சிங்கப்பூரில் பெரியாரின் 125ஆம் பிறந்த நாள் விழா!
கி.வீரமணி
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்,
தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் நூற்றாண்டு விழா 1.3.2004
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 125-ஆம் பிறந்த நாளையும், தமிழவேள் கோ.சாரங்கபாணியின் நூற்றாண்டு விழாவையும் ஒரு சேரக் கொண்டாடியது சிங்கப்பூர்தமிழவேள் நற்பணி மன்றம். 1-.3-.2004 மாலை 6 மணிக்கு கிரேத்தா ஆயர் மக்கள் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாமும், திரைப்பட நடிகர் ‘இனமுரசு’ சத்யராஜ் அவர்களும் கலந்து கொண்டோம்.
தலைமை உரையாற்றிய வளர்தமிழ் இயக்கத் தலைவர் ‘அரசு’ என்று அறியப்பட்டவை. திருநாவுக்கரசு. ‘தமிழ்முரசு’ பத்திரிகை மூலம் தமிழவேள் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தார். ‘சமூகத்தை உயர்த்துங்கள்; நீங்கள் தானாகவே உயர்வீர்கள்’ என்று தமிழவேள் கூறியதை நினைவுபடுத்தினார். தமிழர் திருநாள் மூலம் தமிழவேள் செய்த அரிய பணிகளை திருநாவுக்கரசு பட்டியலிட்டார்.
முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் இலியாஸ், தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளுக்கு சிங்கையில் முழு வடிவம் தந்தவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி என்று கூறினார்.
தொண்டாற்ற வருபவர்களுக்கு ஊக்கத்தைத் தரும் என்று விருதுகளை அறிவித்துப் பேசிய சுப. திண்ணப்பன் குறிப்பிட்டார். திருமதி அன்னபூரணி, கணவர் சார்பாக விருதைப் பெற்றுக் கொண்டார். அய்க்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவர் திரு.எம்.கே. ஜப்பாருக்கு ‘நல்லிணக்க நாயகர்’ விருது கொடுக்கப்பட்டது. தமிழவேள் பெருமை பரப்பும் பணியைச் செய்யும் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம்.இலியாசுக்கு ‘தமிழவேள் நூற்றாண்டு சிறப்பு விருது’ வழங்கப்பட்டது. தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த ‘குருதிக் கொடை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குருதிக் கொடை கொடுத்தவர்களுக்கு ‘இனமுரசு’ சத்யராஜ் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்தார்.
அதேபோல், பெரியார் – தமிழவேள் நிகழ்ச்சி சிறக்க ஆதரவுக் கரம் நீட்டிய ஆதரவாளர்களுக்கும், அவர் நினைவுப் பரிசு வழங்கினார்.
பெரியார் தொண்டர்கள் கருப்பு உடையில் வந்து விழா சிறக்க உதவியாய் இருந்தனர். கோ.சா. கல்வி அற நிதிக்குத் திரட்டிய 3,000 வெள்ளிக்கான காசோலை சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டது. விழாவின் சிறப்பம்சம் தந்தை பெரியார் – தமிழவேள் விழா பெருமை கொண்ட ஒரு விழாவாக அமைந்தது.
எனது ‘வாழ்வியல் சிந்தனைகள்’ முதல் பாகம் நூல் வெளியீட்டு விழா 5.3.2004 அன்று மாலை 6:30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் (எல்.எல்.ஏ.பில்டிங்) வெகு சிறப்பாக நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘‘வாழ்வியல் சிந்தனை’’ நூல் வெளியீட்டு விழா (சென்னை 5.3.2004) மணவை முஸ்தபா, கி.வீரமணி, இரா. செழியன், நீதியரசர் பெ.வேணுகோபால் (ஓய்வு) டாக்டர். பூ.பழனியப்பன், கலி.பூங்குன்றன், கோ.சாமிதுரை
இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திராவிடர் கழகம் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை வரவேற்றுப் பேசினார். நீதியரசர் பெ. வேணுகோபால் தலைமை வகித்துப் பேசினார். தலைசிறந்த பகுத்தறிவுவாதியும் நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் அவர்கள், ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலை வெளியிட முதல் பிரதியை நீதியரசர் பெ. வேணுகோபால் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஏராளமான இயக்கத் தோழர்கள் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
மணவை முஸ்தபா, டாக்டர் பூ.பழநியப்பன், இரா. செழியன் ஆகியோர் உரை ஆற்றினர்.
