மகளிரின்மகத்தான மனிதநேயப் பணிகள்! – வி.சி. வில்வம்

2023 கட்டுரைகள் மற்றவர்கள் மே 1-15,2023

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறார்கள். ஆனால் அது போதுமானதாக இல்லை என்பது தான் உண்மை!

கப்பல், விமானம், ராக்கெட் எனப் பெண்கள் உயரப் பறந்தாலும், கோயம்புத்தூரின் பேருந்து ஓட்டுநர் சர்மிளா அவர்களைத் தமிழ்நாடே உச்சிமுகர்ந்து பாராட்டுகிறது.

காரணம் ஓட்டுநர் வேலை கடினமானது. அதிலும் பேருந்தை இயக்குவது பல வழிகளில் சிரமமானது. ஆனால் அவற்றையெல்லாம் முழுவதுமாக அறிந்து, நான் சிறப்பாக செய்வேன் என்று, தனது பக்குவமான பதில்களால் நிறைய நேர்காணல்கள் கொடுத்து வருகிறார்.

நிறைய வருமானம் வருகிறது என்பதற்காக மட்டும் எல்லோரும் எல்லா வேலைகளையும் பார்த்துவிடுவதில்லை. முடிதிருத்தும் நிலையத்தில் ஒரு நபருக்கு ரூ. 150 வாங்குகிறார்கள் எனச் சிலர் பெருமூச்சு விடுவார்கள். அதிக வருமானம் வரும் வேலையை தாங்கள் செய்தால் என்ன என்றால் கோபப்படுவார்கள்.

எத்தனை இலட்சம் கொடுத்தாலும் பார்க்க மாட்டேன் என்பார்கள். இது ஒரு வகையான உளவியல்.
தவிர சம்பளம் பொருட்டல்ல என்று கூறி, வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பணிகளில் பெண்ணினம் அதிகப்படியான சேவையை நாட்டிற்கு வழங்கி வருகிறது!

ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களில் பணிபுரியும் மகளிருக்கு, வாங்கிய சம்பளத்தை வைத்து சந்தோசமாகக் கூட இருக்க முடியாது. அவர்கள் காணும் மனிதர்கள் யாவருமே ரணம் நிறைந்தவர்கள். சோகங்களைக் கிலோ கணக்கில் தினமும் உதிர்ப்பவர்கள். அழுகையும், உம்மென்ற முகமும் அவர்களின் வாழ்நாள் சொத்து.
இப்படியான பலநூறு மனிதர்களின் மத்தியில் தான், இந்த மகளிர் வாழ்கிறார்கள். சமூக உணர்வும் மனித ஆர்வமும் இருப்பதால் தான் முதியோர்கள் பலரும் உயிரோடு வாழ்ந்து வருகிறார்கள். சகிப்புத்தன்மையும், பொறுமையும் கொண்ட இதுபோன்ற வேலைக்கு எத்தனை எத்தனை ஆயிரங்கள் கொடுத்தாலும் எல்லோரும் பணிக்கு வந்துவிடுவதில்லை!

இந்த வரிசையில் முக்கிய-மான பணி செவிலியர். வேலை என்பதை விட சேவை என்றே சொல்லலாம்! பெரிய பெரிய மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒருநாள் நின்றால் போதும். இந்த உலகம், உயிர், பணம், வாழ்க்கை அனைத்தும் தூசி போல பறந்துவிடும்.

விதவிதமான விபத்துகள், காயங்கள், உயிர் சேதங்கள், உடல்களை அள்ளிக் கொண்டும், சுருட்டிக் கொண்டு வருதல் என, அடச்சே! என்னடா வாழ்க்கை! என்பதை ஒரு அரைமணி நமக்கு உணர்த்திவிடும்.
இப்படியான சோக உலகத்தை தம் சுறுசுறுப்பால், தம் பொறுமையால், தம் நிதானத்தால், தம் பக்குவத்தால் பார்த்துப் பார்த்து ஒவ்வொருவரையும் வீட்டிற்கு நலமாக அனுப்பி வைக்கும் அந்தப் பணி இருக்கிறதே அதுதான் செவிலியர் பணி.

அவர்களை செவிலித்தாய் என்றும் சொல்வார்கள்!

நோயாளிகள் உயிரோடு போராடுகிறார்கள் என்றால், அவர்கள் உயிர் வாழ இவர்கள் போராடுவார்கள்! மற்ற தொழில்கள் போல தவறுகள் நடந்தால் திருத்திக் கொள்ள முடியாது! இவர்கள் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இயங்க வேண்டும்!

பணி நேரம் முழுக்க இவர்கள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். மன மகிழ்ச்சிக்கோ, மன நிறைவிற்கோ அங்கு இடமில்லை. மாறாக மாத்திரைகளும், மருந்துகளும், பேண்டேஜ்களும், ஊசிகளுமாக நொடி தோறும், நொடி தோறும் இந்த நெடிகளையே அவர்கள் சுவாசிக்க வேண்டும். வீட்டிற்குச் சென்ற பிறகும் இந்த வாசனைகள் போய்விடாது!
சதையும், எலும்பும் நொறுங்கி, ஆங்காங்கே அழுகை சத்தம் கேட்டு, அவ்வப்போது மனித இரத்தங்கள் பார்த்து, அதையும் மீறி பொறுமையும், நிதானமும், புத்திசாலித்தனமும், அனுபவமும் கொண்டு பல்லாயிரம் மக்களைத் தினமும் பாதுகாக்கிறார்கள்!

எத்தனை ஆயிரங்கள் கொடுத்தாலும், இந்தப் பணிகளுக்கு ஈடுயிணை ஆகுமா! எல்லோரையும் நலமுடன் வாழ வைக்கும் செவிலியர் வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயர வேண்டும்!