தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட வாழ்நாள் சாதனையாளர்

2023 டிசம்பர் 1-15, 2023 முகப்பு கட்டுரை

… மஞ்சை வசந்தன் …

தமிழர் தலைவர் என்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் பாசத்தோடு அழைக்கப்படும் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 1933ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் கடலூரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, தனது 10ஆம் வயதிலேயே பெரியாரின் தொண்டரானவர்.

பெரியாரின் தொண்டராக ஒருவர் ஆவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எளிதில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள இயலாத, சமுதாயத்தின் ஓட்டத்திற்கு, நடைமுறைக்கு முற்றிலும் எதிரான கொள்கைகளை ஏற்று பெரியார் தொண்டர் ஆவது, அதுவும் 10 வயதிலே ஆவது என்பது மிக மிகக் கடினமான காரியம்.
10 வயது என்பது தொடக்கக் கல்வி பயிலும் வயது. அந்த வயதில் இப்படிப்பட்ட கொள்கையை ஏற்பது, பின்பற்றி நடப்பது என்பது அரிதிலும் அரிதான செயல்.
அதுமட்டுமல்ல, அந்த வயதிலே அவர் செய்த சாதனைகள் வியப்புக்குரியவை.

பத்து வயதில் மேடைப் பேச்சு!

1943ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி, கடலூர் பழைய பட்டினத்தில், செட்டிக்கோயில் திடலில், அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழுக்கு நன்கொடை திரட்டியளிக்கும் நிகழ்வில் 10 வயது சிறுவனான இவரை மேடையில் மேஜை மீது ஏற்றி முதன்முதலாகப் பேசச் செய்தார் ஆசிரியர் திராவிடமணி அவர்கள். அப்போது “தட்டுத் தடங்கலின்றி சரளமாக, பார்ப்பன ஆதிக்கத்தையும், ஏமாற்றையும் புராணப் புளுகுகளையும், ஆபாசங்களையும், கடவுள்களையும் கிழி கிழியென்று கிழிப்பதை வாய்பிளந்துகொண்டு நானும் பார்த்தேன்_ கேட்டேன்” என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் வியந்து பாராட்டியுள்ளார் என்றால் அது வியப்புக்குரிய சிறப்பல்லவா?

பத்து வயதில் பொதுவாழ்விற்கு வந்து சாதனை!

பத்து வயதிலே பொதுவாழ்விற்கு வந்து 80 ஆண்டுகள் தொடர்ந்து பொதுவாழ்வில் தொண்டாற்றி வரும் உலக சாதனைக்குரியவர் இவர்!
10 வயதிலே மேடையில் மேசைமீது நின்று கொள்கைப் பிரச்சாரம் செய்தார் இவர். 14 வயதில் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் அளவிற்கு பொதுவாழ்வின் உயரத்தையும் எட்டியவர் இவர்.

பதினொரு வயதிலே பெரியாருடன் சந்திப்பு

1944 ஜூலை மாதம் 29ஆம் தேதி திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாட்டில் கலந்துகொண்டு, அதைத் திறந்து வைக்க பெரியார் கடலூர் வந்திருந்தார்.
இரவு முழுக்க மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த கி.வீரமணி, விடியற்காலையில் திரு.ஏ.பி. ஜனார்த்தனம் அவர்களுடன் சென்று பெரியாரைச் சந்தித்தார். அதுவே முதல் சந்திப்பு.

மாநாடு மதிய இடைவேளைக்குக் கலைந்தபோது, மதிய உணவுக்கு கடலூர் முதுநகர் பிரமுகர் வீட்டில் விருந்து. அங்கு வீரமணியும் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மீண்டும் பெரியாரைச் சந்தித்தார்.

பெரியாரே பேசினார்! “நீ என்ன படிக்கிறாய்?” என்ற கேட்டார்.
“அய்ந்தாம் வகுப்பு” வீரமணி பதில் சொன்னார்.
“நன்றாகப் படி!” என்று தட்டிக் கொடுத்தார் பெரியார்.

