முகப்புக் கட்டுரை – பா.ஜ.க.வின் ஸனாதன முகமூடி நாடாளுமன்றத் தேர்தலுக்காகவே!

2023 செப்டம்பர் 16-30, 2023 வலையில் மட்டும்

மஞ்சை வசந்தன்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், INDIA கூட்டணி வலுப்பெற்று, பி.ஜே.பி.யை படுதோல்வியடையச் செய்யும் என்பது உறுதியான நிலையில், எதைப் பிடித்து வாக்கு வாங்கலாம் என்று தவித்த பி.ஜே.பி. கட்சியினர், தமிழ்நாடு அமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்கள் ஸனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று பேசியதைத் திரித்து, இந்துக்களுக்கு எதிரான இனப்படுகொலை என்று மாற்றிப் பேசுகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவே அதைப் பேசும் அவலம், அநியாயம் அரங்கேறியுள்ளது.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு முகமூடியை அணியும் பி.ஜே.பி. இந்தத் தேர்தலுக்கு ஸனாதன முகமூடியை மாட்டிக்கொண்டு வருகிறது. ஆனால், இதுவே அவர்களைப் புதை குழியுள் புதையச் செய்யும் என்பதை அவர்கள் விரைவில் புரிந்துகொள்வர்.

ஸனாதன எதிர்ப்பு என்பது, 95% இந்து மக்களைக் காப்பாற்றும் முயற்சியென்பதை மக்களுக்கு உணர்த்தவேண்டிய கட்டாயம் இப்போது எழுந்துள்ளது. அவ்வாறு உணர்த்துவதன்மூலம் அமித்ஷாக்களின் திரிபு வேலையை முறியடிக்க வேண்டும்.

ஸனாதனத்தை ஏன் ஒழிக்க வேண்டும்?

சூத்திரன் என்றால் விபசாரியின் மகன் என்று ஸனாதனத்தின் மூல நூலான மனுதர்ம சாஸ்திரம் 8ஆம் அத்தியாயம் 415ஆம் சுலோகம் கூறுகிறது.
பெண்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர்கள் என்று கூறுவதும் அவர்களின் சனாதன மனுதர்ம சாத்திரம் தானே! (மனுதர்மம் அத்தியாயம் 9 – சுலோகம் 19).
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் மனுதர்ம சாஸ்திர நூலை ஏன் எரித்தனர் என்பதை அண்ணாமலைகள் இப்பொழுதாவது புரிந்து கொள்வார்களா?

மனுதர்மம் மட்டுமா? கிருஷ்ணன் பகவத்கீதையில், “பெண்கள், பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்” (Born Our of Womb of sin) (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32) என்று கூறுகிறாரே, இதை ஏற்றுக் கொண்டு கண்ணில் ஒத்திக் கொள்ளப் போகிறார்களா?

இந்தச் சுலோகத்தை வீட்டிற்குச் சென்று பெண்களிடம் சொல்லமுடியுமா?

தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய காஞ்சி சங்கராச்சாரியாரின் கூற்றை உங்கள் சனாதனிகள் ஏற்றுக் கொள்கிறார்களா?
(ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள்” – 2ஆம் பாகம்)ஸனாதனம் போற்றும் காஞ்சி சங்கராச்சாரியாரின் இந்தக் கூற்றை முன்னிறுத்திப் பாராட்டி, பிஜேபி தேர்தல் பிரச்சாரம் செய்ய முன் வருமா?

மேனாள் குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள்ளும் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிரம்மா கோயிலுக்குள்ளும் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாரே (15.5.2018)  பிஜேபி ஆட்சியில்.

நாட்டின் முதல் குடிமகன், முப்படைகளின் தலைவர் அரசமைப்புச் சட்டத்தின் தகைமைசால் தலைவரே தீண்டப்படாதவர் ஆகி விட்டாரே உங்கள் ஸனாதனத்தில்! தடுத்தவர்கள் தண்டிக்கப்பட்டனரா? பிஜேபி மோடி ஆட்சியில்?

