சனாதனமும் சமத்துவமும் நேர் எதிரானவை-புரிந்து கொள்ளுங்கள்!

2023 தலையங்கம் ஜூன் 1-15, 2023

தந்தை பெரியார் ஓர் தலைசிறந்த மனிதாபிமானி  மானுட நேயர். பிறவி பேதமும் அசமத்துவமும் உள்ள மனித குலத்தில் பிறந்த அனைவரும் சமத்துவம், சமஉரிமை, சமவாய்ப்பு, சமூக நீதியுடன் வாழும் உரிமை படைத்தவர்கள்.

இவர்களை பிறவி உயர்வு தாழ்வு கூறி, அவமானப்படுத்தி, உரிமை மறுக்கப்பட்ட அடிமைகளைவிட கேவலமான மிருக நிலைக்கு – தன்மையில் (Dehumanize) வைத்திருப்பதை எதிர்த்தே தனது சுயமரியாதை  பகுத்தறிவு  இயக்கத்தைத் தொடங்கினார்  98 ஆண்டுகளுக்கு முன்பு!

அதற்கு முக்கிய இலக்கு ஜாதி – தீண்டாமை – பெண்ணடிமை ஒழிப்பு  ஆகியவை. எவை ஜாதியை வர்ணதர்மத்தை  மனுதர்மத்தைக் காப்பாற்றி, பேதத்தை வளர்த்து, நிலைநிறுத்த முயலுபவையோ அவற்றை வேரோடும், வேருடன் கூடிய மண்ணோடும் பெயர்த்து எறியவேண்டும் என்ற இலக்கை நோக்கிய அவரது கொள்கைப் பயணத்தில் பெருவெற்றி கண்டார்.

கடும் எதிர்ப்பு, அவருக்கு விளம்பரம் தராத இருட்டடிப்பு, விஷமப் பிரச்சாரம், தவறான திரிபு வாதம் (misinformation) – இப்படிப் பலவற்றைத் தாண்டி அவர் வெற்றி வீரராகத் திகழ்ந்து வருவதுடன், ஆட்சிக்குப் போகாமல் அவரது கொள்கைகள் ஆட்சிகளில் சட்ட, திட்டங்களாகிப் ‘பளிச்’சிடுகின்றன!

இது ஓர் உலக அதிசயம்!

அவர் வாழ்ந்தபோதே அவரது கொள்கை வெற்றியினைக் கண்டு மகிழ்ந்த தலைவர் வரலாற்றில் அவர் என்று அறிஞர் அண்ணா மிகப் பெருமையுடன் குறிப்பிட்டார். என்றாலும் கடவுள் விரோதி, மதவிரோதி, பார்ப்பன விரோதி என்ற பிரச்சாரத்தினைக் கட்டவிழ்த்துவிட்டு, பாமர மக்கள் அவரை வெறுத்து ஒதுக்கவேண்டும் என்று முயற்சித்த ஆரியத்தின் விஷமம் வெற்றியடையவில்லை.
அவரது கடவுள், மத, பார்ப்பனிய எதிர்ப்பின் தேவையும் தன்மையும் ஏன் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அறிவு நாணயத்தோடு  அருமையாக விளக்கியுள்ளார்.

‘‘முதலாவதாக நமக்கு கடவுளைப் பற்றியாவது, மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலையில்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீக்கி, அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கின்றோம்.
அதுவும் பலர் இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும், கொண்டு வந்து குறுக்கே போட்டுவிட்டதால்தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டியதாயிற்றேயொழிய, உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை.’’

இதைவிட எப்படி ஒருவர் தெளிவுபடுத்த முடியும்!

ஜாதியும், தீண்டாமையும், பெண்ணடிமையும் மனிதத்திற்கு எதிராக உள்ளவை; அவற்றை அழிக்க உண்மையில் முயற்சிக்கும் எவரும் நோய்நாடி, நோய்முதல் நாடவேண்டாமா?
எனவேதான் தனது வாழ்நாள் இலக்காக ஜாதி ஒழிப்பை  மனித சமத்துவத்தை தந்தை பெரியார் முன்னிறுத்தி, தனி இயக்கம் கண்டார்!
இன்று அவரை ‘ஹிந்து’ எதிரி என்று கூறுவோரைக் கேட்கிறோம்.

உங்களது ஹிந்து மதம் என்பது ஜாதி  வர்ண பேதம் இல்லாத சமத்துவ மதமா?

ரிக் வேதத்தில் புருஷ சூக்தம் தொடங்கி, மனு ஸ்மிருதி, பின்னால் பாரதத்தின் இடைச் செருகலான பகவத்கீதை முதலானவற்றில் ஜாதி _ ‘சாதுர்வர்ண்யம் மயா சிருஷ்டம்’ கடவுள்களால் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அரசியல் சட்டம், கோயில் கருவறை எல்லாம் சர்வ அங்கமாய் பரப்பப்படுவதாலும், அவற்றை நியாயப்படுத்த ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் அதன் கோல்வால்கர் போன்ற தத்துவ கர்த்தாக்களும் உள்ள நிலையில், அந்த மதம்தான் பார்ப்பன -_ வேத, சனாதன மதம் என்றால் அதைக் கண்டிக்காமல், ஒழிக்காமல், எப்படி

மனிதகுல சமத்துவத்தை உருவாக்கமுடியும்?
கிருமிகளை அழிக்காமல் நோயைத் ஒழிக்க முடியுமா?
இது எப்படி வெறுப்புப் பிரச்சாரம் ஆகிவிடும்?
கிருமியை அழித்து, நோய் தடுப்பு சிகிச்சை செய்வதை வெறுப்புப் பிரச்சாரம் என்று சொல்வது பகுத்தறிவா?
தந்தை பெரியாரே பலமுறை சொன்னார்:
ஜாதி, வர்ணம் இல்லாத ஹிந்து மதம் உண்டா?
ஜாதியை வற்புறுத்தும் கடவுள் இல்லாத ஹிந்து மதம் உண்டா?
மனிதர்களின் மானத்தையும், அறிவையும் பறிமுதல் செய்து, அவர்தம் கல்வி உரிமைகளை உழைக்கும் மக்கள் பெறுவதைத் தடுக்கும் மதம்

மனித நேயமுள்ள மதமா?

இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று தத்துவப் பிரகடனங்கள் இடம் பெற்றுள்ளதைக் கண்டு, நெருப்பில் நின்றவர் துள்ளிக் குதிப்பதுபோலக் குதித்து, மனுதர்மம் அல்லவா அரசியல் சட்டமாகி இருக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘ஆர்கனைசரி’ல் தலையங்கம் தீட்டியது. இன்று 9 ஆண்டுகளில் மெல்ல மெல்ல உறுதியாக நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆட்சியை எப்படியோ வித்தைகள் _ உத்திகள் மூலம் பிடித்து நடத்திக்கொண்டு வருகிறார்கள் இல்லையா?
எனவே, 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் உள்ள கொள்கை லட்சியங்கள் நேர் முரணானவை. ஒன்று மனிதநேயம்; மற்றறொன்று பேதத்தை நிலைநாட்டும் வேத மரபு  புரிந்துகொள்வீர்!

– கி.வீரமணி
ஆசிரியர்