நிறைவாக ஏற்புரையில், நான் நன்றி கூறத்தான் வந்திருக்கிறேனே தவிர, ஏற்புரை ஆற்ற வரவில்லை. வாழ்வியல் சிந்தனைக் கருத்துகளைப் படித்துவிட்டு உள்நாட்டுத் தமிழர்களிடமிருது வெளிநாட்டுத் தமிழர்கள் வரை அதைப் பாராட்டிச் சொன்னதற்காக அத்துணை பேருக்கும் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இறுதியாக இந்நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் தொகுத்து வழங்கிய திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு நன்றி! இந்தப் பாராட்டு விழாவில் பங்குகொண்ட அனைவருக்கும் எனது நன்றி! வணக்கம்.” என்று குறிப்பிட்டோம்.
திரைப்பட இயக்குநர் ஆர். சுந்தர்ராசன் அவர்களின் மகன் சாலை விபத்தில் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்ததை முன்னிட்டு, 6.3.2004 அன்று மாலை 4 மணிக்கு அவர்களின் இல்லத்திற்குச் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினோம். நமது சொற்கள் பெரிதும் ஆறுதலாக இருந்ததாக இயக்குநர் சுந்தரராசன் கூறியது மனதுக்கும் ஆறுதல் தந்தது. இயக்கத் தோழர்கள் பலர் உடன் வந்திருந்தனர்.
திராவிடர் கழகத்துணைப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு அவர்களின் மூத்த சகோதரியார் ஜீவகாந்தம்(வயது 68) அவர்கள் 8.3.2004 திங்கள் இரவு திருச்சியில் மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்தினோம்.
வடசென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் மேனாள் தலைவர் வில்லிவாக்கம் அ. தியாகராசன் அவர்களின் துணைவியாரும், கழக மகளிரணியில் பங்குகொண்டு பாடுபட்டவருமான பாப்பம்மாள் தியாகராசன் 15.3.2004 அன்று இரவு சிதம்பரத்தில் டாக்டர் ஆர்.பாலு இல்லத்தில் மறைவுற்றார் செய்து கிடைத்து வருந்தினோம். இரங்கல் அறிக்கை வெளியிட்டோம்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தினரால் முதுமுனைவர் (Doctor of Literature D.Litt) என்ற மதிப்புறு பட்டம் எமக்கு வழங்கப்பட்டதற்கு சிங்கப்பூர் நாட்டின் தமிழ்ப் பெருமக்கள் இணைந்து பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, தமிழவேள் நற்பணி மன்றம் அமைப்புகளின் சார்பில் மிகச் சிறப்பான பாராட்டு விழா 28.3.2004 ஞாயிறு மாலை 6:00 மணி முதல் இரவு 8.30 மணிவரை நடத்தினர்.
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.ஏ. ஜப்பார் அவர்கள் விழாவுக்குத் தலைமையேற்றார்கள்.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவருமான ஹாஜி ஏ.ஜி. முகம்மது முஸ்தபா B.S., AMICE, FIV (India) அவர்களும், சிங்கப்பூரின் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், உடல் நலிவுற்ற நிலையிலும், உள்ளத்தின் வலிமை குன்றாக் கொள்கை வீரருமான மானமிகு சு.தெ.மூர்த்தி அவர்களும், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவரும், சீரிய பண்பாளருமான திரு. அரிகிருஷ்ணன் அவர்களும் முன்னிலை ஏற்றார்கள்.
சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் சிறந்த கல்வி அறிஞரும், வரலாற்று ஆய்வாளரும், சிங்கப்பூர் வரலாற்றுக் கழகத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற கல்வித்துறை உதவி இயக்குநருமான பேராசிரியர் திரு.சாமுவேல் துரைசிங்கம் B.A., Hons., M.A., அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றத்தின் முனைப்பில் சிங்கப்பூர் தமிழ்ப் பெருமக்கள் சார்பாக அளிக்கப்பட்டு வண்ணத்துடன் எழில் குலுங்க உருவாக்கப்பட்ட பாராட்டு இதழினை வழங்கினார்கள்.
