அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (315)

Uncategorized அய்யாவின் அடிச்சுவட்டில்

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (315)திண்டுக்கல் திராவிடர்எழுச்சிமாநாடு
-கி.வீரமணி

தஞ்சாவூரில் 23.4.2003 அன்று மாலை 6:00 மணிக்கு பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள இராமநாதன் மன்றத்தில் ‘உலகப் புத்தக நாளை’ முன்னிட்டு இராமாயண ஆராய்ச்சி நூல் அறிமுக விழாவும், பெரியாரியல், வால்மீகி இராமாயண சம்பாஷணை, சேரன்மாதேவி குருகுல போராட்ட வரலாற்றுச் சுவடுகள் ஆகிய நூல்களின் ஆய்வுரை விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு, பண்டித இ.மு. சுப்பிரமணியபிள்ளை எழுதிய நூலை நாம் வெளியிட்டு சிறப்புரையாற்றினோம். காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் வழக்குரைஞர் தஞ்சை
ஏ. இராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் என். சீனுவாசன், கிங்ஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர்வ. பாலகிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்அ. சிதம்பரம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

23.4.2003 அன்று திருவாரூரில், வி.கே.ஆர்.ரசல்- கே.ஓ சீனாரோசி ஆகியோரின் இணையேற்பு விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தோம். அப்போது, மணமகன் ரசலின் பாட்டியார் (அன்னையாரின் அன்னை வயது 92) கனகம்மாள் அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தோம்.

வேலூரை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டை வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் 27.4.2003 ஞாயிறு அன்று காலை 8:00 மணிக்கு ஆரணிநகர் தேவூர்க. ஏகாம்பரம்- ஏ. இராசேசுவரி ஆகியோரின் மகன்
ஏ. சோழன்(எ) ரமேசுக்கும் போளூர் தாலுகா சி. தனசேகர் – த. சசிகலா ஆகியோரின் மகள்
த.பாரதிக்கும் நடைபெற்ற மணவிழாவிற்கு தலைமையேற்று நடத்திவைத்து, கொள்கைகளை விளக்கி உரையாற்றினோம்.

கடலூர் முதுநகரில் 2.5.2003 அன்று இரவு 7:00 மணிக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், திருச்சி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதிக்காக எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழாவும் (ரூ.10,000) டாக்டர் பட்டம் பெற்றமைக்குப் பாராட்டு விழாவும், என்னுடைய பெற்றோர்கள் சி.எஸ். கிருஷ்ணசாமி- மீனாட்சி- பட்டம்மாள் நினைவாக தந்தை பெரியார் படிப்பகத் திறப்பு விழாவும் ஆக முப்பெரும் விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
செட்டிக்கோவில் திடலில் இரஞ்சிதம் நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இரவு 7:00 மணிக்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினோம். கூட்டத்திற்கு மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் க. அறிவுக்கரசு தலைமை தாங்கினார். இறுதியாக துரை. சந்திரசேகரன் நன்றி கூறினார்.

வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் புதுடெல்லி அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அங்கீகாரத்துடன் துவக்கப்படும் தொழில் முனைவோர் மேலாண்மை மேம்பாட்டு மய்யத் தொடக்கவிழா 3.5.2003 அன்று மாலை 4:00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் முதல்வர் டாக்டர் ச. இராசசேகரன் வரவேற்புரையாற்றினார். ‘பவர்’ அமைப்பின் செயலாளர் உ.பர்வீன் இம்மய்யத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கவுரையாற்றினார். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் தாளாளர் டாக்டர் வி. சுந்தரராஜுலு, திருச்சி பாரத மிகுமின் நிறுவன முதுநிலை துணைப் பொது மேலாளர் கே. சக்தி, பெரியார் நூற்றாண்டு மகளிர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் இ. வெங்கடாசலம், அய்.ஏ.எஸ்.(ஓய்வு), வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி தாளாளர், எஸ். இராஜரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் என்கிற முறையில் நாம் உரையாற்றுகையில், விதி, தலையெழுத்து நம் கையில் எதுவும் இல்லை, மூளை விலங்குகளை உடைத்தெறிந்து நம்மால் எந்தத் தொழிலையும் வேற்றுமை பாராட்டாமல் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையோடும் துணிவோடும் தொழிலைத் துவங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை வலியுறுத்தினோம். பெரியார் பாலிடெக்னிக் துணை முதல்வர் ஆர். மல்லிகா நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.
பெரியார் லெனின் – கோ. சுசரிதா இணையேற்பு விழா 4.5.2003 அன்று எமது தலைமையில் இராமநாதபுரத்தில் நடந்தது.

