முகப்பு கட்டுரை : மிசா கால கலைஞர் சூளுரையை மீண்டும் ஏற்போம்!

2023 முகப்பு கட்டுரை ஜூன் 1-15, 2023

மஞ்சை வசந்தன்


இந்திய விடுதலை அடைந்தபிறகு, அது சந்தித்த மிகப்பெரும் நெருக்கடி, ‘மிசா’ என்னும் அவசரநிலை அறிவிப்பால் உருவாக்கப்பட்டது.
காங்கிரஸும் அதன் தலைமை அமைச்சர் இந்திராகாந்தியும் செய்த மிகப் பெரிய வரலாற்றுப் பிழை அது. இந்திராகாந்தியின் எத்தனையோ சமதர்ம செயல்பாடுகளுக்கிடையே இந்தச் செயல் முற்றிலும் முரண்பட்டதாகும். மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் நாட்டுடைமை போன்ற ஏராளமான புரட்சித் திட்டங்கள் உருவாக்கக் காரணமான அவரது உள்ளத்தில் இப்படிப்பட்ட பாசிச வன்மம் எப்படி உருக்கொண்டது என்பது கேள்விக்கும், சிந்தனைக்கும் உரியதாகும்.

நேரு சோசலிச சிற்பி. அவர் கடிதம் என்னும் உளியால் செதுக்கிச் செதுக்கி உருவாக்கியவரே இந்திராகாந்தி. அப்படிப்பட்டவர் இப்படிப்பட்ட ஆதிக்க உணர்வுக்கு எப்படி ஆட்பட்டார் என்பதுதான் அக்கேள்விக்கான காரணம்.

மக்களாட்சி நாட்டில் அடக்குமுறையால், ஒடுக்குமுறையால் அரசியல் தலைவர்களை, அரசியல் கட்சிகளை, மக்கள் எழுச்சியை அடக்கி, ஒடுக்கி விடலாம் என்று தப்பாக எண்ணியதன் விளைவு அது.

அடக்குமுறைக்கும், அதிகாரத்திற்கும் எல்லோரும் அஞ்சி அடங்கிவிடமாட்டர்கள் என்பதை அறியாததால் வந்த அவலம்தான் அச்செயலுக்கு அடித்தளம். இந்திராகாந்தி எண்ணியது தப்பானது.

ஆயிரம் அடக்குமுறை வந்தாலும் அத்தனையையும் அடித்து நொறுக்கி மக்களாட்சியை நிலை நிறுத்துவோம் என்று உணர்வு கொண்டு எழுந்தது திராவிடர் இயக்கம்.

திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஆர்த்தெழுந்தன. மக்கள் உரிமையைக் காக்க உயிரையும் துச்சமென எண்ணி போர்க்களம் காணத் தயாராயின.

ஆம். 1975ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி இந்திராகாந்தியால், இந்தியாவில் நெருக்கடிநிலை (மிசா) அறிவிக்கப்பட்டது. அதனை எதிர்த்து 24 மணி நேரத்திற்குள் தி.மு.க. செயற்குழுவைக் கூட்டினார் -அஞ்சா நெஞ்சிற்குரிய கலைஞர் அவர்கள். குறுகிய கால அவகாசத்திலே 75 செயற்குழு உறுப்பினர்களில் 63 பேர் ஆர்த்தெழுந்து விரைந்து வந்து கலந்து கொண்டனர்.

இந்திராவால் இரும்புக் கரம் கொண்டு நெருக்கடிநிலை நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அதனை அஞ்சாது எதிர்த்து முதன்முதலில் இந்திய அளவில் தீர்மானம் நிறைவேற்றியது கலைஞர் தலைமையிலான தி.மு. கழகமே!

தீர்மானம் நிறைவேற்றியதோடு நில்லாமல், 1975 ஜூலை 6 ஆம் நாள் அதாவது நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட 10 நாள்களில் 5 லட்சம் மக்களைச் சென்னைக் கடற்கரையில் கூட்டினார். அக்கூட்டத்தில் மேடையில் நின்ற கலைஞர் 5 லட்சம் பேரையும் எழுந்து நிற்கச் சொன்னார். திராவிட இயக்க உணர்வுள்ள மக்கள் இராணுவம் போன்றவர்கள் அல்லவா, அனைவரும் ஆவேசமாய் எழுந்து நின்றனர்.

