சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

ஜுன் 1-15,2021

நூல்: ஸ்ரீ பகவத் கீதை ஆராய்ச்சி                                     
ஆசிரியர்: தர்மதீர சுவாமிகள்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி: 26258410, 26251968, 26359906
விலை: ரூ.85.00   பக்கங்கள்: 132

பாயிரம்

“ஸ்ரீ பகவத் கீதை ஆராய்ச்சி’’ என்னும் பெரிய இந்நூலை ஊன்றிக் கவனிப்பார் ஒவ்வொரு-வருக்கும் இந்துமத புராண ஸ்ருதிகளினும் மேம்பாடான எவ்விஷயமும் ஸ்ரீபகவத் கீதையில் பொதிந்து கிடக்கவில்லை-யென்பது நன்கு புலனாகும். ஆதலின் பகவத் கீதை இந்து மதத்தின் தலைசிறந்த நூலென்றும், விஞ்ஞான உலகத்தின் சமூக வாழ்க்கைக்கு ஏற்றதான தத்துவ நுண்ணுணர்வுகளை யெல்லாம் தன்னகத்தே அடக்கிக் கொண்டிருக்கின்ற தென்றும், அரசியல் நுட்பங்களைக் கீதையில் இனிது காணலாமென்றும், அஹிம்சா கொள்கையையுடைய சாத்வீக எதிர்ப்பினால், பிறரைப் பணியச் செய்ய வேண்டுமானால் கீதையின் உபதேசத்தைப் பெற வேண்டு-மென்றும் கூப்பாடிட்டுவரும் அரசியல்வாதி-களுடையவும், இந்து மதச் சீர்திருத்தவாதி-களுடையவும் ஆரவாரமெல்லாம் வெற்றடுக்குச் சொற்களாமென்பது தேற்றமாகும்.

இந்தப் பகவத்கீதையின் உற்பவத்தைப் பற்றி ஆராய்வோமானால் மிகவும் வியப்பைத் தரக்கூடியதொன்றாகவே விளங்கும். பாண்டவர்களுக்கும், துரியோதனாதிகட்கும் அஸ்திநாதபுரத்தில் ஏற்பட்ட பாரத யுத்தத்தின்போது சாரதியாயிருந்த கிருஷ்ணன் பகவத் கீதையைப் போதித்தாராம். அதுவும் அர்ச்சுனன் வில்லை வளைத்துக் குணத்தொனி செய்த காலத்தில் போதித்தாராம். அப்படி போதித்ததும் எழுநூறு கீதைகளாம். இருமருங்கு சேனைகளும் போர்தொடுக்க ஆரவாரித்து முனைந்து நிற்கும் சமயத்தில், ஒரு மருங்கு சேனைத்தலைவனுக்கு எழுநூறு கீதைகளை உபதேசித்து வாதப் பிரதிவாதம் செய்து-கொண்டிருப்பதென்றால், அதனை மனதாலும் நினைத்தற்குக் கூடாதென்பதை நாம் விவரிக்க வேண்டியது அநாவசியமென்றே கருதுகின்றோம்.