வந்திருந்த அனைவரையும், சிறப்பு விருந்தினரையும் தனது ஆற்றல் திறன்மிக்க கருத்தாழப் பேச்சால் அந்த நற்பணி மன்றத்தின் செயல்மிகு தலைவர் திரு. இலியாஸ் அவர்கள் வரவேற்றார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தால், அளித்துள்ள இந்தப் பட்டம் மிகவும் பொருத்தமான ஒருவருக்கு அதிலும் இது போன்றவற்றை எந்நாளம் எதிர்பாராத ஒருவருக்கு அளிக்கப்பட்ட மாபெரும் சிறப்புதான் என்றாலும், 10வயது முதல் மேடை ஏறிய ஒரே தலைவர் ஒரே கொள்கை என்ற உறுதியோடு இலட்சியப் பயணம் மேற்கொண்ட ஒருவருக்கு அளிக்கப்பட்டது சிறப்பிற்குரியது. தந்தை பெரியார் கொள்கையை உலகமெங்கும் கொண்டு செல்லும் உன்னத உயரிய பணியாற்றும் தமிழர் தலைவர் அவர்களை சிங்கப்பூர் தமிழ் மக்கள் பாராட்டுவது என்பது எங்களுக்கெல்லாம் மிகுந்த மனநிறைவைத் தரக்கூடியது.
தமிழ்நாடு அழகப்பா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழவேள் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழா – 28.3.2004 – சிங்கப்பூர்.
விழாவிற்கு ஏராளமான பல்துறை அறிஞர்கள், வல்லுநர்கள் வந்திருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுப் பிரமுகர்கள் பல் மருத்துவர் டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன், திருமதி வாசுகி கண்ணப்பன், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் இராமானுஜம், மலேசியாவின் பிரபல தொழிலதிபரும், ம.இ.காவின் மத்திய செயலவை உறுப்பினருமாகிய டத்தோ எஸ்.பாலகிஷ்ணன்(ஜோகூர்), இனஉணர்வாளரும் கொள்கைப் பற்றாளருமான டாக்டர் இரா. செழியன்(ஜோகூர்), சிங்கப்பூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் முருகு சீனுவாசன் குடும்பத்தினராகிய திருமதி மலைஅரசி, கலைச்செல்வம், மேனாள் திராவிடர் கழகத் தலைவர் நடராசன், மருமகன் இராஜ்கண்ணு, முதுபெரும் பெரியார் தொண்டர் தி. நாகரெத்தினம் குடும்பத்தினர் திருமதி நவநீதம், மாறன், கவிதா, கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, பிரபல எழுத்தாளர் ஜே.எம். சாலி, கழகச் செயல் வீரர் அத்திவெட்டி ஜோதி, சங்கர், மதியழகன், மன்னை கோபால், தஞ்சை ரமேஷ், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் திருமதி, அன்பழகன், ஏராளமான உரத்தநாடு கழகத் தோழர்கள் மற்றும் கருஞ்சட்டைத் தோழர்கள், பிரபல கண்மருத்துவர் டாக்டர் சுந்தர், கண்ணப்பன் சுந்தர், மன்றத் தலைவரும் சீரிய பொதுநலத் தொண்டரும் தனித்தமிழ் ஆர்வலருமான தமிழ்மறையான், கழக வீரர் நகைச்சுவைத் தென்றல் ஆருர் சபாபதி, பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியின் சிங்கப்பூர் பழைய மாணவிகள் சங்கத் தலைவி திருமதி குடிஅரசி போன்ற பலரும் விழாவிற்கு வந்திருந்து இறுதிவரையில் பங்கேற்றனர்.
சிங்கப்பூரின் சிறந்த இலக்கியத் தென்றலாகப் பரிமளித்துக் கொண்டுள்ள கவிமாமணி மானமிகு கவிஞர் மா. அன்பழகன் அவர்கள், ஓர் உணர்ச்சிக் காவியமான கவிதையை_ வாழ்த்துப்பாவைப் பாடி, வந்தோர் நெஞ்சங்களில் எழுச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தினார்.
