அடுத்தவருடைய அறிவு, மொழி, விழாக்கள், வழிபாடுகள், மரபுகள்,நூல்கள் போன்றவற்றை அபகரித்து தமதாக்கிக்-கொண்டு, மாற்றாருக்கு உரியவற்றை மறைப்பது, அழிப்பது ஆரியப் பார்ப்பனர்கள் பல நூற்றாண்டுகளாய்ச் செய்துவரும் மோசடியாகும்.
தமிழர்களின் தொன்மை நாகரிகங்களைத் தனதாக்குவதில் தீவிரம் காட்டுகின்றனர். தமிழரின் வானியல் அறிவைத் தமதாக்கினர். தமிழர்களின் தொன்மை மருத்துவமான சித்த மருத்துவத்தைக் களவாடி ஆயுர்வேத மருத்துவமாக மாற்றிக் கொண்டு, சித்த மருத்துவத்தை ஒழித்துவிட்டு ஆயுர்வேத மருத்துவத்தை வளர்க்க, பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழரின் இசையை கர்நாடக சங்கீதமாக மாற்றி, தமிழிசையை அழித்து வருகின்றனர். புத்த, சமணக் கோயில்களை அழித்து, அவற்றை தங்கள் கடவுள் கோயில்களாக மாற்றிக் கொண்டனர். இப்படி மாற்றப்பட்ட கோயில்கள் இந்தியா முழுதும் ஏராளமாய் உள்ளன.
அதேபோல், சமணர்களின் பண்டிகையை புராணக் கதையைப் புனைந்து மோசடியாக இந்துமதப் பண்டிகையாக மாற்றிக் கொண்டாடப்படுவதே தீபாவளிப் பண்டிகை. சமணர்களின் தீர்த்தங்கரர்களில் 24ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர், பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.
தீபாவளி எப்படி வந்தது ?
வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழா கொண்டாடும்படி ஏற்பாடு செய்தனர். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவளி ‘லி’ என்பது ‘ளி’ ஆகத் திரிந்தது) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!
சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள், திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. (கல்வெட்டாராய்ச்சி அறிஞர் “மயிலை சீனி. வேங்கடசாமி’’ அவர்கள் எழுதிய “சமணமும் தமிழும்’’ என்னும் நூலில், பக்கம் 79_80)
தீபாவளி என்னும் பெயர் சமணப் பண்டிகைக்கு மட்டுமே பொருந்தும். நரகாசுரன் கதைக்குப் பொருந்தாது. எனவே, சமணப் பண்டிகையை இந்துப் பண்டிகையாக ஆக்கிக் கொண்ட மோசடி இதில் வெளிப்படுகிறது. இதை வாரியாரே கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
அசுரர் கொலைக்கு விழாவா? வாரியார் கேட்கிறார்
“தீபாவளியின் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சம்கரித்தார்; அந்த அரக்கனை அவர் அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தினால் கொண்டாடப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படியானால் இராவணன், இரணியன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண்டாட்டம் இருக்க வேண்டும். (ஆனால் அவ்வாறு இல்லையே) நரகாசுரனைக் கொன்றதற்கும், தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று”. (திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எழுதிய “வாரியார் விரிவுரை விருந்து’’ என்ற நூலில், பக்கம்_95)
எனவே, தீபாவளி இந்துப் பண்டிகை அல்ல என்பதையும், அது தமிழர்க்குரிய பண்டிகையும் அல்ல என்பதையும் உணர வேண்டும். இப்பொழுது கொண்டாடப்படுவது, பட்டாசு வெடித்து மாசுபடுத்துவது, ஒரே நாளில் பல பலகாரங்களைத் தின்று உடலைக் கெடுத்துக் கொள்வது அறிவுக்கும் உகந்தது அல்ல என்பதை உணர்ந்து மக்கள் இப்பண்டிகையைக் கை விடவேண்டும். அது நாட்டுக்கும், வீட்டுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது.
ஒரே நாளில் இந்தியா முழுக்க புகையாக்கி காற்றை மாசுபடுத்துவது, அதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரின் உடல் நலத்தைக் கெடுப்பது, சமுதாய துரோகச் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு இவற்றைக் கைவிடவேண்டும்.
தீபாவளி என்னும் பெயரே இது சமணப் பண்டிகைதான் என்பதை உறுதிசெய்யும். 24ஆம் தீர்த்தங்கரர் இறந்த நேரத்தில் வரிசையாக விளக்கேற்றி வணங்கியமையால், தீப + ஆவலி (விளக்கு வரிசை) என்று அழைக்கப்பட்டது.
மாறாக இந்துப் பண்டிகையாக மாற்றி நரகாசுரன் கதையைப் புனைந்து, நரகாசுரனைக் கொன்றதைக் கொண்டாட தீபாவளி என்னும்போது விளக்கு வரிசை என்ற உண்மை பொருந்தாது போவதைக் காணலாம். அது மட்டுமல்ல; வாரியார் கேட்பதுபோல, அசுரர்களை அழித்ததற்குப் பண்டிகை என்றால், மற்ற அசுரர்களுக்கு ஏன் பண்டிகை இல்லை, என்ற கேள்விக்குப் பதில் கூறமுடியாது.
எனவே, சமணப் பண்டிகையை இந்துப் பண்டிகையாக மாற்ற கற்பனையாய்ப் புனையப்பட்டதே நரகாசுரன் கதை என்பதும், தீபாவளி என்பது இந்துப் பண்டிகையல்ல;அது சமணப் பண்டிகையே என்பதும் உறுதியாகிறது.
மேலும் வடமாநிலங்களில் தீபாவளியன்று வரிசையாக விளக்கேற்றி வழிபடும் வழக்கம் இன்றும் இருப்பது இதை உறுதி செய்கிறது. ♦