அறநிலையத் துறையை அகற்றக் கோருவது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே!

2023 அக்டோபர் 16-31, 2023 முகப்பு கட்டுரை

– மஞ்சை வசந்தன்

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் 3.10.2023 அன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழகக் கோவில்
களை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி, தி.மு.க. அரசிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி சில கேள்விகளைக் கேட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பேசியது: ‘‘தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஹிந்துக்களுக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்களை மாநில அரசு வலுக்கட்டாயமாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அதுபோல சிறுபான்மையினருக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் இந்த மாநில அரசுகள் கொண்டு வருமா? நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் ஹிந்துக் கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்து. கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை முறைகேடாகக் பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள தன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.விடம் கோவில்களை ஹிந்து மக்களிடம் ஒப்படைக்கும்படி காங்கிரஸ் கூறுமா? சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வராதபோது, கோவில்களை மட்டும் எப்படி அரசு எடுத்துக் கொள்ள முடியும்? கோவில்களை ஹிந்துக்களிடம் அளித்து, அவர்களுடைய உரிமையை காங்கிரஸ் நிலை நாட்டுமா?’’ என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இது பிரதமர் அறியாமையால் அல்லது பழி சுமத்தவேண்டும் என்ற நோக்கில் பேசிய பேச்சு ஆகும்.
இந்து அறநிலையத்துறை இருக்கக் கூடாது. அது அகற்றப்பட வேண்டும் என்பதே, ஆரியப் பார்ப்பனர்களின்_ குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், ஆட்களின் தீவிரமான கோரிக்கை. இவர்களின் இக்கோரிக்கை சரியா? நியாயமா? என்பதை அறிய, இந்து அறநிலையத்துறை ஏன் உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை அறிய வேண்டியது கட்டாயம்.

1817ஆம் ஆண்டு முதல் அரசின் ரெவின்யூ போர்டுதான், கோயில் அறக்கட்டளைகளை நிர்வகித்து வந்தது.
1863ஆம் ஆண்டில் Religious Endowment Act XX of 1863  என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, கோயில் நிருவாகப் பொறுப்பை இச்சட்டம் மூலம், அரசு தன்னிடமிருந்து விடுவித்துக் கொண்டது.

‘மத விஷயங்களில் தலையிடாக் கொள்கை’ என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்த காரணத்தால், 19ஆம் நூற்றாண்டில் கோவில் நிருவாகத்தில் கேட்பாரற்ற நிலைமையே இருந்து வந்தது.
எனவே, கோயில்களுக்கு விடப்பட்ட அறக்கட்டளைகள் சரியாக நடைபெற வேண்டுமென்ற பொதுக் கருத்து வேகமாகப் பரவியது. அதன் விளைவாக 1874, 1876, 1884, 1894 ஆகிய ஆண்டுகளில் கமிட்டிகள் நியமிக்கப்பட்டு, அரசு இக்கமிட்டியின் பரிந்துரைகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.

ஆனால், கோயில் பெருச்சாளிகளும், ஆதிக்க சக்திகளான பார்ப்பனர்களும், இதனைக் கடுமையாக எதிர்த்து, இதில் அரசு தலையிடக்கூடாது என்று வற்புறுத்தினர். தங்களது ‘சர்வ கொள்ளை சுதந்திரமாக’ நடைபெறப் போராடினர்.

1905இல் பெல்லாரியில் கூட்டப்பெற்ற சென்னை மாகாண மாநாட்டில் மாகாணத்தில் உள்ள ஏராளமான கோயில்களில் ஊழல்களும், செலவினங்களில் விரயமும், தவறான நிருவாகமும்
தலை விரித்தாடுவதாலும், அதனைச் சரிவரக் கண்காணித்து ஒழுங்குபடுத்த போதிய சாதனம் இல்லாததாலும், கோயில் கணக்குகளைப் பகிரங்கமாக வெளியிடவும், அறங்காவலர்கள்
எண்ணிக்கையைக் குறைத்து ஒரு கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

