திண்டிவனத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது! வெளியில் நின்றவர்கள் திடீரென உள்ளே நுழைந்தார்கள், பேசிக் கொண்டிருந்தவர்கள் அமைதியானார்கள், தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவர்கள் நிமிர்ந்து பார்த்தார்கள். ஆம்! காத்தவராயன் பாடத் தொடங்கி இருந்தார். செக்கடிக்குப்பம் காத்தவராயன் என எல்லோராலும் அறியப்படுகிறார்!
இன்றைய தலைமுறை இவரை அறியும் வாய்ப்புக் குறைவு. முதன்முதலில் நாமும் அவரைச் சந்திக்கிறோம்! பயிற்சி பட்டறையின் இடையிடையே இவர் பாடிய பாடல்கள் அதிரடி ரகம்! பயிற்சிக்கு வந்த புதிய மாணவர்களையும் ஈர்த்துவிட்டார்! இவ்வளவு இனிமையான குரலா? நம் இனவுணர்வுச் சொந்தமா? என்கிற வியப்பு நமக்கு!
இன்னும் சொல்லப்போனால் இவர் எல்லோரும் பாடும் பாடல்களைப் பாடவில்லை. இவரே கவிஞராக மாறி புதிய, புதிய பாடல்களை எழுதியுள்ளார்.
“ஆடு மாடு நாய்களுக்கே கழுத்தில் இருக்கும் கயிறு
இந்த ஆறறிவு மானிடர்க்குக் கையில எதற்கு கயறு?
ஓடியாடி ஓய்வில்லாமல் உழைப்பவரின் துயரு
என்றும் ஊரறிய ஒழிப்பதற்கு உதவுமாயிந்த கயிறு?“
என எதுகை, மோனையோடு இருக்கிறது இந்தக் கிராமத்து மனிதரின் பாடல்!
மற்றுமொரு பாடலில்
“பூதக் கண்ணாடி கொண்டு செய்திகள்
படித்தவன், பூதங்கள் எங்கென சொடக்கு
போட்டவன் ஈராயிரம் ஆண்டு இருட்டை
வெளுத்தவன் ஈரோட்டில் உதித்த இன்னொரு
சூரியன்” என உயர்ந்த வரிகளால் பெரியாருக்குப்
புகழ் சூடுகிறார்.
எல்லோரையும் ஈர்த்த அவர் மேல், நம் கவனம் பதிகிறது! அய்யா வணக்கம்! தங்கள் பெயர் என்ன என்று கேட்டபோது, செக்கடிக்குப்பம் காத்தவராயன் என்றார். சிலருக்குத் தான் ஊரோடு, பெயரும் ஒட்டிக் கொண்டு வரும்! இவருக்குக் கூட ஊரும், பெயரும் கம்பீரமாகவே இருக்கிறது!
ஒவ்வொரு கேள்வியையும் இரண்டு, மூன்று முறை கேட்க வேண்டியிருந்தது. காரணம் செவித்திறன் சற்றுக் குறைவாய் இருந்தது. ஆனால், அந்தக் காலத்தில் இயற்றிய பாடல்களின் நினைவுகள் சரியாகவே இருந்தன! இதுவரை 200 பாடல்கள் பாடியிருப்பதாகக் கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தியது! அதிலும் இவர் இயற்றியதே பெரும்பாலும் அதிகமாம்!
வயது 76 ஆகிறது! தள்ளாடி நடக்கிறார். எனினும் செக்கடிக்குப்பம் கிராமத்தில் இருந்து, இரண்டு பேருந்துகள் மாறி பயிற்சி வகுப்பிற்கு வந்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் இவரின் ஊர் முழுக்கவே 100 விழுக்காடு சுயமரியாதைக் கிராமம்! கோயில் இல்லாத ஊர், தீபாவளி கொண்டாடாத மக்கள், வெடி வெடிக்காத அதிசயம் என இந்தக் கிராமம் குறித்துச் செய்திகள் வராத பத்திரிகைகளே இல்லை! அர்ஜுனன் என்கிற சுயமரியாதை வீரர் உருவாக்கிய பகுத்தறிவுக் கிராமம் இது!
இவர் மூலம்தான் செக்கடிக்குப்பம் காத்தவராயன் அவர்களும் கொள்கைக்கு வந்துள்ளார். இந்த ஊரில் கணக்கற்ற சுயமரியாதைத் திருமணங்கள் நடந்துள்ளன. இன்றைக்குப் பல கட்சிகள் நுழைந்துவிட்டன. குறிப்பாகப் பா.ஜ.க. போன்றவை வந்த பிறகு, மனிதர்களிடையே பிரிவுகளும், பிளவுகளும் தோன்றிவிட்டன!