கிருஷ்ணன் அர்ச்சுனனை யுத்தஞ்செய்யத் தூண்டியதாகச் சில கீதைகள் காணப்-படுகின்றதெனினும் மற்றைய கீதைகளெல்லாம் யுத்தத் தருணத்தில் கூறப்பட்டவைகள் என்று கருதுவதற்குச் சிறிதும் இடந்தரவில்லை. அன்றியும் பகவத்கீதையை ஒருவர் நன்றாக ஊன்றிக் கவனிப்பாரானால் அது இன்ன தத்துவத்தை யடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூலென்று துணிந்து கூற முன்வரார். ஒன்றுக்கொன்று பொருந்தாது முரண்பட்டு நிற்கும் உபதேசங்களே கீதையடங்கலும் பொதிந்து கிடப்பதைக் காணலாம். இவ்வித முரண்பாடுகளை “பகவத்கீதை ஆராய்ச்சி’’ என்னும் இந்நூலின்கண் ஆசிரியர் அவர்கள் நிரல்படத் தொடுத்துக் காட்டியிருக்கின்றார்.
கர்ப்பகால தொடக்கத்தில் பிரஜாபதி பிரஜைகளை சிருஷ்டித்தார் என்று 3_10 சுலோகத்திலும், குண கர்மங்களையுடைய நான்கு ஜாதிகள் என்னால் சிருஷ்டிக்கப்பட்டன என்று 4_13 சுலோகத்திலும், நான் எனது பிரகிருதியை ஆதாரமாகக் கொண்ட சகல பூத சமூகத்தையும் அவைகளின் சுபாவத்திற்கேற்ப மீண்டும் மீண்டும் சிருஷ்டிக்கிறேன் என்று 9_8 சுலோகத்திலும் கூறியிருக்க இவைகளுக்கு முரண்பாடாக 3_14 சுலோகத்தில் அன்னத்தினின்றும் பிராணிகள் உற்பத்தியா-கின்றன. அன்னம் மழையினால் உண்டாகின்றது. மழையானது யாகம் செய்வதினால் உண்டாகின்றது. அந்த யாகம் கர்மத்தினால் உண்டாகின்றது என்றும் 9_10 சுலோகத்தில் எனது பார்வையின் கீழ் பிரகிருதியே சராசரங்களைச் சிருஷ்டிக்கின்றது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பிரகிருதி ‘புருஷன் இரண்டும் அநாதிகள் என்று 13_20 சுலோகத்திலும் அனாதியான-தாலும், குணரகிதமானதினாலும் இப்பரமாத்மா நாசமற்றதாம்’ இவ்வாத்மா சரீரத்திலிருப்பினும் ஒன்றும் செய்வதில்லை. ஒன்றினாலும் பாதிக்கப்படுவதுமில்லை என்று 13_32 சுலோகத்திலும் கூறியிருப்பதற்கு முரண்பாடாக 14-_5 சுலோகத்தில் பிரகிருதியினின்றுண்டான முக்கணங்கள் நான் அவ்வியபனாயிருந்த-போதிலும் தேகியாகிய புருஷனை இச்சரீரத்திற் பந்திக்கச் செய்கின்றது என்றும், 14_7 சுலோகத்தில் ஆசை இச்சை இவ்விரண்டையும் தோற்றுவிக்கும் இரஜோ குணமானது கருமத்திற் பற்றை யுண்டுபண்ணி புருஷனைக் கட்டுப்படுத்துகின்றது என்றும் கூறப்பட்டிருக்-கின்றது.

இன்னோரன்ன முரண்பாடுகள் அணியணியாய்ப் பொதிந்து கிடப்பதை ஆசிரியர் அவர்கள் தமது ஆராய்ச்சியில் நன்கு விளக்கிக் காட்டித் தொகுத்திருக்கிறார். அன்பர்கள் ஊன்றிக் கவனிப்பாராக.
இக்கீதை குருக்ஷேத்திர சண்டைக் காலத்தில் கிருஷ்ணனால் அர்ச்சுனனுக்கு உண்மையில் போதிக்கப்பட்டிருந்தால், இக்கீதை பாரதத்தோடு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். கிருஷ்ணனைப் பற்றிப் பாரதக் கதையில் எழுதிய வியாசர் அவரால் போதிக்கப்பட்டக் கீதையை ஏன் எழுதாமற் போனார். ஆகவே, கீதை பாரத யுத்த காலத்தில் ஏற்பட்ட தொன்றல்லவென்பதும், சாக்கிய புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக இந்துமதப் புராணங்களில் கற்பிதப்படுத்திய அநேக காலங்களுக்குப் பிறகே கிருஷ்ணனை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக ஏற்படுத்திக் கீதையும் எழுதப்-பட்டதென்பதும் புராணங்களைத் துருவிக் காண்பார் எவர்க்கும் இனிதிற் புலனாகும்.

இக்கீதை கி.பி.அய்ந்தாம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென்பது சரித்திராசிரியர்-களுடைய துணிபாகக் காணப்படுகின்றது. காளிதாசரது சமஸ்கிருத கிரந்தத்தில் முதன்முதலாகக் கீதையைப் பற்றிச் சில எடுத்தாளப்பட்டிருப்பதை நோக்குழி பாரத யுத்தகாலத்தில் கீதை ஏற்படவில்லையென்பதைத் தெளிவுபடுத்தும். கீதையைப் பற்றிக் காளிதாஸருக்குப் பிந்திய நூல்களில் எடுத்தாளப்-பட்டிருக்கின்றது. காளிதாசருக்கு முந்திய எந்நூற்களிலும் கீதையைப் பற்றிச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கவில்லை. எப்போது முன் கவிகளில் கீதையைப் பற்றிக் கூறவில்லையோ அப்போது கீதை காளிதாசருக்கு முன் இருந்ததில்லை யெனத் தெரிகிறது. காளிதாசர் காலம் 512 கி.பி. இக்காளிதாசர் இலங்கையில் 512 கி.பி.யில் ஆண்ட குமாரதாஸ் ராஜாவின் பிராண நண்பன்.