அந்த மாநாட்டில் தந்தை பெரியாரின் பேச்சு வீரமணியின் பிஞ்சு உள்ளத்தில் ஆழமாய்ப் பதிந்தது. வீரமணியும் அம்மாநாட்டில் பேசினார்.
11 வயதுகூட நிரம்பாத சிறுவன் மாநாட்டில் பேசுவதென்பது அதைவிட வியப்புக்குரியதல்லவா?

அண்ணா தந்த அடைமொழி

“இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம். நெற்றியிலே நீறு-. கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்று தெரிகிறது” என்று பெருவியப்பின் வெளிப்பாடாய் உருவகப்படுத்தி உணர்வுகளைக் கொட்டினார் அண்ணா. அதைக் கேட்ட பெரியார் பலமாகச் சிரித்தார். மாநாட்டுக்கு வந்திருந்த மக்களெல்லாம் ஆர்ப்பரித்து எழுப்பிய கையொலி அப்பகுதியையே அதிரச் செய்தது.

பத்தரை வயதில் திருமண வாழ்த்துரை

எங்காவது கண்டதுண்டா? கேட்டதுண்டா? என்று வியக்கும் நிகழ்வு இது! வீரமணிக்கு மட்டுமே நிகழ்ந்தது; வாய்த்தது!
11.06.1944இல் கடலூர் மாலுமியார் பேட்டையில் காவேரிப்பட்டினம் மாரிமுத்து (படையாட்சி) புதல்வி ஞானாம்பாளுக்கும் மாலுமியார்பேட்டை கோவிந்தசாமி (படையாட்சி) புதல்வன் சின்னத்தம்பிக்கும் நடைபெற்ற மணவிழாவில் பத்தரை வயதுச் சிறுவனாக இருந்த நிலையில் கி.வீரமணி உரையாற்றினார். இதை 17.06.1944 ‘குடிஅரசு’ ஏடு தெரிவிக்கிறது.

பதினொரு வயதில் பொதுக்கூட்டத்திற்கு தலைமை!

17.09.1944இல் நாகை வெளிப்பாளையம் அவுரித் திடலில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 66ஆவது பிறந்த நாள் விழாவில் 11 வயது நிரம்பாத சிறுவன் வீரமணி கலந்துகொண்டு முக்கால் மணிநேரம் உரையாற்றினார். 27.08.1944இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றப்பட்ட சேலம் மாநாட்டில் 15 நிமிடங்கள் ஸ்டூல் மீது நின்று பேசினார். வரலாற்று முக்கியம் வாய்ந்த மாநாட்டில் 11 வயது சிறுவன் பேசியது உலகில் கேட்டறியாத வியப்பிற்குரிய செயலாகும்.
பதினான்காவது வயதில் படத்திறப்பாளர்!

21.09.1947இல் மதுரையில் பெரியார் பிறந்த நாள் விழா நாடார் வித்தியாசாலைத் தெருவில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அந்நிகழ்வில் பெரியாரின் படத்தைத் திறந்து வைக்கும் பெரும் பொறுப்பு பதினான்கு வயது சிறுவன் வீரமணிக்கு அளிக்கப்பட்டது. எத்தனையோ முதுபெரும் தலைவர்கள், அறிஞர்கள், களவீரர்கள் மத்தியில் 14 வயது சிறுவன் அழைக்கப்பட்டு, அவரைக் கொண்டு படம் திறக்கப்பட்டது என்பது வியப்பிற்குரிய பதிவல்லவா?

24 வயதில் கலைஞர் நடத்திய மாநாட்டில்  14 வயதில் வீரமணி சிறப்புரை!

