– சோம.இளங்கோவன்
ஏழை பணக்காரர் ஆவது ஆங்காங்கே நடப்பதுதான். அதில் பலர் தமது ஏழ்மையை மறைக்கப் பார்ப்பார்கள், பலர் மறந்தும் விடுவார்கள்.
ஆனால், மற்ற ஏழைகளைப் பார்த்து அவர்களின் மனம் நோகாமல் அவர்களுடன் பழகி, அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற வைக்கும் பணக்கார ஏழைகள் வெகு சிலரே ! அதில் மிகவும் நேர்மையான மனதுடன் தெளிவாகவும், துணிவாகவும் செயல் பட்டுப் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வின் ஒளிவிளக்கே என்று மனமாரப் புகழ்வது ஓப்ராவை மட்டுமே!
ஓப்ராவின் குழந்தைப் பருவம் மிகவும் ஏழ்மையும், துன்பமும் நிறைந்திருந்தது. வேண்டாத குழந்தையாக இளந்தாய்க்குப் பிறந்தவர். பாட்டி ஏழ்மையில் வளர்த்தாலும் தன்னம்பிக்கையுடன் பேச்சு, எழுத்து, பாட்டு, கிறித்துவ ஆலயம் என்று அன்புடன் வளர்த்தார். ஆனால் ஓப்ரா ஒன்பதாவது வயதிலே வீட்டு வேலை செய்த அம்மாவுடன் வாழ மில்வாக்கி நகருக்கு அனுப்பப்பட்டு விட்டார்.
அம்மா நாள் முழுதும் வேலைக்குப் போய் விடுவார். உடன் இருந்த உறவினர்களும், நண்பர்களும் இளம் ஓப்ராவை பால் வன்முறைத் தொல்லைக்கு ஆளாக்கி அலைக்கழித்துவிட்டனர். தனது 13 ஆம் வயதிலே வீட்டைவிட்டு ஓடப் பார்த்தார். ஆனால் குறைந்த வயது என்பதால் குழந்தைகள் நிறுவனத்தில் அடைக்கப்பட்டார். அவர் அடைந்த துன்பங்களை நினைவு கூர்ந்து தன்னுடைய நிகழ்ச்சியில் பலமுறைப் போராடி பில் கிளிண்டன் அமெரிக்கத் தலைவராக இருந்தபோது குழந்தைகள் பால் வன்முறையாளர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்று அறியும் ஓப்ரா சட்டம் என்றழைக்கப் பட்ட சட்டத்தை நிறைவேற்றினார்.
பெற்றோர்கள் ஆதரவில்லாத இளம் பெண்களுக்காக ஓப்ரா பல முறைகளில் ஆதரவும், அந்த ஆதரவளிப்போரை தனது நிகழ்ச்சிகளில் சிறப்பாகப் பாராட்டியும் உள்ளார். இளம் பெண்கள் கல்வியில் முன்னேறி தங்கள் திறமைகளை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே இவரது அடிப்படைக் கொள்கை. பெண்கள் தங்கள் பொருளாதாரம் பற்றிய அறிவைப் பெருக்கி எது முக்கியம், எது முக்கியமில்லை, எப்படிச் சிக்கனமாக வாழ வேண்டும், ஏன் கட்டாயமாகச் சேமிக்க வேண்டும் என்பதையெல்லாம் உணரவைத்தார்.
சூசன் ஆர்மன் என்றொரு பெண் தனது வாழ்க்கையின் பொருளாதாரச் சீர்குலைவும் பின் எப்படி முன்னேறி வந்தார் என்று சொல்லியும் எழுதியும் வந்தார். அது நல்ல வழி முறைகள் நிறைந்திருந்ததைப் பார்த்த ஓப்ரா அவரை தனது நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார். அவர் உடனே மிகவும் புகழ் பெற்றது மட்டுமல்லாமல் பல லட்சம் நூல்கள் விற்றார். அதனால் பல லட்சம் பேர் ஆண்களும், பெண்களும், குடும்பங்களும் தங்கள் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து வெளியேறி வாழ்க்கை யில் முன்னேறியதுதான் மிகவும் முக்கியம்.
