மியான்மரில் சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு விழா !- கி.வீரமணி

2025 அய்யாவின் அடிச்சுவட்டில் உளவியல் ஜனவரி-16-30-2025

பட்டுக்கோட்டை கல்வி வள்ளல், மறைந்த சிங்கப்பூர் கோமள விலாஸ் உரிமையாளர் ஓ.எம்.ராஜு அவர்களது சிலை திறப்பு விழா பட்டுக்கோட்டையில் 12.3.2006 அன்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு நாம் தலைமை தாங்கினோம். பட்டுக்கோட்டை ஒன்றியப் பெருந்தலைவர் ஓ.எம்.சாம்பசிவம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஏ.ஆர்.மாரிமுத்து(மேனாள் எம்.எல்.ஏ.) முன்னிலை வகித்தார்.

விழாவில், ஓ.எம்.ராஜு அவர்களின் சிலையினை கல்விக் காவலர் சி.துளசி அய்யா வாண்டையார் அவர்கள் திறந்து வைத்து அவரின் நினைவு மலர் நூலினை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை நாம் பெற்றுக்கொண்டோம். பின்னர், சிங்கப்பூர் கோமளவிலாஸ் ஓ.எம்.ராஜு அவர்களின் சிறப்புகளை விளக்கி நினைவுரையாற்றினோம்.

அன்னை மணியம்மையார் அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 16.3.2006 அன்று காலை 10.15 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் கழகத் தோழர்கள், தோழியர்கள் புடைசூழ நாம் மலர் மாலை வைத்து உறுதி மொழியேற்று மரியாதை செலுத்தினோம்.

பெரியார் பெருந்தொண்டர் எருக்கஞ்சேரி நாராயணசாமி அவர்கள் தமது 83ஆம் வயதில் 16.03.2006 அன்று மறைந்த செய்தி அறிந்து வருந்தினோம். இறுதிவரை இயக்கத்தின்மீது உறுதியான பற்று கொண்டு உழைத்தவர். கழக நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்ளக்கூடியவர். அவருடைய உடலுக்கு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மரியாதை செலுத்தினார்கள். ஏராளமான கழகத் தோழர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள தமிழ் ஓசை’’ நாளேட்டின் வெளியீட்டு விழா சென்னை – காமராசர் அரங்கில் 16.3.2006 அன்று முற்பகல் 11 மணிக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் மாண்புமிகு இரா.அன்புமணி அவர் களின் தலைமையில் நடைபெற்றது.

‘தமிழ் ஓசை’ நாளிதழ் வெளியீட்டு விழாவில் (16.3.2006)

முதல் இதழை தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் வெளியிட ரூ.500 கொடுத்து நாம் முதல் இதழைப் பெற்றுக் கொண்டோம். அப்போது நாம் பேசுகையில், ‘‘இனவுணர்வு மொழி உணர்வு, பண்பாடு நிலைக்க எதிர்சக்திகளால் அழிக்கப்படாமல் பாது
காக்க இந்த ஏடு தொடங்கப்படுகிறது.

தமிழனுடைய மூளையில் மூட நம்பிக்கைச் சாயம், அயல் பண்பாட்டு ஆதிக்கச் சாயம் அதிகமாகவே ஏற்றப்பட்டுள்ளது. அவற்றை இறக்க இந்த ஏடு பயன்படவேண்டும்.

இலட்சக்கணக்கான பிரதிகளை நாம் விற்கிறோமோ இல்லையோ, அது முக்கியமல்ல. இலட்சியக் கணக்கில் நம் ஏடுகள் முன்னதாக நிற்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டோம்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் அ.இராமசாமி அவர்கள் எழுதிய ‘Struggle for freedom of languages of India’ என்னும் நூலின் அறிமுக விழா மதுரையில் 17.3.2006 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

விழாவில் நாம் கலந்துகொண்டு நூலினை வெளியிட அதை மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராசன் பெற்றுக்கொண்டார். வேலுச்சாமி, க.வெங்கடேசன், பி. சேதுராம், ஏ.ஆர்.சந்திரன், மதுரை பி. வரதராசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் அ.இராமசாமி அவர்களின்
புத்தக வெளியீட்டு விழா (மதுரை 17.3.2006)