மிக்க படித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ். பிஜேபி போற்றும் அந்த ஸனாதனம் செய்த கொடுமை நியாயமாகப்படுகிறதா?
தற்போதைய குடியரசுத் தலைவர் டில்லி ஜகந்நாதர் கோயிலுக்குச் சென்றபோது (26.6.2023) கட்டை போட்டு தடுக்கப்பட்டாரே!
பா.ஜ.க. வாய் திறந்ததா? திறக்க மாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் போற்றும் ஸனாதனம் இந்துத்துவாவின் வர்ண ஏணிப் படிக்கட்டு முறையைத் தானே அடிப்படையாகக் கொண்டது? (Graded inequality – B.R. Ambedkar) இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி அம்பேத்கரும், மவுண்ட் பேட்டனும் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்றபோது, அம்பேத்கர் தடுக்கப்பட்டார் – கிறிஸ்தவரான மவுண்ட்பேட்டன் அனுமதிக்கப்பட்டாரே  இதுதான் ஹிந்துக்களை மதிக்கும் அடையாளமா? இது இந்துக்களின் எதிர்கொள்கை சனாதனம் என்பதன் அடையாளமல்லவா?

காஞ்சி சங்கர மடத்துக்கு சுப்பிரமணியசாமி சென்றால் சங்கராச்சாரியார் பக்கத்தில் சமமான ஆசனத்தில் அமர முடிகிறது. ஆனால்,  ஏ.பி.ஜே. அப்துல்கலாமும், ஒன்றிய பிஜேபி அமைச்சர் மாண்பமை பொன் இராதாகிருஷ்ணனும் சென்றால் சங்கராச்சாரியார் முன் தரையில்தானே அமர வேண்டியிருக்கிறது?

பன்னா மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம். முன்பு குவாலியர், மேவாட், இந்தூர், சித்தோட் போன்ற சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்தது
இந்த சமஸ்தான பட்டத்து மகாராணி ரித்தேஷ்வரி ராஜே. இவர் தற்போதைய ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவரும், மேனாள் முதலமைச்சருமான வசுந்தரா ராஜேவின் நெருங்கிய உறவினரும் கூடபன்னா மத்தியப் பிரதேசத்தின் ‘‘கோவில் களின் நகரம்” என்று அழைக்கப்படுகிறது, பன்னா சமஸ்தான மன்னர்கள் பலநூறு கோடிகள் ஒவ்வொரு கோவில்களுக்கும் வைப்பு நிதியாகத் தந்துள்ளனர். அதில் வரும் வட்டியில் தான் கோவில் நிர்வாகம் நடக்கிறது,

நடந்து முடிந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று தற்போதைய பட்டத்து மகாராணியும், ஜோதி ராதித்ய சிந்தியாவின் அத்தையுமான ரித் தேஷ்வரி ராஜே தாங்கள் கட்டிய பத்மாவதி கோவில் பிரகாரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலின் விழாவில் கலந்துகொண்டு ஆரத்தி எடுக்க முயல, கைம்பெண்ணான அவரை ஆரத்தித் தட்டை தொடவிடாமலும், கோவிலுக்குள் நுழையவிடாமலும் அடித்து வெளியே தள்ளியுள்ளனர்.

இந்நிகழ்வின் போது பட்டத்து இளவரசரான பைரவ்சிங் ராஜேவும் அங்கே நின்றுகொண்டு இருந்தார். ஆனாலும், அவரால் தனது தாயாரை எழுப்பி விட முடிந்ததே தவிர, தள்ளி விட்ட பார்ப்பனர்களை ஒன்றும் கேள்வி கேட்க முடியவில்லை.

இக்கோவிலில் மகாராணிகள் ஆரத்தி எடுப்பது வழக்கம், ஆகையால்தான் கடந்த ஆண்டைப்போல் பன்னா மகாராணி ஆரத்தி எடுக்க முயன்றார். அவர்களது முன்னோர்கள் கட்டிய கோவில், அவர்களது நிதியில் இன்றும் இயங்குகிறது, ஆனால், கணவனை இழந்தவர் என்பதால் அடித்து விரட்டுகிறார்கள்.

மகாராணி மீதே வழக்காம்!