“நான் சொல்வதை அப்படியே சொல்லுங்கள்” என்றார்! கலைஞர் சூளுரையைச் சொல்லச் சொல்ல 5 லட்சம் மக்களும் உணர்ச்சிப் பிழம்பாய் சூளுரைத்தனர்.

“எந்த நிலையிலும் எத்தனையோ நெருக்கடி ஏற்பட்டாலும் இந்தியாவில் மக்களாட்சி முறைக்குக் கேடு ஏற்படாமல் பாதுகாப்பதற்குத் தயங்கமாட்டோம் என்று உறுதி கூறுகிறோம்!

தேசத் தலைவர்கள் விடுதலை, பத்திரிகைகளின் நியாயமான உரிமைகள்  இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியப் பிரதமர் அவர்களை, தமிழ்நாட்டு மக்களின் இந்த மாபெரும் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. வாழ்க ஜனநாயகம்!” என்று அனைவரும் சூளுரை ஏற்றனர்.

அந்தச் சூளுரை இந்தியா முழுவதும் எதிரொலித்தது. இந்தியா எங்கும் நெருக்கடி நிலைக்கு எதிராய் மக்கள் கிளர்த்தெழுந்தனர். மக்களின் கொதிப்பு இந்திராகாந்தியை மண்டியிடச் செய்தது.

நெருக்கடி நிலை விலக்கப்பட்டு, மக்கள் எழுச்சிக்குக் கட்டுப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்திராவும், காங்கிரஸும் பெரும் தோல்வி காண நேர்ந்தது. மக்கள் எழுச்சி வென்றது! மக்களாட்சி நிலைத்து நின்றது!

சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே நிலை மதவாத சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சியைப் பிடித்த பா.ஜா.க.வும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஆரிய பார்ப்பன பாசிசத்தை மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தி நிரந்தரமான சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவர நாளும் முயற்சித்து வந்த நிலையில், ஆட்சிக் காலம் முடியவிருப்பதால், முடிந்த அளவு மக்களாட்சியின் கட்டுமானங்களைத் தகர்த்தழிக்கும் சதி வேலைகளைத் தீவிரமாய் செய்து வருகின்றன.

இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை பிரகடனம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுக்கப்
பட்ட தன்னிச்சையான முடிவு. ஆனால், இப்போது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்ஸால் அமல்படுத்தப்படும் மக்களாட்சியின் அடிப்படையைத் தகர்க்கும் முயற்சி, 100 ஆண்டுகளாகத் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் பாசிச செயல் திட்டங்களாகும்.

மூன்று சதவிகிதம் உள்ள ஆரிய பார்ப்பனர்கள் தொண்ணூற்று ஏழு சதவிகித மக்களை அடக்கி, ஆதிக்கம் செலுத்த முயலும் பாசிச செயல்திட்டம் 1925ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது. மூன்று முறை இந்திய அரசால் தடை செய்யப்பட்டாலும் மீண்டும் மீண்டும் தன் ஆக்டோபஸ் கொடுங்கரங்களை இந்தியா எங்கும் பரப்பியுள்ள ஆர்.எஸ்.எஸ். என்னும் அப்பாசிச அமைப்பு பி.ஜே.பி. என்னும் அரசியல் அமைப்பு மூலம் 2014இல்ஆட்சியைக் கைப்பற்றியது. அடுத்த தேர்தலில் அதிக அளவில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