கீதையில் பௌத்தர்களது தத்துவ நூற்களையேனும் சாஸ்திரங்களையேனும் குறிக்காவிடினும், பௌத்த நீதிகள் வரையறையின்றி எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இதைக் கொண்டே பௌத்த காலத்திற்குப் பிந்தியதென மிஸ்டர் ஜஸ்டிஸ் டிலாஸ் என்பவர் தமது (ஷிணீநீக்ஷீமீபீ ஙிஷீஷீளீ ஷீயீ tலீமீ மீணீst) என்னும்  புத்தகத்தின் குறிப்பில் தெளிவாகக் குறித்துக் காட்டியிருக்கின்றார்.

கிருஷ்ணன் கீதையைப் போதித்தாரென்பதே ஆராய்ச்சியில் முரண்படுகின்றது. கிருஷ்ணன் பிரம்ம அவதாரமாக வந்ததாக அதர்வண உபநிஷத்தில் கூறவில்லை. அதர்வண உபநிஷத் காலம் கி.பி.500. ஆகையால், கிருஷ்ணன் பிரம்மா அவதாரமாகப் பாரத யுத்தத்தில் வந்திருந்தாரென்பது முரண்படுகின்றது. அதே உபநிஷத்துக்களில் கிருஷ்ணனைத் தெய்வமாக வணங்கியதாக ஒரு சுலோகமேனும் காண-வில்லை. சந்தோகிய உபநிஷத்தில் கிருஷ்ணனை தேவகி புத்திரனாகக் கூறியிருக்கிறது. அவர் கோர அங்கிரஸ ரிஷியின் சிஷ்யனாக இருந்ததாகவும் கூறுகிறது. கிருஷ்ணன் பிரஹ்ம அவதாரமாக இருந்தால் பிரமஹ்மத்தைப் பற்றிக் கூறும் அவ்வுபநிஷத்தில் ஏன் கிருஷ்ணனை பிரஹ்ம அவதாரமென கூறப்படாது, கிருஷ்ணனை மனிதனாகச் சில ஸ்மிருதிகளிலும் விஷ்ணுவின் அவதாரமாக சில நூற்களும் பிரஹ்ம அவதாரமாக சில கிரந்தங்களும் முரண்பட்டுக் கூறாநிற்கும்.

பிரமஹமனே கிருஷ்ணாவதாரமாகத் தோன்றி பகவத் கீதையைப் போதித்திருக்க, சிவனுடைய அவதாரமாகத் தோன்றிய சங்கராச்சாரி தமது வேதாந்தத்திற்கேற்ப கீதைக்கு உரை எழுதினாரென்றும், விஷ்ணு அம்சமாகத் தோன்றிய இராமாநுஜாச்சாரி தமது விஸிஸ்டாத் வைதத்திற்கேற்ப கீதைக்கு உரை கண்டு அத்வைதத்தை எதிர்த்துள்ளதும், சைவ சமய குருவாகிய மத்துவாச்சாரி தமது துவைத சித்தாந்தத்திற்கேற்ப கீதைக்கு உரை எழுதி அத்வைத விசிஸ்டாத்வைதத்திற்கு முரண்பட்டாரென்றும் அறியக்கிடப்பதை நோக்குழி அண்மையில் காந்தியடிகளும், இந்துமத ஜீயர்களும் பகவத் கீதைக்கு வெவ்வேறு விதமான உரை கூறி முரண்பட்டதில் ஆச்சரியப்படத் தக்கதொன்றுமில்லை. இன்னும் இந்து மதத்திற்குரிய ஆசிரியர் பலரும் பற்பல விதமாக உரை கூறி முரண்படுதற்கும் பகவத்கீதை வரவேற்க ஆய்த்தமாய் இருக்கிறதென்பதே நமது அபிப்பிராயம்.

