இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பகுத்தறிவு ஒளி பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்களுக்கு, இன்றைக்கு இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பகுத்தறிவாளர் புத்தர் ஒரு முன்னோடி! தந்தை பெரியார் அவர்களுக்கு 2442 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தரை இன்றைய உலகுக்குச் சரியாக அடையாளம் காட்டியவர்களுள் முதன்மையானவர் தந்தை பெரியார் அவர்களே! காலம் காலமாக பவுத்தத்தின் மீது படிந்திருந்த ஆரியக் கசடுகளைத் கழுவிக் களைந்து உண்மையான புத்தரைத் துலக்கிக் காட்டியவரும் அவரே!
புத்தர் யார்? எப்படிப்பட்டவர்?
தந்தை பெரியார் அடையாளம் காட்டிய புத்தர் யார்? எப்படிப்பட்டவர்?
கடவுள் என்னும் கற்பிதத்தைப் புறந்தள்ளிய கருணைமிகு பேராசான்!
கடவுளைவிடக் கேடான ஆத்மா எனும் அபத்தத்தைத் தோலுரித்துக்காட்டிய தொல் பழம் பெரியார்!
ஆரிய வேதங்கள் பயனற்ற வெற்றுரைகள் என்று ஒதுக்கித் தள்ளிய சீரிய செம்மல்!
ஆருயிர்களைக் கொடியமுறையில் கொன்றழிக்கும் ஆரிய வேள்வி என்பது ஓர் அடாத செயல் என்று ஆணித்தரமாக எதிர்ப்புக்குரல் எழுப்பிய அருளாளன்!
வேதிய நெறி விளைத்த பிறவிப்பேதத்தை வெறுத்தொதுக்கிச் சமத்துவ நெறியை வலியுறுத்திய சான்றோன்!
பிராமணியமே உயர்ந்தது எனும் ஆணவத்தை அறவழியில் வீழ்த்திய ஆன்றோன்!
ஆரியம் பிறப்பித்த கர்மம்,மறுபிறப்பு ஆகிய தீ நெறிகளை அடியோடு மறுத்த அறவோன்!
வேதிய சடங்குகள், சாஸ்திரங்கள், சொர்க்கம், நரகம், பிரார்த்தனை, பூசை, புனஸ்காரம் ஆகியவற்றை விட்டொழித்து அறிவு வழியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்திய அறிவன்!
ஒரு கருத்தினை நீ செவி வழியில் கேட்டது என்பதற்காகவோ, அது மரபு வழியாகக் கூறப்பட்டு வருகிறது என்பதற்காகவோ,
பெரும்பான்மையான பலரும் கூறுகிறார்கள் என்பதற்காகவோ, கற்றறிந்த பண்டிதர்கள் கூறுகிறார்கள் என்பதற்காகவோ, புனித மதக் கொள்கையில் இடம் பெற்றிருக்கிறது என்பதற்காகவோ மதிப்புக்குரிய மூத்தோர் அல்லது குருநாதர் போதித்தவை என்பதற்காகவோ அதனை நீ நம்பி ஏற்றுக் கொள்ளாதே! எதையும் தீர ஆராய்ந்து உன் பகுத்தறிவுக்குச் சரி என்று தோன்றினால் மட்டும் அதனை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்து கொள் என்று கூறியதன் மூலம் சிந்தனைச் சுதந்திரமே ஒரு மனிதனின் பிறப்புரிமை என்று உலகுக்குப் பிரகடனப்படுத்திய பெரியோன்! ஏறத்தாழ வடஇந்தியா முழுதும் கால்நடையாகவே சுழன்றுலவி மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வுப் பரப்புரையை ஒரு பெருங்கூட்டத்துடன் ஓர் இயக்கமாகவே நடத்திய உலகின் முதல் பகுத்தறிவுவாதி! மூடநம்பிக்கை முடை நாற்றத்தை முற்றாகத் துடைத்தெறிய முனைப்புடன் பாடுபட்ட அன்றைய பெரியார்! புத்தரைப்பற்றி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தம்மபதம் – திரிபிடகத்தில் ஒரு மணிமகுடம்
தமிழ் கூறும் நல்லுலகம் படைத்தளித்த சங்க நூல் தொகுதிகளில் தலைசிறந்த அறநூலாகத் திருக்குறள் எவ்வாறு திகழ்கிறதோ அவ்வாறே திரிபிடகம் எனும் பவுத்த இலக்கியத் தொகுதிகளில் இடம் பெற்றுள்ள தம்மபதம் எனும் அறநூலும் சிறப்புக்குரியதாகவே காணப்படுகிறது. தம்மபதத்தைப்பற்றி அறிந்துகொள்ளுமுன் திரிபிடகம் எனும் நூற்றொகுதி குறித்து ஒரு சிறிது தெரிந்து கொள்வது பொருத்தமாக அமையும்.