மிகப்பெரும்பான்மை இருக்கிறது என்ற ஆணவத்தில் சனாதன செயல் திட்டங்களை மனம் போன போக்கில் செயல் படுத்தி வருகிறது.
வர்ணாஸ்ரமம், குலக்கல்வி. சமஸ்கிருதத் திணிப்பு; ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே கடவுள், ஒற்றையாட்சி, ஒரே உணவு என்று சர்வாதிகார செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்திவிட வேண்டும் என்ற வெறியில் அரசியல் அமைப்பையே, அரசியல் சாசனத்தையே தகர்க்கும் செயலிலும் ஈடுபட்டு மக்களாட்சியையே ஒழித்துவிட வேண்டும் என்று உறுதியாய் முடிவு செய்து அதற்கான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு வசதியாய் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை, அரசு அலுவலகங்கள் முதல் இராணுவம், நீதிமன்றங்கள்வரை ஊடுரு
வச் செய்து, அவர்களைக் கொண்டு தங்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றி வருகின்றனர்.

மக்களை மேலும் மேலும் வறுமைக்குள்ளாக்கி கார்ப்பரேட் முதலாளிகளை கட்டுப்பாடின்றி வளரச்செய்து வருகின்றனர். அவர்களின் மூலம் ஊடகங்களைத் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைக்கின்றனர்.தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்
கத்துறை, புலனாய்வுத்துறை போன்றவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி அடங்கச் செய்து வருகின்றனர்.
இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை நுழைத்து சமூகநீதியையும், அதன் அடித்தளத்தையும் தகர்த்துள்ளனர்.

மாநில உரிமைகளை முற்றாகப் பறித்து அனைத்து உரிமைகளையும், அதிகாரங்களையும் ஒன்றிய அரசின்பிடியில், கட்டுக்குள் வைத்துக்கொள்ள தொடர்ந்து முயன்று, மாநில அரசின் உரிமைகளை, அதிகாரங்களை ஒவ்வொன்றாய்ப் பறித்து வருகின்றனர்.
மாநிலக் கட்சிகளை அறவே அழிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் பணத்தை அள்ளிக் கொடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றனர்.

மத அடிப்படையில் மக்களை மோதவிட்டும், கலவரங்களை இவர்களே உருவாக்கியும் மத வெறுப்பை வளர்த்து வருகின்றனர். இவ்வளவு காலமாய் அண்ணன் தம்பிகளாய் பழகி வந்த இந்து, முஸ்லிம், கிறித்தவகள் போன்றோர், இவர்களின் மதவெறியூட்டும் பிரச்சாரங்களால், திட்டங்களால் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.

மத அடிப்படையில் மக்களை சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று பிரித்து, சிறுபான்மையினரை இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கி, அவர்களின் உரிமைகளைப் பறிக்கச் சதி செய்கின்றனர்.

உண்மையில் சிறுபான்மையினர், அயல் நாட்டிலிருந்து வந்த ஆரியர்கள்தான். ஆனால் மதத்தால் இந்த மண்ணின் சொந்தக் குடிகளான மக்களை கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று மத அடிப்படையில் பிரித்து சிறுபான்மையினர் ஆக்கி இந்து மதம் என்ற பெயரால் தங்களை பெரும்பான்மையினராகக் காட்டிக் கொண்டு ஏமாற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

மாட்டைத் தெய்வம் என்றும், மக்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் கூறி, மனித உரிமைக்கு எதிராக சாஸ்திரங்களைக் காட்டி, கொடுஞ்செயல் புரிகின்றனர். பசுமாட்டுக் கறியைத் தின்றார்கள்;வைத்திருந்தார்கள் என்று கூறி, மனிதர்களைத் தாக்கிக் கொல்லும் கொடுங்குற்றச் செயல் இன்றளவும் நடக்கிறது.

மதக்கலவரங்களை உருவாக்கும் ஆரிய பார்ப்பனர்கள் என்றைக்கும் எங்கும் பாதிக்கப்படுவதில்லை. தூண்டிவிட்டு அவர்கள் ஒதுங்கிக்கொள்ள, நம்மக்களே மோதிச் சாகின்றனர்.

நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஆரிய பார்பனர்கள் 90%க்கும் மேலான கல்வி வாய்ப்பையும், வேலை வாய்ப்பையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிகாரம்மிக்க பதவிகளையும், நீதிபதிகள் இடங்களையும் அவர்களே அதிகம் கைப்பற்றிக் கொள்கின்றனர். கேட்டால் தகுதி திறமையென்று ஏமாற்றுகின்றனர்.

பொதுப்போட்டி பொதுத்தேர்வுகளில் இன்றைக்கு எந்த ஆரிய பார்ப்பனர்களும் நம் மக்களை விட திறமை மிக்கவர்களாக இல்லை. அவர்கள் சூழ்ச்சி, மோசடி ஏமாற்று மூலமே அனைத்தையும் பெறுகிறார்கள்.

கோயிலுக்கு இடம் தந்து, கோயில் கட்ட பொருள் தந்து, கோயிலைக்கட்ட உழைத்து, கடவுள் சிலையையே செதுக்கிச் செய்து கோயிலுக்குள் வைக்கும் நம் மக்கள் கோயில் கருவறைக்குள் செல்லவும், பூஜை செய்யவும்கூடாது என்று தடுக்கின்றனர். எதையும் கொடுக்காத ஆரிய பார்ப்பனர்கள் கோயிலைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகின்றனர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டங்களை இன்றளவும் முடக்கி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாய் தீர்ப்புச் சொல்லவும் பார்ப்பன நீதிபதிகள் அப்பட்டமாக வரம்பு மீறி ஆரிய சனாதனத்தைக் காப்பாற்றி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ். ஆட்களை ஆளுநர்களாக அமர்த்தி மாநில அரசுகள் மக்கள் நலனுக்கும் தங்கள் சட்டமன்ற முடிவுகளுக்கும் ஏற்ப செயல்படாமல் தடுத்து வருகின்றனர். அத்தகு ஆளுநர்கள் தங்கள் அரசியல் சாசன கடமைகளை மறந்து ஆர்.எஸ்.எஸ். ஆட்களாகவே செயல்பட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் குடியரசுத் தலைவர்தான் இந்தியாவின் முதல் குடிமகன். முப்படைக்கும் அவரே தலைவர். நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் அவர் கையொப்பம் இட்டால்தான் செல்லும். அத்தகு உயர் அதிகாரமும், மாண்பமைச் சிறப்பும் உடைய குடியரசுத் தலைவரையே கோயில்களுக்குள் விட மறுப்பதும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளில் குடியரசுத் தலைவர்களைப் புறக்கணிப்பதும் இந்த ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி ஆட்சியால் செய்யப்படுகிறது. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக குடியரசுத் தலைவர்களையே இழிவுபடுத்தும் இறுமாப்பு மிக்க பாசிச செயல்பாடுகளை பா.ஜ.க அரசு செய்துவருகிறது.

எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இதைக் கண்டித்தாலும், நாங்கள் புறக்கணிப்போம் என்று எச்சரிக்கைவிட்டாலும், நீங்கள் கலந்து கொள்ளாமல் போனால் எங்களுக்கு கவலையில்லை என்று கூறுகின்ற பண்பாடற்ற, ஆணவத்தின் உச்சநிலையில் சர்வாதிகாரப் போக்கில் பதில் அளிக்கத் தொடங்கி விட்டனர்.அரசியல் சாசனத்தை அகற்றும் முயற்சி இந்திய அரசியல் சட்டத்தையே தூக்கியெறிந்துவிட்டு, மனுதர்மத்தைச் சட்டமாக்க முயற்சியைத் தொடங்கி விட்டனர். இந்திய அரசியல் சாசனம் என்ற அடிப்படையில் தான் இந்தியாவின் மக்களாட்சியே கட்டமைக்கப்பட்டுள்ளது அப்படிப்பட்ட அரசியல் சாசனத்தையே தூக்கியெறிந்து, காலத்திற்கொவ்வாத பத்தாம்பசலி சட்டங்களை இந்த அறிவியல் காலத்தில் அமல்படுத்த முயற்சிக்கின்றனர்.

