பெரியார் பேசுகிறார்!

2023 செப்டம்பர் 16-30, 2023 பெரியார் பேசுகிறார்
நான் மனிதனே!
– தந்தை பெரியார்
நான் சாதாரணமானவன்; என் மனத்தில்பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத் தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.
“நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; நான் சொல்லுவது வேத வாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்” என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளி விடுங்கள்.
ஒருவனுடைய எந்தக் கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு; ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.
(‘குடிஅரசு’, 13.04.1930)
­ ­ ­
நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல.
(‘விடுதலை’, 15.7.1968)
­ ­ ­
எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ,
சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பது
தான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
(‘விடுதலை’, 8.9.1939)
­ ­ ­
அரசர்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும்,
மக்களுடைய சுயமரியாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும், சொல்லியும், எழுதியும் வந்திருக்கின்றவன் நான்.  அரசர்கள் மாத்திர
மல்லாமல் பணக்காரர்கள், குறுநில மன்னர்கள், வியாபாரிகள், முதலாளிகள்  என்கின்றதான கூட்டங்கள்கூட, மக்களை அரித்துத் தின்னும் புழுக்களானதால், அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும்கூடச் சொல்லுகின்றவன் நான்.
(‘குடிஅரசு’ 6.10.1935)
­ ­ ­
நான் மறைந்துநின்று சிலரைத் தூண்டிவிட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒருசமயம் எனக்கு அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்தச் சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்தச் சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயேதான், நான் என் வாழ்நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீர வேண்டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தித் தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க வேண்டியவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.
(‘குடிஅரசு’ 24.11.1940)
­ ­ ­
எனது சமுதாய மக்களுக்கு நன்மை செய்கிற கட்சி எதுவாக இருந்தாலும் அதனை ஆதரித்தும், என் சமுதாய மக்களுக்குக் கேடாகக் காரியம் செய்யும் கட்சிகளை எதிர்த்துமே வந்திருக்கின்றேன். ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக எந்தக் கட்சியையும் நான் ஆதரித்தது கிடையாது.
(‘விடுதலை’, 4.3.1968)
­ ­ ­
நான் நிரந்தரமாக ஒருத்தனை ஆதரித்து வயிறு வளர்க்க வேண்டுமென்கின்ற அவசியமில்லாதவன். எவன் நமக்கு நன்மை செய்கின்றானோ, நமது சமுதாய இழிவு  நீங்கப் பாடுபடுகின்றானோ அவன் அயல்நாட்டுக்காரனாக இருந்தாலும் சரி, அவனை ஆதரிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை என்று கருதுபவன் நான்.
(‘விடுதலை’, 20.1.1969)
­ ­ ­
“தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் வேறு தனிக்கிணறு கட்டிக்கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோயில் கட்டிக்
கொடு’’ என்றார் காந்தியார். அப்போதுநான்,  “கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுப்படுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லா விட்டால், அவன் தண்ணீரில்லாமலேயே சாகட்டும். அவனுக்கு இழிவு நீங்க வேண்டு மென்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல” என்றேன்.
(‘விடுதலை’, 9.10.1957)
­ ­ ­
ஜாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல்ஜாதிக்காரன் மேல் துவேசம் என்றும், வகுப்பு
வாதம் என்றும் சொல்கிறான். நாங்கள் ஏன் வகுப்புவாதி? எந்த ஒரு அக்கிரகாரத்துக்காவது தீ வைத்து, எந்த ஒரு பார்ப்பனருக்காவது தீங்கு விளைத்திருக்கிறோமா? ஜாதி இருக்கக்கூடாது என்று கூறினால் வகுப்புத் துவேசமா?
(‘விடுதலை’, 25.10.1961)
­ ­ ­
இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள். மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்.
(‘விடுதலை’, 4.11.1961)
­ ­ ­
எனது சீர்திருத்தம் என்பதெல்லாம்  பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்று பட்டபடி நடவுங்கள் என்பதேயாகும்.
(‘குடிஅரசு’ 24.11.1940)
­ ­ ­
என் கருத்துக்கள் பாராட்டப்படுகிறதா?  அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிதாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், என் கருத்துக்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும் உண்மையை எடுத்துரைப்பதுதான் என் வாழ்க்கையின் இலட்சியம்.
(‘விடுதலை’, 28.9.1958)
­ ­ ­
நான் சொல்லுகிறவைகளை எல்லாம் நன்றாகக் கேட்டு, நல்லபடி சிந்தித்துப் பார்த்து உங்கள் அறிவிற்கு ஏற்றதாக இருந்தால் ஏற்றுக்கொண்டு அதன்படி நடவுங்கள் அல்லது தள்ளிவிடுங்கள். நான் கடவுளின் அவதாரம், கடவுள் என்னுள்ளே இருந்து சொல்கிறார் என்றோ, நான் தலைவன், நான் சொன்னபடிதான் நீங்கள் கேட்கவேண்டுமென்றோ உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை.
(‘விடுதலை’, 3.11.1967)
­ ­ ­