தஞ்சை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் பெரியாரியல் பாடங்கள் நூல் அறிமுக விழா 18.3.2006 அன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், விழாக்குழவினர் சார்பில் படிப்பக இயக்குநர் அதிரடி அன்பழகன், புலவர் கோபு.பழனிவேல், துணைச் செயலாளர் ஆ.இராமகிருட்டினன், செயலாளர் இரா.இளவரசன் ஆகியோர் பெரியாரியல் பாடங்கள் 500 பிரதிகளின் விலையான ரூ.37,500 தொகையினை எம்மிடம் வழங்கினர். மேலும் பெரியார் படிப்பகத்திற்கு இடம் வாங்குவதற்காக ரூ.1000 தொகையை பெரியார் பெருந்தொண்டர் மும்பை கிருட்டினன் எம்மிடம் வழங்கினார்.

பண்ருட்டியில் ரோட்டரி சமுதாய குழும மாவட்ட மாநாடு 19.3.2006 அன்று அன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றது. விழாவில் சிறப்புரையாற்ற வருகை தந்த எம்மை ரோட்டரி கிளப் ஆளுநர் வேலாயுதம் ரவிச்சந்திரன் பயனாடை அணிவித்து வரவேற்றார். ரோட்டரி சங்க உறுப்பினர் ஜி.சீனிவாசன் அறிமுக உரையாற்றினார்.

நிறைவாக நாம் சிறப்புரையாற்றுகையில், ‘‘திராவிடர் கழகமும், ரோட்டரி சங்கமும் கூட்டுப் பணியாளர்கள். இருவரும் தொண்டறம் தான் செய்து வருகிறோம்.’’ எனக் குறிப்பிட்டுப் பேசினோம்.

பெரியாரியல் பாடங்கள் புத்தக அறிமுக விழா
(தஞ்சை 18.3.2006)

இவ்விழாவில், திருப்புறம்பயம் ரோட்டரி சமுதாயக் குழுமத்தின் குழும மலரை ஆளுநர் வேலாயுதம் ரவீந்திரன் வெளியிட அதை நாம் பெற்றுக்கொண்டோம்.

பண்ருட்டியில் 19.3.2006 அன்று சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அவ்விழாவில் நிறைவுரை ஆற்றுகையில், ஆர்.எஸ்.காரரான நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா அவர்கள் கலந்துகொள்ளலாமா? ஜெயலலிதா பிரகடனப்படுத்தப்படாத ஆர்.எஸ்.எஸ்.காரராக செயல்படலாமா? என்று கண்டித்துப் பேசினோம். நரேந்திரமோடியின் கொடிய செயல்பாட்டை விளக்கிப் பேசுகையில் பெஸ்ட் பேக்கரி வழக்கை எடுத்துக்காட்டினோம். பொடா போன்ற கொடிய சட்டங்களை இந்த இருவருமே ஆதரிக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

ரோட்டரி சமுதாய குழும மாவட்ட மாநாடு 19.3.2006

ஈரோட்டில் 25.03.2006 அன்று திராவிடர் எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. விசுவஹிந்து பரிஷத் அமைப்பினர் மார்ச் 18, 19 தேதிகளில், ஹிந்து சமுதாயப் பாதுகாப்பு மாநாடு நடத்தினர். அதன் எதிர்வினையாக இம்மாநாடு உணர்ச்சிப் பெருக்குடன் நடத்தப்பட்டது. காலை 10.45 மணிக்கு வழக்குரைஞர் கி.மகேந்திரன் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் மிகவும் கருத்தாழம் மிக்கதாய் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கு.வெ.கி.ஆசான் அவர்கள் தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது. அவர் பெரியார், ஜோதிபா புலே, அம்பேத்கர் தொண்டுகளை சிறப்பாக எடுத்துரைத்தார். பாவலர் அறிவுமதி அவர்கள் தமது உரையில் பார்ப்பனர்களின் வன்முறையைக் கண்டித்தார். முடக்கற்றான் கொடியா? செடியா? மரமா? என்று கூட தெரியாத பார்ப்பன எழுத்தாளர் சுஜாதா என்பதையும் சுட்டிக்காட்டினார். முனைவர் வேலுசாமி அவர்கள் மதக்கலவரங்களைக் கண்டித்துப் பேசினார். முனைவர் பெ.ஜெகதீசன் அவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் செய்யும் வரலாற்றுத் திரிபுகளை விளக்கிப் பேசினார். நிறைவாக எமது உரையில், ஹிந்து கலாச்சாரம், சமஸ்கிருத ஆதிக்கம், வரலாற்றுப் பாடங்கள் திருத்தப்பட்ட மோசடி, பாடப்பகுதி நீக்கம் என்று பலவற்றை விளக்கி பார்ப்பனியத்தைத் தோலுரித்துக் காட்டினோம்.