திருவாரூரில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், அரங்கண்ணல் உள்ளிட்ட நண்பர்கள் துணையுடன் தென் மண்டலத் திராவிட மாணவர் மாநாட்டினை 01.05.1948இல் நடத்தினார். அப்போது கலைஞருக்கு வயது 24.

அந்த மாநாட்டில், “போர்க்களம் நோக்கி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டவர் கி.வீரமணி. அப்போது அவருக்கு வயது 14.
இளம் வயதிலேயே சாதித்தவரும் அறிவும், ஆற்றலும், துணிவும், கொள்கைப் பிடிப்பும், தன்மான உணர்வு, சமதர்ம வேட்கையும் ஒரு சேரக் கொண்டவரான கலைஞர் அவர்களே, தான் ஏற்பாடு செய்த மாநாட்டில், 14 வயது சிறுவன் வீரமணியைச் சிறப்புரை ஆற்றச் செய்தார் என்றால் இது எப்படிப்பட்ட வியப்புக்குரிய நிகழ்வு!

அது மட்டுமல்ல, 14 வயது சிறுவன் வீரமணிக்கு இரயில் நிலையத்திலிருந்து மாநாட்டுப் பந்தல்வரை மேளதாளம் முழங்க, வாழ்த்தொலியோடு வரவேற்பு, உலகில் இவரைத் தவிர இப்பெருமை வாய்த்ததில்லை வேறு யாருக்கும்!
பத்து வயதிலே பல இடங்களிலிருந்தும் பேச அழைப்பு!

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் சிறுவன் வீரமணியை எங்கள் ஊருக்குப் பேச அனுப்புங்கள் என்று அழைப்புமேல் அழைப்பு. இந்த அழைப்புகளைத் தொகுத்து வைத்து, செல்லும் இடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய பணியைச் செய்ய ஒரு உதவியாளர் தேவைப்பட்டார். அந்த உதவியாளராக அவரது ஆசிரியர் திராவிடமணியே செயல்பட்டார்.

அண்ணாவிடம் தூது சென்ற அதிசயச் சிறுவன்

1947இல் கடலூரில் திராவிட நாடு பிரிவினை மாநாடு நடைபெற்றது. அப்போது பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே மனவருத்தம் இருந்தது. திராவிடநாடு பிரிவினை மாநாடு ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் மாநாட்டிற்கு அண்ணாவையும் அழைத்து வந்து பங்கேற்கச் செய்ய வேண்டுமென்ற கருத்து நிலவியது. அய்யாவிடம் திரு.வி.கே. சண்முகசுந்தரம், திரு.திராவிடமணி ஆகியோர் மூலம் பேசி, ஒப்புதல் பெற்ற நிலையில், அண்ணாவை நேரில் சென்று அழைக்க வேண்டும் எனக் கூறி, அந்தப் பொறுப்பை இரண்டு பேர் வசம் மாநாட்டுக் குழுவினர் ஒப்படைத்தனர். ஒருவர் குறிஞ்சிப்பாடி தோழர் கு.தெ.பெ. பழனியப்பன் அவர்கள் (இவர் வழக்கறிஞர் இரெ.இளம்வழுதியின் மாமா ஆவார். தீவிர இயக்க ஆர்வத்துடன் அப்போது செயல்பட்டவர்) அவருடன் சென்ற மற்றொருவர் கி.வீரமணி.
இப்படி அந்த வயதிலே அரிய சாதனைகளைப் புரிந்த தமிழர் தலைவர், பள்ளிப் படிப்பையும், பல்கலைக்கழகப் படிப்பையும் தடையின்றிப் பயின்றதோடு, தொடக்கக்கல்வி முதல் மாணவராகவே மிளிர்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தங்கமெடல்களைப் பெற்றார்.