சொற்கள் கவிதைகளில் கவண்கற்களாகத் தெறித்தன. கொள்கையும், லட்சியமும் புன்முறுவலித்தன!
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் (Professor, Asian Studies) டாக்டர் சுப. திண்ணப்பன் அவர்கள் கலந்துகொண்டு ஓர் அற்புதமான உரையை நிகழ்த்தினார்.
நிறைவாக ஏற்புரையில், “நமக்குக் கிடைத்த பெருமைகள் பாராட்டுரைகள் அத்தனைக்கும் தனது தகுதியால் பெறப்பட்டவை என்பதல்ல. தந்தை பெரியார் என்ற ஒப்பற்ற சுய சிந்தனையாளரின் கருத்தாக்கத்திற்கும், கொள்கைகளுக்கும் தொண்டறத்துக்கும் கிடைத்த அங்கீகாரம் என்பதுதான் உண்மை. இது வெறும் தன்னடக்கத்தால் கூறப்படுவது அல்ல.
நமக்கு வழிகளைத் திறந்த பிறகே தந்தை பெரியார் அவர்கள் விழி மூடினார்கள். அவர்களை நேரில் அழைத்துப் பாராட்ட வாய்ப்பில்லாத காரணத்தால்தான் அவரது கொள்கைத் தேவைகளை உணர்ந்த கல்விச் சமூகமும், சிந்தனைக் கூடமான பல்கலைக் கழகமும் அவரது தொண்டர்களில் கடைகோடித் தொண்டனைத் தேடிப் பிடித்து இந்த முதுமுனைவர் பட்டத்தினைத் தந்து மகிழ்ந்துள்ளது!
ஒரே கொள்கை, ஒரே தலைவர் இவருக்கு என்பது இவரது 60 ஆண்டு சாதனை என்றனர்; அது தானே இயல்பு? அப்படிக்கு இல்லாமல், நாளொரு கொள்கை ஆளுக்கொரு தலைவர் என்ற கீழிறக்கப் போக்கு நாட்டில் மலிந்துள்ள நிலையில், அதுபோல் நாம் இல்லாததால், பாராட்டுவதற்குரியதாகிவிடுகிறது. தினமும் இவர் சுவாசிக்கிறார் என்று வியப்படைவதில்லை. அதுபோல எனக்கு இது இயல்பானது. தனது தொண்டர்கள், தோழர்கள் “கெட்ட பெயர்” எடுக்கத் துணிந்தவர்களாக இருக்கவேண்டும் என்று அழைத்தார்.
எனவே, பாராட்டுக் கேட்டுப் பழக்கமில்லாதவர்கள் நாங்கள்; எதிர்நீச்சல் பணி செய்து கிடப்பவர்கள் நாங்கள்.
முதல் பெண்கள் பொறியியல் கல்லூரி தொடங்கியது எனது பணியாக இருக்கலாம்; ஆனால், அதில் சேருவதற்குத் தகுதி, மனப்பாங்கு இவை நம் மகளிருக்கு வருவதற்கு அரும்பாடுபட்டு உழைத்து சமூகத்தைப் பக்குவப்படுத்தியவர் அய்யா பெரியார் அவர்கள் அல்லவா?
அதற்குரிய வாய்ப்பை, அறக்கட்டளைகளை அமைத்துச் செய்ய வைத்ததற்கு முழுக் காரணம் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் அல்லவா?
அவர் பட்டங்களை நாடாதவர்; பதவிகளை வீசி எறிந்தவர்; மக்கள் பணி செய்வதில் கடைசி மூச்சுள்ளவரைக்கும் உழைத்தவர் என்பதால், அவரது உண்மையான தொண்டர்கள், தோழர்கள் அதனைத் தொடர்கின்றோம்.
இந்த முதுமுனைவர் பட்டம் வழங்கிய, துணிச்சல் மிகுந்த துணைவேந்தர் (டாக்டர் ஏ. இராமசாமி), ஆட்சி மன்றக் குழு, அதற்கேற்ப அமைந்த அரசியல் தட்பவெப்பம் இவற்றுக்குக் கூட நன்றி சொல்லவேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட துணிவுள்ள, துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்கள் இல்லாமற்போய்விட்டன. அவர்களையே பல பல்கலைக்கழகங்கள் உரையாற்ற உள்ளே விட்டதில்லை என்ற நிலை மாறி, பெரியார் கொள்கை முதுமுனைவர் பட்டம் பெறும் அளவுக்கு நிலைமைகள் மாறி, நாடும் சமுதாயமும் வளர்ச்சி பெற்றுள்ளன.