“பகவத்கீதை ஆராய்ச்சி’’ என்னும் பெயருடன் ஆசிரியர் தர்மதீர சுவாமிகள் மிகச் சிரமத்துடன் இந்நூலை எழுதி முடித்துள்ளார். கீதையின் முரண்பாட்டை அணியுற விளக்கிக் காட்டு-வதற்காக ஆசிரியர் அவர்கள் பல நூல்களை யாராய்ந்து ஆங்காங்கு பொருந்துமாறு மேற்கோள்கள் அமைந்துள்ளது பெரிதும் பாராட்டத்தக்கதாம். தமிழில் இதுபோன்ற ஒரு சிறந்த ஆராய்ச்சி நூல் இல்லாமலிருந்த குறையைப் போக்குவதற்காக சுவாமி தர்மதீரர் மேற்கொண்ட அரும்பணியைத் தமிழுலகும் பெரிதும் வரவேற்று ஆதரிக்குமென்றே யாம் கருதுகின்றோம்.
– ஜி.அப்பாத்துரை

முகவுரை

“ஸ்ரீபகவத் கீதை ஆராய்ச்சி’’ என்னும் இப்புஸ்தகமியற்ற முற்படும்படி நான் வற்புறுத்தப்பட்டவனானதற்கு முக்கிய காரணங்கள் எனது சகோதர சகோதரிகளைக் கேவலம் மிருகங்களைவிட நீசமாகக் கருதியும் இழிவுபடுத்தியும், தாஸி மக்களென்று அர்த்தமுள்ள சூத்திரப் பட்டமளித்தும், மற்றும் மூன்று வருணத்தினர்களுக்குப் பணிவிடையாளர்களும் அடிமைகளுமாக்கியும் சண்டாளர்கள், நீசர்கள், பாபிகள், நிக்ருஷ்டர்கள், மிலேச்சர்கள், பறையர்கள், அசுரர்கள், துஷ்டர்கள் முதலிய நிந்தா வசனங்களை ஆங்காங்கு பிரயோகித் திருப்பதுமன்றி கல்வி கற்கவோ, ஈசுராராதனை செய்யவோ, சுசியாயும் யதேச்சையாயும் நடக்கவோ செய்யவொட்டாமலும், மனித வர்க்கத்தினர்களுக்கு இயற்கையாலுள்ள உரிமைகளும், சுதந்திரமும், அனுபவிக்க இடமளிக்காவண்ணம் இந்துமதப் பிரமாணங்களென்றோ, சாஸ்திரங்களென்றோ சட்டங்களென்றோ சொல்லப்படும் இக்கீதையாலும், மனுஸ் மிருதியாலும் மக்களைத் தடைப்படுத்தி, விலங்கில்லா விலங்கினால் பந்திக்கப்பட்டிருக்கும் குரூர மனமுடைய பார்ப்பனச் சூழ்ச்சிகளை இதனால் கண்டு மனம் தெளிவுற்றாவது நம் மக்கள் அடிமை விலங்குகளான மதங்களை விட்டொழித்து இயற்கையான தருமத்தையும், காரிய காரண தத்துவங்களையும் கடைப்பிடித்து பகுத்தறிவைக் கொண்டு மூடநம்பிக்கைகளனைத்தும் தவிர்த்து சுதந்திர ஜீவியத்தை யடைய பிரயத்தனப்படுவார்களென்ற அவாவாலேயாம்.

ஆனால், தமிழ்ப் பாஷையில் எனக்குக் கிடைத்த சிற்றறிவைக் கொண்டு இப்புஸ்தகத்தை இயற்றலானேன் என்றல்லாமல், நான் ஒரு ஆசானிடமோ, பாடசாலையிலோ யாதொரு தமிழ் கல்விப்பயிற்சி பெற்றவனன்றா மாதலின் இப்புஸ்தகத்தில் ஏதாவது பிழைகளிருப்பின் அவைகளையெல்லாம் “மழலைச் சொல்’’ போன்று வாசகர்கள் தயவுடன் மன்னித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன்.

இப்புஸ்தகத்தை நிறுத்துரைத்துப் பார்த்து அதிலிருந்த பிழைகளைத் திருத்தி சுத்தப்-படுத்தும் பொருட்டு பல நாட்கள் தனது விலையுயர்ந்த சமயத்தையும், உழைப்பையும் ஒரு பொருட்டாகக் கருதாதும் இப்புஸ்தகத்திற்கு ஓர் அரிய நூன்முகம் எழுதியும் தந்த தமிழ்ப் பண்டிதரும், ‘தமிழன்’ பத்திரிகையின் ஆசிரியருமான, தோழர் ஜி.அப்பாத்துரையார் அவர்களுக்கும் இப்புஸ்தகம் அச்சிட்டு பிரசித்தம் செய்வதற்கு பண உதவியளித்த தோழர் எம்.பார்த்தசாரதி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தர்மதீர சுவாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *