– முனைவர் வா.நேரு
உலக மகளிர் கால்பந்துப் போட்டி 2023, ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிந்திருக்கிறது. உலக கால்பந்து சம்மேளனம் (திமிதிகி) சார்பில் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் 2023-ஆம் ஆண்டின் உலகக்கோப்பைத் தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. அதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா நாடும், நியூசிலாந்து நாடும் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தினர். இந்தப் போட்டி உலகத்தின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டிற்கான உலக மகளிர் கால்பந்துப் போட்டியின் வெற்றிக் கோப்பையை ஸ்பெயின் நாடு பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து இரசிகர்களால் கொண்டாட்டத்துடன் பார்க்கப்பட்ட இந்த உலகக் கோப்பைப் போட்டியில் 32 நாட்டு அணிகள் பங்கு பெற்றன. உலகம் முழுவதும் உள்ள மகளிர் கால்பந்துப் போட்டி அணிகளின் தரப்பட்டியலில் முதல் 32 இடங்களைப் பெற்ற 32 நாட்டு அணிகள் இந்தப் போட்டியில் பங்கு பெற்று விளையாடினர்.
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியைக் கண்டு இரசித்தனர். அதில் எத்தனை பேருக்கு உலகத்தின் பல நாடுகளில் பெண்கள் கால்பந்து விளையாடத் தடை இருந்தது என்பதும், மகளிர் கால்பந்துப் போட்டிகளை நடத்தக்கூடாது என்ற தடை இருந்தது என்பதும் தெரியவில்லை.
“பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், மூன்று காரியங்கள் உடனே செய்யப்படவேண்டும்.முதலில், அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும். இரண்டாவது, நகைப் பேயை அவர்களிடமிருந்து விரட்ட-வேண்டும். மூன்றாவது, இப்போதுள்ள திருமணச் சிக்கல்களைத் துண்டு துண்டாக நறுக்கிவிடவேண்டும். இவ்வளவுக்கும் அடிப்படையாயிருப்பவை கல்வியும், சொத்துரிமையும்.இவ்விரண்டையும் பெற்ற பெண்கள் அவர்களுக்குப் பிரியமான உத்தியோகங்களை ஏற்பதற்குத் தடையில்லாமல் செய்யவேண்டும். இந்த உதவியைத்தான் இங்குள்ள ஆட்சியாளர்கள் செய்யவேண்டும். பெண்கள் எந்த வேலைக்காவது தகுதியற்றவர்கள் என்று கூறப்படுவதை உலக அனுபவமுடைய எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றார் தந்தை பெரியார்.. பெண்கள் கால்பந்து விளையாடத் தகுதி அற்றவர்கள் என்ற மனப்பான்மை உலகம் முழுவதும் இருந்த பல ஆண்களிடம் சென்ற நூற்றாண்டில் இருந்திருக்கிறது.
பிபா(Federation of International Football Association (FIFA) என்னும் அமைப்புதான் உலகக் கால்பந்து போட்டிகளை ஆடவர்க்கும், மகளிர்க்கும் நடத்துகிறது 1904-இல் தொடங்கப்பட்டது இந்த ஃபிஃபா அமைப்பு ஆகும். 1930 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த அமைப்பு ஆடவர்களுக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை உருகுவே நாட்டில் நடத்தி இருக்கிறது. தொடர்ச்சியாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடவர்க்கான உலகக் கால்பந்துப் போட்டியை இந்த அமைப்பு நடத்தியிருக்கிறது, நடத்துகிறது.
ஆனால் 1991-இல் தான் முதன்முதலில் மகளிர்க்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. ஏனெனில், .20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நாடுகளில் பெண்கள் கால்பந்து விளையாடத் தடை இருந்திருக்கிறது என்பதுவும், உலக மகளிர் கால்பந்துப் போட்டியை நடத்தமாட்டோம் என்று, ஃபிஃபா அமைப்பு அறிவித்திருந்தது என்பதுவும் வரலாறு.
பெல்ஜியம் நாடு மருத்துவக் காரணங்-களுக்காக பெண்கள் கால்பந்து விளையாடக்-கூடாது என்று 1920-ஆம் ஆண்டு தடை விதித்திருக்கிறது. 1970-களின் பிற்பகுதியில்தான் தடை நீக்கப்பட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் மகளிர் கால்பந்து விளையாடுவதற்கு எதிரான மிகப்பெரியப் பிரச்சாரமே நடைபெற்றிருக்கிறது.ஏற்கனவே இருந்த மகளிர் கால்பந்து அணிகள் எல்லாம் கலைக்கப்பட்டு 1945 முதல் 1978வரை மகளிர் கால்பந்து விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்திருக்கிறது.’ பெண்களின் இயல்பு நிலைக்கு மாறான விளையாட்டு கால்பந்து விளையாட்டு’ என பிரேசில் நாட்டு அரசாங்கமே அந்தக் காலகட்டத்தில் அறிவித்து இருந்திருக்கிறது.
