அய்யா பெரியார் அம்பேத்கர் இருவரும்
மெய்யாய் நம்மவர் மேன்மை விழிகள்!
சாதி மதங்கள் சார்பை நீக்கிய
நீதித் துறையின் அடிப்படை மய்யம்!
அரசியல் அமைப்புச் சட்டத் தந்தை;
விரவிய இழிவினை வெகுண்டே எதிர்த்தவர்;
ஒடுக்கப் பட்டோர் உயர்வை எய்திடத்
துடித்தவர்! பற்பல தொண்டறம் புரிந்தவர்;
பல்துறைக் கல்வியைப் பாங்குறக் கற்றவர்;
அல்லும் பகலும் அயரா துழைத்த
மானுட உரிமைக் காவலர்; ஆரியர்
நாணிடக் களத்தில் முன்னே நின்றவர்!
முன்னோர் தொழிலை மரபினர் எல்லாம்
தன்தொழி லாகத் தலைமேற் கொண்டே
ஒழுகிடச் சொல்வது வருணா சிரமமே!
அழுகிய கனியைச் சுவைப்போர் உளரோ?
மூடத் தனத்தை முழுதாய்ச் சாடியே
ஈடிலா அறிவை எடுத்தே இயம்பிய
அண்ணலோ புரட்சிச் சமூகம் விழைந்தவர்!
எண்ணச் சிறப்பால் இமயமாய் நின்றவர்!
தாழ்த்தப் பட்டோர் இழிந்த, கொடிய
வாழ்க்கை நிலைகளைச் சிந்தனை செய்திடத்
தூண்டினார் அண்ணல்! உலகோர் போற்றிய
மாண்புறு பொருளியல் மேதை; சமூக
அறிவியல் அறிஞர் பெருந்தகை; வாழ்வில்
குறிக்கோள் நோக்கினை முழங்கிய அரிமா!
பிறந்த இனத்தின் பெருமை நிலைக்கச்
சிறந்த செயல்கள் ஆற்றியே நாளும்
தீண்டப் படாதோர் சுயமரி யாதையை
வேண்டி வளர்த்திட, விடுதலை வாழ்வும்
மலர்ந்திட உதவா மனுசாத் திரமோ
உலகியல் வாழ்வியல் மறுத்திடும் அதனை
எரித்துக் காட்டிய ஏந்தல் அம்பேத்கர்♦l