வர்ணாஸ்ரமும், சனாதனமுமே சிறப்பானது என்று ஆளுநர்களை விட்டே அறிவிக்கின்றனர். அரசியல் சாசனப்படி பொறுப்பேற்ற ஆளுநர்கள், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தப்படி செயல்படுகின்றனர்.

சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டங்களுக்கு அனுமதி அளிக்காது முடக்கிப்-போடுகின்றனர். பொது நிகழ்வுகளில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களே சிறந்தவை என்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யும் முடிவுகளுக்கு எதிர்ப்பாய் செயல்படுகின்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வு அளிக்கும் தீர்ப்புகளையே புறந்தள்ளி, தங்கள் சனாதன செயல்திட்டங்களை அமல்படுத்த சட்டத்தையே திருத்த முயற்சிக்கின்றனர். மக்கள் உரிமைகளைக் காக்கும் கடைசி நிறுவனமான உச்ச நீதிமன்றத்தையே அலட்சியப்படுத்துவதன் மூலம், இந்திய அரசியல் சாசனத்தையே உதாசீனப்படுத்துகின்றனர்.

கற்காலக் கல்வித் திட்டம்

கல்வித் திட்டம் என்பது உலக வளர்ச்சிக்கும், அறிவியல், மனித உரிமைகள், பண்பாடு, நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ச்சியை நோக்கி மாற்றியமைக்க வேண்டியதற்கு மாறாக, பழைய குருகுல கல்விமுறையை கொண்டுவந்து குலக்கல்வியை செயல்படுத்த முயற்சிக்கின்றனர். எல்லோருக்கும் கல்வி என்ற நிலையை அகற்றி, எங்களுக்கு மட்டுமே கல்வி என்ற அந்தக் கால வர்ணாஸ்ரம, மனுதர்ம முறையில் நடைமுறைப்படுத்தத் துடிக்கின்றனர். அரசியல் அமைப்பு வழங்கிய குடிமக்களுக்கான உரிமைகளை ஒழித்துக்கட்டப் பார்க்கின்றனர்.

ஒற்றைக் கலாச்சாரம்

இந்தியா என்பது ஒரு நாடாக இன்று இணைக்கப்பட்டாலும், அது பல்வேறு கலாச்சாரங்களை, மொழிகளை, பழக்க-வழக்கங்களை, நம்பிக்கைளை, உணவு முறைகளை, உடைமுறைகளைக் கொண்டது. ஒருவருக்கு ஏற்புடையது இன்னொருவருக்கு எதிராக இருக்கும். மக்களாட்சி நாட்டில் எல்லா மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். எல்லா மக்களின் உணர்வுகளும் மதிக்கப்படவேண்டும்.
ஆனால், ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். கூட்டம் தங்கள் கலாச்சாரத்தை, நம்பிக்கைகளை, ஆதிக்கத்தை அனைவர்மீதும் திணிக்க முயற்சிக்கின்றனர்.

தங்கள் விருப்பப்படியே எல்லோரும் உணவு உண்ண வேண்டும்; உடை உடுத்த வேண்டும். கடவுளை வணங்கவேண்டும்; சமஸ்கிருதத்தையே எல்லோரும் படிக்கவேண்டும்; பிற மதத்தினர் தங்கள் மத நம்பிக்கைகளைக் கைவிட்டு, இந்து மதத்தையே ஏற்க வேண்டும்; ஏற்க மறுத்தால் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் வாழ முடியும்; சைவ உணவுகளையே எல்லோரும் உண்ண வேண்டும்.

நாடு முழுக்க ஒரே சட்டம், ஒரே ரேஷன் அட்டை, ஒரே தேர்வு, ஒரே கல்விமுறை, ஒற்றை ஆட்சி, மத்திய அரசுக்கே அனைத்து அதிகாரங்களும் என்று எல்லாவற்றையும் ஒரு சர்வாதிகாரியிடம் ஒப்படைப்பது போன்ற ஆட்சிமுறையை அமல்படுத்த முனைகின்றனர். அனைவர்க்கும் சமநீதி என்பதை மாற்றி ஆரிய பார்ப்பனருக்கு தனிநீதியென்று செயல்படுத்த முனைகின்றனர்.

