திருவாங்கூரும் பார்ப்பனியக் கொடுமையும்

2023 ஏப்ரல் 16-30,2023 கட்டுரைகள் பெரியார்

– தந்தை பெரியார்

திருவாங்கூரில் சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்களது ஆட்சி இன்று ஒரு குட்டி ஹிட்லர் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. அங்கு அடக்குமுறை தாண்டவமாடுவது மாத்திரமல்லாமல் அது ஒரு பார்ப்பன ராஜ்ஜியமாகவே ஆக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. அதன் முழு விபரத்தையும் அங்கு நடக்கும் பார்ப்பனக் கோலாகலங்களையும் வெளி ஜனங்கள் அறிய முடியாமல் செய்வதற்கு எவ்வளவு சூழ்ச்சி செய்யலாமோ அவ்வளவும் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள பத்திரிகைகள், உள்ள விஷயங்களை வெளியிட்டதற்கு ஆக, ஜாமீன் பறிமுதல் செய்யப்-பட்டதோடு, பத்திரிகை நடத்த கொடுத்திருந்த அனுமதியையும் கேன்சல் (தள்ளுபடி) செய்யப்பட்டு வருகிறது. அசோசியேட் பிரஸ் என்னும் இந்தியப் பத்திரிகைச் செய்தி ஸ்தாபனத்தையும் விலைக்கு வாங்கப்பட்டோ அல்லது வேறு வழியில் கைவசப்படுத்தப்பட்டோ அதன் மூலம் விஷயம் வெளியாக்கப்படாமல் தடுக்
கப்பட்டு வருகிறது. சென்னைத் தினசரி பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பனப் பத்திரிகைகளானதாலும் பார்ப்பன நிருபர்களையே கொண்டவைகளானதாலும் விஷயங்கள் வெளியாகாமல் அடக்கிவிடப் படுகின்றன.

சர்வம்பார்ப்பனமயம்

இந்நிலையில் திருவாங்கூர் பிரஜைகள் வதைபடுத்தப்படுகிறது ஒருபுறமிருக்க அதிகார ஸ்தானம், பெரும் பெரும் உத்தியோகம் மற்றும் பெருத்த வியாபாரத்துறை முதலியவை பார்ப்பன மயமாகி பகற் கொள்ளைக்கு லைசென்சு பெற்ற மாதிரி திருவிதாங்கூர் சர்க்கார் பொக்கிஷமும் மிகவும் கொள்ளை போவதாகச் சொல்லப் படுகிறது. மகாராஜா புத்திசாலியானாலும் இளம்பருவம், உலக அனுபவம் இல்லை. மகாராணியார் சமஸ்தான விஷயங்களில் கவலையற்றவர் போல் இருந்து வருகிறாராம். ஏனெனில் பெரிய மகாராணியார் கையிலிருந்த ராஜ்ஜிய பாரத்தைத் தனக்கு வாங்கிக் கொடுத்தவர் சர்.சி.பி. தான் என்கின்ற நம்பிக்கையினால் அவர் இஷ்டப்படி காரியங்கள் நடத்துவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சர். சி.பி. திருவாங்கூருக்கு திவானாகப் போனது முதல் அதிகாரமும், செல்வமும் அய்யர்மார் ஏகபோக உரிமையாகி விட்டதாக மேலே குறிப்பிட்டோம்.

வர்த்தகத் துறையிலும் பூணூல்

அதாவது 5 லட்சம் ரூபாய் முதலீடு வைத்து சர்க்கார் நடத்திய ரப்பர்
தொழிற்சாலை ஒரு சாமிநாதய்யர் கம்பெனிக்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாம்.
மற்றும் தக்கலையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய சர்க்கரை ஆலைக் கம்பெனி, ஒரு அய்ரோப்பிய கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாம். சாராயம் காய்ச்சும் கம்பெனியும் வேறு ஒரு கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாம். ஒரு பார்ப்பனரல்லாதார் கம்பெனியால் பெரிதும் நடத்தப்பட்ட போக்குவரத்து சர்வீசைச் சர்க்கார் மயமாக்குவது என்னும் பேரால் ஒழித்து சர்க்கார் ஏற்று நிருவாகம் செய்வதில் பெரிதும் பார்ப்பன மயமாக்கி 10 லட்ச ரூபாய் போல் மோட்டார் பஸ்கள் வாங்கிக் கமிஷன் அபேஸ் ஆகிவிட்டதாம். சர்.சி.பி மகன் சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்குப் பெரிய கான்ட்ராக்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவாம்.

