ஜோதிடம் என்பது புரட்டு; மகாபுரட்டு என்பது அன்றாடம் ஜோதிடத்தின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கின்ற கூட்டத்தின் பொய்மை மூலம் நாள்தோறும் நடக்கும் சம்பவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு வந்தாலும்கூட, மீண்டும் தொடர்ந்து மக்கள் சூதாட்டத்தில் எப்படி மீண்டும் மீண்டும் ஏமாந்து இழப்புகளைச் சந்திக்கிறார்களோ, அப்படியே ஜோதிடத்திலும் தொடருவது மனிதனின் பகுத்தறிவுக்கும் தன் மதிப்புக்கும் எதிரானது; கேலியும் வெட்கமும் அடைய வேண்டிய அவமானமும்கூட!
வானவியல் (Astronomy) என்பது அறிவியல் ; ஜோதிடம் (Astrology) என்பது போலி அறிவியல்.
அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் அவர்கள் எக்கட்சியினராக இருந்த போதிலும் ஜோதிடத்தை நம்பி, தங்கள் பெயர் முதற்கொண்டு மாற்றி, மாறுவேடம் போட்டும் தோல்வியைத் தழுவிய பிறகும்கூட ‘புத்திக் கொள்முதல்’ செய்து, பலனடைவதே கிடையாது!
தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் ஜோதிடம், யாகம் என்று பார்ப்பனர்களுக்கு கஜானாவைத் திறந்து வைத்து பல கோயில்களுக்குச் சென்று வழிபட்ட பக்திமயமான அரசியல்வாதி.
அவர் தேர்தலில் தோல்வியுற்று ஆட்சியை இழந்த நிலையில், குளியல் அறையில் வழுக்கி விழுந்து இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். (அவர் விரைவில் குணமாகி அவரது பொதுவாழ்வு, அரசியல் பணியில் தொடரவேண்டும் என்பது நமது அவா ஆகும்)
12.12.2023 ‘தினமலர், நாளேட்டில்,
“எங்கே அந்த ஜோதிடர்கள்?” என்ற தலைப்பில் (8ஆம் பக்கத்தில்) ஒரு பெட்டிச் செய்தி.
“ஜோதிடம், வாஸ்து போன்றவற்றில் அதீத நம்பிக்கையுள்ள சந்திரசேகரராவ், தன் அரசியல் நகர்வில் ஒவ்வொரு அடியையும், அந்த நிபுணர்கள் ஆலோசனைப்படிதான் செய்தார். கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதும், அதை அவர் பொருட்படுத்தவில்லை.
இப்போது, ‘இப்படி அடிமேல் அடிவிழும் என்று எந்த ஜோதிடரும் என்னிடம் கூறவில்லையே…. என்று புலம்புவதுடன், தனக்கு ஆலோசனை கூறிய ஜோதிடர்களை வெறியுடன் தேடிவருகிறார்.”
அந்தோ பரிதாபம்!
‘கெட்டபின் ஞானம்’ என்ற ஒரு பழமொழி உண்டு. ஆனால், இந்த மாற்றம் நிரந்தரமான சிந்தனையாக சந்திரசேகர ராவ் போன்றவர்களிடம் நிலைக்குமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாகும்! போதைத் தடுப்பில் முதல் குற்றத்திற்குரியதாக இந்த ஜோதிடத்தை அறிவிக்கவேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51கி பிரிவின்படி, குடிமக்களுக்கு அடிப்படைக் கடமைகளை நினைவூட்டி கடைப்பிடிக்க, அறிவியல் மனப்பான்மையைப் பரப்ப வேண்டும் என்பது அரசமைப்புச் சட்டக் கட்டளை.
திராவிடர் கழகம் மற்றும் பல கட்சிகளில் உள்ள பகுத்தறிவுவாதிகளைத் தவிர, வேறு யார் அதனைக் கடைப்பிடிக்கிறார்கள்-?
நாள், வார, மாத பலன், சனிப்பெயர்ச்சி, அப்படி இப்படி என்று சதா இந்த ஜோதிடப் போதையை நாட்டில் பெருக்கிடும் அறிவுக்கு எதிரான போக்கு வளருவது மிகவும் கேடானது! அறியாமை இருட்டில் மக்களை வாழச்சொல்வது அல்லவா இது?
உலகக் கால்பந்தாட்ட வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்தியக்குழு, முற்றிலும் பத்தாம் பசலிகளாக, மடமையில் ஊறினவர்களாக விளையாட்டு வீரர்களின் ஜாதகங்களைக் கேட்டு வாங்கி தேர்வு செய்யப்போவதாக வந்த செய்தி சர்வதேச அவமானம் அல்லவா? உலகத்தார் கைகொட்டி நகைக்கும் அவலத்தின் உச்சமல்லவா?
இதுபற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்காகவே காத்திருக்கிறது.
75 ஆண்டு சுதந்திர, ‘அபத்தம்’ இதுதானா?
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்ற பெரியார் அறிவுரை _ வரையரை, கருத்துரை_ எவ்வளவு பொருள் பொதிந்த தேவையான அறிவுரை என்பதை இப்போதாவது உணர வேண்டும் மக்கள்.
“‘ஜோதிடம் தனை ‘இகழ்’ என்ற பாரதியின் கருத்தை_ மற்றவைகளில் பாரதியை ஏற்றி ஏற்றிப் புகழ்வோர் பின்பற்றிச் செயல்படவேண்டாமா?
பிரபல நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி; அது பலிக்காவிட்டால் என் தொழிலையே விட்டுவிடுகிறேன் என்று ஓங்கி அடித்த ஜோதிடர் ஒருவர் சற்றும் வெட்கமின்றி தொழிலைத் தொடர்வது நியாயமா?
மக்கள் யோசிக்க வேண்டும். காலாவதியான மருந்து தூக்கி எறியப்பட வேண்டும். ஜோதிட மாய்மாலம் மனிதகுலத்தையே நாசம் செய்வதைத் தடுக்க அறிவார்ந்த சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டமா? யோசியுங்கள்.
– கி. வீரமணி,
ஆசிரியர்