ஜாதி வித்தியாசமும் தீண்டாமையும் – தந்தை பெரியார்

2023 பெரியார் பேசுகிறார் ஜூன் 16-30,2023

பெரியார் பேசுகிறார்

மக்களில் ஜாதி வித்தியாசம் என்பதுகற்பிக்கப்பட்டதே ஒழிய தானாகஏற்பட்டதல்ல. வலுத்தவன் இளைத்தவனை அடக்கி வைக்கும் தர்மமே ஜாதி வித்தியாசமாகும். இது இன்னும் நிலைத்திருப்பது என்றால் இந்த நாடு மிருகப் பிராயத்தில் இருந்து மனிதப் பிராயத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது.

எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும் மற்றொரு மனிதன் தாழ்ந்த ஜாதியாகவும் கருதப்படுகின்றான் என்பதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? மனிதர்களை எடுத்துக்கொண்டால் ஜாதியின் காரணமாக பிறவியிலாவது வாழ்க்கையிலாவது ஒழுக்கங்களிலாவது அறிவிலாவது வித்தியாசங்கள் காணப்படுகின்றனவா? ஒன்றுமே இல்லையே. அப்படி ஏதாவது ஒரு வழியில் இயற்கையில் பிரிந்திருந்தாலும் இதற்கு சமாதானமாவது சொல்ல முயற்சிக்கலாம். ஒரு காரணமும் இல்லாமல் இது வெறும் பிறவி மாத்திரத்தில் எதேச்சாதிகாரமாய்ச் செய்யப்பட்ட கொடுமையாகத்தானே விளங்குகின்றது. இந்த முறை மக்களின் ஒழுக்கத்திற்கே நேர் விரோதமாக இருக்கவில்லையா?

சகோதரர்களே! இதைக் கொடுமையென்று ஒப்புக் கொள்ளாதவர் யார்? இதை ஒழிக்க வேண்டுமென்று சொல்லாதவர்கள் யார்? இந்த ஜாதிக் கொடுமையை ஒழிப்பதற்காக எத்தனை காலமாக முயற்சி செய்யப்பட்டு வருகின்றது? “ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கூடாது, அதற்கு ஆதாரம் இல்லை’’ என்று சொல்லாத பெரியார் யார்? ஆயினும் இதுவரை ஏதாவது பலன் ஏற்பட்டிருக்கின்றதா? ஒரு சிறிதும் காணப்படவில்லையே. இதற்கு ஏதாவது ஒரு வழி செய்துதானே ஆகவேண்டும்? எனவே இதற்கு சரியான வழி அறிவினாலோ, ஞானத்தினாலோ, போதனையினாலோ ஏற்பட்டுவிடும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இது பெரிதும் இது சமயம் அரசாங்க சட்டத்தினாலும், அரசியல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தினாலும் தான் இதை (அதாவது இந்த உயர்வு தாழ்வு வித்தியாசத்தை) ஒழிக்க முடியும்.

ஆனாலும், இது அரசியல் கூட்டமல்ல; இங்கு நான் அரசியலைப்பற்றிப் பேசப்போவதில்லை. அரசாங்கத்தில் நமது முன்னேற்றத்திற்குப் பலவித சட்டம் வேண்டும் என்று கேட்பதுபோல் எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கின்றோம். இதையும் ஏன் வேண்டும் என்கின்றோம் என்றால் வலுத்தவன் இளைத்தவனை நசுக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவேதான். இப்படிக் கேட்பது சமுதாய சீர்திருத்தத்தின் பாற்பட்டதாக இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். இன்னும் ஒரு அவசியமும் சொல்லுகின்றேன்.

அரசியல்காரர்கள் நாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்கும்போது “எதற்காக வகுப்பு வித்தியாசத்தைக் கற்பிக்க வேண்டும்? எல்லோருக்கும் சமத்துவமாக இருக்கலாமே’’ என்கின்றார்கள். இதை நம்பி இந்தப்படியே சமுதாய இயல்காரர்கள் “அது மதத்திற்கு விரோதம்’’ என்கிறார்கள்; “மத ஆச்சாரியார்கள்’’ “மதத்தில் சர்க்காரோ சட்ட சபையோ பிரவேசிக்கக்கூடாது’’ என்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் ஒவ்வொரு வகுப்பும் தனித்தனியாய்ப் பாடுபட்டுப் பிரதிநிதித்துவமும் அதிகாரமும் பெற்றுதான் ஆகவேண்டும் என்பதும், அதற்கு ஒவ்வொரு வகுப்புக்கும் பிரதிநிதித்துவ உரிமை அளிக்க வேண்டியது அவசியம் என்று சொல்லுவதும் சரி என்று தோன்றவில்லையா? அடுத்தப்படியாக உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவது என்னவென்றால் ஜாதி வித்தியாசம் என்பதற்கு தீண்டாமை என்பதாகும்.

தீண்டாமை

தோழர்களே!
தீண்டாமை என்பதைப்பற்றி நான் ஏதாவது சொல்லவேண்டும் என்பதாக நீங்கள் யாவரும் எதிர்பார்க்கமாட்டீர்கள் என்றே கருதுகின்றேன். மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கின்றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரத்தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகுங்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்லவந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இம்மாதிரி கொடுமைப்படுத்தி தாழ்த்தப்பட்ட ஒரு பெரிய மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என்பதும், இம்மாதிரியான மக்கள் இன்னமும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர்வாழ்வதை விட, அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா என்பது எனக்கு விளங்கவில்லை.