1) சீனத் தத்துவஞானி கன்பூசியஸ்
(கி.மு 551-478) புத்தரின் சம காலத்தவர். அவர் தனது கருத்துகளைப் பேசினார்; எழுதவில்லை. சமண சமயத் தலைவரான மகாவீரரும் (கி.மு.599-527) புத்தரின் சம காலத்தவரே. அவரது போதனைகள் பேச்சு வடிவிலேயே அமைந்தன. அவரது சீடர்கள் அவற்றைப் பிற்காலத்தில் எழுத்து வடிவில் தொகுத்து அளித்தனர். புத்தரும் (கி.மு.563 – 483) தனது பகுத்தறிவுக் கருத்துகளைப் பேச்சு வடிவிலேயே தனது தாய்மொழியாகிய பாலிமொழியில் பரப்புரை செய்தார். ஏனெனில் அக்காலத்தில் எழுத்துகள் தோன்றியிருக்கவில்லை.
2) புத்தரின் மறைவுக்குப் பிறகு, மகதப் பேரரசின் தலைநகராக விளங்கிய ராஜகிரகம் என்ற இடத்தில் புத்தரின் முக்கிய சீடராக விளங்கிய மகாகாசிபர் தலைமையில் (இவர் பிக்குவாக மாறிய பார்ப்பனர்). பல நூறு தொண்டர்கள் கூடிய முதற்பேரவை (First council) புத்தரின் போதனைகளைத் தொகுக்கும் பணியை மேற்கொண்டது. அந்தப் பேரவையில் உபாலி எனும் முக்கிய சீடர் (நாவிதராக இருந்து பிக்குவாக மாறியவர்) விநயபிடகம் எனும் பெயரில் புத்தர் வழங்கிய நெறிமுறைகளின் தொகுப்பினை வாய்மொழியாக ஓதினார். அணுக்கத் தொண்டரும் புத்தரின் சிறிய தந்தை சுக்கிலோதனரின் மகனுமாகிய ஆனந்தர் அபிதம்மபிடகம் எனும் புத்தரின் உயர்ஞானத் தொகுதியினை அவ்வாறே ஓதினார். பிற்காலத்தில் சுத்தபிடகம் எனும் புத்தரின் பேருரைத் தொகுப்பானது அபிதம்ம பிடகத்திலிருந்து பிரித்து எடுத்துத் தனியே தொகுக்கப்பட்டது. இம்மூன்று தொகுப்புகளும் திரிபிடகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
(பிடகம் என்பது கூடை- பெட்டி – வகுப்பு. பகுதி என்று பொருள்படும்)
3) திரிபிடகங்கள் எனும் மூன்று தொகுதிகளில் 31 நூல்கள் இடம் பெற்றுள்ளன. விநயபிடகத்தில் 5 நூல்களும் அபிதம்ம பிடகத்தில் 7 நூல்களும் சுத்தபிடகத்தில் உள்ள 5 நூல்களில் ஒன்றாகிய குந்தகநிகாயத்தில் அடங்கியுள்ள 15 நூல்களும் ஆக மொத்தம் 31 நூல்கள் திரிபிடகங்கள் என்று அழைக்கப்
படுகின்றன. இந்த குந்தக நிகாயத்தில் உள்ள 15 நூல்களில் ஒன்றுதான் தம்மபதம் எனும் அறநூலாகும்.