13.01.1920இல் ‘மெயில்’ ஏடு எழுதிய ஒரு தலையங்கத்தில், பிரிட்டிஷ் அரசு கடைப்பிடித்த, மதவிஷயங்களில் தலையிடாக் கொள்கை என்பதால் ஏற்பட்ட விளைவுகள் மோசமானதாகவே ஆயின என்றும், எனவே, அரசு இவற்றை நீக்க, தக்க வழிமுறை கண்டாக வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

1921இல் நடைபெற்ற தென்னிந்திய பார்ப்பனரல்லாதார் நான்காவது மாநில மாநாட்டில் பார்ப்பனரல்லாதாரது மடங்களுக்கு
சரியான இடத்தை அளிக்கும் வகையில், தனித்து ஒரு சட்டம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1922இல் நீதிக்கட்சி ஆட்சியில் வந்த மசோதா நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை, அதன் அதிகாரவரம்பிற்கு உட்பட்ட வகையில், கோயில் சீர்கேடுகளை நீக்குவது குறித்து, தீவிரமாகப் பரிசீலனை செய்தது. மாநிலத்தில் உள்ள இந்து அறநிலையங்கள், மதக்கூடங்கள்பற்றிய நிருவாகத்தினைக் கவனிக்க, ஒரு தனிமசோதா கொண்டுவர, ஒரு தனிக் கமிட்டியே நியமித்தது. 1922ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தக் கமிட்டி நியமிக்கப்பட்டு, 1922ஆம் ஆண்டு டிசம்பரில்_அதாவது சுமார் 7 மாதங்களில் ஒரு மசோதா தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இம்மசோதா மிகவும் புரட்சிகரமான ஒன்றாகக் கருதப்பட்டது. இந்த அறநிறுவனங்களில், வரும் உபரிநிதியை எதற்காகவென்று அவைகள் ஏற்படுத்தப்பட்டவையோ, அப்பணிகளுக்கு அப்பால் பொதுமக்களுக்கும் பயன்படத் தக்கவகையில் செலவழிக்க வழிவகை செய்தது அம்மசோதா.

1922 டிசம்பர் 21ஆம் தேதி ‘இந்து’ நாளேடு இம்மசோதாவை எதிர்த்து எழுதியது.
அப்போது, இந்த மசோதா பற்றி சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் சர்ச்சை மிகப்பெரும் அளவில் கிளம்பியது.

மசோதாவின் மூன்று முக்கிய அம்சங்கள்:

1) உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்து சமய அறக்கட்டளை போர்டுதான், எந்த எந்தக் கோயில்களில் உபரி நிதி உள்ளது என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் பெறும்.
2) அந்த உபரி நிதி அந்தக் கோயிலின் ரிசர்வ் நிதியாக தேவைப்படும் அளவுக்கு ஒதுக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்பதை ஆராய்ந்து பிறகு உபரி நிதி ஒதுக்கப்படும்;
3) இதற்குப் பிறகு உபரியாக உள்ள நிதியை, உருவாக்கப்படும் அறக்கட்டளையின் அடிப்படை நோக்கத்திற்கு மாறுபட்டுப் போகாமல், அதன் நோக்கங்களுக்கு உகந்தவகையில் போகாமல், அந்த உபரிநிதி மற்ற பொது நல தரும காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

உத்தேசிக்கப்பட்ட தனி இந்து மதஅறநிலைய போர்டு, கோயில் சம்பந்தப்பட்டவழக்குகளை விசாரிக்கும். உள்ளூர்க் குழுக்கள் முடிவுக்கு எதிராக மேல் முறையீட்டு அப்பீல்களை பைசல் செய்து முடிவு கூறும் வகையில் அமையும் என்று, மசோதா செய்த ஏற்பாட்டினை ‘இந்து’ நாளேடு அதன் 5.3.1923 தலையங்கத்தில் எதிர்த்து எழுதியது.
ஆனால், – பார்ப்பன வெறியற்ற ‘மெயில்’ நாளேடு அதன் ஆசிரியர் அப்போது ‘ஹெயிஸ்’ என்ற ஒரு வெள்ளைக்காரர்; மசோதாவை நன்கு பாராட்டி வரவேற்று எழுதினார்.