இம்மாநாட்டில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்; தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்; சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கை விரைந்து நடத்த வேண்டும், பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு வேண்டும்; தமிழில் குடமுழுக்கு வேண்டும் போன்ற முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு வருகை தரும் ஆசிரியருக்கு
தீப்பந்த வரவேற்பு (19.3.2006)

செந்துறை கழகத் தோழர் தா.மதியழகன்- செ.சுதா இணையேற்பு விழா 26.3.2006 காலை 11 மணிக்கு செந்துறை அருணா பார்வதி மகாலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.காமராஜ், பொதுச்செயலாளர் உரத்தநாடு குணசேகரன் உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். வாழ்விணையர்களை உறுதிமொழியேற்கச் செய்து, நிறைவாக சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கி உரையாற்றினோம்.

குடந்தையில் 26.03.2006 அன்று திராவிடர் எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் நிறைவுரையாற்றுகையில், தேர்தலில் திராவிடர் கழகத்தின் அணுகுமுறை பற்றியும், செல்வி ஜெயலலிதா அவர்கள் தந்த உறுதிமொழிகளை நிறைவேற்றாதது பற்றியும், மதச்சார்பின்மைக்கு எதிரான அவரது செயல்பாடுகள் பற்றியும், உச்சநீதிமன்றம் சாதகமாகத் தீர்ப்பளித்த பின்பும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கத் தவங்குவது பற்றியும் விளக்கிப் பேசினோம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக இணை வேந்தர் எம்.ஏ.எம். இராமசாமி அவர்களின் துணைவர் திருமதி சிகப்பிஆச்சி அவர்களின் மறைவு அறிந்து வருந்தினோம். நாம் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் இரண்டு நாள்கள் கழித்து, 27.03.2006 அன்று அடையாறு செட்டிநாடு அரண்மனைக்கு நேரில் சென்று எம்.ஏ.எம். இராமசாமி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தோம்.

பார்ப்பன ஆதிக் கம் குறித்து ஆதாரங் களுடன் எழுதப்பட்ட, பழ.நெடுமாறன் அவர்களின் ‘உருவாகாத இந்திய தேசியமும், உருவான இந்து பாசிசமும்’ என்று நூலை சென்னை தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளியில் 28.03.2006 அன்று, நடந்த நிகழ்வில் வெளியிட்டோம். அப்போது, பழ.நெடுமாறன் அவர்களின் எளிமை, கொள்கை உறுதி, தமிழர் மீதான பற்று குறித்துப் பாராட்டிப் பேசினோம். 1924இல் பெரியார் சொன்ன பார்ப்பன ஆதிக்கத்தை 2006இல் பழ.நெடுமாறன் அவர்கள் நூலாக ஆக்கித் தந்துள்ளார் என்று குறிப்பிட்டுப் பேசினோம். இந்நிகழ்வில் பழ.நெடுமாறன் அவர்களின் மற்ற இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டன.
மியான்மா நாட்டில் 4.4.2006 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, சுயமரியாதை இயக்க 80 ஆம் ஆண்டு நிறைவு விழா வெகு சிறப்பாக நடைபெற்றன. நாமும், பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றோம்.