இந்த நிலையில் கோவில் நிருவாகம்- பன்னா மகாராணி மீது ‘‘ஹிந்துக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், கோவில் ஊழியர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்த முயன்றதாகவும் பார்ப்பனர்கள் கொடுத்துள்ள புகாரின்படி பாதிக்கப்பட்ட மகாராணி மீதே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனரே!

இன்றும் ஸனாதனம் இவ்வளவு கொடூர முகம் காட்டுகிறது. ஆனால், ஆரிய கட்டுக்கதைகளை அப்படியே நம்பிக்கொண்டு ஸனாதன அடிமைகளாக இந்து மக்கள் இருப்பதோடு, சனாதனத்தை ஆதரிப்பது கொடுமையல்லவா?

ஸனாதனத்தின் அடிப்படையான வர்ணாஸ்ர மத்திற்கு மோசடியான அர்த்தமும் கூறி ஏமாற்றுகின்றனர்.

“குணத்தை வைத்தே மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று கொள்ள வேண்டும்” என்றே ‘சதுர் வர்ணம் மயாசிருஷ்டத்திற்கு’ப் பொருள் கொள்ள வேண்டும் என்கின்றனர். இதன்படி உயர்ந்த குணம் உள்ள “சூத்திரனை” பிராமணன் என்று அங்கீகரிக்க சாஸ்திரமோ, சட்டமோ அனுமதிக்கிறதா? ஒப்புக் கொள்கிறதா? பிராம்மண வர்ணத்தில் பிறந்து தவறு செய்பவன் “சூத்திர – பிராமணன்” ஆவானா? ஆனதாக நடைமுறை உண்டா? நல்ல உயர்ந்த குணம் படைத்து வாழும் சூத்திரன் பிராமணன் ஆகியிருக்கிறானா? -அப்படி இதுவரை இல்லையே ஏன்? ஏன்?

பகவத்கீதை பதினொன்றாவது அத்தியாயத்தில், சுலோகம் 84 :
“பிராமணன் பிறப்பினாலாயே

தேவர்களுக்கும் பூஜிக்கத் தக்கவனாய் இருக்கிறான்.”
பத்தாவது அத்தியாயம் 73ஆவது சுலோகத்தில்,

“பிராமணன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமண ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவனுக்கு பிராமண ஜாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா?
சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவன் எந்தத் தொழிலைச் செய்தாலும் அவன் உயர்ஜாதி அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார்.”

இதற்கும், குணத்தை அடிப்படையாகக் கொண்டதே வர்ணம் என்று கீதை கூறுவதாய் சொல்வதற்கும் எவ்வளவு முரண்பாடு?

உதயநிதி கூறியது சரிதானே!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸனாதன ஒழிப்பு மாநாட்டில் என்ன பேசினார்-? ‘‘ஸனாதனம் என்று சொல்லும்பொழுது, எங்களை இழிவுபடுத்துகிறது, உரிமைகளை மறுக்கிறது, பெண்களுக்கு எதிராய், மனிதநேயத்திற்கு விரோதமாக இருக்கிறது. எனவே, அந்தக் கோட்-பாட்டை நாங்கள் எதிர்க்கிறோம்” என்றுதானே சொன்னார்.

‘‘இந்து மதம் எங்கே போகிறது?” என்கிற புத்தகத்தில் சனாதனக் கருத்தை தாதாச்சாரி விளக்கியுள்ளாரே!

‘‘அஷ்ட வருஷா பலே கன்யா’’

எட்டு வயதிற்குள் பெண்ணுக்குக் கல்யாணம் நடத்த வேண்டும் என்ற இந்த ஸ்மிருதி விதி.

இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நம் தேசத்தில் ரொம்ப சிரத்தையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது இந்த ஸனாதன விதி.
இன்றைக்கு சிதம்பரம் கோவிலுக்குள் தீட்சதர்கள் என்ன செய்கிறார்கள்? குழந்தைத் திருமணம்தானே!
அதற்காக வழக்குகள் போட்டு, வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா? இல்லையா?