மூடநம்பிகைகளை அறிவியலாக்கல்

சோதிடம் என்பது முதல் தர மூட நம்பிக்கை. சோதிடம் உருவாக்கப்பட்ட காலத்திலே இருந்த கோள்களை விட புதிய கோள்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இனியும் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அப்படியிருக்க, பழைய கோள்களை வைத்து சோதிடம் கணிப்பதே முதல் தப்பு. சூரியன் இடம் பெயராத ஒரு நட்சத்திரம். அதை ஒரு கோள் என்று சோதிடம் கூறுவது இரண்டாவது தப்பு. இறைவன் விதியைப் படைத்து விதிப்படி வாழ்வு என்று கூறப்படும் நிலையில் கிரகங்கள் வாழ்வைத் தீர்மானிப்பதாய்க் கூறுவது அடுத்த தப்பு. இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான மூட நம்பிக்கையின் பாற்பட்ட சோதிடத்தை பல்கலைக் கழகங்களிலே பாடமாக வைக்கின்றனர்.
வாஸ்து என்பது அறிவியலுக்கு அறவே எதிரானது. கழிவறை போன்றவை நடைமுறைக்கு வராத காலத்தில் கூறப்பட்டது. அதை கட்டடக் கலை அறிவியலாக பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது மாணவர்களை மடையராக்கும் முயற்சி.

கடலில் உருவான மணல் திட்டை இராமர் பாலம் என்று கூறி இன்றளவு வளர்ச்சித் திட்டத்தை முடக்கிப் போட்டுள்ளனர். இராமர் பாலத்தை இராமரே கலைத்து விட்டார் என்று அவர்கள் நம்பும் சேது புராணம் கூறும் போது இராமர் பாலம் எப்படியிருக்க முடியும். இப்படி அடாவடித்தனமாக அறிவியலுக்கு எதிராக செயல்படும் இந்த பா.ஜ.க. பாசிச அரசை அகற்றியே ஆக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இந்து ராஷ்ட்ரம்

ராமராஜ்யம் என்று சொல்லப்படும் இந்து ராஷ்ட்ரம் அமைக்கவேண்டும், இந்தியா முழுவதும் அந்த ஆட்சியே நடக்க வேண்டும், அகண்ட பாரதமாக அதன் எல்லையை விரிவாக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பியின் இறுதி இலக்கு.
இந்து ராஷ்ட்டிரத்தில் என்பது வர்ணாஸ்ரம தர்மம் நடப்பில் பின்பற்றப்படும் சனாதனம் (மனுதர்மம்) சட்டமாகும். வர்ணாஸ்ரம முறைப்படி அப்பன் தொழிலைப் பிள்ளை செய்ய வேண்டும்.

பிராமணர் எனப்படும் ஆரிய பார்ப்பனர்களுக்கே கல்வி ஆன்மிகப்பணிகள் உயர்பதவிகள். ஷத்திரிய, வைசிய பிரிவுகள் இல்லாமல் போனதால் பிராமணர் தவிர மற்றவர்கள் சூத்திரர்கள். சூத்திரர்கள் என்றால் அவர்கள் பிராமணர்களுக்கு சேவகம் செய்து, உடலுழைப்புப் பணிகளைச் செய்ய வேண்டும்.

ஷத்திரிய வைசிய பிரிவுக்கு மாற்றாக கார்ப்பரேட் முதலாளிகள் அந்தத் தகுதியைப் பெற்று பிராமணர்களுக்கு அடுத்தநிலையில் அவர்களுக்கு உதவியாக இருப்பர்.