மியாமன்மர் சென்றடைந்த எங்களை அகில மியான்மா இந்துமா மன்றத்தின் மேனாள் தலைவரும், சுயமரியாதை இயக்கப் புரவலரும், புகழ்பெற்ற தொழிலதிபருமான மானமிகு ஜி.எஸ். சர்மா அவர்களும், பெரியார் சுயமரியாதை இயக்கத் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும் சீரிய செயல் வீரருமான வீரா. முனுசாமி, செயலாளர் சோலை, கழக ஆர்வலர் தூவன்னா பகுதியைச் சார்ந்த சிறீதரன், தமிழ் பவுண்டேசன் துணைச் செயலாளர் இராசேந்திரன் மற்றும் பல தோழர்கள் இருவருக்கும் மலர்மாலை அணிவித்து, சிறப்புடன் வரவேற்பளித்தனர்.

இரவு, திரு. ஜி.எஸ். சர்மா அவர்கள் இல்லத்துக்கு அழைத்து மிகச் சிறப்பான விருந்தளித்து உபசரித்தனர்.
பிக்கு சாயாஜிபாரகு (பெரியார் பற்றி பர்மிய மொழியில் நூல்கள் உள்ளன) நூலகத்திலிருந்து திரும்பி யாங்கோன் நகரின் மற்றொரு தூவன்னா என்ற பகுதியில் உள்ள கழக ஆர்வலர் திரு. சிறீதரன் அவர்கள் இல்லத்தில் பர்மிய முறையில் சிறப்பான ஒரு பகல் விருந்து அளிக்கப்பட்டது. அவருடைய துணைவியார் ஒரு பர்மியர். அவரும், அவருடைய குடும்பத்தினரும் வீரா. முனுசாமி, திரு. ராசேந்திரன் ஆகிய நண்பர்களும் கலந்து கொண்ட விருந்து உபச்சாரத்தில், மகிழ்ந்து, விருந்து ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி கூறி, இருவரும் சுமார் 2.30 மணியளவில் தங்கும் ஓட்டல் கிராண்ட் ராயல் பிளாசா வந்தடைந்து, சிறிது நேர ஓய்வு இடைவெளிக்குப் பிறகு, மாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு, தேநீர் விருந்தும் இணைந்த விழா நடக்கும் ‘ரூபுஅவுஸ்’ அருகில் அமைந்துள்ள பிரபல சென்ட்ரல் ஓட்டலுக்கு, திரு. சர்மா அவர்கள் வந்து அழைத்துச் சென்றார்.

யாங்கோன் நகரின் பல்வேறு அமைப் பினைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள், பெரு வணிகர்கள், அகில மியான்மா இந்து மாமன்றத்தின் பொறுப்பாளர்கள், தமிழ் வளர்ச்சி நிதிப் பவுண்டேசன் பொறுப்பாளர்கள், சோழி முஸ்லிம் சங்கப் பொறுப்பாளர்கள், பல முக்கிய கோயில் அறங்காவலர்கள், ஏராளமான செய்தியாளர்கள் எல்லோரும் கலந்து கொண்டனர்.

திருமதி சிகப்பி ஆச்சி

அகில மியான்மா நாட்டின் பெரியார் சுயமரியாதை இயக்கத் தலைவர் வீரா. முனுசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, அதில் பர்மாவில் எப்படி ஆதிநாளில் இயக்கம் உருவானது? எப்படி எதிர்ப்பில் வளர்ந்தது, 1954 நவம்பரில் தந்தை பெரியார் அவர்களும், டாக்டர் அம்பேத்கரும் உலக புத்த மாநாட்டிற்கு வந்திருந்தபோது, அய்யாவின் பேச்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் திரண்ட ஆதரவுகளையெல்லாம் விவரமாகக் கூறி, இன்று நிலைமை மாறி அன்று எதிர்த்தவர்கள் உள்பட தந்தை பெரியாருக்கு ஆண்டு தவறாமல் விழா எடுக்கின்றனர் என்பதையும் விவரித்தார்.

