பெண்களை அடிமை இயந்திரமாக்காதீர்! – தந்தை பெரியார்

2023 கட்டுரைகள் பெரியார் ஜூலை 16-31, 2023

தோழர்களே!
இன்று இங்கு நடந்த சுயமரியாதைத் திருமணம் பற்றி எனது தோழர்கள் ஈஸ்வரன், ரத்தினசபாபதி, அன்னபூரணியம்மாள் ஆகியவர்கள் பேசினார்கள். சுயமரியாதைத் திருமணம் என்பது ஒரு சீர்திருத்த முறை கொண்ட திருமணமேயாகும். சீர்திருத்தம் என்பது இன்று உலகில் திருமணம் என்கின்ற துறை மாத்திரம் அல்லாமல், மற்றும் உலகில் உள்ள எல்லாத்துறையிலும் யாருடைய முயற்சியுமில்லாமல் தானாகவே ஏற்பட்டுக் கொண்டுதான் வருகிறது.

தொழில் முறையில் கையினால் செய்யப்பட்ட வேலைகள் யந்திரத்தினால் செய்வது என்பது எப்படித் தானாகவே ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து அது நாளுக்கு நாள் செல்வாக்குப் பெருகுகிறதோ, அதுபோலவேதான் இத்திருமண விஷயமும் நாளுக்கு நாள் மாறுதலடைந்து அந்த முறை ஒரு யந்திரம் போல் ஆகி வருகிறது.
யந்திரத்தின் தன்மை என்ன? என்று பார்த்தால் சுருக்கமான நேரத்தில் சுருக்க மான செலவில் குறிப்பிட்ட காரியங்கள் நடைபெறுவதற்குத்தான் யந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கையாளப்பட்டு வருகிறது. அது போலவே, இந்தச் சுயமரி யாதைத் திருமணமும் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் குறிப்பிட்ட காரிய மான திருமணம் நடத்தப்படுகிற முறை கைக்கொள்ளப்படுகிறது. இதற்குமுன் இத் திருமணங்கள் 3 நாள், 5 நாள் 1000, 2000 ரூ. செலவுகளில் நடந்து வந்ததானது 50, 60க்குள் சில திருமணம் 5 ரூ, 6 ரூ. க்குள் 2 மணி, 4-மணிக்குள் நடந்து விடுகிறது.

இப்படி நடப்பது என்பது சுயமரியாதை இயக்கத்தாலே என்று தோழர்கள் சொன்னார்கள். நான் இது மனிதன் அறிவு பெற்று வருவதால்தானே ஒழிய, வெறும் இயக்கமே எதுவும் செய்துவிட முடியாது என்று சொல்லுகிறேன். திருமணம் விஷயத்தில் திருத்தத்தை இப்போது இந்த 10-வருஷ காலத்திற்குள் யாவரும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். இத் திருமண முறை ஏழைமக்களுக்கே மேன்மையானது என்றாலும், பணத்திமிரும், ஜாதித்திமிரும் கொண்ட முதலாளித்தன்மைக் கூட்டத்தார்களும் பின்பற்றி வருகிறார்கள். ஆதலால், இனித் திருமண முறையைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆனால், அத்திருமணத்திற்கு முக்கியமாய் தம்பதிகள் ஜோடி சேர்த்தல், தம்பதிகள் உரிமை முதலிய விஷயங்களில் அநேக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கின்றன.