பல்கலைப் படிப்பு படித்து முடித்த பின், வழக்கறிஞர் படிப்பும் படித்து முடித்தார். பின்பு, கடலூரில் வழக்கறிஞராகப் பணியைத் தொடர்ந்தார். படிப்பு, தொழில் என்று ஒருபுறம் தொடர்ந்தாலும் இயக்கப் பணிகளையும் பெரியார் கொள்கைப் பிரச்சாரப் பணிகளையும் இன்னொருபுறம் தமிழ்நாடெங்கும் அவர் தவறாது தொடர்ந்தார்.

இந்நிலையில் ‘விடுதலை’ ஆசிரியர் பணியை ஏற்க வேண்டும் என்று தந்தை பெரியார் இவருக்கு அழைப்பு விடுக்க, எந்தத் தயக்கமும் இன்றி உடனடியாக தன் வழக்கறிஞர் பணியை உதறிவிட்டு, ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றார். அதற்கு தமிழர் தலைவர் விதித்த ஒரே நிபந்தனை இப்பணிக்கு நான் எந்த ஊதியமும் வாங்கமாட்டேன். அதை அய்யா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

தான் வசதி அதிகம் இல்லா குடும்பத்தில் பிறந்து, படித்து வந்தபோதிலும் இயக்கப் பணிக்கு ஊதியம் பெறுவதில்லையென்பதில் உறுதியாக இருந்து வருபவர்.
அய்யாவின் இறப்பிற்குப்பின், அன்னை மணியம்மையார் தலைமையிலும் அதே பற்றுடனும், கட்டுப்பாட்டுடனும் பணியாற்றினார்.
அன்னை மணியம்மையாருடைய இறப்பிற்குப்பின், தாமே இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று இன்றளவும் சிறப்பாக வழி நடத்திவருகிறார்.

சமூகநீதி பாதுகாத்து வருபவர்

எப்பொழுதெல்லாம் சமூகநீதிக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் முதல் போராளியாய் நின்று அதைக் காத்துவருகிறார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு வைத்து ஆணை வெளியிட்டபோது, இந்த முயற்சி இடஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்த்தெறிந்துவிடும். இடஒதுக்கீடு என்பது சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை. இதில் பொருளாதாரம் என்ற அளவுகோலுக்கு இடமே இல்லை. இடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை என்று எம்.ஜி.ஆரிடமே நேருக்கு நேர் வாதிட்டு, அவருக்குத் தெளிவை உண்டாக்கி, வருமான வரம்பு ஆணையைத் திரும்பப் பெறச் செய்தார். அதுமட்டுமல்ல தெளிவு பெற்ற எம்.ஜி.ஆர் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு அளவையும் உயர்த்தினார். இது இடஒதுக்கீட்டு வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.

அதேபோன்று 69 சதவிகிதம் இடஒதுக் கீட்டிற்கு ஆபத்து வந்தபோது, அப்போது முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் துணையோடு, அதைக் காப்பதற்கான சட்டமுன் வரைவுகளைச் செய்து, தந்து, அதை நிறைவேற்றச் செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, அரசியல் சட்டப் பாதுகாப்பையும் பெற பாடுபட்டார். 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டைப் பாதுகாத்துக் கொடுத்த செல்வி ஜெயலலிதாவிற்கு ‘சமூகநீதி காத்த வீராங்கனை” என்ற பட்டத்தையும் அளித்துப் பெருமைப்படுத்தினார்.

அதேபோல் நுழைவுத் தேர்வை ஒழித்துக் கட்டியதிலும், தற்போது நடப்பிலுள்ள நீட் தேர்வை ஒழிப்பதற்கான போராட்டங்களிலும் இவரின் பங்கு தலையாயது.
ஒவ்வொரு நாளும் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த சிக்கல்கள் எழும்போது எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தயங்காது சரியான
கருத்துக்களை எடுத்துகூறி ஆட்சியாளர்களை நெறிப்படுத்தும் பணியை கடந்து 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவருகிறார்.