எல்லோருக்கும் எனது தலைதாழ்ந்த வணக்கம்! புதுமை நாடாகிய சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு என்றும் நன்றி உடையவனாக இருப்பேன். எந்தக் கொள்கை உறுதிக்காக என்னைப் பாராட்டுகிறீர்களோ அதில் இறுதிமூச்சடங்கும் வரை மாறா உறுதியுடன் நான் இருந்து செயல்படுவேன்” என்று குறிப்பிட்டோம்.
தோழர் ஜோதி அவர்கள் நன்றி கூறிட, கூட்டம் இரவு 8.30 மணியளவில் முடிவுற்றது!
கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள், கல்வியகங்கள் பற்றிய தொடர்பு. பேச்சுவார்த்தைகள் – இவற்றில் ஈடுபட்டு வரும் 7-ஆம் தேதி தமிழகம் திரும்பும் எமக்கு தலைவருக்கு, சிங்கப்பூர் திராவிடர் கழக நண்பர்களும், பெரியார் பற்றாளர்களும் வாழ்த்தி வழியனுப்பு விருந்து விழா ஒன்றினை 4-.4-.2004 என்ற வரலாற்றுக் குறிப்பு நாளில் (இதுபோன்று மீண்டும் எல்லாம் 4 என்று மூன்றும் (நாள், திங்கள், ஆண்டு) வருவதற்கு 700 ஆண்டுகள் ஆகும் என்று காலக் கணக்கீட்டு வல்லுநர்கள் கணித்துள்ளனர்) ஞாயிறு பிற்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை, சிங்கப்பூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரபல ‘சகுந்தலாஸ்’ உணவகத்தில் நடத்தினர்.
இந்த விருந்து விடை நிகழ்ச்சிக்கு, சிங்கப்பூர் திராவிடர் கழக முன்னோடிகளில் ஒருவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், உடல் நலிவுற்றாலும், உள்ளமும் கொள்கையும் வலிமையுடன் உள்ளது என்று காட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்து கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மானமிகு தோழர் சு.தெ. மூர்த்தி முன்னிலை வகித்தார்.
விருந்துக்கு வந்திருந்த தோழர்களை பாணாவரம் சங்கர் வரவேற்று சில மணித் துளிகள் அருமையாக உரையாற்றினார். அவரது வரவேற்புரையில் ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியார் கொள்கையை நேசிப்பவர் அல்லர்; சுவாசிப்பவர். அவர்கள் சிங்கப்பூருக்கு ஓய்வுக்காக வந்தாலும், நாம் அவரை ஓய்வெடுக்க விடாமல் பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து ‘அன்புத் தொல்லை’ தந்தோம். அவற்றை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு சிறப்பாகக் கடமையாற்றினார்.
மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அவற்றைச் சும்மா விடுவதில்லை அல்லவா? அதுபோல் நாம் அவர்களிடம் ‘வேலை’ வாங்கி உள்ளோம். அய்யாவின் பணியை அவர் முடிக்க மேலும் நலத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும். அவர்கள் விரும்புவதுபோல நாம் ஒவ்வொருவரும் ‘விடுதலை’யைப் பரப்புவதற்கு நம்மாலான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம் என்றார்.
அத்திவெட்டி தோழர் ஜோதி அவர்கள் விழாக் குழுவினர் சார்பில் ஆசிரியருக்குக் கருப்பு ஆடை போர்த்தி சிறப்புச் செய்தார்.
