மியான்மர் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்புகையில் சிங்கப்பூரில் 09.04.2006 அன்று எமக்குச் சிறப்பான வரவேற்பும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.
செய்யது ஆல்வி சாலையிலுள்ள முஸ்தபா சென்டர் எதிர்புறம் ஆனந்தபவன் உணவகத்தின் மேல் மாடியில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
விருந்தினர்கள் வருகைக்குப் பின் நண்பகல் 12 மணிக்கு பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ. கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
உயர்கல்வி நிறுவனங்களில்27% இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களைக் கண்டித்து மனிதச் சங்கிலி
அதனைத் தொடர்ந்து நமது உரையில், ஏப். 4, 5 ஆகிய நாள்களில் மியான்மர் நாட்டின் யாங்கோன் நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள மியான்மர் சென்று வந்ததைப் பற்றி விரிவாக விளக்கிப் பேசினோம்.
அந்நாட்டின் ஆட்சிமுறை, பழக்கவழக்கங்கள், கட்டடங்களின் கலை அம்சங்கள், வாழ்க்கை முறைகள், மொழி ஆகியவைப் பற்றியெல்லாம் நாம் குறிப்பிட்டது, விருந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்தோருக்கு வியப்பாகவும், சுவையாகவும் இருந்தது.
பல்வேறு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து மியான்மர் இந்து சங்கம் அமைத்து செயல்படுவதையும், வேறு அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சிகள், கணினி வகுப்புகள் நடத்துவதைப் பற்றியும் நமது உரையில் குறிப்பிட்டோம்.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பெரியார் சமூக சேவை மன்றம் ஆற்றிவரும் சேவையைப்பற்றி தந்தை பெரியார் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டிப் பேசினோம்.
முதலமைச்சர் பதவியேற்கும் முன் பெரியார் நினைவிடத்தி
ஒரு மனிதன் தன் ஆயுட்காலத்தில் முதல் 25 வருடம் கல்வி கற்பதற்கும், அடுத்த 25 வருடம் பொருளீட்டுவதற்கும் மீதமுள்ள தமது வாழ்நாளைச் சமூக பொதுத் தொண்டாற்றுவதற்கும் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, தொண்டறம் புரிய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினோம்.
விருந்து நிகழ்ச்சியில் டாக்டர் சுப.திண்ணப்பன், தேசிய நூலக வாரியத்தைச் சார்ந்த திருமதி. புஷ்பலதா, பேராசிரியர் ரத்னகுமார், கவிமாமணி மா.அன்பழகன், கவிஞர் க.து.மு. இக்பால், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிஞர் அருண் முல்லை, பெரியார்
தொண்டர் ராமசாமி, மலையரசி, வீரபாண்டியன், மலைமாறன், லெட்சுமணன், சாமி, பால்பிரசாத், அன்பழகன், ஜான் கோவிந்தசாமி, சுசீலா மூர்த்தி, ராஜராஜன் மாறன். கவிதா இணையர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அய்.அய்.டி., அய்.அய்.எம். உள்ளிட்ட ஒன்றிய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்போருக்கு
எதிராய், 16.4.2006 அன்று காலை 10 மணியளவில் திருச்சியில் எமது தலைமையில், மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அப்போராட்டம் திருச்சி ஒத்தக்கடை பகுதியிலிருந்து, நீதிமன்ற வளாகம் வரை நீண்டு
நடைபெற்றது. மாணவர்கள், பொதுமக்கள், மருத்துவர்கள், கழகத் தோழர்கள் என்று பல தரப்பினரும் பங்கேற்றனர்.
அப்போராட்டத்தில் நாம் உரையாற்றுகையில், “இடஒதுக்கீட்டைப் பார்ப்பனர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் எதிர்த்து வருகின்றனர். என்றாலும் அவர்கள் தோற்பது உறுதி. 55 ஆண்டுகால தொடர் போராட்டத்தின் விளைவாய் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுகீட்டை ஒன்றிய அரசின் மூலம் பெற்றுள்ளோம். இடஒதுக்கீட்டை எதிர்ப் போர் சமூக நீதிக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல; அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானவர்கள் சமூகநீதி நமது உரிமை, இதை எதிர்க்க, மறுக்க எவருக்கும் உரிமையில்லை” என்று குறிப்பிட்டோம்.
