பொய்யினை நம்ப வைப்பார்;
புரட்டுகள் வேதம் என்பார்;
மெய்யினை உணரா வண்ணம்
மிரட்டியே மேலோர் கீழோர்
உய்ந்திடக் கடவுள், தெய்வம்
உயிரினைக் காக்கும் என்றே
எய்திடும் கணைகள் தம்மால்
இழிவுகள் சுமக்கச் செய்வார்!
மருட்டியே மனுநூல் சொல்லும்
மந்திரம் வெல்லும் என்பார்!
சுருட்டியே பிழைப்போர் நம்மைச்
சூத்திரன் என்றே மூட
இருட்டினில் கிடத்தி மேன்மை
ஏற்றமும் தடுப்பார்! பொல்லா
உருட்டலால் பூதம் பேய்கள்
உண்டென நாளும் ஏய்ப்பார்!
ஆரிய நஞ்சால் நெஞ்சில்
ஆரிருள் படரச் செய்தே
வீரியம் தொலைப்பார்! இல்லா
விதியெனும் குழியுள் தள்ளிச்
சீரினை அடையா வண்ணம்
செவ்விய பண்பா டென்னும்
வேரினைப் பறித்துத் தீயோர்
வெந்துயர்க் கடலில் சேர்ப்பார்!
புகழினை மாய்ப்பார் ! அண்டப்
புளுகெனும் சோதி டங்கள்
புகல்வன உண்மை என்பார்!
புண்ணியம் நரகம் சொர்க்கம்
தகவிலாப் பில்லி சூன்யம்
தலையினுள் திணிப்பார்! வேண்டும்
பகுத்தறி வொளியை நாட்டில்
பரப்பிட எழுவோம் நாமே! ♦