தந்தை பெரியார் வரவேற்றார்

அப்போது சென்னை மாகாண காங்கிரசின் மாநிலத் தலைவராய் இருந்த தந்தை பெரியார், ‘’கட்சி வேற்றுமை பாராட்டாமல் அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்க வேண்டும். இதனால் அறநிலையங்களுக்கு ஆபத்து இல்லை. அவைகளின் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மதத்தின் பெயரால் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான் இதனால் ஆபத்து” என்று அறிக்கை வெளியிட்டார்.

தந்தை பெரியார் அவர்கள் விடுத்த இவ்வறிக்கையை அப்போது காங்கிரஸ் தலைமைப் பொறுப்பாளராக இருந்த டாக்டர் பி.வரதராஜுலு மற்றும் திரு.வி.க., எஸ்.ராமநாதன் ஆகியோரும் ஆதரித்தனர்.

வைஸ்ராயிடம் முறையீடு மற்றொருபுறம், எஸ்.சீனுவாசய்யங்கார், விஜயராகவாச்சாரியார் போன்ற சில பார்ப்பன வழக்குரைஞர்கள் இதனை முழுமையாக எதிர்த்தனர்!
இம்மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்பும்கூட பல மடாதிபதிகள் ஒன்று சேர்ந்து வைஸ்ராய் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் (ASSENT) கொடுக்கக் கூடாது என்று தூதுக் குழுவை அனுப்பி வேண்டுகோள் விடுத்தனர். இத்தூதுக் குழுவின் எதிர்ப்பு நடவடிக்கைகளால், மசோதாவுக்கு ஒப்புதல் பெறக் காலதாமதம் ஆகியது.
‘ஜஸ்டிஸ் கட்சி’ இரண்டாம் முறையாக 1923 தேர்தலில் பெரும்பான்மை பெற்றது.

இரண்டாவது முறையாகவும் மசோதா நிறைவேற்றம்!

மீண்டும் இரண்டாவது முறையாக, 1924 ஏப்ரலில் நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையின் முயற்சியால் புதுச் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் மீண்டும் ஒரு முறை அதுவும் இரண்டே மணி நேரத்தில் – நிறைவேறியது!

1925ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த மசோதாவிற்கு வைஸ்ராய் தனது ஒப்புதலை அளித்துச் சட்டமாக்கினார்!
மேற்படி அறநிலையத்துறை வாரியச் சட்டம் அவ்வளவு சுலபமாக வந்துவிடவில்லை. அதைக் கொண்டு வருவதற்கு பார்ப்பனர்கள் பெரும் எதிர்ப்புக் காட்டினர். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு மதத்தில் அரசு தலையிடுவதாகக் குறை கூறினர். ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ போன்ற பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்து தலையங்கம் தீட்டின. “ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்துவதா?” என்று- காங்கிரஸ் சத்தியமூர்த்தி அய்யர் ஆவேசப்பட்டார். அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் முதலமைச்சர் பானகல் அரசர் எடுத்துச் சொல்லி சட்டத்திற்கான ஒப்புதலைப் பெற்றார்.

பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்த முனைந்த நீதிக்கட்சி ஆட்சி, முத்தாய்ப்பாக இந்து சமய அறநிலைய வாரியம் ஒன்றை 1927இல் அமைத்தது. இதற்காக மெட்ராஸ் இந்து சமய அறநிலையங்கள் சட்டம் II / 1927 போடப்பட்டது. இச்சட்டத்தின்படி திருக்கோயில்களின் நிருவாகத் திட்டத்தை வகுக்கும் அதிகாரம் வாரியத்திடம் கொடுக்கப்பட்டது. அதேபோல நிருவாகத் திட்டம் சரியாகச் செயல்படாத திருக்கோயில்களுக்கு நிருவாக அதிகாரிகளைப் போடவும் வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது

இச்சட்டத்திலும் குறைபாடுகள் இருந்ததால் அவற்றை கீழ்க் 1951 இல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் XIX இயற்றப்பட்டது. இதன்படி கீழிருந்து மேலாக அதிகார மட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்படவும் தலைமை அதிகாரியாக ஆணையர் ஒருவர் நியமனம் செய்யப்படவும் வழிவகை செய்யப்பட்டது. அதிகாரிகளின் நிருவாக எல்லைகளும் வரையறுக்கப்பட்டன. இறுதியாக 1959 இல் முந்தைய சட்டங்களின் பெரும்பான்மையான குறைபாடுகள் களையப்பட்டு தற்போதுள்ள சட்டமான தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 (தமிழ்நாடு சட்டம் XXII 1959) இயற்றப்பட்டது. இதன்படி இந்து சமயத் திருக்கோயில்களை நிருவாகிப்பதற்கான தனியான அரசுத் துறை ஒன்று உருவாக்கப்பட்டது.