அதாவது, இப்போது இங்கு பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது. இதற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லப்பட்டாலும், இந்தத் தாலி கட்டுவதானது ‘‘இந்தப் பெண் இந்த மாப்பிள்ளையினுடைய சொத்து’’ என்கின்ற அறிகுறிக்கு ஆகத்தான். இந்தத் தத்துவம் சுலபத்தில் மாறிவிடும் என்று நான் கருத முடியவில்லை. தாலி கட்டாத கல்யாணம் நடந்த போதிலும், மணப் பெண் மணமகனுடைய சொத்து என்பது மாறிவிடும் என்று நான் நினைக்க முடியவில்லை.
ஏனெனில், இத் திருமணத்துக்குச் சம்பந்தப்படாத கற்பு என்பது ஒன்று பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டிருக்கிறது. கற்பு என்பதைச் சுகாதாரத்தையும், சரீரத் தத்துவத்தையும், பொது ஒழுக்கத்தையும் பொருத்து நான் ஆதரிக்கிறேன் என்றா-லும், இன்று அந்த முறையில் கற்பு கையாளப்-படுவதில்லை. உதாரணம் என்னவென்றால், கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை என்பதிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம். அதற்கு உதாரணம் என்னவென்றால், இந்துக் கடவுள்கள் என்பவற்றிற்கும் கூட ஆண் கடவுள்களுக்குக் கற்பு வலியுறுத்தப்படுவதில்லை. ஆதலால், அந்த அதாவது ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு முறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

இந்தத் தனி உடைமை தேசத்தில் இது ஒழிக்கப்படுவது என்பது சுலபத்தில் ஏற்படக்கூடிய காரியமா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் பெண்களுக்குத்தான் கற்பு, ஆண்களுக்கு வலியுறுத்தக்கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொருத்தது.
ஏன் என்றால், பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவர்களின் நிலைமை.

எப்படி எனில், ‘‘புருஷன் சம்பாதிக்கிறவன். சம்பாதித்த பொருளுக்கு அவனே சொந்தக்காரன். மனைவிக்குச் சோறு போட்டு சேலை கொடுத்துக் காப்பாற்றுகிறவன், மனைவி பெற்ற குழந்தைகளுக்குத் தன் சொத்துகளைக் கொடுக்கிறவன். குடும்பப் பாரமும், குடும்பப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளுகிறவன். ஆகவே, அவனுக்கு அவனால் காப்பாற்றப்படுகிற – அவன் மீது பொறுப்பு விழுந்த மனைவியை அடக்கி ஆள உரிமை உண்டு’’ என்பது இன்றைய சமுதாய முறைச் சட்டமாய் இருக்கிறது. இதை எப்படி ஒருவன் மறுக்க முடியும்?

சம்பாதனை, குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பெற்றால் அதைக் காப்பாற்றும் திறமை ஆகியவைகள் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு, இத்திறமைகள் இல்லாத ஒரு புருஷனைக் கட்டிக் கொள்வதாய் இருந்தால் மாத்திரம் ஆண்களைப் பெண்கள் அடக்கியாள முடியும். முடியாவிட்டாலும் சம சுதந்திரமாகவாவது இருக்க முடியும். இதில்லாமல் எவ்வளவு சுயமரியாதையும், சம சுதந்திரமும் போதித்தாலும் பெண்களுக்குச் சம சுதந்திரமும், சம கற்பு என்பதும் ஒரு நாளும் முடியக்கூடிய காரியமல்ல என்பதே எனது அபிப்பிராயம்.

அன்றியும் அப்படிப்பட்ட திறமை அற்றவர்களுக்குச் சம சுதந்திரம் அளிப்பதும் ஆபத்தான காரியம் தான்.
ஆதலால், பெண்கள் சுதந்திரம் இந்த மாதிரி கலியாண காலங்களில் பேசி விடுவதாலோ, ‘‘சுத்த’’ சுயமரியாதை முறையில் திருமணம் செய்து விடுவதாலோ ஏற்பட்டு விடாது.