8.5.2006 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டோம். “உதய சூரியன் வெல்லட்டும், இதயசூரியன் முதல்வராகட்டும்”, “பணநாயகமா?
ஜனநாயகமா? இத்தேர்தலில் மக்கள் முடிவு கட்டவேண்டும்.” “பணம் அங்கு; குணம் இங்கு”; “தமிழாய்ந்த தமிழ் மகனை ஆட்சியில் அமர்த்துவீர்” “கலைஞர் முதல்வர் ஆவது உறுதி!” “சுனாமி போல் எழுந்து நின்று தமிழர் பகையைச் சாய்த்து, தமிழர் ஆட்சியை நிறுவுவீர் தமிழர்களே!” என்பன போன்ற முழக்கங்களோடு, தமிழர்களை தமிழ்நாடு முழுவதும் எழுச்சி பெறச் செய்தோம். நாம் எதிர்பார்த்தது போலவே, கலைஞர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வரானார்.
அறிவுச்செல்வன் – மதிவதனி திருமணம்
முதல்வராய் பதவி ஏற்கும் முன் பெரியார் திடலுக்கு வந்து அய்யா, பெரியார், அம்மா நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார். கலைஞரை இயக்கத் தோழர்கள் உணர்ச்சி பெருக்குடன் மகிழ்ச்சி பொங்க புடைசூழ வரவேற்று மரியாதைச் செலுத்தினோம். அப்போது ஒன்றிய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, தமிழக அமைச்சர்கள் பேராசிரியர் க.அன்பழகன், ஆற்காடு நா.வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், க.பொன்முடி, கே.என்.நேரு உட்பட பலரும் உடன் இருந்தனர். கலைஞர் உட்பட 31 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
16.05.2006 அன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக உரிமை தந்து தமிழ்நாடு அமைச்சர் அவை முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே முடிவு செய்தது. வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இம்முடிவை வரவேற்று, பாராட்டி, உணர்வு பெருக்குடன் கலைஞர் இல்லத் திற்கு கழகப் பொறுப்பாளர்களுடன் சென்று நன்றி தெரிவித்ததுடன் விடுதலையில், கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டோம். ‘‘பாசத்திற்கும் பெருமிதத்திற்கும் உரிய நம் முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த ஆட்சியின் சாதனைகள் ஒரு சரித்திரத் தொடராக, என்றென்றும் வரலாற்றின் வைர வரிகளால் எழுதப்படுபவையாக தொடர்ந்து கொண்டே உள்ளன. கலைஞரின் ராக்கெட் வேக முடிவு இன்று அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்யும் ஆணை நிறைவேற்றப்பட்ட முடிவு சற்று நேரத்திற்குமுன் (பகல் 12.40 மணி) அறிவிக்கப்பட்டது. அதனைப் பார்த்து, “அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளை” எடுப்பதுதான் எமது ஆட்சியின் முதல் குறிக்கோள் என்று அறிவித்த கலைஞரின் ராக்கெட் வேக முடிவு கேட்டு அவருடைய தொண்டர்கள் மகிழ்ச்சிக் கண்ணீரில் மிதந்து கொண்டுள்ளனர்.
கலைஞருக்கும், அவருடைய அமைச்சர வைக்கும் நிரந்தர நன்றி என்ற சொல்லைத் தவிர வேறு சொற்களை அகராதியில் தேடிப்
பார்க்கிறோம்; பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
கலாலட்சுமி – செந்தில்குமார் திருமணம்
“தந்தை நெஞ்சில் தைத்த முள்ளோடு, தந்தையை அரசு மரியாதையோடு புதைத்தேன்” என்று வருந்திய கலைஞர், 5ஆம் முறையாக ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த அரசு மரியாதையை முழுமை பெற்றதாக ஆக்கவேண்டும் என்பதற்காகவே காலமும், ஞாலமும் காத்திருந்தனபோலும்! நாடெங்கும் வீடெல்லாம் நன்றித் திருவிழா நடக்கும்! உலகத் தமிழர்களின் பாராட்டு மழையில்
கலைஞர் ஆட்சி குளித்துக் கொண்டுள்ளது- இந்த துணிந்த முடிவுக்காக!