4) இம்மூன்று தொகுப்புகளும் எழுதாக்கிளவியாக செவிவழியில் வாய்மொழியாக பல நூற்றாண்டுகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், இலங்கைத் தீவை கி.மு.முதல் நூற்றாண்டில் அரசாண்ட (கி.மு. 29 – 17) வட்டகாமினி அபயன் என்ற அரசன் காலத்தில் திரிபிடகங்கள் முதன் முதலாக எழுத்துவடிவில் பாலி மொழியில் தொகுக்கப்பட்டு இலங்கையில் பாதுகாத்து வைக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.
5) திரிபிடக நூல்கள் (தம்மபதம் உள்பட) அனைத்திலும் புத்தரின் போதனைகளுக்கு மாறான ஆரிய சனாதனக் கருத்துகள் ஊடுருவிக் கலக்காதவை இல்லை என்ற புரிதலோடும் அந்நூல்களில் உள்ள உண்மையான பவுத்தக் கருத்துகளைக் கண்டறியும் தெளிவோடும் அவற்றை அணுக வேண்டியுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
6) தங்கவயல் லோகிதாசன் எழுதிய ‘பவுத்தமும் சமணமும்’ என்னும் நூலில் (பாண்டியன் பதிப்பகம் சென்னை. முதற்பதிப்பு. 1994. பக்கம் 72) திரிபிடகங்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.:- பெரும்பாலும் புத்தரின் வாக்குகளைக் கொண்டிருப்பனவாகக் கருதப்படும் திரிபிடகங்களே (முக்குடலை) பவுத்தத்திற்கு அடிப்படை நூல்களாகும். இப்பிடகங்களில் கையாண்டுள்ள சொற்களெல்லாம் புத்தர் மொழிந்தவை என பவுத்த அறிஞர்கள் நம்புவதில்லை. புத்தரின் கருத்துகளை இவை பெரும்பாலும் சார்ந்து உள்ளன என்றே நம்புகிறார்கள்.
தம்மபதத்தின் அமைப்பும் சிறப்பும்.
1. தம்மபதம் எனும் அறநூலில் 26 அத்தியாயங்களும் 423 செய்யுள்களும் அடங்கி உள்ளன. புத்தரின் படைப்பாகிய தம்மபதம் சொல்லழகும் கருத்தாழமும் நிறைந்த ஒரு சிறந்த அற நூலாகும். இந்நூல் ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலி, ரஷ்யா, லத்தீன், சீனம், திபெத்து, வங்காளி, இந்தி, கன்னடம் உள்பட உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் இலங்கையைச் சேர்ந்த மறைந்த பிக்கு சோமானந்தா அவர்களால் பாலிமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
2. கிருஷ்ண தத்தபட் என்பவர் எழுதி மதுரை காந்தி அருங்காட்சியகத்தைச் சேர்ந்த காந்தி இலக்கிய சங்கம் வெளியிட்ட பவுத்தம் எனும் நூலில் (பக்கம் 53) தம்மபதத்தைப்பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
இந்து மதத்தில் கீதை எப்படியோ அப்படியேதான் புத்த மதத்தில் தம்மபதம். கீதை மகாபாரதத்தில் ஒரு பகுதியாக இருப்பதைப்போல தம்மபதமும் சுத்த பிடகத்தினது குந்தக நிகாயத்தின் ஒரு பகுதியாகும். புத்த மதத்தைப்பற்றித் தெரிந்து கொள்வதற்கு தம்மபதம் ஒன்றை மட்டும் படித்தால் போதும். மனிதனை அஞ்ஞான இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துப்போவதற்கு உதவும் சுடர் விளக்காகும் அது.