அதற்கு ஏற்பத்தான் பி.ஜே.பியின் இந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகளை மட்டும் வளரவிட்டு, ஏழைகளை, அடித்தட்டு மக்களை இன்னும் கீழ்நிலைக்குத் தள்ளிவிட்டனர். அவர்களுக்கு எந்த உதவியும், அவர்களின் வளர்ச்சிக்கு எந்த திட்டமும் இந்த 9 ஆண்டுகளில் அவர்கள் செய்யவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் கீழ்நிலையில் தள்ளப்பட்டால்தான் சூத்திரப்பணிகளைச் செய்வர் என்ற உள்நோக்கத்துடனே அடித்தட்டு மக்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்தைத் தடுத்து வைத்துள்ளனர். கார்ப்பரேட்டுகளை மட்டும் பெருமளவிற்கு வளர்த்துவிட்டுள்ளனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தல்

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இந்திய மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய வரலாற்று முக்கியம் வாய்ந்த தேர்தல்.
எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்றி, மக்கள் விழிப்பின்றி, மதப்பிடிப்பில் மதிகெட்டு பி.ஜே.பி க்கு ஆதரவாய் இருந்து, பி.ஜே.பி. மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமானால், மேற்கண்ட அவர்கள் திட்டங்கள் அனைத்திலும் செயல்படுத்தப்படும். முதல் வேலையாக அரசமைப்புச் சட்டத்தை தூக்கியெறிந்து விட்டு, மனுதர்மத்தை அமல்படுத்துவர்-. ஒற்றைக் கலாச்சாரம், சமஸ்கிருதம் மட்டுமே இந்திய ஆட்சி மொழி, ஒரே மதம், பிற மதங்கள் அறவே ஒழிக்கப்படும். விரும்புகின்ற உணவு உண்ண முடியாத கட்டாயம் உருவாக்கப்படும்.
ஆரிய பார்ப்பன ஆதிக்கமும் சனாதன நடைமுறையும் வரும். மக்களின் கருத்துச் சுதந்திரம் அறவே பறிக்கப்படும். சர்வதிகார ஆட்சி நடைபெறும். மக்கள் அடிமைகளாய் உழைத்து மடிய வேண்டிவரும். இவை மிகைப்படுத்திக் கூறப்படும் செய்திகள் அல்ல. நாம் ஏமாந்தால் நடக்கப் போகும் நிகழ்வுகள்.

எனவே, வரும் நாடளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகள் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து, பி.ஜே.பி. யை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கில், ஒன்றாய் இணைந்து எந்த மாநிலத்தில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு உள்ளதோ அவர்கள் தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து, இடங்களைப் பகிர்ந்து, தேர்தலைச் சந்திக்க வேண்டும். தேர்தலில் பி.ஜே.பி. யைத் தோற்கடித்தே ஆக வேண்டும்.

தமிழர் தலைவரின் எச்சரிக்கை

2024 நாடாளுமன்றத் தேர்தல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் மட்டுமல்ல, மக்களாட்சி நிலைக்க வேண்டுமா? அகற்றப்பட வேண்டுமா என்பதற்குமான தேர்தலும் ஆகும். எனவே, இது ஓர் வாழ்வா? வீழ்வா போராட்டம்.
மக்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். தலைவர்கள் சொந்த வெறுப்புகளைப் புறந்தள்ளி, நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பி.ஜே.பி. மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதையே முதன்மை இலக்காகக் கொண்டு ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். பி.ஜே.பி.யை வீழ்த்த வேண்டும். மீண்டும் ஒருமுறை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களாட்சி ஒழிக்கப்பட்டு, மதவாத சர்வாதிகார ஆட்சியே நடக்கும். அப்படிப்பட்ட பேரழிவை நேராமல் தடுக்க வேண்டியது மதச்சார்பற்ற தலைவர்களின் முதல் கடமையாகும். மக்களும் மத, ஜாதி உணர்வுகளைத் தள்ளி பி.ஜே.பி.யைத் தோற்கடிக்க வேண்டும் என்று இந்தியா அளவில் மதச்சார்பற்ற தலைவர்களையும், மக்களையும் எச்சரித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வியூகம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வழிநின்று கலைஞரின் அரசியல் திறன்களை நன்குக் கற்றுத் தேர்ந்து ஆட்சி செய்வதால், சூழலுக்கு ஏற்ப வியூகங்கள் அமைப்பதிலும், வீணான வாதங்களில் சக்தியை, கவனத்தை திருப்பாது, இலக்கு நோக்கி செயல்படுவதிலும் நாட்டிலே எல்லோருக்கும் எடுத்துக் காட்டாய் உள்ளார். இதை நாட்டிலுள்ள தலைவர்களே ஒத்துக் கொள்கின்றனர். தங்கள் வாயாலே கூறவுஞ்செய்கின்றனர்.
திராவிட மாடல் ஆட்சி என்ற ஆரிய பி.ஜே.பி க்கு எதிரான ஆட்சி முறையை, அஞ்சாத போராட்ட அரசியலை முன்னெடுத்து அனைத்து மக்களின் நலன் காக்கும் செயல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