உத்தியோக மண்டலத்தில் உச்சிக் குடுமிகள்

உத்தியோக நியமன விஷயமும் மோசமானதெனவே சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளமுள்ள பொருளாதார காரியதரிசி ஒரு பார்ப்பனர், இன்கம்டாக்ஸ் அதிகாரி ஒரு பார்ப்பனர், பாரஸ்ட் நிபுணர் என்பவரும் ஒரு அய்யர், அவர் ஒரு மாஜி திவான் மாப்பிள்ளையாம். இவருக்கு 1800 ரூபாய் சம்பளம், மற்றும் பப்ளிசிட்டி ஆபீசர் ஒரு பார்ப்பனர். இவர் மெட்ரிகுலேஷன் பரீட்சை கூட பாஸ் செய்தது கிடையாது. வயது 45க்கு மேலான பிறகு உத்தியோகம் கொடுக்கப்பட்டது. சம்பளமோ 400. மற்றும் தோழர் பரமேஸ்வரய்யர் என்பவர் யுனிவர்சிட்டி சம்பந்தமுள்ளவர். இவருக்குச் சம்பளம் மாதம் ரூபாய் 1500 இரண்டு சட்ட கலாசாலை பிரின்சிபால்களும் பார்ப்பனர்கள், கல்வி இலாகா அதிகாரிகள் (இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்) 3 பேரும் பார்ப்பனர்கள்.

சர்க்கார், பொட்டோகிராபர் கூடப் பார்ப்பனர். இம்மாதிரி பெரிய பெரிய 1000, 1500, 2000 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்கள் பார்ப்பன மயமாக்கப்பட்டவை தவிர இனியும் பல பெரிய உத்தியோகங்கள் அட்வகேட் ஜெனரல் என்றும், சர்ஜன் ஜனரல் என்றும் புரோசான்ஸலர், வைஸ்சான்ஸலர் என்றும் லாமெம்பர் என்றும் இப்படியாக மற்றும் மாதம் 1000, 2000 என்றும் ரூபாய் சம்பளமுள்ள பல புதிய உத்தியோகங்களைச் சிருஷ்டித்து பெரிதும் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்படப் போவதாலும் மற்றும் இது போன்ற காரணங்களாலும் திருவாங்கூர் பொக்கிஷம் காலியாகிக் கடனும் ஏற்பட்டு அரைகோடி ரூபாய் கடனும் வாங்கப்பட்டு விட்டதாம்.

சென்னை மாதிரி திருவிதாங்கூரும்

சென்னை மாகாணத்தில் ஆச்சாரியார் ஆட்சியில் சென்ற வருஷம் ஒன்றரைக் கோடி ரூபாய் கடன் இவ் வருஷம் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் கடன், அடுத்த வருடம் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் 2 கோடி ரூபாய் கடன் ஆகும் என்பது போல் ஸர் சி.பி. திவானாவதற்கு முன் தங்கப்பாளங்களும், வைரம், சிவப்பு பச்சை ஆகிய ரத்தினங்களும் வண்டி வண்டியாய்க் குவிந்து கிடந்த திருவிதாங்கூர் பொக்கிஷம், அய்யர் கால் வைத்த உடன் இறகு முளைத்துக் கடல் தாண்டிப் பறந்து விட்டதால் பாப்பராகி இவ்வருஷம் லு கோடி, அடுத்த வருஷம் ஒரு கோடி என கடன் ஏறி 40 லட்சம் ஜனங்களுக்கு 3லு கோடி வருஷ வருமானமுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானம் அழுத்தப்படுவதைப் பார்த்த திருவாங்கூர் பிரஜைகளான வரிசெலுத்துவோரான பார்ப்பனரல்லாத மக்கள் இனி தங்கள் நாடு என்றென்றும் தலையெடுக்க முடியாமல் அழியப் போகிறதே என்று கருதி மனம் பதறி வயிறு வெந்து, ஆத்திரப்பட்டு, மாரடித்துக் கொண்டு அழுது ஓலமிடும் காட்சி நமது சர்.சி.பி. அய்யர் அவர்களுக்கு ராஜத்துரோகமாய் வகுப்புத் துவேஷமாய் காணப்பட்டு மிருகப்பாய்ச்சல் பாய்ந்து ஒரே அடியில் அடக்கி ஒடுக்கி அழித்து விடப் பார்க்கிறார் போலும். தர்மராஜ்ய தர்ம தேவதை தாண்டவமே இப்படி இருந்தால் இனி மற்ற ஆட்சி எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே பயமாய் இருக்கிறது.