சர்.சி.பி. ராமசாமி அய்யரின் தலைமையில் இந்து மத அற நிலையங்கள் சம்பந்தமாக விசாரணை நடத்த ஆணையம் ஒன்று 1960ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. அது இரண்டாண்டுகள் நாடு முழுவதும் சுற்றி விரிவான அறிக்கையை அரசிடம் தந்தது.

தமிழ்நாட்டின் புகழ் மிக்க வளம் மிக்க நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு 60 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம் சொந்தமாக இருந்தது என்று தஸ்தாவேஜுகள் காட்டுகின்றன. ஆனால் இந்தக் கோயிலின் விவகாரங்களை சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையிலான ஆணையம் பரிசீலித்துப் பார்த்த போது 40 ஆயிரம் ஏக்கர் நிலம் காணாமல் போய் விட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கணபதி பிள்ளை தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை 1968இல் தாக்கல் செய்யப்பட்டது. அது கூறுகிறது: “கோயில் நிலங்களில் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் பினாமிப் பட்டாக்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் பிறர் அனுபோகத்தில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்து சமயக் கோயில்களை நிருவாகிப்பதற்கான அரசுத்துறை உருவாக்கம் என்பது இந்துத் திருக்கோயில்களின் முறையான நிருவாகத்திற்காகவும் சொத்துப் பராமரிப்புக்காகவுமேயாகும். எந்தக் கட்டுப்பாடுகளும் பொறுப்பு நிர்ணயமும் இல்லாதிருந்த திருக்கோயில்களின் நிருவாகங்கள் மீது இச்சட்டம் கட்டுப்பாட்டையும் பொறுப்பு நிர்ணயத்தையும் கொண்டு வந்தது. இதன் மூலம் இந்து மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான முறையான திருக்கோயில் நிருவாகம் என்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க வர்க்கத்தினர், அறநிலையத்துறை அலுவலர்களை மிகமோசமான வார்த்தைகளால் பழித்துப்பேசி கோயில்களைவிட்டு அறநிலையத் துறையை வெளியேறச் சொல்லி கூக்குரல் எழுப்பி வருகின்றனர்.

தற்போது அறநிலையத்துறை நிருவாகம் குறித்து பொய்யான தகவல்களை ஊடகங்கள்மூலம் பரப்பி வருகின்றனர்.

இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இன்று 38,618 இந்து சமயக் கோயில்கள், மடங்கள்மற்றும் அறக்கட்டளைகளும் 17 சமணசமயக் கோயில்களும் ஆக 38,635 சமய நிறுவனங்கள் உள்ளன. இந்த சமயநிறுவனங்கள் ஆண்டு வருவாய் அடிப்படையில் பட்டியலைச் சாராதவை என்றும், பட்டியலைச் சார்ந்தவை என்றும் சட்டத்தால் வகைப்படுத்தப்படுகின்றன. பட்டியலைச் சாராத கோயில்கள் உதவி ஆணையர் நிலை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. பட்டியலைச் சார்ந்த கோயில்கள்இணை ஆணையர் நிலை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

38,635 கோயில்கள்மற்றும் அறநிறுவனங்களை நிருவாகிக்க 650 செயல் அலுவலர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சிறீரங்கம் போன்ற கோயில்களில் பெண் அதிகாரிகள் அந்த முதல் மரியாதையைச் செய்யுமாறு பணித்து வெற்றி பெற்றுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆதிக்க ஜாதியினர் செல்வாக்கிலுள்ள வைதிகக் கோயில்களில் கூட நிருவாகிகளாக இன்று உள்ளனர். இந்தச் சமூகப் புரட்சியை முறியடிக்கவே கோயில் நிருவாகங்கள் சீர் கெட்டு விட்டதாகத் திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

அறநிலையத் துறையை விமர்சிப்பதற்காகவே உயர் ஜாதியினரால் (பார்ப்பனரால்) அறம் இல்லாத துறை என்னும் முகநூல் பக்கம் ஒன்று இயங்கி வருகிறது. அதில் வருணாசிரம தர்மத்தைக் கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நிருவாகிகளாக உள்ள ஆண், பெண் அலுவலர்களைக் குறிக்க வேசி மகன்கள், வேசி மகள்கள் என்று இழிவாகப் பதிவுகள் இடுகின்றனர்.

