இந்தியா கூட்டணி சிதறாது ! பி.ஜே.பி.யை வீழ்த்தி பெரு வெற்றி பெறும் !

2024 தலையங்கம் மார்ச் 1-15, 2024

இந்தியா’ கூட்டணி சரியான திசையில் சென்று, ஜனநாயக மீட்புப் பணியில் வெற்றியின் உதயத்தை நோக்கிய பயணத்தைச் சரியான உத்வேகத்துடன் செய்து வருகிறது!
சில ‘சருகுகள்’ அதில் உதிர்ந்தன; சில சுயநலமிகள் தங்களது இடத்தைத் தற்காலிகமாகவேனும் பாதுகாக்கும் பொருட்டு காவிகள் பக்கம் சாய்ந்து, அவர்களது ‘மயக்க பிஸ்கெட்டுகளுக்கு’ பலியானார்கள். எதிர்கட்சிக் கூட்டணியிலிருந்து இவ்வாறு சென்றதையும் அதனால் கூட்டணி முழுமையாய்ச் சிதையும் என்று மிக மகிழ்ச்சியோடு சொன்னவர்களுக்கும், எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சி வருகிறது!

தொடக்கத்தில் தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர்
– ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தளநாயகர், ‘இந்தியா’ கூட்டணிக்குக் காட்டிய சரியான வழியில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் சரியான முடிவுகளோடு பயணிக்கத் தொடங்கியுள்ளனர்!

மிகப்பெரிய மாநிலமான 80 நாடாளுமன்ற மக்களவை இடங்கள் உள்ள உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், மக்கள் செல்வாக்குள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவரால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது இயலாது என்று கூறியவர்களுக்குப் பதிலடி கிடைத்துள்ளது. 63 இடங்களில் சமாஜ்வாடி கட்சி போட்டி; 17 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டி என்று கூட்டணி இடங்கள் பகிர்வு சுமுகமாய் முடிந்துள்ளது!

அகிலேஷ், ராகுல், பிரியங்கா ஒரே மேடையில் பிரச்சாரம் தொடங்கி விட்டது!

மேற்கு உ.பி. பகுதியில் பா.ஜ.க.வுக்கு வாக்கு வங்கி வராது என்ற அச்சத்தாலேயே இப்போது ‘பாரத ரத்னா’ விருதையும் அரசியல் தூண்டிலாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சவுத்திரி சரண்சிங் பற்றிக் கவலைப்படாத பா.ஜ.க., அவரது பேரன் கட்சியை வளைக்கவும், ‘ஜாட்’ வாக்கு வங்கிக்காகவும் அலைந்துகொண்டுள்ள பரிதாப நிலை!
அதுபோலவே டில்லி, கோவா, அரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டு எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்துக் கொள்ளும்; பா.ஜ.க. எளிதில் வெற்றி பெறலாம் என்று காவிகள் போட்ட கணக்கு, தப்புக் கணக்காக ஆகிவிட்டதே என்று வேறு உத்திகளைத் தேடும் நெருக்கடி, பிரதமர் மோடியின் பா.ஜ.க.வுக்கு உருவாகி விட்டது.
டில்லியிலும் ஆம் ஆத்மி – காங்கிரஸ் தொகுதி உடன்பாடு சுமுகமாக ஏற்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், அதேபோல கோவாவில் உள்ள இரண்டு தொகுதிகளிலும், யூனியன் பிரதேசமான சண்டிகாரிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும்.

குஜராத்தின் 26 தொகுதிகளில் பாவ்நகர், பரூச் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானதும், பா.ஜ.க.வுக்கு பெருத்த ஏமாற்றமாகும்!
(காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் வென்ற பரூச் தொகுதி, காங்கிரஸ் தொகுதிபோல கருதப்பட்டாலும், அதை ஆம் ஆத்மி கட்சிக்கே காங்கிரஸ் தர ஒப்புக் கொண்டுள்ளது).
இதேபோன்ற நிலை மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் உடன்படிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படலாம்!

மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மம்தா (பானர்ஜி) அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து, ‘இந்தியா’ கூட்டணியில் சரியான ஒதுக்கீடு ஏற்பாட்டுக்கு ஒத்துழைப்பார் என்பது வெள்ளிக் கீற்றுபோல் தெரிகிறது!

தொடக்கத்திலேயே நமது முதலமைச்சர் அவர்களின் ஃபார்மூலா – சுட்டிக்காட்டிய வழிமுறையின்படி, ‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது” என்பதே இப்போதைய மிக முக்கிய அணுகுமுறையாக இருக்கவேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் நன்கு உணர்ந்து, தங்களது தன்முனைப்புக்கும், பிடிவாதத்திற்கும் இப்போது இது சரியான தருணம் அல்ல; தீயணைப்பு வீரர்களைப்போல, ஒரே இலக்குடன் ஒருங்கிணைந்து ஜனநாயகம், சமூகநீதி,
மக்களின் அன்றாட அவலங்கள், விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலையில்லாக் கொடுமை, அடக்குமுறை, அதிகார கோரத்தாண்டவம் இவற்றை மாற்ற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மோடி அரசை வரும் தேர்தலில் தோற்கடிக்க என்று ஓர் இலக்குடன் பயணிக்கும் இந்தியா கூட்டணி யின்மீது நம்பிக்கை நாளும் பெருகி வருகின்றது.
நிச்சயம் மோடி அரசு மக்கள் எதிர்ப்பு அலையில் இருந்து மீண்டு வருவது குதிரைக் கொம்பே!

விளம்பர வெளிச்சம் ஒருபோதும் கைகொடுக்காது!

முன்பும் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற விளம்பரத்தை இப்படித்தான் செய்தார்கள் – தோல்வியைத்தான் மக்கள் அதற்குத் தந்தார்கள்!

– கி.வீரமணி,
ஆசிரியர்