கொஞ்சம் மூளியானாலும் சிலை கோயிலில் இருக்கக் கூடாதாம்! தாலியிழந்த நான் மூலையில் அடைந்து கிடக்க வேண்டுமாம்! என்ன நீதி இது?
-அவள்
அப்போது எனக்கு வயது எட்டு.
அவனி எது என்று அறியாத சின்னஞ்சிறு சிறுமி நான்!
சிட்டைப் போல் பறந்தேன்.
தென்றலைப் போல் திரிந்தேன்.
கால்களுக்கு விலங்கில்லை.
சிரிப்பதற்குத் தடைபோடுவோர் இல்லை.
கைகளில் புத்தகத்துடன் பள்ளி செல்வேன்.
அடுத்த வீட்டு அமுதன் உடன் வருவான்.
எதிர் வீட்டு எல்லப்பனை அழைத்துக் கொள்வோம்.
வழியில் எதிர்ப்படும் நாவல் மரத்தில் வண்டுகள்போல் கனி குலுங்கும்.
“பழம் வேண்டுமே!’’ என்பேன்.
அடுத்த வினாடி அமுதன் மரத்தில் இருப்பான்.
கிளைகளை உலுக்குவான்.
ஆலங்கட்டி மழைபோல் கனி மழை பொழியும்.
அனைவரும் கூடிச் சுவைத்து உண்போம்.
நாவெல்லாம் நீலநிறம் படிந்து விடும்.
“யாருடைய நாக்கு மிகுதியும் மாறிவிட்டது?’’
எங்களுக்குள் சிறிய போட்டி வரும்.
“என்னுடையதுதான்!’’ ஒவ்வொருவரும் அடித்துச் சொல்வோம்.
பிறகு ‘பஞ்சசீலம்’ அமலுக்கு வரும்.
இப்படி எத்தனையோ காட்சிகள்!
அன்று ஒருநாள் பள்ளியிலிருந்து திரும்பினேன்.
அன்னை, “இங்கே வா’’ என்று அருகே அழைத்தாள்.
“என்னம்மா’’ என்றேன்.
“இப்படி மடியில் உட்கார்’’ என்றாள்.
அமர்ந்தேன்.
“கண்ணல்ல, நான் கேட்பதற்குப் பதில் சொல்வாயா?’’ என்றாள்.
“சரி’’ நான் தலையை ஆட்டினேன்…
அவள் கேட்டாள்:
“நீ யாரையம்மா கட்டிக் கொள்ளப் போகிறாய்?’’
என்ன கேட்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை.
*எதைக் கேட்கிறாய் அம்மா’’ இது நான் திருப்பிக் கேட்ட கேள்வி.
“நீ யாரைக் கல்யாணம். செய்து கொள்வாய்?’’ மீண்டும் கேட்டாள் அவள்.
“அமுதனைத்தான்!’’ ஏதோ வேடிக்கையாகச் சொன்னேன்.
என் தாய் கேட்ட கேள்வியை அப்போதும் நான் புரிந்து கொள்ளவில்லை.
நான் சொன்ன பதிலைப்பற்றி என் அன்னையும் கவலைப்படவில்லை.
கேட்டதும் சிரித்தாள் என் தாய்.
“இந்தா, அதிரசம்?’’ என்று கொடுத்து, சென்று விளையாடச் சொன்னாள்.
நான் வெளியே தாவி ஓடினேன்.
===
நான் பதினைந்து வயதை எட்டிப் பிடித்தேன்.
என் உடல் வளர்ச்சியில் எதிர்பாராத மாறுதல்கள் மின்னலிட்டன.
இனந்தெரியாத அச்சமும் நாணமும் எங்கிருந்தோ வந்து குடிபுகுந்தன.
முன்போல் என்னால் சுற்றித் திரிந்துவர முடியவில்லை.
தாய் தந்தையரே தடுத்து நிறுத்தினார்கள்.
“பூப்பெய்தி விட்டாய் நீ’’’ என்றார்கள்.
“பொறுப்போடு நடக்க வேண்டும்’’ என்றார்கள்.
“ஆண்களிடம் அதிகம் பேசக் கூடாது’’ என்றார்கள்.
பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வீட்டு வாசலை நான் தாண்டவும் விரும்பவில்லை என் பெற்றோர்.
விரும்பிய நேரத்தில் விரிந்த வெளியெல்லாம் சுற்றி வந்தேன் நேற்று!
“வீட்டின் நான்கு சுவர்களே உன் சுதந்திர எல்லை’’ என்றனர் இன்று!
பள்ளியிறுதி வகுப்பை முடித்த அமுதன் கல்லூரியில் போய்ச் சேர்ந்தான்.