திராவிடர் கழகம் பாராட்டு நன்றித் திருவிழாக்களை நாடெல்லாம்- தமிழர் வீடெல்லாம் நடத்திடும்! சுயமரியாதை இயக்கத்தின் 80ஆம் ஆண்டு விழாப் பரிசாக அளித்த நம் கலைஞருக்கு தமிழ் கூறும் அன்பு முத்தங்கள் கலந்த வாழ்த்துகள்!’’
20.5.2006 அன்று காலை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப் பேற்று செயல்பட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். அந்த உணர்வு களை வெளிப்படுத்தி, கீழ்க்கண்ட இரங்கல் அறிக்கையை விடுதலையில் வெளியிட்டோம்.
ஈழத் தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் சென்னை – 1.6.2006
மதுரையில் நடத்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மிகுந்த பக்தரான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பேசும்போது, “பெரியார் இயக்கம் சொல்வதில் தவறென்ன என்றும் பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, அவர்களோடு நானே, மிக நெருக்கமாக ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது” என்று இரத்தினச் சுருக்கமாகப் பேசியது மறக்க முடியாத ஒன்று.
அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், முதல்வர் கலைஞர் உட்பட தி.மு.க. குடும்பத்தவர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
அமைச்சர் கோ.சி.மணி அவர்கள் 27.05.2006 அன்று, கும்பகோணத்தில், கொலைக்குற்றவாளியான காஞ்சி சங்கராச்சாரி, ஜெயேந்திர சரஸ்வதிக்கு, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதைக் கண்டித்து 29.05.2006 அன்றைய விடுதலை ஏட்டில் அறிக்கை வெளியிட்டோம்.
கொலைக்குற்றவாளிக்கு அமைச்சர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தலாமா? தனிமையில் அவருடன் உரையாடியது சரியா? இது பல யூகங்களை உருவாக்காதா?
கலைஞருக்குச் சாபமிட்ட சங்கராச்சாரியாரைச் சந்திப்பது எவ்வகையில் ஏற்புடையது? திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு இது ஏற்புடையதா? என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். முதலமைச்சரும் அமைச்சர் கோ.சி.மணி அவர்களை நேரில் அழைத்து ‘விடுதலை’ அறிக்கையை சுட்டிக் காட்டி கண்டித்தார். வருத்தம் தெரிவித்தார் கோ.சி.மணி.
ஆத்தூரில் 28.5.2006 அன்று இன்று நூற்றாண்டைக் கடந்த பெரியார் பெருந்தொண்டராய் நம்முடன் பயணிக்கும் பெரியார் தொண்டறச் செம்மல் ஆ.வே.தங்கவேல் பேரனும் அன்புவில் – மீனா ஆகியோரது மகனுமான அறிவுச்செல்வன் – மதிவதனி (எடப்பாடி க.புத்தூர் இராஜேந்திரன் – மாலதி இணையரின் மகள்) ஆகியோர் திருமணத்தை ஆத்தூர் எல்.ஆர்.சி. திருமண மண்டபத்தில் நடத்தி வைத்தேன். திராவிட இயக்க தமிழர் பேரவையின் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
29.05.2006 அன்று ஒரத்த நாட்டில் கலாலட்சுமி – செந்தில்குமார் இவர்களின் இணையேற்பு விழாவை நடத்தி வைத்தோம். விழாவில் லண்டன் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். சுயமரியாதைக் கருத்துகளை மக்களுக்குப் புரியும்படி எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
1.6.2006 அன்று இரவு 7 மணியளவில், ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, சுப.வீரபாண்டியன் உட்பட ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் கலந்து
கொண்டனர். அந்நிகழ்வில் உரையாற்றுகையில், “ஈழத்தமிழர்கள் சொல்லப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு இரண்டும் மனித நேய அடிப்படையில் கடமையாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம்.