இதனால்தான் கலைஞர் அவர்களே, ஒவ்வொரு நாளும் விடுதலையைப் பார்த்து ‘எங்களைச் சீர்செய்து கொள்கிறோம், பெரியார் திடல்தான் எங்கள் திசைகாட்டி, எங்கள் மனப்புண்களுக்கு மருந்திடுவதும் பெரியார் திடலே’ என்று கூறியுள்ளார் என்றால் தமிழர் தலைவரின் சிறப்பிற்கு வேறு சான்று வேண்டுமா?
இன்றைய முதல்வர் மாண்புமிகு மு.கஸ்டாலின் அவர்கள். ஆசிரியரின் ஆலோசனை பெற்றே முக்கிய முடிவுகளை எடுக்கிறார். தமிழர் தலைவர் என் வணக்கத்
திற்குரியவர்; என்னைப் பாதுகாப்பவர்; பெரியார் திடல்தான் என் திசைகாட்டி என்று உளப்பூர்வமாய்க் கூறியுள்ளார்.

பல்துறை ஆற்றலாளர்

தமிழர் தலைவர் அவர்கள், சிறந்த கல்வியாளர், சட்டநுட்பங்கள் அறிந்த வழக்கறிஞர், தலைசிறந்த பத்திரிகையாளர், ‘விடுதலை’, ‘உண்மை’, The Modern Rationalist, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களின் ஆசிரியர். விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவருவது உலக அளவில் சாதனையாகும்.

தலைசிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், ஆய்வாளர். 10 வயதில் தொடங்கிய அவரது மேடைப் பேச்சு 90ஆம் வயதிலும் அந்த ஆற்றல், ஓட்டம் குறையாமல் தொடர்கிறது.

அவரின் ‘கீதையின் மறுபக்கம்’ சிறந்த ஆய்வு நூல். அவரது வாழ்வியல் சிந்தனைகள் சிந்தனைக் கருவூலம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான நூல்களின் சாரம். தொடர் சொற்பொழிவுகள் பல செய்துள்ளார்.

அனைத்திலும் மேலாக ஆற்றல்மிகு நிர்வாகி. பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளிகள் ஆதரவற்றோர் காப்பகம், நிதிநிறுவனங்கள் என்று ஏராளமான
வற்றை நிர்வாகித்தும் வருகிறார்.

தொண்ணூறு வயதிலும் தொய்வில்லாத தொண்டு

தொண்ணூறு வயதை நிறைவு செய்யும் இவர், இன்றைக்கும் ஓர் இளைஞரைப் போலவே
சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார்.

பெரியாரை உலக மயமாக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடக்க வெற்றியைப் பெற்றுவிட்டார்.

திருச்சி சிறுகனூரில் உருப்பெற்றுவரும் பெரியார் உலகம் அவரின் ஈடுஇணையற்ற சாதனை! விரைவில் அது உலகோர் கவனம் ஈர்க்கும் என்பது உறுதி.
‘இந்தியா’ கூட்டணி சிதையாமல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அது மகத்தான வெற்றி  பெறவும், மக்களாட்சியும், இந்திய அரசமைப்பும், சமூகநீதியும், சமத்துவமும், மதச்சார்பின்மையும் காப்பாற்றப்பட, இவரது பணி உள்ளூர ஊடுருவி, உணர்வூட்டி உதவும். நிதிஷ்குமார் உட்பட மூத்த தலைவர்களும், ராகுல் போன்ற இளைய தலைமுறையினரும் இவரை ஏற்று நடக்கக்கூடியவர்களே! இவரது முயற்சிகள் அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் மூலம் சிறப்பாக இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு, இலக்கு வெற்றி பெறும். தமிழினம் காக்கும் தகைசால் தமிழர் இந்தியாவையும் காக்க இடைவிடாது உழைப்பார் என்பது உறுதி! உறுதி!

இன்னும் 25 ஆண்டுகளுக்கு மேலும் வாழ்வார்! வாழ வேண்டும் என்று விழைகின்றோம். ♦