தம்மபதத்தில் காணும் அறமொழிகள்
தம்மபதத்தில் உள்ள அனைத்து அறமொழிகளையும் அறிந்து கொள்வது வரவேற்கத்தக்கது என்றாலும் விரிவஞ்சி. அதற்கு வாய்ப்பில்லை என்பதால் சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டுகளாக இங்கு காண்போம்:-
1) அழுக்குகளில் எல்லாம் அறியாமை என்னும் அழுக்கு மிகக் கொடியது. இது பெரிய குற்றம். பிக்குகளே! இந்த அழுக்கை நீக்குங்கள். அழுக்கற்று இருங்கள். (243)
2) கற்பாறை சூறாவளிக் காற்றுக்கும் அசையாமலிருப்பதைப்போல, அறிஞர் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசைய மாட்டார்கள். (81)
3) அறிஞர்கள் எப்பொருளிலும் பற்றுவைப் பதில்லை. இன்பத்தினாலும் துன்பத்
தினாலும் பற்றப்படாமையால் அவர்கள் பெருமை அடைவதுமில்லை; தாழ்மையடைவதுமில்லை. (83)
4) ஒருவர் தன் குற்றத்தை அறிவாரானால் அதனாலேயே அவர் அறிவாளி
யாகிறார். தான் அறிவாளி என்று நினைக்கிற ஒரு மூடன் உண்மையிலேயே மூடனாக இருக்கிறான் (63).
5) குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால் செல்வப் புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக் கருதி அவரோடு நட்புக் கொண்டு பழக வேண்டும். அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமே அன்றி தீமை பயக்காது. (76)
6) பிறர் தீமை செய்வதைக் கண்டித்து அறிவு புகட்டுகிறவர்கள் நல்லோருக்கு அருமையானவர்கள். ஆனால், தீயவர்களுக்கு வெறுப்பானவர்கள். (77)
7) சிறிது இன்பத்தை விடுதலினாலே பெரிய இன்பத்தை அறிஞர் ஒருவர் காண்பாரானால் அப்பெரிய இன்பத்திற்காகச் சிறிய இன்பத்தைத் துறப்பாராக. (290)
8) உடல் வாக்கு மனம் இவற்றை அடக்கி ஆள்கின்ற அறிஞர் உண்மையாகவே நல்ல அடக்கமுடையவர் ஆவார். (234)
9) அடக்கியாள்வதற்கும் காப்பதற்கும் அருமையானதும், சலித்துக் கொண்டே இருக்கிறதும் உறுதியற்றதுமான மனத்தை அறிவாளிகள் வளைந்த அம்புகளை
வேடன் நீட்டிப்பது போலச் செம்மைப்படுத்துகிறார்கள். (33)
10) நீயே உனக்குத் தலைவன். உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலைவனாகக் கூடும்? ஒருவர் தம்மைத் தாமே அடக்கி ஒழுகக் கற்றுக் கொண்டால் அவர் பெறுதற்கரிய தலைமையைப் பெற்றவராவார். (160).
11) முன்பு அசட்டையாயிருந்து பிறகு விழிப்படைந்து முயற்சியோடிருப்பவர் மேகத்தில் மறைவுண்டிருந்த வெண்ணிலா அதை விட்டு வெளிப்பட்டதைப் போன்று பிரகாசிக்கிறார். (172)
12) ஒருவர் தான் உபதேசிப்பது போல செய்கையிலும் நடவாமலிருப்பாரானால் அவருடைய உபதேசம் மணமில்லாத பூவைப் போலப் பயனற்றதாகும். (51)
13) வழக்கில் தீர்ப்பளித்ததனாலேயே ஒருவர் நீதிபதியாக மாட்டார். பண்டிதரான ஒருவர் மெய்யையும் பொய்யையும் ஆராய்ந்து பார்த்து யோசனையோடு விருப்பு வெறுப்பின்றி நேர்மையாகத் தீர்ப்பளிக்கிறார். அறநெறியைப் போற்றும் அந்த அறிஞர் பண்டிதர் எனப்படுவார்.(256 – 257)
14) நல்லவர்கள் தூரத்தில் இருந்தாலும் இமயமலை போன்று காணப்படுகிறார்கள். தீயவர் இருட்டில் எய்யப்பட்ட அம்பு போல், காணப்படாமல் இருக்கிறார்கள். (304).