பழைய பழக்கமானதால் பரிவுடன் பேச முயன்றேன்.
“கூடாது!’’ என்றார்கள்.
“ஏன்?’’ என்றேன்.
“இனி உன் கணவனிடந்தான் நீ பேசலாம்’’ என்றார்கள்.
“அப்படியானால் நான் அமுதனிடம் பேசுவேன்’’ இது என் பதில்!
“அவனா உன் கணவன்?’’ இது அவர்கள் கேட்ட கேள்வி.
“ஆமாம்’’ ஆணித்தரமாக இப்படிச் சொன்னேன்.
“அடிப்பாவி! இது அடுக்குமா?’’ என்றார்கள்.
“அவன் யார்? நீ யார்?’’ என்று பேதம் காட்டினார்கள்.
வழி வழியாக வரும் ஜாதிக் கட்டுப்பாட்டை மீறுகிறேன் என்றார்கள்.
என்னால் இப்போது அமுதனிடம் இரண்டொரு சொற்களும் பேச முடியவில்லை.
அவன் சென்னைக்குச் சென்று விட்டான்.
எனக்கு மேலும் வேலி போடப்பட்டது.
உபதேசம் உச்சக்கட்டத்தை எட்டிப் பிடித்தது.
என் தாயும் தந்தையும் என் கைகளைப் பிடித்துக் கேட்டுக் கொண்டார்கள்.
“மறந்து விடு அமுதனை; அவன் மாற்று ஜாதி’’ இது அவர்களின் வாதம்.
“என் மனத்தைப் புரிந்து கொண்டவன் அவன்தான்’’ கண்ணீரோடு பதில் சொன்னேன்.
“எங்கள் மானத்தைக் காப்பாற்று!’’ என்று அவர்களோ தங்கள் விழிநீரைப் பொழிந்தார்கள்.
என்ன செய்வேன் நான்?
உடலை வளர்த்து ஆளாக்கி விட்டவர்கள் என் பெற்றோர்.
உள்ளத்தில் காதல் மாளிகையை எழுப்பியவன் அமுதன்.
என் நெஞ்சம் போர்க்களமாகியது.
எட்ட இருப்பவனுக்காகக் கிட்ட இருப்பவர்களை எப்படிப் பகைத்துக் கொள்வேன்?
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தேன்.
அமுதனை மறப்பது என்பதுதான் அது.
===
பதினாறாம் வயதில் காலடி எடுத்து வைத்தேன்.
அன்றொருநாள் ஓர் இளைஞன் எங்கள் வீட்டிற்கு வந்தான்.
அம்மா ஆர்வத்துடன் வரவேற்றாள்.
தன் அண்ணன் பெற்ற அருமைச் செல்வன் அவன், என்றாள் அவள்.
வந்த இளைஞன் சில நாள்கள் எங்கள் இல்லத்திலேயே தங்கினான்.
என் அன்னையின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.
நான் அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம். பற்றிக் கொண்டுள்ள கொம்பை விட்டு, கொடியைப் பிரித்தெடுத்து, அடுத்த கொம்பில் படர வைக்க தனி ஏற்பாடு நடந்தது.
வந்த இளைஞன் என்னைச் சுற்றியே வளைய வந்தான்.
ஏதோ ஒப்புக்கு அவனுடன் உரையாடினேன்.
ஓரளவு பண்புடையவனாகத்தான். காணப்பட்டான்.
எனக்கும் சற்றுப் பிடித்திருந்தது.
என் அன்னை எங்கள் இருவரின் திருமணத்திற்காக ஏற்பாடு செய்யும்படி தந்தையைத் தூண்டினாள்.
முதலில் தந்தை மறுப்புச் சொல்லவில்லை.
சில வாரங்கள் கடந்தன.
திடீரென்று ஒரு நாள் என் தந்தை அம்மாவை அழைத்தார்.
“நம் அந்தஸ்தையும் எதிர்காலத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டாமா?’’ என்றார்.
“என்ன?’’ என்றாள் தாய்.
“உன் அண்ணன் மகனுக்கு என்ன சொத்திருக்கும்?’’ கேட்டார்அவர்.
“நம்மைக் காட்டிலும் குறைவுதான்’’ என்றாள் அன்னை.
“அப்படியானால் இந்த திருமணம் நடக்காது’’ என்றார் தந்தை:
மீண்டும் நான் அதிர்ச்சியால் துடித்தேன்.
தாய் கெஞ்சினாள் தந்தையிடம்.
“நமக்கு ஒரே மகள்தானே, திருமணம். செய்து “வீட்டோடு வைத்துக் கொள்ளலாம்’’ இது அவள் வேண்டுகோள்.