அவர் இந்தியாவை சூழ்ந்துள்ள கேட்டை, மக்களாட்சிக்கு வந்துள்ள ஆபத்தை நன்குணர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. க்கு எதிரான வியூகங்களை திறமையாக வகுத்து, அவ்வப்போது நாடு முழுவதுமுள்ள தலைவர்களோடு தொடர்பு கொண்டு கலந்துபேசி, வலுவான மதச் சார்பற்ற அணியை உருவாக்கி வருகிறார். அதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். அவர் எடுத்த முயற்சியை இன்று எல்லா மதச்சார்பற்ற தலைவர்களும் வழிமொழிந்து ஆதரிக்கின்றனர்.

மூன்றாம் அணி என்பது பி.ஜே.பி.க்குத்தான் சாதகமாய் முடியும். சொந்த வெறுப்புகளை இந்த நேரத்தில் முன்னிறுத்தக் கூடாது என்பதை முதலில் வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.

அவரின் முயற்சிக்கு ஒவ்வொரு நாளும் ஆதரவு கூடிக்கொண்டே செல்கிறது. கெஜ்ரிவால், மம்தா போன்றோரும் மதச்சார்பற்ற ஓரணியை ஆதரித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மதச்சார்பற்ற அணியின் மீது பற்றும். பி.ஜே.பி மீது வெறுப்பும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அதன் வெளிப்படையான அடையாளந்தான் கர்நாடகத்தில் பி.ஜே.பி அடைந்துள்ள பெருந்தோல்வி. இந்தத் தோல்வி தொடரும். பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அறவே துடைத்தெறியப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் இராமருக்குக் கோயில் கட்டும் இடத்திலே, இஸ்லாமியர் பெற்றிருக்கும் பெருவெற்றி மக்களின் மதச்சார்பற்ற நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவிக்கிறது.

கலைஞர் சூளுரையை மீண்டும் ஏற்போம்!

இந்தியா எங்கும் பி.ஜே.பி.க்கு எதிரான மக்கள் வெறுப்பு வளர்ந்து, மதச்சார்பற்ற அணிக்கு மக்கள் ஆதரவு பெருகினாலும், இந்த கோபக்கனல் தணியாமல் அதை மேலும் சூடேற்றி, பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். சதித்திட்டங்களை, மோசடிப் பிரச்சாரங்களை, ஏமாற்று வேலைகளை முறியடிக்க வேண்டும்.

1975ஆம் ஆண்டு கலைஞர் எடுத்த அதே சூளுரையை இப்போது மீண்டும் எடுத்தாக வேண்டும்.

‘‘மத நல்லிணக்கம், சமூக நீதி காப்போம்! இந்திய அரசியல் சாசனத்தையும், மக்களாட்சியையும் நிலைபெறச் செய்வோம்! பி.ஜே.பிக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இணைவோம்! வரவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பி.ஜே.பி.யை படுதோல்வி அடையச் செய்வோம்! ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அறவே அகற்றுவோம்! கருத்துச் சுதந்திரத்தைக் காப்போம்! மனித உரிமைகள் மீட்போம்!’’ என்று இந்தியா முழுக்க சூளுரை ஏற்கவேண்டும்! ஏற்போம்!
வாழ்க மக்களாட்சி! மலர்க மதச்சார்பற்ற ஆட்சி!