15) நற்செயல்களைச் செய்கிறவர்கள் தாம் செய்யும் நற்செயல்களின் விளைவு முதிர்ச்சி அடையாதவரையில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால், நற்செயல்கள் முதிர்ந்து பயன் தரும்போது இன்பங்களைக் காண்கிறார்கள். (120)
16) தீமைமைகளைச் செய்கிறவர்கள் தாம் செய்யும் தீமையின் விளைவு முதிர்ச்சியடையாதவரையில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். ஆனால், தீயசெயல்கள் முதிர்ந்து விளைவைத் தரும்போது துன்பங்களை அனுபவிக்கிறார்கள். (119)
17) கையில் புண் இல்லையானால் அதில் நஞ்சினை எடுக்கலாம். புண் இல்லாத கையை நஞ்சு தாக்காது. தீய செயலைச் செய்யாதவரைத் தீமை ஒன்றும் அணுகாது. (124).
18) யாரிடத்திலும் கடுஞ்சொற்களைப் பேசாதே! கடுஞ்சொல் பேசியவர்கள் கடுஞ்சொற்களால் தாக்கப்படுவர். கடுஞ்சொற்கள் உண்மையாகவே துன்பம் தருகின்றன. அடிக்கு அடி திருப்பி அடிக்கப்படும். (133)
19) பிறருடைய குற்றம் எளிதில் காணப்படுகிறது. ஆனால், தன்னுடைய குற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கிறது. பிறருடைய குற்றங்களைப் பதரைத் தூற்றுவதுபோலத் தூற்றுகிறவர் தந்திரமுள்ள சூதாடி தன் தோல்வியை மறைப்பதற்காகச் சூதுக்காயை ஒளிப்பதுபோலத் தன் சொந்தக் குற்றத்தை மறைக்கிறார். (252)
20) இரும்பில் உண்டான துரு இரும்பையே அழித்து விடுவது போல தீய நெறியில் செல்வோர் தம் தீய செயல்களால் அழிக்கப்படுகிறார்கள். (240)
21) கோபத்தை அன்பினால் வெல்க! தீமையை நன்மையினால் வெல்க! ஈயாத கருமியைக் கொடையால் வெல்க! பொய்யை மெய்யால் வெல்க! (225)
22) நன்கு வளர்க்கப்பட்ட குதிரையானது தன்மீது குறடா அடி விழாதபடி நடந்து கொள்வதுபோல தீய செயல்களினால் வரும் பழிக்கு அஞ்சி நிபந்தனைக்கு நாணி நல்வழியில் ஒழுகுவோர் மிகச் சிலரே. (143)
23) இளமையில் தூய வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகாதவரும் செல்வத்தைத் தேடிக்கொள்ளாதவரும் (தமது முதுமையில்) மீனில்லாத குளத்தில் இரை தேடிக் காத்திருக்கும் கிழக் கொக்கைப் போலச் சோர்ந்து அழிவர். (155)
24) முழுதும் இகழப்படுபவரும் முழுதும் புகழப்படுபவரும் அன்றும் இல்லை; இன்றும் இல்லை; என்றும் இல்லை. (228)
25) தன்னை விட மேலான அல்லது தன்னைப் போன்று அறிவுள்ள நண்பர்களை அடைய முடியாவிட்டால் அறிஞர் தன்னந்தனியே உறுதியாக இருக்கட்டும். ஏனென்றால் மூடர்களோடு நேசம் கூடாது.(61)
(தொடரும்)