தலையங்கம் – சனாதன தோலுரிப்பே வள்ளலார் சன்மார்க்கம்! வடலூர் மக்கள் திரள் ஆளுநருக்குத் தந்த பதிலடி!

2023 தலையங்கம் ஜூலை 16-31, 2023

‘என்ன, இந்த வயதிலும் இப்படி அலையவேண்டுமா?’ என்று நம்பால் அன்பும் பாசமும் மிக்க தோழர்களும், நண்பர்களும், அன்பர்களும் பரிவோடு கேட்கிறார்கள். அவர்களது கேள்வியில் நியாயம் இருந்தாலும், இந்தச் சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் அக்கிரமங்கள், அநீதிகள், அவலங்களைப் பார்க்கும்போது, நமக்கு அந்தக் கேள்வியின் நியாயம் முன்னால் நிற்பதில்லை; அந்த அன்றாட சமூகக் கொடுமைகளும், நாம் பெற்றவற்றையும், நமது தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்ற இலட்சியச் செல்வங்களையும் ஒரு கூட்டம் (பூணூலும் அவாளின் நிபந்தனையற்ற அடிமைகளும்) எப்படியோ மக்கள் ஏமாந்த காரணத்தால், ஒன்றிய ஆட்சியைப் பிடித்து, நாட்டின் ஜனநாயகத்தை அதன் மதிப்புமிகு அம்சங்களைச் சிதறடித்து சின்னாபின்னமாக்கி வருகிறார்கள்.

மணியோசை எழுப்பிடவே அயராத சுற்றுப்பயணம்

சற்றும் வெட்கமில்லாத ‘விலை போகுதல்’ ஒருபுறம்; மறுபுறம் மனநல மருத்துவமனையில் நோயாளிகளாக வைத்து சிகிச்சை தர வேண்டியவர்களையெல்லாம் ஆளுநர்களாக்கி, அரசியல் அறத்தை நாளும் அகற்றிடும் கூத்து, ஆட்சி அதிகார அப்பட்ட துஷ்பிரயோக ஊடக வெளிச்சத்திற்காகவே கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கனகச்சித வசதி பெருக்கல் முதலியன திட்டமிட்டு நடைபெறுவதை மக்களிடம் எடுத்துக் கூறி, ஏமாந்தது போதும்; இனி ஒரு கணமும் தாமதியாமல், விரட்டவேண்டிய விஷமிகளை வாக்குச் சீட்டால் விரட்டி அடித்து, கருநாடகத்தைப்போல முடிவு தர அனைவரும் பங்களிக்கவே  நாம் மணியோசை எழுப்பிடவே அயராத சுற்றுப்பயணம் செய்கிறோம், சோர்வில்லாமல்!

துறவிகளையும் மிஞ்சும் தூய்மைமிகு தோழர்கள்!

கடந்த ஜூலை 7, 8 ஆகிய இரண்டு நாள்களில் கலந்துகொண்ட எழுச்சிமிகு நிகழ்ச்சிகளில்  மக்களோடு கலந்துரையாடல், துறவிகளையும் மிஞ்சும் தூய்மைமிகு தோழர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திரும்பியதன் பின் களைப்பு இல்லை; களிப்பே மிஞ்சியது! களிப்பருளும் களிப்பாகவே இருந்தது!

தமிழ்நாட்டில் ஆளுநராக உள்ள பீகார் பூமியில் பிறந்தவரான ஆர்.என்.ரவி, ஆணவத்தின் உச்சத்திற்குச் சென்று, சறுக்கி விழும் ஓர் ஆர்.எஸ்.எஸ். சனாதன பிரச்சார ஏஜெண்ட் – ஆர்.எஸ்.எஸின் காவிப் பித்தம் தலைக்கேறி, சித்தம் கலங்கி நித்தம் ‘திராவிட மாடல்’ ஆட்சிமீது சேற்றைவாரி இறைப்பதாக நினைத்து,- அதைத் தம்மீதே பூசி மெழுகிக் கொண்டுள்ளார்.