இன்னுங்கேட்டால், குழந்தைகள் திருமணத்தில் அவர்களுக்காக வாதாட வந்திருக்கின்ற தமிழ்நாடு ஆளுநர் –
ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரதிநிதி – மக்கள் வரிப் பணத்தைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கக் கூடிய அரசு ஊழியர். அவர் சொல்கிறார், சட்டத்தை தாம் மீறியதை மிகப் பெருமையாகச் சொல்கிறார். அவரைப் பதவி நீக்கம் செய்ததா ஒன்றிய பா.ஜ.க. அரசு?

இந்தக் காலத்தில்,‘‘அஷ்ட வருஷா பலே கன்யா”

எட்டு வயதிற்குள் பெண்ணுக்குக் கல்யாணம் நடத்தவேண்டும் என்ற இந்த ஸ்மிருதி விதி. இன்றைக்கு சட்டப்படி அது தவறு இல்லையா?
ஸனாதனத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி, அங்கே கூப்பாடு போட முடியுமா?

அனைத்து ஜாதி பெண்களும் ‘நமோ’ சூத்திரர் என்றுதானே சனாதனம் கூறுகிறது.
அனைத்து ஜாதிப் பெண்களும் அது அக்கிரகாரப் பெண்மணிகளாக இருந்தாலும், அவர்களும் நமோ சூத்திரர்கள்தான்.
எல்லா ஜாதிப் பெண்களையும் மதிக்க வேண்டும்; அவர்கள் எந்த ஜாதிப் பெண்கள் என்கிற பேதமெல்லாம் நமக்குக் கிடையாது. எல்லா பெண்களுக்கும் எல்லா உரிமையும் உண்டு என்கிறது திராவிடம். திராவிடம் அரசியல் சட்டத்தை மதிக்கிறது. மனித நேயத்தை மனித மாண்பை மதிக்கிறது. எனவே, ஸனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்கிறது!

கணவன் இறந்தபின் பெண்களை சனாதனம் எப்படி நடத்தியது! சிந்திக்க வேண்டாமா ?

வடநாட்டில் கணவன் இறந்துவிட்டால், கணவனின் உடல் எரியூட்டும்பொழுதே, அந்தப் பெண் உடன்கட்டை ஏறவேண்டும்.
ஆனால், நல்ல வாய்ப்பாக தமிழ்நாட்டில் பெரியார் பிறந்ததினால், சதி என்றால் என்னவென்று தெரியாது. சதி மாதா கோவில்கள் கிடையாது.
ஆனால், இராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் இன்னமும் சதி மாதாக்கள் இருக்கிறார்கள்; கணவன் மறைந்தால், அந்தப் பெண்ணைத் தூக்கி நெருப்பில் போடுகிறார்கள். ஸனாதனப் பெயரால்தானே இது நடக்கிறது. இக்கொடுஞ் செயலை புனிதமான செயல் என்று ஆதரிக்கிறாரே!

1800ஆம் ஆண்டில் வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு, நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் தானே பெண்களை ஸனாதன கொடுமையிலிருந்து காப்பாற்றியது!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மீது நடவடிக்கை கோரி, 200 பிரபலங்களும், ஓய்வுபெற்ற நீதிபதிகளும் சேர்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களாம்.

200 பேரல்ல; 2000 பேர் வேண்டுமானாலும் சேர்ந்து கடிதம் எழுதுங்கள்; 2 லட்சம் பேர் வேண்டுமானாலும் சேர்ந்து கடிதம் எழுதுங்கள். நாங்கள் ஆதாரங்களோடு அதை முறியடிப்போம்! இந்து மக்களுக்கு உண்மையைக் கூறி விழிப்பூட்டுவோம்.

சூத்திரன் சம்பூகன் தவம் செய்தான் என்று கூறி, வாளால் அவன் தலையை வெட்டி வீழ்த்திய ராமன் பெயரால் ராஜ்ஜியம் அமைப்போம் என்பதும், அயோத்தியில் 450 ஆண்டு கால சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்கி விட்டு, அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவது என்பதும் தானே ஸனாதனம்? அதனை அழிப்போம் என்பது மானமும், அறிவும், மாண்பும் மனிதநேயமும் கொண்டவர்களின் செயலாகத்தானே இருக்க முடியும்?
உத்தரப்பிரதேசம் லக்னோவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் சேர்வதற்கு வந்தார். அவரது பெயரைப் பதிவு செய்யும்போதே வயிற்றுவலி காரணமாக அங்கே இருந்த படுக்கையில் படுத்து விட்டார். இதைக் கண்ட மருத்துவரும் அந்தப் படுக்கையில் ஏற்கெனவே இருந்த ஒரு உயர்ஜாதிப் பெண்மணியின் குடும்பத்தாரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கீழே தள்ளி விட்டனர். தள்ளிவிட்ட நிலையிலேயே குழந்தை வெளியே வந்து விட்டது.