திருச்சி ஞானசெபஸ்தியான் அவர்களின் பேரனும் சுரேந்திரதாமஸ் – மாதரசி ஆகியோரின் மகனுமான ஆல்பர்ட் அசோகனுக்கும், வி. செல்வராகவன் அவர்களின் மகள் சண்முகப்பிரியாவுக்கும் இணை ஏற்பு விழா 12.5.2003 காலை 10:00 மணிக்கு திருச்சி முத்துமகாலில் நடைபெற்றது. ‘ஜார்ஜ் அடிகளார், தஞ்சை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ். உபயதுல்லா, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் இராமசாமி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக சுயமரியாதைத் திருமணச் சிறப்புகளை விளக்கி உரையாற்றினோம்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி வை. முருகேசன்(மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்)_ பூபதி ஆகியோரின் செல்வன் அலெக்சாண்டர் (எ) இராசராசன், முத்தையன்_ சரஸ்வதி ஆகியோரின் மகள் அன்பரசி ஆகியோர் இணைஏற்பு விழாவை 16.5.2003 அன்று தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.
18.5.2003 அன்று காலை 10:00 மணிக்கு கவித்துவம் சுந்தர்ராஜம் இல்லத்தைத் திறந்து வைத்து உரையாற்றினோம்.
திண்டுக்கல்லில் சிவசேனாவைச் சேர்ந்த கயவர்களால் கழகப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற நகர தி.க. செயலாளர் பழ.இராஜேந்திரனை கொலை செய்ய முயற்சி 10.5.2003 அன்று நடைபெற்றது. அதில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய தோழர் ராஜேந்திரனை சுற்றுப்பயணத்திலிருந்து நாம் 11.5.2003 அன்று திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சந்தித்து நலம் விசாரித்தோம்.

தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் டேவிட் சீ. தங்கதுரையின் மகள் த. எழிலரசி – ஆ. பாலகிருட்டினன் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.

22.5.2003 அன்று மாலை நாகர்கோவில் ஒழுகினசேரியில் தந்தை பெரியார் சிலை அருகே கட்டப்பட்டுள்ள புதிய கட்டடமான பெரியார் மய்யத்தைத் திறந்து வைத்தோம். கட்டடத்தைத் திறந்து வைக்க வருகை தந்த குமரி மாவட்ட தி.க. தலைவர் ப. சங்கரநாராயணன் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பெரியார் மய்யம் மக்களுக்குப் பயன்படும் வகையில் நூலகம், படிப்பகம், மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி போன்றவை நடத்தி உள்ளூர் மக்கள் பயன்பெற வேண்டியன செய்வதாக அப்போது உறுதியளித்தோம். மேலும், பகுத்தறிவு நூல்கள் விற்பனை நிலையமும் அமைய இருப்பதைக் கூறி மக்களை மகிழ்ச்சியடையச் செய்தோம்.
24.5.2003 அன்று சோழங்கநல்லூர் பெரியார் நகர் ப. நல்லமுத்து_ பிச்சையம்மாள் ஆகியோரின் மகன் ந. தனசேகரன் விச்சூர் சண்முகம்_ நளாயினி ஆகியோரின் செல்வி ச. சரஸ்வதி ஆகியோரின் இணையேற்பு நிகழ்வுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்தோம்.

நாகை மாவட்டம் சோழங்கநல்லூர்- கொட்டாரக்குடியில் 24.5.2003 அன்று மாலை 9:00 மணியளவில் மாவட்ட விவசாய அணிச்செயலாளர் எம்.ஆர். பொன்னுசாமி இல்லத்தினைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினோம்.
தாம்பரம் மாவட்ட தி.க. செயலாளர் ஆர்.டி. வீரபத்திரன் அவர்களுடைய துணைவியார் கஸ்தூரி அம்மையார் அவர்களின் படத்தை 28.5.2003 மாலை 6:00 மணிக்கு திருவான்மியூரை அடுத்த நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினோம்.