நாராயண பிள்ளை கதி

இவற்றை வெளிப்படுத்த முயற்சி எடுத்துக் கொண்ட திருவனந்தபுரம் ஹைக்கோர்ட் வக்கீல் தோழர் நாராயண பிள்ளை அவர்கள் ஏதோ ஒரு பத்ரிகையில் ஒரு கட்டுரை எழுதினார், என்பதற்காக அவர் மீது ராஜத் துரோகம் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முறையை விட குற்றவாளி நடத்தப்பட்ட முறையும் அக்கிரமமாக விசாரணை நடத்தப்பட்ட முறையும், நீதி வழங்கப்பட்ட முறையும்தான் நாம் மிகுதியும் கவனிக்கத் தக்கவையாகும். இதை உணர்ந்து, பார்த்து ஊன்றிக் கவனித்தால் திருவாங்கூரில் இன்று நீதி, நிருவாக ஆட்சி நடக்கிறதா? அல்லது டையர் ஓட்வியர் ராணுவ ஆட்சி நடக்கிறதா? என்று சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கும்.
எதிரி பட்ட கஷ்டங்கள்

ஏனெனில், தோழர் நாராயணப்பிள்ளை குற்றம் சாட்டப்பட்டவுடன் ரிமாண்ட் செய்யப்பட்டார். இது விஷயத்தில் பொதுக் கூட்டங்கள் – தங்கள் அபிப் பிராயங்களைத் தெரிவிக்கக் கூட்டம் கூட்டப்படாது என்றும் தடைபடுத்தப்பட்டு விட்டது. தோழர் நாராயண பிள்ளைக்கு கீழ் கோர்ட்டில் கிடைத்த ஜாமீன் உத்தரவு, மேல் கோர்ட்டில் சர்க்கார் கட்சி அப்பீலின் மீது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

தக்க வக்கீல் வைத்து வாதாட பொது ஜன ஆதரவுக்கு தடை செய்யப் பட்டது. திருவிதாங்கூர் ராஜ்யத்தில் உள்ள திறமையுடைய வக்கீல்கள் நாராயணப் பிள்ளைக்காக ஆஜராகிக் கேசை நடத்தப் பயப்பட்டு விட்டார்கள். எதிரிக்காகக் கேசை நடத்த வெளி மாகாணத்தில் இருந்து தோழர் நரிமன் வரவழைக்கப்பட்டார். அவர் ஆஜராகக் கூடாது என்று தடுத்ததுடன் அவர் திருவாங்கூரில் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தடை படுத்தப்பட்டு வந்த வழியே திருப்பி அனுப்பட்டுவிட்டார். இந்தக் காரணங்களால் எதிரி நிர்க்கதியாகி விசாரணையில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. சர்க்காருக்கு சவுகரியமாகப் போய்விட்டது போலும். தோழர் நாராயண பிள்ளைக்கு ஒன்றரை வருஷம் வெறுங் காவலும் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

துக்ளக் ஆட்சி

ஆகவே, இன்று திருவிதாங்கூர் ராஜ்யம், செல்வம், நிருவாகம், அதிகாரம், நீதி முதலியவைகளில் பழங்கால காட்டுராஜா ஆட்சி என்றும் நவாப் தர்பார் என்றும், அதிலும் மகமத் துக்ளக் ஆட்சி என்றும் சொல்லப்படும் ஆட்சி போல் நடக்கின்றது என்பதோடு, வரவுக்கு மிஞ்சின செலவும், பொக்கிஷம் காலியும், கடனும் ஏற்படுகிற நிலைமைக்கு போய்க் கொண்டிருக்கிறது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறதற்கு வருந்துகிறோம்.