1919 ஆம் ஆண்டிலேயே பிரஞ்சு நாட்டின் கால்பந்துக் கூட்டமைப்பு பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து இருந்திருக்கிறார்கள். இந்தத் தடை 1970 வரை இருந்திருக்கிறது.
ஜெர்மன் நாட்டிலும் மகளிர் கால்பந்து போட்டியைத் தடை செய்திருக்கிறார்கள். மேற்கு ஜெர்மனியில், ஜெர்மன் கால்பந்து சங்கம் 1955இல் பெண்கள் கால்பந்துப் போட்டிக்குத் தடை விதித்திருக்கிறார்கள். இந்தத் தடையை நியாயப்படுத்த கால்பந்து விளையாட்டு மிகக் கடினமானது என்றும், அதனால் பெண்கள் கருவுறுதல் மற்றும் ஆரோக்கியத்தை இது பாதிக்கும் என்றும், பந்துக்கான சண்டையில் பெண்களுக்கே உரித்தான கருணை மறைந்துவிடும் என்றும் சொல்லி தடைவிதித்தார்களாம். வேடிக்கையாக இருக்கிறது!
இன்னும் பல நாடுகள் மகளிர் கால்பந்து விளையாடுவதற்கும் ,மகளிர் கால்பந்து போட்டி நடத்துவதற்கும் தடை விதித்திருக்கின்றன. ஏன், இந்த ஆண்டு மகளிர் கால்பந்து போட்டியில் உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் நாட்டிலேயே தடை இருந்திருக்கிறது. இன்றைக்கும் ஆப்கானிஸ்தான் போன்ற மதத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் நாடுகளில் தடை இருக்கிறது. ஆனால் இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி மகளிர் கால்பந்து விளையாட்டுகளில் மகளிர் ‘புகுந்து விளையாடுகிறார்கள்’, சாதனை புரிகிறார்கள்; சரித்திரம் படைக்கிறார்கள்.
இந்த ஆண்டு (2023) நடந்த மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளவே இல்லை. இந்திய அணி இந்தத் தர வரிசையில் 60-ஆம் இடத்தில் இருப்பதால் மகளிர் உலகக் கோப்பை விளையாட்டில் விளையாட அனுமதியே கிடைக்கவில்லை.
உலக மக்கள் தொகையில் சீன நாட்டினைப் பின் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறிக்கொண்டு இருக்கும் நாடு இந்தியா.இதன் மக்கள் தொகை 140 கோடிக்கு மேல். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் இருந்து மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்றைத் தாண்டி உள்ளே போகமுடியாத நிலை இருப்பது வெட்கப்பட வைக்கிறது. இந்திய மகளிர் அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வது எல்லாம் கனவாகத்தான் இருக்குமா? நம்முடைய பெண்கள் எந்த வகையில் குறைந்தவர்கள், ஏன் முடியவில்லை என்னும் கேள்வி எழுகிறது.
எதிர்காலத்தில் மகளிர் உலகக் கால்பந்து கோப்பையை இந்திய மகளிர் அணி வெல்லும் என்பதற்கான நம்பிக்கையை பஞ்சாப் மாநிலமும்,தமிழ்நாடும் நமக்கு அளிக்கின்றன. பிபிசி நிறுவனம் பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்து ரூர்தக்கா கிராமத்து இளம்பெண்கள், கால்பந்து போட்டிகளில் அசத்திவரும் பெண்களைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளனர். தேசிய, சர்வதேச அளவியான பல போட்டிகளில் பங்குபெறும் பல கால்பந்து வீராங்கனைகள் இருக்கும் ஊராக இந்த ஊர் இருப்பதை அந்தப் பேட்டி சுட்டிக்காட்டுகிறது.