நிறைவுரையாக நாம் பேசும்போது, “நீங்கள் பிழைப்பதற்காக இங்கு வந்துள்ளவர்கள் என்று குறிப்பிட்டீர்கள். அதில் ஒரு சிறு திருத்தம் அதாவது, ‘பிழைப்பதற்கு’ என்பதை விட ‘உழைப்பதற்கு’ என்பதே சாலப் பொருத்தம். இந்த நாட்டுக்கு உழைப்பைத் தந்து மிச்சப்படுத்திச் சேர்த்து வைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளீர்கள். சொந்த நாட்டில் அந்த அளவுக்கு வாய்ப்பு இல்லாததால்தான் இந்நிலை!
இங்கே வந்து பணிபுரியும் நம் இளைஞர்கள், தோழர்கள், பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பன்மொழிகளையும் சமநோக்கில் பார்த்து, சம வாய்ப்பு அளித்திடும் வகையில் உள்ள இந்நாட்டில் நீங்கள் இருக்கும் போது, சிங்கப்பூரியர்களாகவே நினைத்து, நடந்து, சட்டம், ஒழுங்கு கட்டுப்பாடு என்பதில் துளியளவும் பிசகாமல், மற்றவர்களுக்கு முன்மாதிரியான வகையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.
நன்றாக, கடினமாக உழைத்து நீங்கள் சேர்க்கும் செல்வத்தை – தேவையற்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு இரையாகி – வீணாக விரயம் செய்து விடக் கூடாது. நம் தோழர்களுக்கு இப்படி ஓர் அறிவுரை செய்யத் தேவையே இருக்காது என்று எனக்குத் தெரியும். தப்பித் தவறி, ஏதாவது தவறான தீய பழக்கங்கள் (புகைத்தல், குடித்தல் போன்றவை) யாருக்காவது இருந்தால், அதனால் ஏதாவது கடுகு அளவு லாபமாவது உண்டா? என்று சிந்தித்துப் பாருங்கள்!
‘சிக்கன வாழ்க்கையே சிறந்தது’ என்பது பெரியார் தொண்டர்களின் வாழ்வியல் நடைமுறை அல்லவா? மிச்சப்படுத்திச் சேர்த்து வையுங்கள்.
இழப்புகளை இன்முகத்தோடு ஏற்ற உங்கள் தாய், தந்தையர் அல்லது சகோதரர், சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் இவர்களை நினைவில் நிறுத்துங்கள். கொள்கையாளர்கள், கருஞ்சட்டை வீரர்கள் என்றும் தடம்புரளாத தங்கங்கள் என்பதை வாழ்க்கையில் செயல் வடிவில் காட்டுங்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல, இயக்கத்திற்குப் பெருமை. நம் கொள்கை, லட்சியங்களுக்கு வலிமை!
குறிப்பாக தாய், தந்தையரிடம் அன்பும், பாசமும் பொங்க நடந்து கொள்ளுங்கள். அவர்களில் பலர் பல குடும்பங்களில் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் ஏங்குகிறார்கள். வேடத்திற்குக்கூட அன்பு காட்டக் கூடிய பல இளைஞர்கள் நன்றாகச் சம்பாதிக்கும் நிலையிலும் பெற்றோர்கள் பால் அன்பு காட்ட முனைவதில்லை என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.
கொள்கை மாவீரர்களாக வாழ்ந்து வெற்றிகரமாக உங்கள் வாழ்க்கையை அமைத்து, பிறருக்கு நல்ல எடுத்துக்காட்டாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
எந்த நிலையிலும் வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் கட்டுப்பாடும், ஒழுக்கமும் உங்களுக்கு மிகவும் தேவை.
எனது ஓய்வினை – இளைப்பாறுதலைப் பறித்துக் கொண்டதாகச் சொன்னீர்கள்; அல்ல, அல்லவே அல்ல! தந்தை பெரியாரின் நம் அறிவு ஆசானின் பெருமைகளைப் பேசா நாள்கள் எனக்குப் பிறவா நாட்கள் என்று பணி செய்பவன் நான். ஓய்வு, இளைப்பாறுதல் (Relaxation) என்பது என்ன?
வெறுமனே படுத்துத் தூங்குவது ஒரு வேலையும் செய்யாமல், சோம்பிக் கிடப்பது என்பதல்ல; மாறாக, எந்தப் பணியினை இடைவிடாது செய்கிறோமா, அதைச் சற்று மாற்றி வேறு ஓர் இடத்தில், வேறு வகையில் செய்தாலே நல்ல இளைப்பாறுதல்தான்.