பெரியார் காலத்தைவிட இப்போதுதான் பெரியார் கொள்கைகள் உலக நாடுகள் முழுவதிலும் பரவி வருகிறது என்று பெருமிதத்துடன் பேசினார்.

நிகழ்ச்சிக்கு, பாரகு தலைமை தாங்கினார். மியான்மா நாட்டில் தொண்டறச் செம்மலும், பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் புரவலர்களில் முதன்மையானவருமான ஜி.எஸ். சர்மா அவர்களும், (கர்னல் சேயா கியா இத்தின் தலைவரும், சுயமரியாதை இயக்கத்தின் புரவலருமாவர்) முன்னிலை; அதுபோல, மியான்மா நாட்டின் தமிழ்த் தொண்டர்கள் அணித் தலைவர் சிங்காரவேலு உச்சோலே, ஏ.சுந்தரராஜ், ஊ.அவுஸ்சான், இந்து மாமன்ற புரவலர் செ.பரந்தாமன் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.

உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும் (4.4.2006)

அய்ந்து பிரமுகர்களுக்கும் கூடுதலாக முன்னிலை ஏற்றனர்!

சாயாஜி பாரகு அவர்களது தலைமை உரைக்குப் பின்னர், தலைமை விருந்தினராக அழைக்கப்பட்ட எம்மை சிறப்புரை ஆற்றுமாறு அழைத்தனர்.

எமது சிறப்புரையில், இந்த நாட்டில் அனைவராலும் மதிக்கப்பெற்ற ஆய்வாளருமான விழாத் தலைவர் சாயாஜி பாரகு அவர்களே!
தொண்டறச் செம்மலாக இருக்கக்கூடிய அன்பிற்குரிய அய்யா ஜி.எஸ் சர்மா அவர்களே!

ஒரு தனித்துவம் வாய்ந்த டாக்டராகத் திகழக் கூடிய அன்பிற்குரிய டாக்டர். சோம இளங்கோவன் அவர்களே.
அன்பிற்குரிய மானமிகு சகோதரர் வீரா. முனுசாமி அவர்களே! சுந்தரராஜுலு அவர்களே!

இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொள்ளக் கூடிய அனைத்து சகோதரர், சகோதரிகளே! நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவன்பான வணக்கம்.

உலகத்திலே எந்த ஓர் அமைப்பும் இப்படி ஒரு சொல்லை வைத்து உருவானதே கிடையாது. தந்தை பெரியார் அவர்கள்தான் சுயமரியாதை இயக்கம் என்று அவர்கள் தொடங்கிய இயக்கத்திற்கு பெயர் வைத்தார்கள்.

தமிழ் மக்கள் முதல் உலக மக்கள் அனைவரும் எந்த நாட்டிலே இருந்தாலும் அவர்கள் மனிதர்களாக மானத்தோடு, அறிவோடு, சுயமரியாதையோடு, சமத்துவத்தோடு அனைவரும் உறவினர் என்ற அந்த உணர்வோடு வாழவேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் என்ற உலக நிறுவனத்தை அவர்கள் நிறுவினார்கள்.
சுயமரியாதை இயக்கம் பிறந்தது தமிழ் நாட்டிலே. ஆனால், இன்றைக்கு அது உலகளாவிய நிலையிலே வளர்ந்திருக்கிறது. It is a world Humanist Movement.

அடிப்படையிலே மிருகங்களையும் மனிதர்களையும் எது பிரிக்கும் என்று சொன்னால், சுயமரியாதைதான் தெளிவாகப் பிரித்துக் காட்டும்.

அந்தச் சுயமரியாதையை உண்டாக்கிய சூரியன்தான் தலைவர் தந்தை பெரியாரவர்கள். உலகத்தில் வேறு எவரும் இதைச் சொல்லவில்லை.