பூணூல் மகிமை

இவை தவிர, இனியும் எவ்வளவோ ஆபாசங்கள் நடப்பதாயும் கூறப்படுகின்றன. இவ்வளவு சங்கதிகளும் இன்று பொது ஜனங்களுக்குப் புலப்படாமல் இருக்கவும், மேலும், மேலும் சர்.சி.பி. அய்யருக்குத் தைரியம் ஏற்படவும் காரணமாய் இருப்பது பூணூலே ஆகும். அதாவது திவான் ஒரு பார்ப்பனராய் இருப்பதேயாகும். கொச்சி திவான் தோழர் சர் ஆர்.கே.சண்முகம் அவர்கள் கொச்சி சென்றவுடன் “கொச்சியில் திவான் வேலை பார்க்கக் கொச்சியில் ஒரு ஆள் கிடைக்க வில்லையா?” என்ற எடுப்பை பல்லவியாக வைத்து ஒரு வருஷகாலம் அவருக்கு சென்னைப் பார்ப்பன பத்திரிகைகள் கொடுத்த தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல. சென்னை பார்ப்பனப் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் கொச்சிக்குச் சென்று அங்குள்ள காலாடிகளைப் பிடித்து கலகத்தை மூட்டித் தொல்லை கொடுத்தார்கள்.

ஆர்.கே. கொச்சிக்குச் செய்த நன்மைகள்

இவ்வளவையும் சமாளித்துத் தோழர் சண்முகம் கொச்சி சமஸ்தானத்துக்கு வருஷத்துக்கு பத்து லட்சக்கணக்கான ரூபாய் வரும்படி கிடைக்கும்படியான கொச்சித் துறைமுகத் திட்டத்தை ஏற்படுத்தி மகாராஜாவுடையவும் பிரஜைகளினுடையவும் ஆதரவையும் அன்பையும் பெற்று இந்திய சமஸ்தானங்களில் வேறு எங்குமில்லாத முறையில் பிரஜைகளுக்கு முதல்படியாக பொறுப்பாட்சியும் வழங்கினார். இதைக் கண்டாவது பார்ப்பனப் பத்திரிகைகள் புகழாவிட்டாலும் சும்மவாவது இருக்காமல் இதென்ன கண்ணைத் துடைக்கிற வித்தை என்றும், இதில் என்ன பிரயோஜனம் என்றும், அயோக்கியத் தனமாகவும் அற்பத்தனமாகவும் எழுதிப் பரிகாசம் செய்தன.

சி.பி. சமாதானம்

இதையாவது ஏன் திருவாங்கூர் சர்.சி.பியும் பரோடா திவான் சர்.வி.டி. கிருஷ்ணமாச்சாரியும், காஷ்மீர் திவான், திவான் பகதூர் என் கோபாலசாமி அய்யங்காரும் ஆகிய பார்ப்பனர்கள் செய்யவில்லையே என்று பொது ஜனங்கள் கேட்க ஆரம்பித்தபோது “சுதேச சமஸ்தானங்களுக்குச் சீர்திருத்தம் வழங்கப்
பிரிட்டிஷ் சர்க்கார் சம்மதிக்க மாட்டார்கள்” என்று ஒரு பொறுப்பற்ற யோக்கியமற்ற சமாதானத்தை சர்.சி.பி. சொன்னார்.