‘சரஸ் சாரல்’ இதழுக்கு 30.5.2003 அன்று நாம் அளித்த போட்டியின் போது திராவிடர் கழகம் மிகுந்த துடிப்போடும் வேகத்தோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரியாருக்குப் பிறகு இந்த முப்பதாண்டு காலத்தில் திராவிடர் கழகம் அடைந்துள்ள வளர்ச்சி அபரிமிதமானது. எழுபதுகளில் இந்த இயக்கம் தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில்தான் அதிகமாகத் தெரிந்திருந்தது. ஆனால் இன்று தலைநகர் டெல்லியிலும் அமெரிக்காவிலும், அய்ரோப்பிய நாடுகளிலும் கூட பெரியார் மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலகெங்கும் பெரியாரின் புரட்சிக் கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இன்றும் ஒரு சக்தி வாய்ந்த சமூகச் சீர்திருத்த இயக்கமாகவும் மூடத்தனங்களுக்கு எதிரான போர்வாளாகவும் திராவிடர் கழகம்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கிக் கூறினோம்.

தஞ்சை – வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரியில் 1.6.2003 ஞாயிறு முற்பகல் 11:00 மணிக்கு தஞ்சை- வல்லம் கி. ரெங்கராஜுலு- பத்மாவதி ஆகியோரின் மகன் ரெ. பிரபாகரனுக்கும் (விடுதலை நாளேட்டின் அச்சக சூபர்வைசர்) விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மொ. ராமசாமி ந. தனலெட்சுமி ஆகியோரின் மகள் ரா. கோல்டாமேயர் (இளநிலை உதவியாளர், அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை) ஆகிய இருவருக்கும் இணையேற்பு நிகழ்வை தலைமையேற்று நடத்தி வைத்துச் சிறப்புரையாற்றினோம்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நகர தி.க. தலைவர் பெரியார் பெருந்தொண்டர் கு. கண்ணுச்சாமி அவர்களின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம் அறந்தை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள குருசாமி வளாகம் கண்ணுச்சாமி இல்லத்தில் 1.6.2000 இரவு 7.00 மணிக்கு எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு, அவரது தொண்டுகளைப் பாராட்டி சிறப்புரையாற்றினோம்.

உரத்தநாடு ஒன்றியம் பருத்திக்கோட்டையில் 6.6.2003 வியாழன் அன்று காலை 10:00 மணிக்கு கா. நாகராசன்_ மங்கம்மாள் ஆகியோரின் மகனும் பருத்திக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விடுதலை சுவையகம் ஞா. தமிழ்ச்செல்வம் அவர்களின் சகோதரருமான நா. குணசேகரனுக்கும் கண்ணந்தங்குடி கீழையூர் சி. கலியமூர்த்தி- தமிழரசி ஆகியோரின் மகள் க. புனிதாவுக்கும் இணையேற்பு விழாவை தலைமையேற்று நடத்திவைத்தும், தந்தை பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்தும் சிறப்புரையாற்றினோம்.

திண்டுக்கல் நகரில் 6.6.2003-இல் திராவிடர் கழகம் நடத்திய திராவிடர் எழுச்சி மாநாடு இயக்க வரலாற்றிலும் இனவரலாற்றிலும் புத்தம் புதிய பொன்னேடாக இணைந்தது:
பேரணியும், மாநாடும், நகரம் காட்டிய எழுச்சியும் நீண்ட காலத்திற்குத் திண்டுக்கல் மக்களால் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் கழக எழுச்சி வீரர் திண்டுக்கல் நகர செயலாளர் பழ. இராசேந்திரனைப் படுகொலை செய்ய முயன்ற நிலையில், எழுந்தது திராவிடர் சேனை என்கிற தன்மையில் நிகழ்ச்சிகள் எல்லாம் எரிதழல்போல் சூடேறிக் காணப்பட்டன.