யாருமே உதவிக்கும் வரவில்லை என்பது எத்தகைய கொடூரம்!

மருத்துவமனை ஏற்காத நிலையில், மருத்துவமனை வாசலிலேயே பிரசவித்தார் அந்தப் பெண்! தலைநகர் லக்னோவிலேயே இந்தக் கொடூரம் என்றால் மாநிலத்தின் இதர பகுதிகளில் எவ்வளவு கொடுமை தலை விரித்தாடும் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறதே!


பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் இந்துதானே! ஆக, ஸனாதனம் இந்துக்களுக்கு எதிரானது என்பது இதிலிருந்து விளங்கவில்லையா?
குறைந்த பட்ச மனிதாபிமானம்கூட இல்லாமல் ஜாதி பார்த்து சிகிச்சை அளிக்க மறுத்ததுதான் இந்த ஸனாதனம்! – இதை உதயநிதி ஸ்டாலின் ஒழிக்க வேண்டும் என்று கூறினால் அது எப்படி இந்துக்களுக்கு எதிரானதாக ஆகும்?

தமிழர் தலைவர் ஆசிரியர் கேட்கும் கேள்வி!

பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று வட இந்தியாவில் ஓர் அவதூறுப் புயலைக் கிளப்பிவிடவில்லையா? அந்த நபர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாரே!

அதுபோலவேதான் அமைச்சர் உதயநிதி பேச்சைத் திரித்துப் பேசுகிறார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் வந்த பிறகும்கூட, எப்படியெல்லாம் மீண்டும் மீண்டும் அதை ஏற்காமல், ‘பொய் நெல்லைக் குத்தி பொங்கலிட்டுச் சாப்பிட்டு மகிழக்கூடியவர்கள் அல்லவா அவர்கள்?
இந்தக் கோயபெல்சின் குருநாதர்களை தமிழ் நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் புரிதலை வடமாநிலங்களிலும் நாம் உருவாக்க வேண்டும்!

சனாதன வன்முறைக் கூட்டம், மானமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொல்லாததை சொன்னதாகச் சொல்லி, மதவாத நெருப்பை மூட்டி, வட மாநிலங்களில் தேர்தல் ஆதாயம் அடைய முயலுகிறார்கள்.

பேதத்தை ஒழிப்பது குற்றமா

ஜாதி ஒழிப்பு என்றால் ஜாதிக்காரர்களைக் கொல்லுவது என்று பொருளாகுமா?

மூடநம்பிக்கை ஒழிப்பு என்றால், மூடநம்பிக்கையாளர்களைச் சாகடிப்பது என்று பொருளாகுமா?

ஏழ்மை ஒழிப்பு என்றால், செல்வந்தர்களைத் தீர்த்துக் கட்டுவது என்று பொருளாகுமா?

அதேபோல், ஸநாதன அழிப்பு என்றால், பிறப்பில் பேதம் பேசும் வருணாசிரம தர்மத்தை ஒழிப்பது என்று பொருள்; சமதர்மத்தை _ சமத்துவத்தை வளர்ப்பது என்று பொருள். ஆளைக் கொல்லுவதல்ல. பேதத்தை ஒழிக்கும் நோக்கத்தின் அடிப்படையில்தான் மானமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசினார்.
தேர்தலில் மக்களைச் சந்திக்கக் கைவசம் வேறு சரக்கு இல்லாதவர்கள், திரிபுவாத _ மதவாத ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்கள். அந்தோ, பரிதாபம்!

மக்கள் இவர்களை அடையாளம் காண்பார்களாக!

