூவர்தாம்! கலைஞர், பேராசிரியர், கி.வீரமணி!

அண்ணா விவரித்த இரட்டைக் குழல் துப்பாக்கியின் ஒரு குழல் கலைஞர் பொறுப்பில்; இன்னொரு குழல் ஆசிரியர் கி.வீரமணி பொறுப்பில்!

கி.வீரமணி அறிவு தெளியாப் பருவம் தொட்டு, அறிவு முதிர்ந்த பருவம் வரை பெரியாரியத்தை விட்டு எள்ளளவு, எள்ளின் முனை அளவுகூட விலகாதவர்; மாறாதவர்!

பெரியாரால் வளர்க்கப்பட்டு, பெரியாரால் பொதுப் பணியில் பயிற்றுவிக்கப்பட்டு, பெரியாரிடமே திராவிட இயக்கத்தின் கடிவாளத்தை நேரடியாகப் பெற்றவர் ஆசிரியர் கி-.வீரமணி!

‘என் சொந்தப் புத்தியால் சொல்லவில்லை; பெரியார் தந்த புத்தியால் சொல்கிறேன்’ என்று பெருமிதத்தோடு பேசுகிறவர் அவர்!

திராவிட மன்னன் மாவலியின் அளப்பரிய கொடைப் பெருமையை மறைத்து, வாமனக் குள்ளனின் அற்ப அவதார நிலையினைப் பெருமைப்படுத்தும் பாரதிய சனதாவின் தலைவர் அமித் சா; திராவிட இயக்க உணர்வுகளைத் திராவிட இயக்கத்தின் பெயராலேயே குழி தோண்டிப் புதைக்க அவதாரம் எடுத்திருக்கும் செயலலிதா; இவர்கள் அனையோரை எதிர்கொள்ளும் காலக் கடமையை ஆற்ற ஏற்கனவே பெரியாரால் இனஞ் சுட்டப்பட்டிருப்பவர் ஆசிரியர் கி.வீரமணி! இன்றும் என்றும் அதைப் பிறழ்ச்சியின்றி நடத்திச் செல்ல வல்லவர் வீரமணி.

தேவையின் நீட்சி காரணமாகத் திராவிட இயக்கத்திற்கும் நீட்சி வேண்டும்!

ஆசிரியர் வீரமணியின் தொண்டிற்கும் தொடர்ச்சி வேண்டும்! அதற்கு அவர் பல்லாண்டு வாழ வேண்டும்! வாழ்த்துகிறேன்!