வடலூருக்குச் சென்று அங்கே ‘‘விஷம தானம்‘’ (‘‘விஷய தானம்‘’ அல்ல) செய்தார்!

வடலூர் வள்ளலார் சனாதனத்தின் உச்சம் என்றார். இது உண்மையா?
இப்படிக் கூறுபவர் எவராயினும் அவர்தான் திரிபின் மிச்சமாகக் காட்சி அளிப்பவர் என்பதை பதிலடியாகக் கொடுக்க – உடனடியாக வடலூரிலேயே ஒரு மாபெரும் மக்கள் திரள் திறந்தவெளி மாநாடு கூட்டி, வடலூரில் மக்கள் கடலை நம் தோழர்களும், கூட்டணி நண்பர்களும், வள்ளலார் அடியார்களும், ‘மக்கள் அதிகாரம்‘ விருத்தாசலம் வழக்குரைஞர் ராஜு ஒத்துழைக்க, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், ஒரு வாரத்தில் செய்த ஏற்பாடு வரலாறு படைத்த அரிய சாதனை!

‘‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்’’ என்று – வள்ளலார் அன்பர்களின், கூட்டணித் தோழர்களின், தி.மு.க., கம்யூனிஸ்ட், (சி.பி.அய்., சி.பி.அய். (எம்)), வி.சி.க. ஆகிய கட்சிகளின் தோழர்களின் முழக்கங்கள் அதிரடியாக விண்ணைப் பிளந்தன.
கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழியின் விளக்க வீச்சு கேட்டு, பொய் மூட்டைகள் பொலபொலவென வீழ்ந்தன!
எழுச்சித் தமிழர் சங்கநாதம்!

எழுச்சித் தமிழர், எம் அரும் உடன்பிறப்பு, இணை பிரியாத எம் கொள்கை உறவு, களைப்புடன் வந்தாலும், ‘சங்கநாதம்‘ செய்தார்.- சில இளைஞர்களின் அளவு தாண்டிய ஆர்வமே அவருடைய பேச்சுக்கு சற்றுத் தடங்கலை உருவாக்கினாலும், அவர் கருத்து மழை பொழிந்தார்_ ‘‘வாடிய பயிரை நோக்கிப் பெய்த வான்மழை’’ போன்று!

அடுத்து நம் பெரும் ஆதரவுக் கூச்சலை எதிர்கொண்டு (அன்பால் அளவற்ற தொல்லை சில நேரங்கள் தோழர்களால் ஏற்படுவதை) தாண்டி-_- வள்ளலாரை, மாறிய வள்ளலாரை அந்த மக்கள் திரளுக்கு விளக்கியபோது, அவ்வுரையை நேரில் கேட்ட மக்கள், காணொலிமூலம் உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள மக்களும் கேட்கும் வாய்ப்பில் – நல்ல பலன் கிடைத்தது!

காவிகளின் பொய்த் திரையைக்கிழித்து எறிந்தது!

பல ஆண்டுகளுக்குமுன்பு சென்ற வள்ளலார் திரும்பினார் – மக்களிடம் அவரது ஆறாம் திருமுறை – கடைசி உணர்வுகளின் விளக்கத்திற்குப் பொழிவாக மாற்றித் தந்தபோது, மக்கள் தந்த பேராதரவு – காவிகளின் பொய்த் திரையைக் கிழித்து எறிந்தது!
இப்பணி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடரவேண்டும்!

வள்ளலார், சன்மார்க்கம் என்பது ‘சனாதனத்தின் தோலுரிப்பு’ என்பதை ஊர்தோறும் விளக்கவேண்டும்!

அன்று அறிவித்தபடி, வள்ளலார் திரிபுவாதத் தடுப்பு அணி – ஊர்தோறும் உருவாக்கப்படும்.அது அவரது கொள்கை_ தத்துவப் பாதுகாப்பு அணியாகும்!
மக்கள் பெருந்திரள் மாநாட்டினைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கழகப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும், அனைத்துக் கட்சித் தோழர்களுக்கும் நன்றி, பாராட்டுகள்! கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக’’ – வள்ளலார்

– கி. வீரமணி
ஆசிரியர்