இந்த ஊரில் தான் சுப்பராயன் தோழரும் வசிக்கிறார். அந்தக் காலம் தொட்டு
சுயமரியாதைத் திருமணங்களில் பாடுவது, திராவிடர் கழகம், தி.மு.க, ம.தி.மு.க. நிகழ்ச்சிகளில் பாடுவது, திருவள்ளுவர் தினம், தமிழர் திருநாளில் பாடுவது என இவர் ஏறாத மேடைகளே இல்லை! 20 வயதில் தொடங்கி, 56 ஆண்டுகளாகச் சுயமரியாதைக் கொள்கைக்குச் சுருதி ஏற்றி வருகிறார்! தவிர அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், ஓர் இரவு, கலைஞர் எழுதிய புனித ராஜ்ஜியம், தமிழ்நாட்டுக் கள்ளன் போன்ற நாடகங்களிலும் நடித்துள்ளார்!
சில நாடகங்களில் பெண் வேடமும் போட்டுள்ளார். ஆர்மோனியமும் வாசிக்கத் தெரிந்திருக்கிறது இவருக்கு! இதுபோன்ற பல்கலை நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் கொண்ட குழுவே தயாராக இருப்போம் என்கிறார் காத்தவராயன்! இவை அனைத்திற்கும் உற்சாகமாகவும், காரணமாகவும் இருந்தவர் அர்ஜுனன் அவர்கள் தான்!
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு
மனதில் இதை நிறுத்து!
மதமும் ஜாதியும் உள்ளத்தின் அழுக்கு
அடித்துத் துவைத்து உலர்த்து!
இன்னொரு பாடலில்,
‘‘அன்னையே மணி அம்மையே _ பெரியார்
அறிவினில் மலர்ந்தது உண்மையே அன்னையே மணி அம்மையே _ பெரியார்
ஆயுளை நீட்டித்த துண்மையே!
தந்தை பெரியார்க்குப் பின்னரும் _ கழகத்தைத்
தனித் தன்மையாய் நடத்தி காட்டிட்டாய்
தமிழர் தலைவர் துணை கொண்டு _ இனத்
தன்மானச் சுடரைநீ ஏற்றி விட்டாய்!”
எனப் பெரியார், மணியம்மையார், ஆசிரியர் மூவர் குறித்துத் தனித் தன்மைகள், நடப்புக் கருத்துகள், கொள்கைகள் எனப் பலவிதங்களில் பாடல்கள் எழுதிப் பாடியிருக்கிறார்.
திண்டிவனம் வா.சு. சம்பந்தம் தலைமையில் பஜனைப் பாடல்களும் பாடியிருக்கிறார். அதாவது பகுத்தறிவுப் பஜனை! தலையில் ஆர்மோனியம் மாட்டிக் கொண்டு, அருகில் சிலர் தாளம் இசைக்க, சிலர் பின்பாட்டுப் பாட கடை வீதிகளில் பாடல் பாடிக் கொண்டே செல்வது. ஒருமுறை ஆசிரியர் அவர்களைத் திண்டிவனம் கடை வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். அப்போது இவர்கள் குழுவினர் பகுத்தறிவுப் பஜனை என்கிற பெயரில் பாடல்களைப் பாடிக் கொண்டே சென்றார்களாம். இதுபோன்ற சமயங்களில் இராவணன், கும்பகர்ணன், மேகநாதன் போன்றோரின் வேடமிட்டும் செல்வார்களாம். பகுத்தறிவுப் பஜனைகளை வளவனூர், திண்டிவனம், விழுப்புரம், பாண்டிச்சேரி, செக்கடிக்குப்பம் ஆகிய ஊர்களிலும் நடத்தியுள்ளனர்.
விழாக் காலங்களில் கோயில்களில் கூழ் ஊற்றுவார்கள். அந்தக் காலப் பெரியார் தொண்டர்கள் கூழுக்கு மாற்றாக இட்லி, தோசை செய்து மக்களுக்குக் கொடுத்துள்ளனர். அதேபோல இரவு எட்டு, ஒன்பது மணிக்கு மேல் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களையும் நடத்தியுள்ளனர். செக்கடிக்குப்பம் அருகேயுள்ள அவலூர்பேட்டை கிராமத்தில் கு.ச.இராமலிங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்திற்குப் பெரியார் சென்றுள்ளார். அவர் பேசும் போது, இதே ஊரில் முன்பு பேச வந்த போது கம்பு, கட்டைகளால் அடிக்க வந்தீர்கள். இப்போது ‘கம்னு’ கேட்கிறீர்களே எனப் பெரியார் நகைச்சுவையாகக் கூறினாராம். அந்தக் கூட்டத்தில் உணர்ச்சியும், உத்வேகமும் பெற்றுத்தான் அர்ஜுனன் என்பவர் அந்த முழு கிராமத்தையே பகுத்தறிவு வழியில் உருவாக்கியுள்ளார்!
சுற்று வட்டாரத்தில் எங்கு நிகழ்ச்சிகள் நடந்தாலும் சென்று வருவோம். மணியம்மையார் காலத்தில் சென்னையில் இராவண லீலா நடந்த போது, எங்கள் கிராமத்தில் இருந்து 10 பேர் பெரியார் திடல் சென்றோம்! இப்போது கூட தட்டுத் தடுமாறி வந்தாலும் கூட, இயக்க நிகழ்ச்சிகளுக்குச் செல்வது மிகவும் பிடித்தமானது என உணர்ச்சியோடு கூறுகிறார் செக்கடிக்குப்பம் சுப்பராயன் அவர்கள்! l