அறநிலையத்துறை மீது வீசப்படும் இன்னொரு அவதூறு _ அறநிலையத்துறை புராதனக் கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளுகிறது என்பதாகும். புராதனக் கோயில்களுக்குப் பணி செய்வது தொடர்பாக தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை அறநிலையத்துறை தன் கோயில் அலுவலர்களுக்குத் தெரிவித்து கடைப்பிடிக்கச் செய்கிறது. அத்தகு பணிகளைக் கண்காணிப்பதிலும் கவனமாக உள்ளது. இந்து மத வெறியர்கள் கூறும் குற்றச்சாட்டு தப்பானது எக்காலத்திலும் தாம் ஆட்சி அதிகாரத்திற்கு தமிழ்நாட்டில் வரமுடியாது என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள பி.ஜேபி., ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனக் கும்பல், கோயில்களைப் கைப்பற்றி அவற்றைத் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்து, வெறுப்பு அரசியலின் பிரச்சாரக் கேந்திரமாக மாற்றுவதற்கான சதித் திட்டமும், கோயில்களின் நிதியை காவி அரசியலின் வளர்ச்சி நிதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சதித் திட்டமும் இந்தக் கூச்சலின் பின்னணியில் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்து அறநிலையத்துறையின் வேலை

1. மிகமிகக் கூட்டமான கோயில்களில் பூசாரிகள் கன்னா பின்னா வென்று பக்தர்களிடம் பணம் வசூல் செய்து, பின்பக்கமாக உள்ளே அழைத்துச் செல்வதைத் தடுப்பது,

2. முறையாக டிக்கெட் மூலம், சிறப்பு தரிசனம் போன்ற ஏற்பாடுகள் செய்வது,

3. கோயில் உண்டியல் முதல், இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், கோயிலைச் சுற்றி உள்ள கடைகளின் முறையான வாடகை வசூல், பின் இந்தப் பணம் கோயில் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் முறையாகச் செலுத்தப்படுகிறதா என்று கண்காணிப்பது,

4. கோயில் செலவுகள் உண்மையில் சரியாகச் செய்யப்படுகின்றனவா, அல்லது கணக்குப் புத்தகங்களில் மட்டுமே எழுதப்படு-கின்றனவா என்று கண்காணிப்பது,

5. கோயிலுக்கு நிலங்கள் சொத்துகள் இருந்தால் அவற்றின் மூலம் கிடைக்கும் குத்தகைத்தொகை, வாடகைப் பணங்கள் சரியாக வசூல் செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டதா என்று கண்காணிப்பது, இவை போன்றவைதாம் இத்துறையின் வேலை.

இந்து அறநிலையத்துறையின் வேலை, கோயில் வசூல் பணத்தைக் கொண்டு வந்து அரசாங்க கஜானாவில் சேர்ப்பது அல்ல.
தமிழ்நாட்டில் பலர் இன்னமும் கோயிலில் வசூலாகும் கோடிக்கணக்கான பணம் தமிழ்நாடு அரசுக்கு வந்து விடுகிறது என்று தவறாகத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மாறாக, அரசு கஜானாவில் இருந்து மக்கள் வரிப்பணத்தில்தான் அறநிலையத்துறை இயங்குகிறது, இத்துறை சார்ந்த அனைத்து ஊழியருக்கும் சம்பளம் அரசு வரிப்பணத்திலிருந்துதான் கொடுக்கப்படுகிறது.

கோயில் பணத்திலிருந்து பூசாரிகளுக்குத்தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்து அறநிலையத் துறை சார்ந்த எந்த ஒரு கடைநிலை ஊழியருக்குக்கூட கோயில் பணத்தில் சம்பளம் கொடுப்பது இல்லை.

