… முனைவர் வா.நேரு …
திராவிட இயக்கம் தம் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்ப, உணரச் செய்யப் பயன்படுத்திய கலை நாடகம்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், சி.பி.சிற்றரசு, தில்லை வில்லாளன், எஸ்.எஸ்.தென்னரசு, கே.ஜி.இராதாமணாளன் எனத் திராவிட இயக்க நாடகப் படைப்பாளர்களின் பட்டியல் மிக நீளும். எதிர்ப்புகள் எத்தனை வந்த போதிலும் உண்மையைப் போதிக்கும் நாடகங்களை தமிழ்நாடு முழுக்க நடத்தினர்.
“இனி வரப்போகும் நாடக உலகமானது இதுவரை இருந்தது போலவே இல்லாமல், உண்மை நிகழ்வுகளை நாடகமாக்கி, வர்க்க உணர்வை இடதுசாரிகள் ஊட்டினர். அவர்கள் வர்ணப்பிரிவு எதிர்ப்பிற்கும் மூடநம்பிக்கை ஒழிப்பிற்கும் தங்கள் நாடகங்களில் காட்சிகள் அமைக்கவில்லை. பேரா.மு.இராமசாமி அவர்கள் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’, ’பெண் ஏன் அடிமையானாள்?’ ‘வைக்கம் போராட்டம் ஈ.வெ.ரா.நாயக்கர் கதை அல்ல, ஈ.வெ.ரா. நாயகர் ஆன கதை’ என்னும் நாடகத்தை அரங்கேற்றினார்.
இந்த ஆண்டு வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு. என்பதால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அறிக்கை கொடுத்திருந்தார்..அதனை மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவ-_ மாணவிகள்,ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக நிறைவேற்றினர்.
மதுரை இராஜா முத்தையா மன்றம் அரங்கு. முழுவதுமாக நிரம்பி வெளியே நின்றும் நாடகத்தைப் பார்த்தனர்.ஏறத்தாழ 3000 மாணவ மாணவிகள் இருமுறை நடத்தப்பட்ட இந்த நாடகத்தைக் கண்டு உணர்வு பெற்றனர்.
இந்த நாடகம் பல நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருச்சியில் இந்த நாடகத்தை நடத்தவேண்டும் என்னும் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். .இருட்டை அகற்றுவதற்கு வெளிச்சத்தைத்தான் உருவாக்கவேண்டும்.இன்றைய இளைய சமுதாயத்திடம் பரப்பப்படும் ஜாதி இருட்டை அகற்றத் தந்தை பெரியார் என்னும் வெளிச்சத்தை இந்நாடகங்கள் வழி பாய்ச்சவேண்டும்.
கருப்புச்சட்டை போட்ட தந்தை பெரியாரை நாம் அறிவோம். ஆனால், கதர்ச்சட்டை போட்ட பெரியாரை, பார்ப்போர் கண்முன்னால் கொணர்ந்து பேரா.மு. இராமசாமி அவர்கள் நடித்துக் காட்டினார்.
தந்தை பெரியாரின் கருத்துகள் எவரையும் ஈர்க்கும் வல்லமை மிக்கவை. திறந்த மனதோடு தந்தை பெரியாரின் கருத்துகளை உள்வாங்கும்போது அது செய்யும் மன மாற்றங்கள் ஆச்சரியப்படத்தக்கவை. 1933-இல் தந்தை பெரியாரின் 3 மணி நேரப் பேச்சை முதன் முதலில் கேட்டு, மனம் மாறி, தந்தை பெரியாரின் கருத்துகளை கவிதைகளாக ஆக்கினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்பது வரலாறு. இது 90 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வு. ஆனால், தந்தை பெரியாரின் கருத்துகளின், போராட்டங்களின் அடிப்படையில் உண்மை நாடகங்களை வடிவமைக்கும் அய்யா பேரா.மு. இராமசாமி அவர்கள், தந்தை பெரியாரின் கருத்துகள் தனக்குள் ஏற்படுத்திய வேதியியல் மாற்றத்தைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“இந்த நாடகம் எனக்குள் செய்திருக்கிற மாற்றம் என்னவாயிருக்கிறது என்பதாய்த் தனித்து யோசித்துப் பார்க்கையில், அது எனக்குள் செய்திருக்கிற கிரியை ஆச்சரியப்படுத்துவதாய் இருக்கிறது. உண்மையின் மேலான பற்றுறுதி கூடியிருக்கிறது. என்னை என் வளர்ச்சியில் இயல்பாகப் பக்குவப்படுத்தியிருந்தது. உண்மையாயிருப்பது என்பது எத்தனை உன்னதமானது என்பதை, இலக்கியமாய் எனக்குள் இந்த நாடகம் இறக்கியிருக்கிறது என்று கம்பீரமாகச் சொல்ல முடியும். அது, நாடகத்தில் நடிக்கிற நடிகனுக்குள் நிகழ்ந்திருக்கிற வேதியியல் மாற்றம்! கலவரத்தையோ, காட்டுமிராண்டித் தனத்தையோ நம்பாமல், எதையும் பகுத்தறிவுடன் யோசிக்க வைக்கிற பக்குவத்தை இது உள்வயமாய் உருவாக்கியிருப்பது அதிசயமாயிருக்கிறது.
உண்மையின் ஒளிச்சிதறல்தான் பெரியார் என்பதாயும், சமூகத்தின் மேலான பற்று, அக்கறை என்பதே பெரியாரியம் என்பதாயும், அது மனிதத்துவத்தை மேன்மையுறச்செய்யும் மாமருந்து என்பதாயும், எனக்குள், உரத்து உள்வாங்க வைத்திருக்கிறது இந்த நாடகம்!” என்றார்.
ஆம், இந்த நாடகத்தைப் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்தப் பெரியார் என்னும் உண்மையின் ஒளிச்சிதறல் மூளைக்குள் ஊடுருவும். பத்தாம் பசலித்தனமான கருத்துகளால் நிரம்பிக்கிடக்கும் மூளையின் இருட்டை இந்தப் பெரியார் என்னும் ஒளிச்சிதறல் நீக்கும்.புதிது புதிதாய்ச் சிந்திக்க வைக்கும்.அதன்மூலம் பெரியார் விரும்பிய உலகத்தை ‘அன்பும் சமத்துவமும் கொண்ட உலகத்தை’ப் படைப்பதற்கு உந்து சக்தியை அளிக்கும். அப்படிப்பட்ட நாடகத்தை அளித்திருக்கக்கூடிய பேரா.மு. இராமசாமி அவர்களையும் அதில் மிக இயல்பாக, தேர்ந்த நாடகக் கலைஞர்களைப் போல நடித்திருக்கக்கூடிய மதுரை காமராசர் பல்கலைக் கழகக் கல்லூரி மாணவ, மாணவிகளையும் ,அதற்குத் துணை நின்று பணியாற்றிய அக்கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்களையும் ,ஊழியர்களையும், நிகழ்வில் கலந்து கொண்டு உற்சாகப்படுத்திய தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் மாண்புமிகு பி.மூர்த்தி அவர்களையும், உரையாற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களையும், மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி அவர்களையும், தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மா.இராஜேந்திரன் அவர்களையும், மதுரை துணை மேயர் நாகராசன் அவர்களையும் மற்ற ஆளுமைகளையும் பாராட்டி மகிழ்கின்றோம். தந்தை பெரியார் நாடகங்களால் ‘கிழியட்டும் பழம் பஞ்சாங்கம்’ என்று ஆனந்த நடனம் புரிவோம். ♦