தந்தை பிடிவாதமாக மறுத்தார்.
“ஒரே மகளைப் பிச்சைக்காரனுக்கா கொண்டுபோய்க் கொடுப்பது?’’ இது அவர் கட்சியின் வாதம்.
வந்த இளைஞன் தன் சொந்த ஊர் திரும்பினான்.
நான் இருதலைக் கொள்ளியாய்த் திண்டாடினேன்.
எந்தக் கருத்தையும் எடுத்து வைக்க எனக்குத். திராணியில்லை. வாய் மூடிக் கிடந்தேன்.
===
இப்போது எனக்கு வயது பதினேழு.
வீட்டு வேலைகளும், வேறு சில நூல்களும் என் பொழுதைத் தின்று வந்தன.
அன்று திடீரென்று ஒரு கார் வீட்டு முன் வந்து நின்றது.
உள்ளே இருந்த தந்தை வெளியே ஓடினார்.
“வாருங்கள், வாருங்கள்’’ அவர் குரல் ஆர்வத்துடன் ஒலித்தது அன்னையை அழைத்தார்.
“சொன்னேனே, நினைவிருக்கிறதா? அடுத்த ஊர் பெரு நிலக்கிழார் குடும்பம் வந்திருக்கிறது’’ என்றார்.
என் திகைப்பு மிகுதியானது.
யார் யாரோ காரிலிருந்து இறங்கினார்கள்.
பட்டுத் துணிகள் மின்னலிட்டன.
ஒவ்வொருவர் கை விரல்களும் மோதிரங்களில் கட்டுண்டு கிடந்தன.
நான் அலங்காரம் செய்யப்பட்டேன்.
கொஞ்ச நேரத்தில் அவர்கள் முன் நிறுத்தப்பட்டேன்.
ஏற இறங்கப் பார்த்தார்கள் எல்லோரும்.
திரும்பச் சொன்னார்கள்; திரும்பினேன்.
நடக்கச் சொன்னார்கள்; நடந்து காட்டினேன்.
“சமையல் பலவகையிலும் சமைக்கத் தெரியுமா?’’ என்றார்கள்.
“தெரியும்!’’ என்றாள். என் அம்மா.
பிறகு அவர்கள் திரும்பினார்கள்.
காரில் ஏறும்போது, “மகனை அனுப்பி வைக்கிறேன்?’’ என்றார் வந்த பெரியவர்.
“அப்படியே செய்யுங்கள்’’ என்றார் அப்பா.
இரண்டு நாள்கள் கழிந்தன.
பளபளப்பான கால்சட்டையும் மேல்சட்டையும் அணிந்த ஓர் இளைஞர் காரில் வந்திறங்கினார்.
அதே வரவேற்பு தொடர்ந்தது.
முகமெல்லாம் சிரிப்புடன் அப்பா வரவேற்றார். பாவம்! அவர்களின் பண மினுமினுப்பு அப்பாவை எப்படியெல்லாம் ஆட்டி. வைத்தது?
வந்த புதிய இளைஞர் தன் தேர்வைத் தொடங்கினார்.
மீண்டும் கேள்வி பதில்கள் பரிமாறப்பட்டன.
“பாடத் தெரியுமா?’’ என்றார் வந்தவர்.
“தெரியும்’’ என்று மட்டும் சொல்லி நிறுத்தவில்லை; பாடியும் காட்டினேன்.
மேலும் மேலும் பரீட்சை தொடரக் கூடாதே என்று அஞ்சினேன்.
வந்த இளைஞர் அப்பாவிடம் தனிமையில் ஏதோ பேசினார்.
என் தாய், மாப்பிள்ளையின் நடையுடை பற்றி எடை போட்டாள்.
நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.
உள்ளே போய்விட்டேன்.
என் அம்மா’என்னைப் பின் தொடர்ந்து வந்தாள்.
“இந்தச் சம்பந்தம் மட்டும் கிடைத்துவிட்டால் நீதான் மகாராணி’’ என்றாள்.
நான் மவுனமாக இருந்தேன்.
வந்த மாப்பிள்ளை புறப்படத் தொடங்கினார்.
“இருங்கள்; ஒரு வேண்டுகோள்’’ என்றார் என் அப்பா.
“என்ன?’’ என்றார் இளைஞர்.
“உங்கள் ஜாதகம் உடனே எனக்குத் தேவை; உங்கள் தந்தை எழுதி வைத்திருக்கிறார் அல்லவா?’’ இது என் தந்தை கேட்ட கேள்வி.
“எனக்கு அதில் நம்பிக்கையில்லை; வேண்டுமானால் அப்பாவிடம் சொல்லி அனுப்புகிறேன்’’ என்றார் அவர்.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஜாதகம் வந்தது.