ஏனென்றால், அது ஒன்றுதான் மனிதனை மனிதனாகக் காட்டுவது என்று அவர்கள் சொன்னார்கள். எனவே, இது எல்லா நாட்டிற்கும் பொருந்தும். எல்லா மக்களுக்கும் பொருந்தும். இது குறிப்பிட்ட கட்சிகளுக்குத்தான் குறிப்பிட்ட மக்களுக்குத்தான் என்பது அல்ல.
இன்றைக்கு தமிழ்நாட்டிலே அந்த சுயமரியாதை இயக்கத்திற்கு 80ஆம் ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாட்டிலே கொண்டாடுகிறார்கள். பல நாட்டிலே கொண்டாடுகிறார்கள். உங்கள் நாட்டிலே, இந்த நாட்டிலே மியான்மாவிலே கொண்டாடுகிறீர்கள்.

நமது பெருமதிப்பிற்குரிய கருப்பையா போன்றவர்கள் தந்தை பெரியார் அவர்கள் இங்கு வந்தபொழுது எப்படியெல்லாம் நிகழ்வுகள் நடந்தன என்பதை சென்ற முறை நான் இங்கு வந்திருந்தபொழுது சொன்னார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் 1954லே டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அழைப்பை ஏற்று உலக புத்த மாநாட்டிற்கு வருகை தந்தார்கள். அவர்களை அழைக்கும்படியாக சொன்னது இலங்கை நாட்டின் தூதுவராக இருந்த பெரிய பேராசிரியர் அய்யா சாயாஜி பராகுவைப் போன்றவர்கள், ஜி.பி. மல்லலசேகரா போன்றவர்கள்தான் அய்யா அவர்களை அழைக்கும்படியாக அந்தக் குழுவுக்குச் சொன்னார்கள்.

ஜாதி ஒழிப்பை, பெண்ணடிமை ஒழிப்பை மூடநம்பிக்கை ஒழிப்பை வலியுறுத்துகின்ற இயக்கம் சுயமரியாதை இயக்கம்.
மனித உரிமையை வலியுறுத்திதான் வைக்கம் போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்கள் மனித உரிமைக்காகப் போராடினார்கள். தந்தை பெரியாருடைய கொள்கை வெற்றி பெற்றது. அதை எண்பதாவது ஆண்டிலே சுயமரியாதை இயக்கம் பார்த்தது.

அதே வைக்கத்திலே இருந்துதான் இந்தியாவினுடைய முதல் குடிமகனாக நாராயணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். இது பெரியாருடைய கொள்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதைவிட நல்ல உதாரணம் வேறு சொல்லவேண்டிய அவசியமே இல்லை.

தந்தை பெரியார் அவர்கள் மிகப் பெரியதொரு வரலாறு. எதைப் பேசினாரோ அதை செய்து காட்டினார்.

விதவைத் திருமணத்தை தன் வீட்டிலே செய்து காட்டி, விதவைகளுக்கு விடியலைத் தந்தார்.

சொல், சிந்தனை, செயல் இந்த மூன்றிலும் மனிதர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மையான சுயமரியாதைத் தத்துவம், வாழ்க்கை முறை.

தந்தை பெரியார் சொன்னார், சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று அற்புதமாக எடுத்துச் சொன்னார்கள் என்பதைக் கூறி, அந்த சுகவாழ்வை எல்லா மக்களும் பெறவேண்டும். எல்லா நாட்டு மக்களுக்கும் பயன்பட வேண்டும். இந்த நாட்டு மக்களும் பயன்பெற்று வாழ வேண்டும். இந்த நாடு நல்ல சமுதாயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மதத்தால் மாறுபட்டார்கள். மனதால் ஒன்றுபட்டிருக்கிறார்கள். குணத்தால் ஒன்றுபட்டிருக்கின்றார்கள் என்ற நிலையைப் பார்க்கும் பொழுது சுயமரியாதை இயக்கம் இங்கே வெற்றி பெற்றிருக்கின்றது.

எத்தனை பேர் கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.

கண்ணுக்குத் தெரியாத நேர்மையாக வாழக்கூடிய ஒவ்வொருவரும் சுயமரியாதைக்
காரர்கள் தான்.’’ என்று குறிப்பிட்டோம்.