பிரிட்டிஷார் பதில்

பிரிட்டிஷார் இதைக் கேட்டு நகைத்துவிட்டு, நாங்கள் தடையாயில்லை. எவ்வளவு சீர்திருத்தம் வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சொல்லி விட்டார்கள். இதன்மேலாவது சர்.சி.பி. வாயை மூடிக்கொண்டிருக்காமல் அதைவிட போக்கிரித்தனமானது யோக்கியப் பொறுப்பற்றதுமான பதில் சொன்னார். என்னவென்றால் கொச்சி முதலிய சாதாரண சமஇதானங்கள் தவிர “தர்மராஜ்யமான திருவாங்கூருக்கு சீர்திருத்தம் வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டு, சொன்ன எட்டு நாளிலேயே இந்தத் திருக்கூத்தை நடத்தியிருக்கிறார்.

நாணயமற்ற சாக்குப் போக்கு

தவிரவும் திருவாங்கூர் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டதிலும் இது மாதிரியே நாணயமற்ற சாக்கு போக்குச் சொல்லி அடக்கிவிட்டு, பெரிய உத்யோகங்களை பார்ப்பனர்களுக்கே ஏராளமாய்க் கொடுத்து வருவதோடு பொக்கிஷம் பாப்பராகும் படி புது உத்யோகங்களையும் சிருஷ்டித்துப் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப் போகிறார். ஸர். சண்முகம் அவர்கள் தன் திவான் ஆதிக்கத்தில் 2-வருஷத்துக்கு முன்பே வகுப்பு
வாரி பிரதிநிதித்துவம் ஏற்படுத்தி, தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் என்பவர்
களுக்கே 100க்கு கிட்டத்தட்ட 40 உத்யோகங்கள் போல் கிடைக்கும்படி செய்து விட்டார்.

ஆர்.கே.எஸ்சும், பார்ப்பனப் பத்திரிகைகளும்

ஆகவே, தோழர் ஆர்.கே.சண்முகம் அவர்கள் துறைமுக வரும்படியில் பொக்கிஷத்தை நிரப்பினார். அரசியல் சுதந்திரத்தால் பொறுப்பாட்சி அளித்தார். வகுப்புவாரி உத்தரவால் சமுதாயத்தை மேன்மைப்படுத்தினார். அதாவது சர். சண்முகம் ஆட்சியானது அரசியல் சமுதாய இயல் பொருளாதார இயல் ஆகிய மூன்று துறையையும் இந்தியாவில் வேறு எந்த சமஸ்தானத்திலும் இல்லாத அளவுக்கு மேன்மைப்படுத்தியும், அவர் ஒரு பார்ப்பனரல்லாதவராய் இருப்பதால், அவரைப் பார்ப்பனர்களும் பத்திரிகைகளும் வைகின்றன. குறை கூறுகின்றன. “பொது ஜனங்கள் கண்களில் மண்ணைப் போட்டார்?” என்று போக்கிரித்தனமாய் எழுதி விஷமப் பிரச்சாரம் செய்கின்றன.

ஹிட்லர் சி.பி.க்கு புகழ்மாலை

ஆனால், திருவாங்கூரில் இவ்வளவு திருக்கூத்தும் இன்னும் எழுத முடியாத பல திருக்கூத்துகளும் நடத்திய டயராட்சி நடத்தும் சர்.சி.பி. ராமசாமி அய்யர் பார்ப்பனராய் இருப்பதால் சென்னை மாகாண முதன் மந்திரி தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் பூமாலை போட்டுப் புகழ்கிறார். காந்தியாரைக் கொண்டும் புகழச் சொல்கிறார். திருவாங்கூர் மகாராஜா ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை அளித்ததற்கு வேறு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் சர்.சி.பி.யைப் பார்ப்பனர்கள் புகழ அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டாலும் அதுவும் இன்று ஒரு வேஷமாகவும், நாடகமாகவும் தான் முடிந்துவிட்டது. அதாவது, திருவாங்கூர் சமஸ்தானக் கோவில்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலாகச் செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லப் படுகிறது. இவை எப்படியோ இருக்கட்டும், ஆனால், நமது நாட்டில் பார்ப்பனர்கள் பார்ப்பன அரசியல் பார்ப்பனப் பத்திரிகைகள் முதலியவைகளின் ஆட்சி ஆதிக்கம் எவ்வளவில் இருக்கிறது என்பதை விளக்கவே இதை எழுதுகிறோம்.

‘குடிஅரசு’ – தலையங்கம் – 10.04.1938