என் அப்பா என் ஜாதகத்தையும் அதையும். கொண்டுபோய் சோதிடரிடம் காட்டினார்.
“பொருத்தமில்லை’’ இது சோதிடரின் முடிவு.
அப்பா வீட்டுக்கு வந்தார்.
“பிள்ளைக்கு ஏதோ தோஷமாம்; வேண்டாம் இந்தச் சம்பந்தம்!” என்றார்.
ஜாதகத்துடன், ‘முடியாது’ என்ற பதிலும் பிள்ளை வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
மீண்டும் கவலையில் ஆழ்ந்தாள் அம்மா.
நான் வேதனையால் கருகினேன்.
அப்பா மறுபடியும் மாப்பிள்ளை தேடும் படலத்தைத் தொடங்கினார்.
===
வாழ்க்கைப் பாதையின் பதினெட்டாம் வயதுப் படியில் என் பாதம் பட்டது.
“பருவம் அடைந்தவளை இத்தனை ஆண்டுகள் வைத்திருக்கிறார்களே!’’ ஊரார் இப்படி ஏசினர்.
“பாதிக் கிழவியாகும்வரை பிறந்தகத்திலேயே இருந்து. விடுவாளோ?’’ உலகம் இப்படிக் கேட்டுச் சிரித்தது.
படாத பாடுபட்டார் அப்பா!
தரகரைப் பிடித்தார். தரவேண்டியதைத் தந்தார்.
இறுதியில் ‘ஓர் இடம்’ கிடைத்தது.
“வாட்டசாட்டமாக இருக்கிறார் மாப்பிள்ளை?’’ அப்பாவின் மகிழ்ச்சி இது.
மீண்டும் குடும்பச் சந்திப்பு நாடகங்கள் முறை பிறழாமல் அரங்கேறின.
எல்லோருக்கும் மனநிறைவு ஏற்பட்டது.
திருமண நாள் குறிக்கப்பட்டது.
“வாழ்க பல்லாண்டு’’ என்று வாழ்த்தினர் உறவினர்களும்; நண்பர்களும்.
“பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!’’ என்றார்கள் பல் விழுந்த பெரியவர்கள்.
‘இல்வாழ்வின் தலைவாயிலில் காலடி வைத்தேன்.
இனிப்பாகத்தான் இருந்தது புது வாழ்வு.
ஆனால்…
சிலை வடிக்கத் தொடங்குமுன் சிற்பியின் விழிகளே உளிக்குப் பலியாகி விட்டன.
அன்று உண்டு முடிந்ததும், “மாரடைக்கின்றது’’ என்றார் என் கணவர்.
சில விநாடிகளில் அவர் உயிர் பிரிந்து விட்டது.
பின்னர்…?
எங்கள் கிராம வழக்கப்படி என் நெற்றியின் குங்குமம் அழிக்கப்பட்டது.
சூடிய மலரைப் பிய்த்தெறிந்தார்கள்.
எனக்குப் புதுப்பட்டம் அளிக்கப்பட்டது.
இப்போது நான் ஒரு விதவை!
கொஞ்சம் மூளியானாலும் சிலை கோயிலில் இருக்கக் கூடாதாம்!
தாலியறுத்த நான் மூலையில் அடைந்து கிடக்க வேண்டுமாம்!
பதினெட்டு ஆண்டுகள் கண்போல் இருந்த நான், குடும்பத்தாரின் பாரத்திற்குரிய பொருளானேன்!
இப்போது நான், என் கிராமத்தில் முழுக்க ஒதுக்கி வைக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய ஒரு சதைப் பிண்டம்!
எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன்!
சீ! இந்த நாட்டிலே திருமணம் என்பது எங்களுக்கா நடத்தப்படுகிறது? வெறும் சம்பிரதாயத்திற்கும் சடங்குக்கும்தானே திருமணம் நடக்கிறது. கேவலம் ஒரு பொம்மை உடைந்து விட்டால் மறு பொம்மை வாங்கிக் கொடுத்தார்கள்.
ஆனால், தாலி கட்டியவன் போய்விட்டால், அத்தனை உணர்வும் சவக்குழி செல்லத்தான் வேண்டுமா?
இந்தக் கேலிக்கூத்துக்கு இத்தனை பொருத்தங்களா பார்க்க வேண்டும்?
அதோ வானத்திலே நீச்சலிடும் வண்ணக் கிளிகளாகவும் சிட்டுகளாகவும் நான் பிறந்திருக்கக் கூடாதா?
ஏன் மனித குலத்தில் பிறந்தேன்? ♦