சூசன் ஆர்மன் ஓப்ரா தன் வாழ்க்கை யையே மாற்றிவிட்டார் என்பதல்லாமல் பலர் கூறும் கூற்றைச் சொன்னார்.
“இது எங்களுக்கு ஒரு நிகழ்ச்சியல்ல. எங்கள் வாழ்க்கையை நல்ல வழியில் உருமாற்றி விட்ட திருப்பு முனை என்று நெஞ்சார வாழ்த்தியது தான் மிகவும் முக்கியம்” என்று சொல்லிப் பெருமைப்பட்டார்.
இது ஒரு துறையென்று இல்லை. இந்த மாதிரி வாழ்வின் பல துறைகளில் உடல் நலம், உறவுகள், மன நலம், முன்னேற்றம், கல்வி, தொழில் என்று ஏழைகள், முக்கியமாக பெண்கள் தன்னம்பிக்கையுடனும், தன்முனைப்புடனும் வாழும் வழிகள் என்று தனது நிகழ்ச்சிகளை மக்களின் வாழ்க்கைத் தடத்தைச் செப்பனிட்டு முன்னேற்றும் மனிதநேயப் பாதையில் கொண்டு செல்வதுதான் மிகவும் போற்றப்படுகின்றது. போற்றாத பத்திரிகைகளே இல்லை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே இல்லை. அடையாத பரிசுகளும், பட்டங்களும் இல்லை என்று புகழின் உச்சக் கட்டத்தில் நிற்கின்றார். குற்றம் குறை கூறுபவர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்து அவர்களுடன் பேசித் தீர்த்துக் கொள்ளும் மனப்பக்குவம் அடைந்தவர்.
பெண்களுக்கு, அதுவும் ஏதாவது தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்று துடிக்கும் ஏழைப் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பார். நல்ல கேள்விகளைக் கேட்பார். அது மற்றவர்களுக்குப் பாடமாக அமையும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உடனேயே அவர்களின் தொழில் சில நாட்களிலேயே பெருவளர்ச்சி அடைந்துவிடும். இந்த மாதிரி ஒருவர், இருவர் என்று அல்ல, பலர் பல துறைகளிலே. ஆனால், மக்களுக்குத் தேவையான துறைகளிலே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். கோடிசுவரர்கள் ஆகியுள்ளனர்.
அதைவிட முக்கியம் ஏழை மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றுவது. பணக்கார நாடான அமெரிக்காவிலே ஏழைககாட்டி விளக்கினார். இது ஏழைகளுக்கு மட்டுமன்றி உடல் நலத்துடன் நள் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர் என்பது உண்மை. அவர்களுக்கு அரசு வாரம் 40 டாலர்கள் சாப்பாட்டிற்காகத் தருகிறது.
அந்த 40 டாலர்களிலே எப்படி நல்ல உணவை வாங்கிச் சாப்பிட முடியும்? ஓப்ரா பெரிகோன் என்ற பெரிய பேராசிரியரை அழைத்து மக்களுக்குக் காண்பித்தார். என்ன உணவுகள் நல்ல குறைந்த விலையில் வாங்கக்கூடிய சிறந்த ஆனால் சுவைபட உண்ணக்கூடியவை என்று ன்றாக வாழ விரும்புபவர்களுக்கும், எடை குறைக்க வேண்டியவர்களுக்கும் மிக்க பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்து போற்றப்பட்டது.
பணக்கார ஓப்ரா இந்த ஏழை உணவுவகைகளைத் தானே உண்டு அதன் பயன்களைத் தெரிவித்தார்.
இரண்டரை பில்லியன் டாலர் ( சுமார் 12,500 கோடி ரூபாய்) சொத்துக்கு உரியவராக இருந்தாலும் மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிப்பதுதான் பேரின்பம் என்ற உண்மையை உணர்ந்து அனுபவிப்பவர். அதைக் கொஞ்சமும் தயக்கமில்லாமல் சொல்லுபவர். நம்மிடம் எவ்வளவு இருக்கின்றது என்பதல்ல. வாழ்க்கையில் நம்மிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கின்றது என்பதுதான்! என்று சொல்லிலும் செயலிலும் காட்டும் பணக்கார ஏழை, பெருங்கொடை வள்ளல் ஓப்ரா உலகின் ஒப்பற்ற ” ஓ” தான்.
(தொடரும்)