தனி உரிமை உலகில் பெண்கள் சுதந்திரம் வேண்டுமென்கிறவர்கள் பெண்களை நன்றாய்ப் படிக்க வைக்க வேண்டும். தங்கள் ஆண் பிள்ளைகளை லட்சியம் செய்யாமல் பெண்களுக்கே செலவு செய்து படிக்க வைக்க வேண்டும். ஜீவனத்துக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொடுக்க வேண்டும்.
தாய் தகப்பன்மார் பார்த்து ஒருவனுக்குப் ‘‘பிடித்துக் கொடுப்பது’’ என்று இல்லாமல் அதுவாக (பெண்ணாகவே பார்த்து) தகுந்த வயதும், தொழிலும் ஏற்பட்ட பிறகு ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் கன்னிகாதானம், கல்யாணம், தாரா முகூர்த்தம் என்கின்ற வார்த்தைகளே மறைந்து அகராதியில்கூட இல்லாமல் ஒழிய வேண்டும். அன்றுதான் பெண்கள் சுதந்திரம் அனுபவிக்க லாயக்குள்ளவர்களாவார்கள்.
1,2,3, கூட எண்ணத் தெரியாத நிலையில் உள்ள பெண்களைக் கட்டிக்கொண்டு, அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது என்றால் எப்படி முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.

கையில் கொடுக்கும் பணத்தை எண்ணத் தெரிய வேண்டாமா?
5-அணா கொடுப்பவனுக்கு 8-அணா எண்ணிக் கொடுத்துவிட்டால் இப்படிப்பட்ட சுதந்திரம் அக்குடும்பத்தை என்ன கதிக்கு ஆளாக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
இதை நான் இங்குள்ள தாய்மார்களுக்காகவே சொல்லுகிறேன். உங்கள் பெண்களை நன்றாய்ப் படிக்க வையுங்கள், தொழில் சொல்லிக் கொடுங்கள், 20-வயது வரை கலியாணம் செய்யாதீர்கள். அப்பொழுதான் பெண்களுக்குச் சுதந்திர உணர்ச்சி உண்டாகும்.
வெறும் நகையும், அலங்காரத் துணியும், சிங்காரிப்பும் அடிமைத்தனத்துக்கு வித்து என்பதை உணருங்கள்.

ஆண்கள் தங்களைச் சிங்காரித்துக் கொள்ளாமலும், நகை போட்டுக் கொள்ளாமலும் இருக்கும் போது பெண்கள் மாத்திரம் ஏன் தங்களை அலங்கரித்துக் காட்ட வேண்டும். இது ஒன்றே பெண்கள் மட்டமானவர்கள் என்பதற்கும், பெண்களுக்குச் சுயமரியாதை இல்லை என்பதற்கும் ஆதாரமல்லவா? என்று கேட்கிறேன்.
அன்றியும், பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கொடுக்க வயதான மாமியார் பருவப் பெண்கள் சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில், தங்கள் இளம் பிராயங்களில் மாமியாரிடம் பட்ட அடிக்கும், இடிக்கும் வட்டி வாங்க, தங்கள் மருமகள்மாரை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அவர்களுக்குப் பெண்கள் சுதந்திரம் என்பது ஒரு பெரிய ‘‘குச்சுக்காரத்தனத்துக்கு’’ ஒப்பாகக் காணப்படும். ஆனால், அப்படிப்பட்டவர்கள் தங்கள் பெண் குழந்தைகள் அவர்கள் மாமி வீட்டுக்குச் சென்று சுதந்திரமாய் இருக்கும் என்பதை நினைத்துத் திருப்தியடைய வேண்டும்.

ஆகையால் நான் கடைசியாகக் கேட்டுக் கொள்வது_ பெண்களைச் சுதந்திரத்துக்கு அருகதை உடையவர்களாக ஆக்குங்கள் என்பதுதான். அதை விட்டுவிட்டுப் பெண்கள் வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள். பெண்களை வெறும் பிள்ளை பெறும் யந்திரமாக்காதீர்கள். அதுவும் அந்தப் பெண்ணுக்கு இஷ்டமில்லாவிட்டாலும் பெற்றுத் தீர வேண்டிய அடிமை யந்திரமாக ஆக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

(ஈரோட்டில் 28.02.1936ஆம் தேதி நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தில் சொற்பொழிவு)
– ‘குடிஅரசு’ – 01.03.1936