சிகாகோவாழ் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மானமிகு டாக்டர். சோம. இளங்கோவன் அவர்கள் தமது உரையில், ‘‘சிறிய கிராமத்தில் பிறந்து இந்த அளவுக்கு வந்தததற்குக் காரணம் பெரியாரின் உழைப்பு, தொண்டுதான் ‘நன்றி’ என்றால் என்ன என்று தெரியாத சமூகத்திற்கு அவர்கள் பாடுபட்டதைப்போல எவரும் பாடுபடவில்லை. சாயாஜி பாரகு அவர்கள் பர்மிய மொழி உரையை ஆங்கிலத்தில் எனக்கு சர்மாஜி மொழி பெயர்த்துச் சொன்னதும் நான் வியந்தேன்.

பெரியாருக்குமுன் எவரும் இதுபோலச் செய்ததில்லையே, வேறு எவரும் முன்வராதாலேயே இப்பணிக்கு தான் தகுதியானவன் என்று பெரியார் அவர்கள் சொன்னதுபற்றி பாரகு அவர்கள் சொன்னதைக் கேட்டு உள்ளபடியே நெகிழ்ந்து போனேன்.

கடந்த 4 ஆண்டுகளாக ஆண்டு தவறாமல் பெரியாருக்கு விழா எடுத்து, பெரியார் கொள்கைப் பிரச்சாரத்தினைச் செய்யும் இயக்கத் தலைவர் வீரா. முனுசாமி அவர்கள் சமூகத் தொண்டினைப் பாராட்டி, அமெரிக்காவில் அமைந்துள்ள பெரியார் பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்கள் தலைமையில் ஆண்டுதோறும் சமூகநீதிக்கான கி. வீரமணி சமூகநீதி விருதுவழங்கி வருகிறோம். அவ்வரிசையில் 8ஆம் ஆண்டுக்கான விருதினை வீரா. முனுசாமி அவர்களுக்கு அளிப்பதில் அந்த அமைப்பு பெருமைப்படுகிறது.

அதுபோலவே, இந்த இயக்கத்திற்குப் பெரும் புரவலராக இருந்துவரும் ஜி.எஸ். சர்மா அவர்களுக்கு ஒரு சிறப்பு விருது வழங்குகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர், விழாத் தலைவர் சாயாஜி பாரகு அவர்களுக்கும், வீரா. முனுசாமி அவர்களுக்கும், சர்மா அவர்களுக்கும் தந்தை பெரியார் உருவம் பொறித்த சுயமரியாதை இயக்க நினைவுப் பரிசினை நாம் வழங்கினோம்.
புரவலர் ஜி.எஸ். சர்மா அவர்கள் பர்மிய மொழியிலும், ஆங்கிலத்திலும் பேசினார்.

திரு. சர்மா அவர்களது உரைக்குப் பின்னர் பல்வேறு அமைப்பாளர்களும், சான்றோர்களும், வரிசையாக நின்று மலர்மாலை அணிவித்தும் பரிசுகளைத் தந்தும் மகிழ்ந்தனர்.

இறுதியில், இயக்கப் பொறுப்பாளர் ஒருவர் நன்றி கூற விழா 6 மணியளவில் முடிவாகி அனைவருக்கும் சிறப்பான வகையில் தேநீர் விருந்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், 6.30 மணியளவில் அகில மியான்மா இந்து மாமன்றத் தலைமைக் கட்டடத்தில், அந்த அமைப்பின் தலைவரும், பிரபலத் தொழிலதிபருமான திரு. தங்கராஜா அவர்களது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு விருந்தினையும் இணைத்து நிகழ்ச்சி நடந்தது.

மியான்மா நாட்டின் பிரபலத் தொழிலதிபர்களும், அந்த அமைப்பின் பல பொறுப்பாளர்களும், அதில் தமிழ் வளர்ச்சி நிதி ஃபவுண்டேசன் பொறுப்பாளர்களும், இணைந்து இந்த வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். சுமார் 60க்கும் மேற்பட்ட கணினிகளை வைத்து தமிழ்ப் பிள்ளைகளுக்கு. ஜாதி, மதம் பாராமல் அனைவருக்கும் இலவசப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
(நினைவுகள் நீளும்…)