ஒரே நூலைப் படிப்பது, ஒரே வகையான நூலைப் படிப்பது என்பதிலிருந்து மாறி மற்றொன்று செய்தல், மற்றொரு பொருள் உள்ள நூலைப் படிப்பது நம் அகராதியில்_இளைப்பாறுதல்தான்.
கடுமையாக உழையுங்கள்; கடுமையாக உழைத்துச் செத்தவர்கள் யாருமிலர்; உழைக்காததனால் இயந்திரத்தில் பழுதடைந்து செயலற்றுப் போவதுபோல் ‘உழைக்காத
தனால்தான் சிலர் ஆயுள் விரைந்து முடிந்திருக்கிறது என்பதை மறவாதீர்!’ என்று யாம் உரையாற்றினோம்.
-விருந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு செந்துறை மதியழகன் நன்றி கூறினார்.
விருந்தில் கலந்து கொண்ட நண்பர்கள் சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றத்தின் தலைவர் தமிழ்மறையான், செயலாளர் இலியாஸ், திருமதி சு.தெ.மூர்த்தி, கலைச்செல்வம், மாறன், மன்னை ஒன்றியச் செயலாளர் ரத்தினவேலு, சொக்கனாவூர் ரமேஷ், சமயன்குடிக்காடு அறிவரசு, ரமேஷ்குமார், உரத்தநாடு ப.கோவிந்தசாமி, அத்திவெட்டி ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
சிங்கப்பூரில் ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில், கடந்த 12 ஆண்டுகளாக அருமையாக ஓர் அமைப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் பல கல்லூரித் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், இலக்கியவாதிகள், பல நிறுவனங்கள், கணினி முதலிய மென்பொருள் நிறுவனங்களில் உள்ள மேலாண்மைப் பொறுப்பாளர்கள் உள்பட பலரும் திங்கள்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நடத்தி வருகின்றனர். சிங்கை தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன் அவர்களின் முயற்சியால் அறிஞர் பெருமக்கள் கூடி, இலக்கியத் திறனாய்வு செய்கின்றனர்.
இம்மாதம் முதல் வார இலக்கிய வட்டத்தின் தலைமை விருந்தினராக எம்மை அழைத்து இலக்கிய உரையாற்றக் கேட்டுக் கொண்டனர்.
“காலாங் சமூக மன்றம்” என்ற அரங்கத்தில், 4-.4-.2004 ஞாயிறு பிற்பகல் மூன்று மணியளவில் இலக்கிய வட்ட சிறப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
மழை பெய்தும் சுமார் 30-க்கும் மேற்பட்ட பல்துறை அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் பொறியாளர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள், மகளிர் இதில் மூன்றில் ஒரு பகுதியினராகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
4.4.2004 அன்று தமிழர் தலைவருக்கு, சிங்கப்பூர் திராவிடர் கழக நண்பர்களும், பெரியார் பற்றாளர்களும் வாழ்த்தி வழியனுப்பு விருந்து விழா
எம்மைப் பற்றிய அறிமுகவுரையை பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன் ஆற்றினார்.
அடுத்து நான் ஓர் எளிய பெரியார் தொண்டன்; முறைப்படி தமிழில் இலக்கியம் பயின்றவன் அல்லன்; தந்தை பெரியார், திராவிட இயக்கத் தொடர்புகளின் காரணமாக இயக்கத்தில் ஆர்வம் கொண்டு உழைப்பவன்; பேராசிரியர்களைப் போன்று கற்றுத் துறை போகியவன் அல்லன். என்றாலும், இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி ஒரு சில கருத்துகளை விளக்குகிறேன்.
இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகும். இலக்கியம் என்றால், எந்த இலக்கியத்திற்கும் ஒரு குறிக்கோள் – இலக்கு இருக்க வேண்டும்; இருக்கின்றன. அந்த வகையில் மனித நேயத்தை முழுமையாக இலக்கு ஆக்கியுள்ள இலக்கியம் எங்கள் பார்வையில் திருக்குறள்தான்.