திண்டுக்கல் முக்கிய வீதிகளின் வழியாக கார்கள், மோட்டார் சைக்கிள்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன அணிவகுப்புடன் ஊர்வலமாக கழக இளைஞரணித் தோழர்கள் எழுச்சி முழக்கங்கள் முழங்க திண்டுக்கல் நகரமே அதிர நகருக்குள் நுழைந்தனர்.

சாலை இருமருங்கிலும் மக்கள் எமக்கு வணக்கம் தெரிவித்தும், கை அசைத்தும் தமது அன்பையும், ஆதரவையும் தெரிவித்த வண்ணம் இருந்தார்கள்.

ஆரியத்தின் அகந்தையை அடக்க, சமதர்ம சமுதாயம் படைக்க, மதவெறியை மாய்த்து மனித நேயம் காக்க திக்கெட்டிலுமிருந்தும் திரண்டனர் திராவிடர் இனமக்கள். திராவிடர் எழுச்சியால் திணறியது திண்டுக்கல்! மூடத்தனத்தை முறியடித்து, இந்துத்துவாவின் முதுகெதும்பை முறியடிக்கும் எழுச்சிப் பேரணி அணி வகுப்பு நடைபெற்றது.

மக்கள் நடமாட்டமுள்ள முக்கிய வீதிகளில் கழகக் கொடிகளும் கழகத் தோரணங்களும், கொள்கை விளக்கும் விளம்பரத் தட்டிகளும் ஆக்கிரமித்திருந்தன.

ஆயிரக்கணக்கான ராசேந்திரன்கள்
ஒரு பழ. ராசேந்திரனை நீங்கள் கொல்லலாம் என்று நினைத்தால் ஆயிரக்கணக்கான ராஜேந்திரன்களை உருவாக்கக்கூடிய இயக்கம்-தான் இந்தப் பட்டறை. அதை மறந்துவிடாதீர்கள் (பலத்த கை தட்டல்).
இதோ இருக்கின்ற மக்கள் கூட்டம் இருக்கின்றதே உங்களைவிட எங்களுக்கு உற்றார் உறவினர்கள் கிடையாது.
மனிதநேயம் தான் எங்கள் கொள்கை என் எதிரிலே இருக்கின்ற மக்களுக்கு மட்டுமல்ல, உலகத்தின் கடைகோடியில் இருக்கின்ற மக்களுக்கும்கூடச் சொல்லுகின்றோம்.

மனிதநேயத்திலே, பகுத்தறிவுக் கருத்திலே யார் யாருக்கு நம்பிக்கை இருக்கின்றதோ, அவர்கள் எல்லாம் மக்களுடைய உற்றார், உறவினர்கள் என்று நினைக்கக் கூடியவர்கள் நாங்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்று சொல்லக்கூடிய உணர்வு படைத்தவர்கள் நாங்கள்.
ஜாதி மதத்தை ஒழிப்போம்!

இந்த இயக்கத்தினுடைய கொள்கைகளை ஏற்று மிக வேகமாகச் செயல்படுத்துங்கள். மூடநம்பிக்கைப் போதைகளுக்கு ஆளாகாதீர்கள். மூடநம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைப்போம். ஜாதியை ஒழிப்போம். மதவெறியை மாய்ப்போம்¢; மனிதநேயத்தைக் காப்போம். மூடநம்பிக்கைகளைத் தகர்ப்போம். முழு பகுத்தறிவுவாதிகளாக மக்களை மாற்றுவோம் என்று கூறி, இவ்வளவு பெரிய சிறப்பான மாநாட்டை குறுகிய காலத்திலே நடத்திய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ராசேந்திரனை சரியான நேரத்தில் காப்பாற்றிய வீரபாண்டியன்  தோழர் ராசேந்திரன் அவர்களை சரியான நேரத்தில் காப்பாற்றிய தோழர் வீரபாண்டியன் உள்ளபடியே சிறப்பான பணி செய்தவர். எங்களுடைய தோழர்கள் எல்லோரும் தூக்கமின்றி இரவு பகலாக உழைத்திருக்கின்றார்கள். அந்தக் கண்மணிகளின் தொண்டுக்கு தலை வணங்கி நான் பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பணி தொடரட்டும்.

எங்கு பார்த்தாலும் இந்தக் கொள்கைகளை எழுதிப் பரப்புவோம். அதை எழுதக் கூடிய பலர் வருவார்கள் என்று எமது உரையில் குறிப்பிட்டோம்.