சென்னையில் 2.9.2023 அன்று ஓர் அரங்கத்திற்குள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய சிறப்புரையை அகில இந்தியாவிலும், அதற்கப்பாலும் பரப்பி, அவர் சரியான ஆதாரப்பூர்வ விளக்கம் தந்த பிறகும், நீங்கள் ஸனாதன முகங்காட்டி ஆடுவது தொடரட்டும்; திராவிட வயலுக்கு அதைவிட நல்ல உரம் வேறு இல்லை” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறியுள்ளதை அனைவரும் கருத்-தில் கொள்ளவேண்டும். மனிதர்களுக்கு எதிரான ஸனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று கூறியதை, இந்துக்களை ஒழிக்கவேண்டும் என்று கூறியதாகத் திரித்து வன்முறையைத் தூண்டி வாக்குகளைப் பெற பி.ஜே.பி. முயல்கிறது. இந்த முயற்சி அறவே முறியடிக்கப்பட வேண்டும்.

ஸனாதனம் இந்து மதத்துக்குள் பின்னாளில் நுழைக்கப்பட்டது!

ஆதிசங்கரர் காலத்தில் ஷண் மதங்கள் எனப்படும் (1) சைவம், (2) வைணவம், (3) கௌமாரம், (4) காணபத்திய, (5) சாத்தம், (6) சௌரவம் என்ற ஆறு மதங்களே இருந்தன. இதில் காணபத்திய என்பது கணபதி வழிபாடு, சாத்தம் என்பது சக்தி வழிபாடு, சௌரவம் என்பது சூரிய வழிபாடு, கௌமாரம் என்பது முருக வழிபாடு.
இதில் ஸனாதனம் என்பதே இல்லை. மேற்கண்ட ஆறு மதங்களையும் ஆதிசங்கரர் ஒருங்கிணைக்க முயற்சித்தார். ஆனால் இயலவில்லை. அதன்பின் 1796இல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர்தான் இந்த ஆறையும் ஒன்றாக்கி இந்து மதம் என்று பெயரிட்டார். அப்போது புத்தம் சமணம் எல்லாம் இந்து மதத்திற்குள் அடக்கப்பட்டதுபோல் ஸனாதனமும் இந்து மதத்திற்குள் நுழைக்கப்பட்டது.

இப்படி நுழைக்கப்பட்ட ஸனாதனம் இன்றைக்கு இந்து மதத்தையே விழுங்கி, ஸனாதன மதமாக இந்து மதத்தைக் காட்ட முயற்சிக்கிறது. இதை அறியாது, இந்துக்கள் ஆரிய ஸனாதன சதியில் வீழ்ந்து ஸனாதனத்திற்கு ஆதரவாய் குரல் தருவது அறியாமை! அது இந்துக்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பார்ப்பனரல்லாதாரான 96% பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கே கேடானது.

ஊழலை மறைக்கவே ஸனாதனம்!

பி.ஜே.பி. ஆட்சியின்மீது ஏராளமான ஊழல் புகார்கள் ஒவ்வொரு நாளும் வந்த வண்ணம் உள்ளது. அண்மையில் வெளிவந்த சி.ஏஜி. அறிக்கையின் தகவல்படி, 7.50 லட்சம் கோடி ஊழல் மக்கள் மத்தியில் பி.ஜே.பி. மீது பெரும் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. அதைத் திசை திருப்பவே சனாதனத்திற்கு ஆதரவான, உதயநிதிக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். மிழிஞிமிகி கூட்டணியை சிதைக்கப் பார்க்கின்றனர். இந்த மோசடியை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்தியா முழுக்க முழங்குவோம்!

ஸனாதன ஒழிப்பு என்பது இந்துக்களைக் காக்கும் முயற்சிதான் என்பதை இந்துக்கள் புரிந்துகொள்ளும்படி இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்யப்படும். ஆரிய பார்ப்பனர்களின் பித்தலாட்டம் வெட்டவெளிச்சத்திற்கு வரும். அதன்மூலம் பி.ஜே.பி. தேர்தலில் வீழ்த்தப்படும்.! இது உறுதி! கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு! பி.ஜே.பி.யின் பித்தலாட்டம் அப்படித்தான் பிசுபிசுத்துப் போகும்! ♦