போராடி ஒழிக்க வேண்டும்!
1. கே : ஆங்கிலேயர்களை எதிர்த்து “வெள்ளையனே வெளியேறு’’ என்று காந்தியடிகள் போராட்டம் நடத்தியதைப் போல “பார்ப்பனர்களே இநதியாவை விட்டு வெளியேறுங்கள்’’ என்று இந்திய மக்கள் போராட ஆரம்பித்துவிட்டால், இந்த பார்ப்பனர்களின் கதி என்னவாகும்?
– வ.க. கருப்பையா, பஞ்சம்பட்டி.
ப : வருங்காலத்தில் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று எச்சரித்தே தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் ஆரியத்திற்கு அறிவுரை கூறி அனை
வருக்கும் அனைத்தும் என்றும் உணர்த்தினர்.
ஆனால், அதையெல்லாம் எதிர்பார்த்தோ, என்னவோ பல வெளிநாடுகளில் சென்று அரசியலைக் கைப்பற்றி, ஆரியமாயை அங்கே ஆணி அடித்து நிலைநிறுத்தும் திட்டத்தை மும்முரமாக நடத்து
கிறார்கள் போலும்!
2. கே: அய்ந்து மாநிலத் தேர்தல்களில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் அதிகத் தொகுதிகளில் தனித்து நின்று தோற்பதைவிட, இடப்பகிர்வில் கிடைக்கும் அனைத்து இடங்களிலும் வெல்வதுதானே சரியாகும்? இப்போதுகூட விட்டுக்கொடுத்து உடன்பாடு காணச் செய்தால் என்ன?
– ராஜேஸ்வரி, கரூர்.
ப : களம் காண்பவர்களுக்குத்தான் கள நிலவரம் தெரியும்¢; வெளியில் உள்ள நாம் தேவையற்ற யோசனைகளைக் கூறக்கூடாது! சட்டசபைத் தேர்தல் ‘பார்மூலா’ என்பது தனி.
3. கே: ஆளுநருக்குக் காலக்கெடு என்று அரசியல் சட்டத்தில் இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்கலாமல்லவா?
– செந்தில், பெரம்பூர்.
ப : உச்சநீதிமன்றம் அறிவுரை மற்றும் வழிகாட்டும் நெறிமுறையைக் கூறலாம்; சட்டமாகச் செய்ய உத்தரவிட முடியாது! சில ஆணைகளைச் ‘செல்லாது’ என்று கூறலாம்.
4. கே: தென் மாவட்டங்களில், குறிப்பாக இளைஞர்களிடம் ஜாதி வெறியிருப்பதற்கான காரணம் சமூகச் சூழலா? அல்லது ஜாதி உணர்வேற்றும் சதியா? அரசு ஆய்வு செய்து தீர்வு காணவேண்டியது கட்டாயமல்லவா?
– சின்னம்மா, மணிக்கூண்டு.
ப : இதற்கு அரசியல் பின்னணியும் ஆர்.எஸ்.எஸ் பின்னணியும் உள்ளது. எனது 02.11.2023 தேதியிட்ட அறிக்கையைப் படியுங்கள்.
5. கே: ‘இந்தியா’ கூட்டணி பற்றி கருத்துக் கூறுகையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து நிதிஷ்குமார் பொதுவெளியில் பேசுவது ஏற்புடையதா?
– ராமநாதன், திருச்சி.
ப : தவிர்த்திருக்கவேண்டும். ஏனெனில், உண்மையைத் திரிக்கும் ஓநாய்கள் இதுபோன்றவைகளுக்காகத்தான் காத்திருக்கின்றன.
6. கே: இந்தச் சமூகம் எல்லாவற்றிலும் சமத்துவம் அடைந்துவிட்டது என்று சொன்னால் – திராவிட இயக்கத்தின் தேவை இந்த மக்களிடத்தில் இருக்குமா? திராவிட இயக்கத்தின் பாதை மீண்டும் எதை நோக்கியதாக இருக்கும்?
– மோ. மோகன்ரஜ், காரைக்கால்.
ப : அது அப்போதைய தேவைக்கு ஏற்ப பகுத்தறிவு, மனித நேய அடிப்படையில் பயணிக்கத் தவறாது. பகுத்தறிவு வழிகாட்டும். மாற்றம் ஒன்றே மாறாதது!
7. கே: பெரியாருக்கு அடுத்து நீங்கள் பார்த்து வியந்த பகுத்தறிவுத் தலைவர் யார்?
– தி. மனோ, காரைக்கால் மாவட்டம்
ப : பெரியார் பணியைப் பகிரும் தலைவர்கள்_ பெரியார் என்ற தத்துவத்திற்கான பரப்புரையாளர்கள் ஏராளம் இருக்கிறார்கள்_ வருவார்கள்!
பெரியாருக்கு அடுத்து என்று பெரியாரை ஒப்பிட்டுத் தேடினால் எளிதில் சுட்டுவது அரிது! அரிது!
8. கே: தற்போதைய காலத்தில் முற்போக்கு பேசும் பார்ப்பனர்களை நம்பலாமா? அவர்களையும் இணைத்துப் போராடலாமா?
– வசந்தகுமார், கோவில்பட்டி.
ப : வைதீகப் பார்ப்பனரைக் கூட நம்பலாம்; முற்போக்கு வேஷம் ஆபத்தானது! எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஆபத்தின் அவதாரம் அது!
9. கே: அரசு பல தகுதித் தேர்வுகளை அறிமுகப்படுத்தும் நிலையில் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டுமா? அல்லது எதிர்த்துப் போராடத் தயாராக வேண்டுமா?
– அன்புமுகில், கோவை.
ப : எதிர்த்துப் போராடி, ஒழித்தாக வேண்டும். தேர்தல் மூலம் மாற்றம் வர மாணவர்கள், இளைஞர்கள் இப்போதிலிருந்தே பிரச்சாரத்திலும் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபாடு காட்டி, கடுமையாக உழைக்கவேண்டும். ♦