திண்டுக்கல் மாவட்டமே விழாக்கோலமாக காட்சி அளித்தது. 6.6.2003 காலை முதற்கொண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் வாகனங்களிலும் வருகை தந்த வண்ணம் இருந்தனர். திண்டுக்கல் மாநகரமே கருஞ்சட்டை மயமாய் காட்சி அளித்தது. மாலை 5:00 மணியளவில் பாப்பா நாடு எஸ்.பி. பாஸ்கரின் இன்னிசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது.

தென் மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் தே.எடிசன்ராசா மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டில் “பெண்ணுரிமையைக் காப்போம்; பெண்ணடிமையைத் தகர்ப்போம்’’ என்கிற தலைப்பில் தாம்பரம் தாட்சாயிணி உரையாற்றினார். “தடைகளைத் தகர்ப்போம்; தந்தையின் பணி முடிப்போம்’’ என்கிற தலைப்பில் வழக்குரைஞர் கி. மகேந்திரன் அவர்களும் “மதவெறியை மாய்ப்போம்; மனித நேயம் காப்போம்’’ என்கிற தலைப்பில் சு. அறிவுக்கரசு அவர்களும், “இன இழிவை ஒழிப்போம்; இனமானம் காப்போம்’’ என்னும் தலைப்பில் துரை. சந்திரசேகரன் அவர்களும் எழுச்சியுரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர் துரை. சக்ரவர்த்தி அவர்கள் உரையாற்றியபின், எழுச்சிமிகு மாநாட்டின் இறுதியில் நாம் நிறைவுரையாற்றனோம்.

ஈரோட்டில் 7.6.2003 சனியன்று மாலை 6:00 மணிக்கு கிருஷ்ணா திரையரங்கம் அருகில் தந்தை பெரியார் எழுதிய வால்மீகி இராமாயண சம்பாஷனை, நான் எழுதிய பெரியாரியல் ஆய்வுரை, சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் ஆகிய நூல்கள் அறிமுக விழாவும் பெரியார் பெருந்தொண்டர் டாக்டர் சி. நடேசனார் அவர்களின் 108 ஆம் பிறந்தநாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது. நாம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினோம்.
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பெரியார் உடற்பயிற்சிக் கூடத்தை 8.6.2003 அன்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினோம். நிகழ்ச்சிக்கு பெரியார் மகளிர் மருந்தியல் கல்லூரித் தாளாளர் ஞானசெபஸ்தியான் முன்னிலை வகித்தார். இவ்வுடற்பயிற்சியகம் 14க்கும் மேற்பட்ட நவீனக் கருவிகளுடன் கூடிய எழில்மிகு கட்டடத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டில் 11.6.2003 புதன் அன்று மாலை 6:00 மணிக்கு வேதாசலநகர் நாதாமகாலில் செங்கல்பட்டு என்.கோவிந்தன்_ நாகபூஷணம் ஆகியோரின் மகன் ஜி. குமாருக்கும் செங்கல்பட்டு இ. அண்ணாமலை _ ராதா ஆகியோரின் செல்வி அ. அம்சாவுக்கும் நடைபெற்ற இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று, ஒப்பந்த உறுதிமொழியேற்கச் செய்து சிறப்புரையாற்றினோம்.

9.6.2003 திங்கள் அன்று காலை 10:00 மணிக்கு திருவையாறு சிறீதியாகராசர் சுபா திருமண மண்டபத்தில் பெரியார் பெருந்தொண்டர் வி. கோவிந்தராசன்- கவுசல்யா ஆகியோரின் மகன் கோ. ரமேசுக்கும் பெரம்பலூர் என். புதூர் பி. மருதை_ பாப்பாத்தி ஆகியோரின் மகள் ம. வினோதாவுக்கும் நடைபெற்ற இணையேற்பு நிகழ்விற்குத் தலைமையேற்று நடத்தி வைத்து சுயமரியாதைக் கருத்துகளை விளக்கி உரையாற்றினோம்.

குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 19.6.2003-இல் தொடங்கி 22.6.2003 வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வகுப்புகள் நடத்தி நிறைவு விழாவில் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கினோம்.
நினைவுகள் நீளும்….