எம் இனத்தமிழர்கள் மட்டும் என்ன தவறு செய்தார்கள்? மற்ற நாடுகள் காட்டுகின்ற மனித நேயத்தைக் கூட இந்தியா காட்டத்தவறுவது ஏற்புடையதா? தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஈழத்தமிழர்கள் நலனுக்கும்
வாழ்வுக்கும் குரல் கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டோம்.
02.06.2006 அன்று மாலை கலைஞர் அவர்கள் எழுதிய “காலப் பேரையும் கவிதை சாவியும், புத்தக வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. புத்தகத்தினை நான் வெளியிட பாடலாசிரியர் வாலி பெற்றுக் கொண்டார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கோ.க.மணி மத்திய அமைச்சர் ஆ.இராசா, பிரதாப் சிங் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மறுநாள் காலை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தமது 83 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் அவரை வரவேற்று வாழ்த்தும்போது தன்னை பெரியார் போல் நீங்கள் நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்தி னோம். அதற்கு உங்கள் உறுதுணை தேவை என்று முதலமைச்சர் பதிலளித்தார். கண்டிப்பாக என்று பதிலளித்து கலகலப்பான உரையாடலை நிறைவு செய்தோம்.
07.06.2006 அன்று காலை 9 மணி யளவில் திருச்சி வாசவி மஹாலில் பொன்மலர் – வெங்கட்ராமன் ஆகியோரின் இணையேற்பு விழாவை நடத்தி வைத்தோம். இவ்விழாவில் கலைக் காவேரி தந்தை ஜார்ஜ் அடிகளாரும், டாக்டர் சோம.இளங்கோவன் அவர்
களும் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூரில் 12.06.2006 அன்று, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணைப் பிறப்பித்த கலைஞருக்குப் பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதன்பின் திலகர் திடலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலைஞர் கலந்து கொண்டு ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கதாகும்.
“என் காயங்களை ஆற்றிக்கொள்ள இப்பொழுதும் நான் வரும் இடம் திராவிடர் கழகம்தான்!” என்று கலைஞர் உணர்வு பொங்க நெகிழ்வுடன் குறிப்பிட்டது அனைவரையும் உருகச் செய்தது. அந்த உரையின் சுருக்கம் இதோ:
“இன்று தஞ்சைத் திருநகரில் நடைபெறுகின்ற இந்த விழா என் நெஞ்சை அள்ளுகின்ற விழா திராவிடர் கழகத்தினுடைய விழா என்றால், அது ஓர் இயக்கத்தின் விழா என்று நான் நினைப்பதில்லை. நம்முடைய குடும்பத்தின் நிகழ்ச்சி என்ற அந்த உணர்வுதான் என்றைக்கும் என்னை உந்தித்தள்ளும். அந்த உணர்வில் ஒரு துளியும் மாறாமல் இன்று நான் இந்த மேடையிலே அமர்ந்திருக்கிறேன்.
நானும் இளவல் வீரமணி அவர்களும் இளமைக்காலம் முதலே, தந்தை பெரியாருடைய ஆணையை ஏற்று, தமிழகமெங்கும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டவர்கள்.
சேறு சகதி என்று பாராமல், எதிர்ப்பு மலையென வந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாது சிரித்த முகத்தோடு, அவற்றைச் சமாளித்து, இந்த இயக்கத்தை வளர்க்கும் பணியில் சிறு வயது முதல் ஈடுபட்டவர்கள்.