இந்து அறநிலையத்துறையால் தங்கள் வசதிக்குத் திருட முடியாது கஷ்டப்படும் ஒரே கூட்டம் பார்ப்பனர் மட்டுமே!
இந்தத் துறையைக் கொண்டு வர பெரிதும் போராடியது பெரியாரும் திராவிட இயக்கமும்தான்.

அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கூட்டமும், பி.ஜே.பி. கட்சியினரும் தி.மு.க. கழகத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். காரணம், கோயில்களை வைத்து கொள்ளையடிப்
பவர்கள் அவர்கள்தான். இதை சி.பி.அய்.(எம்) கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. க.கனகராஜ் அவர்கள் கீழ்கண்டவாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளனவா?

‘‘மோடி அப்படித்தான் பேசியிருக்கிறார். ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசுக் கட்டுப் பாட்டில்தான் கோவில்கள் உள்ளன. கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, பீகார், ஒடிசா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கோவில்களை நிர் வகிப்பதற்காக தனியாக சட்டம் இயற்றப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்த மாநிலங்களில் எல்லாம் கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இதில் புதுச்சேரியில் தற்போது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருநாடகத்தில் கடந்த அய்ந்து ஆண்டுகளும் அதற்கு முன்பு சில முறையும் பாஜக தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது. ஆனால், அப்போதெல்லாம் இந்தச் சட்டங்களைத் திருத்தி கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து விடவில்லை. மகாராட்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் கோவில்களின் நிருவாகத்தைக் கண்காணித்திட பப்ளிக் டிரஸ்ட் ஆக்ட் (பொது அறக்கட்டளைச் சட்டம்) ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இதில் மகாராட்டிராவிலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் தற்போதும் பாஜக தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ராஜஸ்தானில் பல ஆண்டுகள் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அந்த மாநிலங்களில் கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று ஒருபோதும் சங் பரிவார் குரல் எழுப்பியதே கிடையாது. குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தில் அறங்காவலர் குழுத் தலைவராக நரேந்திர மோடி, அறங்காவலர்களாக எல்.கே.அத்வானி, அமித்ஷா ஆகியோர் இப்போதும் இருந்து வருகிறார்கள். அங்கெல்லாம் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது என்று அவர்கள் ஒருபோதும் பேசவில்லை.

கோவில் சொத்தை ஆக்கிரமிப்பவர்கள் யார் ?

கடவுள்களின் சொத்துக்களையும் திருடுகிற வேலையை பாஜகவின் நிருவாகிகள் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வதே
தாங்கள் ஆக்கிரமித்ததை அரசு வெளியேற்றி விட்டதே என்கிற ஆத்திரத்தில் இருந்து தான். சமீப காலமாக தி.மு.க. அரசாங்கம் வந்த பிறகு பல்வேறு நபர்களிடமிருந்து அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலங்கள் மற்றும் கட்டடங்களை நீதிமன்ற துணையோடும், நேரடியாகவும் மீட்டெடுத்திருக்கிறது. (பட்டியலில் உள்ளது) பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து மகா சபா, சேவா பாரதி உள்ளிட்ட சங்பரிவார் ஆக்கிரமித்து வைத்திருந்து மீட்கப்பட்ட நிலங்கள் இவை.

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான ஒரு இடத்தை “ஹைந்தவ சேவா சங்கம்” என்கிற அமைப்பு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இப்படி தேடினால் பட்டியல் நீளும். 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்காக ஒரு இடம் அந்த டிரஸ்ட்டால் ரூ.18.5 கோடிக்கு வாங்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த நிலம் அதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் ரூ.18.5 கோடிக்கு விற்ற நபரால் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தது. இது எவ்வளவு பெரிய மோசடி!’’ இப்படி ஆரிய பார்ப்பனர்களும்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலும் அடிக்கும் கொள்ளைக்கு அறநிலையத்துறை தடையாக இருப்பதால்தான் அதை அகற்றக் கோருகிறார்கள். ஆனால், உண்மையான இந்து பக்தர்கள் அறநிலையத்துறையை வரவேற்கிறார்கள். அதனால், மோடிகளின் மோசடிப் பிரச்சாரம் எடுபடாது. இந்துக்கள் இனி ஏமாற மாட்டார்கள்! ♦