மனித நேயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடம் தரவேண்டும்; மாற்றுக் கருத்தாளர்களையும் மதிக்க வேண்டும். அறிவு பற்றிச் சொல்லும் வள்ளுவர் ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்’ என்ற வகையிலும், எத்தன்மைத்தாயினும் என்ற வகையிலும் மெய்ப்பொருள் காண வேண்டும் என்றார்.
எந்த மதம், எந்த ஜாதியினர், எந்த நாட்டினர் என்றெல்லாம் எவரும் கூற முடியாத அளவுக்கு அறிவும், பண்பும், அற நெறியும் அனைவருக்கும் – மனித குலம் முழுமைக்குமே பொருந்தக் கூடியது.
எக்காலத்துக்கும் பொருந்தும் என்று எவர் கருத்தையும் கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. தந்தை பெரியார் இன்று புரட்சியாளராகப் பார்க்கப்படுகிறார். அவரே சொன்னார், இன்னும் 200 ஆண்டுகள் கழித்து வருபவருக்கு, இதுவே ஒரு பிற்போக்குக் கருத்தாகத் தெரியக் கூடும் என்று.
எனவே, அறிவுச் சுதந்திரம் தேவை என்பதும், அந்த அறிவுகூட மனித நேயத்தோடு அமைய வேண்டும் என்பதால்தான் வள்ளுவர்,
“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை” (315)
என்று கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் ‘சிம்பதி’ (sympathy) என்ற சொல்லுக்கு இரக்கப்படுதல் – பிறரது துன்பத்திற்கு அனுதாபப்படுவது என்ற பொருள் உண்டு.
அதைவிடச் சிறப்பான சொல் ‘எம்பதி’(Empathy) அனுதாபப்படுவதைவிட, துன்பப்படுவோராகவே மாறி அவர்களின் துன்பம் அறிவது – களைவது என்பதே அது.
“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றவர்
செத்தாருள் வைக்கப் படும்”
என்பதில் ‘ஒத்தது அறிவான்’ என்ற சொற்கள் இந்த ‘எம்பதி’ (EMPATHY) என்பதையே குறிக்கிறது.
அதுபோல தனி வாழ்க்கைக்கு முக்கியம் மானம்; அதையே பொது வாழ்க்கை, பொதுத் தொண்டு செய்பவர்கள் இழக்கவும் தயங்கக் கூடாது என்பதை பெரியார் உதாரணத்துடன் விளக்கினார்.
அதுபோல, ‘ஊழ்’ என்பதற்கு தந்தை பெரியார் சேலம் கல்லூரியில் தத்துவக் கழகத்தில் ‘தத்துவ விசாரணை’ பற்றிப் பேசிய பேச்சின் விளக்கத்தை எடுத்துச் சொன்னார்.” என்று குறிப்பிட்டோம்.
‘உரையை கேட்டவர்கள் வினாக்கள் எழுப்பி விளக்கமும் அறிய விரும்பினர்.
குறளில் கடவுள் வாழ்த்து என்று உள்ளது பற்றியும், கடவுள் மறுப்புக் கொள்கை பற்றியும் கேட்டறிந்தனர். கழகம் நடத்தும் கல்வி நிலையங்கள், கல்லூரிகள் அய்.ஏ.எஸ்., பயிற்சி மய்யங்கள்
‘பவர்’ அமைப்பு, ‘றிக்ஷீஷீதீமீ’ அமைப்பு பற்றியெல்லாம் கேட்க, அது பற்றி நாம் விளக்கிய மேலும் விவரம் அறிய இணையதள முகவரியைத் தந்தோம் போது வியந்தனர்.
அப்போது ஒரு தனி மென்பொருள் குழுமம் நடத்தும் பொறியாளர் திரு. குமார் மற்றும் பலரும், நீங்கள் உங்கள் பணியைப் போதிய அளவுக்கு விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறீர்களே; மென்மேலும் செய்யும் பணிகளை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
ஆம், உண்மைதான்; எங்கள் குறைபாடுதான் அது; ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் அனைவரும் எங்களது நிறுவனங்களை வந்து பாருங்கள்; ஆலோசனைகளை வழங்குங்கள் என்று கூறி விடைபெற்றோம். நிகழ்வுமாலை 5.30 மணிக்கு நிறைவுற்றது.
(நினைவுகள் நீளும்…..)