உலகெங்கும் வாழ்கின்ற தொழிலா ளர்கள்
உவகையுடன் கொண்டாடும் திருநாள் ‘மே’ நாள்!
பலர்வாழச் சிலர்வாடி வதங்கி நாளும்
பன்னரிய துயரெய்தி உழைக்கின் றார்கள்!
நலம்சேர்க்கும் அவர்களது வாழ்வில் எந்த
நன்மைகளும் விளையாமல் இருத்தல் நன்றோ?
உலகுயர உழையானைக் கொடிய நோயன்
ஊர்திருடி என்றார்பா வேந்தர் அந்நாள்!
எல்லாமும் உருவாக்கி மக்கள் எல்லாம்
இன்புறவே செய்வோர்யார்? தங்கள் வாழ்வில்
சொல்லவொணாத் தீவறுமை சூழ்ந்த போதும்
சுறுசுறுப்பாய் பரபரப்பாய் இயங்கி நாட்டில்
நல்லனவே நாடுகின்ற நாட்டம் மிக்கோர்
நாம்மதிக்கும் உழைப்பாளர் ஆவர்! என்றும்
பல்வேறு வளங்களையும் நிகழ்த்திக் காட்டிப்
பாரெங்கும் மாற்றத்தைத் தருகின் றார்கள்!
இல்லாமை ஏழ்மையிலே உழன்ற போதும்
இரண்டகத்தை எவருக்கும் எண்ணார்! வீணே
பொல்லாத ஒன்றுக்கே துணையும் போகார்!
பொருள்தேடி வஞ்சகத்தை, தீங்கை நாடார்!
கல்லாமல் இருந்திடினும் உலகப் போக்கைச்
கற்றுணந்த உயர்மனத்தர்! பொதுவாய் நாட்டில்
எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்ப தற்கே
இரவுபகல் பாராமல் உழைக்கும் மேலோர்!
மண்ணெல்லாம் பொன்னாக்கும் மாண்பு மிக்கார்
மக்கட்குப் பசியாற உணவை நல்கும்
எண்ணத்தைக் கொண்டோர்கள்; கடலில் மூழ்கி
இன்முத்தை எடுப்போர்கள் எந்த நாளும்
உண்மைக்கும் நன்மைக்கும் பாடு பட்டே
உயர்வெங்கும் மிளிர்ந்திடவே தொழில கத்தில்
திண்ணியராய் உழைப்போரை நாமும் போற்றித்
தேன்தமிழாய்ப் பாராட்டி வாழ்த்து வோமே! றீ