அதில் ஒரு வீராங்கனை(கரீனா) தான் 11 வயதில் தற்செயலாக கால்பந்து விளையாட ஆரம்பித்ததையும்,ஒரு பெண்ணாக இந்திய சமூகத்தில் கால்பந்து விளையாட இருக்கும் பல்வேறு தடைகளையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.அதில் ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்று தங்களைச்சுற்றி இருக்கும் மனிதர்களும் குடும்பமும் தடை போட்டதை _ தடை போடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.கால்பந்து மைதானத்திற்கும் தனது வீட்டிற்கும் இருக்கும் தூரத்தைச் சுட்டிக் காட்டி சிலர் ‘இவள் தனியாகப் போகிறாள், தாமதமாக வருகிறாள் என்றும், சில நேரங்களில் சில ஆண்கள் மிக இழிவாகவும் பேசுவார்கள்’’ என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார். இரண்டு தேசியப்போட்டிகளில் கலந்துகொண்ட பின்புதான் குடும்பத்தினர் தடை சொல்லவில்லை,கால்பந்து விளையாடுவது நல்லது என்று, நினைக்கிறார்கள் என்றும், நான் விளையாடப் போவதால் என் பகுதியில் இருக்கும் இளம்பெண்களும் விளையாட வருகின்றார்கள், நமது அக்கா விளையாடுகின்றார், நாமும் விளையாடலாம் என்று நினைக்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு வீராங்கனையின்(சந்தீப் கவுர்) பேட்டி இந்திய சமூகம் பெண்களைப் பொறுத்த அளவில் இன்னும் எவ்வளவு பழமையில் இருக்கிறார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது. நீ விளையாடப்-போகவேண்டாம் என்று குடும்பத்தினரே தடுத்ததையும், +2 முடித்தவுடன் தனக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் நினைத்து இருந்ததைச் சொல்லி சிரித்த அவள், “இந்த விளையாட்டு விளையாட ஆரம்பித்த பின் தனக்குத் தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது’’ எனக்கூறியஅவரின் பேட்டி பல செய்திகளைச் சொல்கிறது..
கால்பந்தாட்ட மைதானத்தில் மட்டு-மல்ல, சமூகத்திலும் தங்களுக்கு கால்பந்து விளையாடுவதற்கு எத்தகைய அறைகூவல்கள் இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு உள்ளார்கள். அவர்களின் பேட்டி, வறுமையையும் பிணியையும் தாண்டி ,கால்பந்து விளையாட்டில் தாங்கள் சாதிப்பதையும் அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.(கால்பந்தாட்டத்தில் அசத்தும் பஞ்சாப் கிராமத்து இளம்பெண்கள். பி.பி.சி, ஆகஸ்ட் 22,2023- ஒலி வடிவம்).
அதைபோல தமிழ்நாட்டின் மகளிரும் கால்பந்து விளையாட்டில் அசத்துகின்றனர்.இந்த ஆண்டு(2023) ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சி தருகிறது. அது பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. தமிழ்நாடு அணியும் ,அரியானா அணியும் மோதிய இறுதி ஆட்டத்தில் தமிழ்நாட்டு கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள் பிர்யதர்ஷினி, இந்துமதி கார்த்தீசன் ஆகியோர் அடித்த இரண்டு கோல்களால் 2-க்கு 1 என்ற கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றிருக்கிறது.
கடைசியாக 2017-18ல் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ்நாடு அணி பட்டம் வென்று அசத்தி உள்ளனர் என்று பத்திரிகைகள் பாராட்டுகின்றன.
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையோடு வந்தவர்களை தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாராட்டி வரவேற்று இருக்கிறார், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ,தமிழ்நாடு கால்பந்து அணியைப் பாராட்டி ரூபாய் 60 இலட்சம் பரிசுத்தொகை அளித்துப் பாராட்டி இருக்கிறார்.நம் தமிழ் நாட்டு கால்பந்து அணியை உளமாரவாழ்த்துகிறோம்.
பெரியாரியல் நோக்கில் பார்க்கும்போது, மகளிர் கால்பந்துப் போட்டிக்கு இந்திய ஒன்றிய அரசு நிறைய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஆனால் கொடுக்கவில்லை. நம்மைப் பொறுத்த அளவில் மகளிர் கால்பந்து என்பது ‘ஆண்மை’ என்னும் பதம் அழிவதற்கான வழிகளில் ஒன்று. எனவே தனித்தன்மையாக முத்திரை பதித்துவரும் திராவிட மாடல் அரசு ,மகளிர் கால்பந்து விளையாட்டிற்கு இன்னும் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், மாவட்டங்கள் தோறும், பள்ளிகள் தோறும் மகளிர் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஊக்கப்படுத்தவேண்டும் ♦