இம்மாதிரி ஒரு பெரிய மனித சமூகத்தைக் கொடுமைப்படுத்தி அடக்கிவைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு, சுயராஜ்யம் என்றோ, அரசியல் சுதந்திரம் என்றோ, பூரண விடுதலை என்றோ வாயினால் உச்சரிக்கவாவது யோக்கியதை உடையதாகுமா என்று கேட்கின்றேன். சிலர் “சுயராஜ்யம் வந்துவிட்டால், பூரண சுயேச்சை வந்து விட்டால் இவைகள் ஒழிந்து போகும்’’ என்று சமாதானம் சொல்லக்கூடும். அவர்களை நான் ஒன்று கேட்கின்றேன். சுயராஜ்யம் மட்டுமல்ல. “தர்மராஜ்யமும்’’ அவதார ராஜ்யமும் ஆகிய “ராமராஜ்யமும்’’ “சத்திய சந்தன்’’ ராஜ்யமாகிய அரிச்சந்திர ராஜ்யமும், மற்றும் கடவுளே அரசாண்டதாகச் சொல்லும் அரசாட்சிகளும் உள்ள காலத்தில்தானே தீண்டாமை முதலியவைகள் உண்டாக்கப்பட்டதாகவும், அவற்றைச் சரிவர பரிபாலித்து வந்ததாகவும், அக்காலத்தில் மகாக்கிரமமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. எனவே மறுபடியும் அந்த ராஜ்யங்கள் வருமானால் இந்தக் கொடுமைகள் குறையுமா? அதிகரிக்குமா? என்று கேட்கின்றேன். ஆதலால் இக்குற்றங்கள் நமது நாட்டைவிட்டு ஒழிக்க முயற்சிக்க வேண்டியது சமுதாய சீர்திருத்தக்காரர்களின் கடமை மாத்திரமல்லாமல் அரசியல் சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களுடையவும் முக்கியமான கடமையேயாகும்.

கல்வி

இனி கல்வி என்பதைப்பற்றியும் சீர்திருத்தக்-காரர்கள் கவனம் செலுத்த வேண்டியது அதிகமுண்டு.
‘கல்’ என்பதற்கு அறி என்பது பொருள். கல்வி என்றால் அறிவி தெரிவி என்பதுதான் பொருளாயிருக்க வேண்டும்;. எனவே எதை அறிவிப்பது என்று கவனித்தால் உலக சுபாவத்தையும் மனிதத்தன்மையையும் அறிவிப்பதே கல்வியாகும். மற்றவைகள் வித்தையாகும். இதற்கு

உதாரணமாக,
“ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்’’

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலாதார்’’

என்ற வள்ளுவர் வாக்கே போதுமானது. ஆதலால் உலக நிலையையும் அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளத்தக்க மனிதத்தன்மையுமே முக்கியமாய்க் கொண்டு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும். இப்போதைய கல்வி என்பது மனிதத்தன்மைக்கும் அறிவுக்கும் சிறிதும் பொருத்தமானதல்ல. குடிகளிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு பொறுப்பற்ற அரசன் தனது பிரஜைகளை மூடர்களும் தேசத்துரோகிகளுமாக ஆக்கி தனது காலடியிலேயே அழுத்தி வைத்துக்கொண்டு நிரந்தரமாய்த் தன்னிச்சைப்படி ஆட்சி புரியவேண்டும் என்று கருதுகின்ற ஒரு அரசாங்கத்திற்கு அனுகூலமான கல்வியாகவே இருந்து வருகின்றது. அதுமாத்திரமல்லாமல், ஊரார் உழைப்பில் நோகாமல் வயிறு வளர்க்கக் கருதும் அயோக்கியர்களின் ஆதிக்கத்திற்கு அனுகூலமான கல்வியே அளிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, இவை அடியோடு மாற்றப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் பக்தி, மதபக்தி, இராஜபக்தி ஆகிய அறிவுத்தடையும் அடிமைப் புத்தியும் கற்பிக்கக் கூடிய விஷயங்கள் கல்விச் சாலைகளுக்குள் தலைகாட்டவே விடக்கூடாது; ஏனெனில், கடவுளிடத்திலும், மதத்தினிடத்திலும், அரசனிடத்திலும் பக்தியாய் இருக்கும்படி அவரவர்களே செய்துகொள்ள வேண்டுமே ஒழிய, இதற்காக ஒரு பள்ளிக்கூடம் வைத்து மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது அயோக்கியத்தனத்தின் முதல் பாகமாகும்.
கல்வி கற்பிக்கும் வேலை இது சமயம்முக்கியமாய் பெண்களுக்கும், தீண்டாதார் ஆக்கப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்குமே செய்ய வேண்டுமே ஒழிய, ஏற்கெனவே கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் என்கின்ற சமூகத்திற்கும், பாரம்பரியமாகவே கல்வி அறிவோடு இருப்பதாகச் சொல்லப்படுபவர்களுக்கும், பிறவியிலேயே தங்களை அறிவாளிகள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் இப்போது சிறிதும் கல்வி கற்பிக்க வேண்டியதே இல்லை.

எனவே, குறைந்தது ஒரு பதினைந்து வருஷத்திற்காவது உயர்தரக் கலா சாலைகளையும் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களையும் காலிசெய்து முன் சொன்ன கல்வியும் அறிவும் இல்லாதவர்கள் என்கின்ற கூட்டத்திற்கே பள்ளிக்கூடம் வைத்துக் கற்பிக்க வேண்டும். யோக்கியமான அரசாங்கம் இதைத்தான் முதலில் செய்யும், உண்மையான சீர்திருத்தக்காரர்களும், கல்வித்துறையில் இதைத்தான் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.

– தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய தலைமை உரை
குடிஅரசு – 2.12.1928