இந்த விழாவிற்கு அமெரிக்காவிலிருந்து கூட நண்பர்களெல்லாம் வந்துள்ளனர். சான்றோர், அறிஞர் பெருமக்கள் ஏராளமாய் வந்து கலந்துகொண்டுள்ளனர். எனக்கு வரும் பெருமையெல்லாம் தந்தை பெரியாரைச் சேரும் என்பதால் இந்தப் பாராட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
பாம்போடு சண்டையிடும் கீரி, அச்சண்டையில் வென்றபின் பாம்பின்பின் கடியினால் சேர்ந்த நஞ்சு நீங்க மூலிகையில் புரள்வதுபோல, ஆரிய நச்சரவங்களால் என் உடல் முழுவதும் சேர்ந்த நஞ்சு நீங்க பெரியார் என்னும் மூலிகை மடியிலே நான் புரண்டு ஆரிய நஞ்சை முறித்துக்கொள்கிறேன்.
நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி. அது வெடிக்க வேண்டிய நேரத்தில் இலக்குநோக்கிச் சரியாக வெடிக்கும். இரண்டு குழல்களும் சேர்ந்தே வெடிக்கும்.
நான் வீரமணியைப் பாராட்டுகிறேன். அவர் என்னைப் பாராட்டுகிறார் என்றால், அவருடைய கொள்கைகளை நான் பாராட்டுகிறேன்; என்னுடைய கொள்கைகளை அவர் பாராட்டுகிறார். இரண்டும் சேர்ந்து இந்தச் சமுதாயத்தை வாழ்விக்கும். அதன் காரணமாகத்தான் இந்தப் பாராட்டுக்களை நாங்கள் பெறுகிறோம்.
பரம்பரையுத்தம் பரம்பரையுத்தம் என்பார்களே அந்தப் பரம்பரையுத்தம் தான் இப்பொழுது முடிந்திருக்கிறது; இன்னும் முடிவடையாமல் கூட இருக்கிறது. முடிவடைய வேண்டுமென்றால் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பரம்பரை யுத்தத்திற்கு ஒரு முடிவு வரும்.
பெரியார் இன்றைக்கும் இருக்கிறார். அதனால் தான் இன்றைய தினம் ஓர் ஆதிதிராவிடர் அர்ச்சகராக முடியும் என்ற சட்டத்தை, ஆணையை நம்மால் பிறப்பிக்க முடிந்திருக்கிறது என்று கலைஞர் தம் உரையில் குறிப்பிட்டார்.
14.06.2006 அன்று, திருக்காட்டுப்பள்ளியில் ஆ.வேல்முருகன் – சி.மாலா ஆகியோரின் இணையேற்பு விழாவை நடத்தி வைத்தோம்.
சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதுவரகத் தின் அரசியல், பொருளாதார அலுவலர் இராபர்ட் டி.கிங் அவர்கள், நம்மை பெரியார் திடலில் சந்தித்து உரையாடிச் சென்றார். அரசியல் பிரிவுச் செயலாளர் வின்னி ஜோப் உடன் வருகை தந்தார் (சென்னை, 16.6.2006)
17.06.2006 நாளிட்ட விடுதலை ஏட்டில், “ஈழத்தமிழர்களை அழிவினின்று காப்பாற்றுக! ஒன்றிய அரசும், முதல்வரும் சுமூகத்தீர்வு காண வேண்டும்” என்று முக்கிய வேண்டுகோளை அறிக்கையாக வெளியிட்டு வலியுறுத்தினோம்.
போர் நிறுத்தத்தை முதலில் அறிவித்தவர்கள் விடுதலைப் புலிகள்தான். விடுதலைப் புலிகள்மீது பழி போடும் பார்ப்பன ஏடுகளின் செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழக முதல்வர் அவர்களும் சுமூகத்தீர்வு ஏற்படவேண்டும் என்ற தவிப்பில் செயல்படுகிறார்.
அமைதிப் பேச்சுவார்த்தையை அவர்களும் வலியுறுத்தியுள்ளனர். எனவே, ஒன்றிய அரசு அதில் உடனடிக்கவனம் செலுத்த வேண்டும்.
1990 ஈழப்பிரச்சனைக்காக ஆட்சியை இழந்தது தி.மு.கழகம். எனவே, முதல்வரின் உணர்வுகளை ஒன்றிய அரசு கருத்தில் கொண்டு உடனடி தீர்வு காணவேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தோம்.
(நினைவுகள் நீளும்…)