நூல் அரங்கம் – நூல் : எல்லோருக்கும் உரியார்’ அவர் தான் பெரியார்!’

2023 ஏப்ரல் 1-15,2023 நூல் மதிப்புரை

நூல் மதிப்புரை 

ஆசிரியர்: முனைவர் த. ஜெயக்குமார்
வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
முதற் பதிப்பு 2022
பக்கங்கள் 132
விலை ரூ. 110/-

* உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் த. அருள் இந்த நூலின் அணிந்துரையில் சிறப்பான தகவல் ஒன்றைத் தருகின்றார். “புத்தகங்களை வாசகர்கள் புரட்டுவது வழக்கம்! ஆனால் இது போன்ற ஒருசில நூல்கள் மட்டுமே, வாசகர்களையே புரட்டிப் போடும்!” என்று மதிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்த நூலை அணுக ஆரம்பித்தேன்!

* தோழர் முனைவர் த. ஜெயக்குமார் இதுவரை 17 நூல்களைப் படைத்துள்ளார். அவரின் முனைவர் பட்ட ஆய்வு, “பெரியார் சிந்தனையில் மனித சமத்துவக் கோட்பாடு” என்னும் பொருண்மையிலானது. திராவிடர் கழகத்திலும் பகுத்தறிவாளர் கழகத்திலும் தொடர்ந்து ஈடுபாடு கொண்டவர். பெரியார் பற்றியும் பெரியார் சிந்தனைகள் பற்றியும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்!
­

நூலாசிரியர் முனைவர் த. ஜெயக்குமார் அவர்களால் சு.அறிவுக்கரசு -இரஞ்சிதம் அறக்கட்டளை சொற்பொழிவில் உரை நிகழ்த்துவதற்காகத் தயாரிக்கப்பட்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் வழங்கப்பட்ட கட்டுரைகள் இந்த நூலாக உருவாகியுள்ளது!
­

நூலாசிரியர், நூலை எழுதிய காரணத்தை தனது முன்னுரையில், “தந்தை பெரியார் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாருக்காக _ குறிப்பிட்ட கொள்கை கொண்டோருக்காக  மட்டும் உரியவராக கட்டமைக்கப்பட்டுள்ளதை மறுத்து, அவர் எல்லோருக்கும் உரியார் என்பதாக ஏற்கும் வகையில் பல்வேறு பொருள் பொதிந்த கட்டுரைகளை இந்த நூலில் தந்துள்ளேன்!” …என விளக்குகிறார்!
­

நூலில் தரப்பட்டுள்ள 16 கட்டுரைகள் பேசுகின்ற பொருள் நிறைந்த தகவல்கள் இந்தத் தலைப்புகளின் கீழ் வருகின்றன
­ வாழ்வியல் சுயமரியாதை மனித நேயப் பார்வை பகுத்தறிவுச் சிந்தனை அறிவியல் அணுகுமுறை மொழி சீர்திருத்தம் வாழ்க்கை நெறி மனித சமத்துவம் திருக்குறள் பரப்பல்.
­ வள்ளலாரைப் பாராட்டியது  புரட்சிக் கவிஞர் கவிதைகளுக்குக் கருவூலமானவர்  அம்பேத்கருக்கு உணர்வூட்டியவர்  காமராசரின் ஆட்சிக்குக் காரணமானவர் பேரறிஞர் அண்ணாவை உருவாக்கியவர் டாக்டர் கோவூருக்கு வழிகோலியவர்  பகுத்தறிவு மேதை இங்கர்சாலுக்கு இணையாகப் பரிணமித்தவர்.
­

ஒரு சிறிய நூலில் இவ்வளவு தகவல்களையும் ஒரு ‘கேப்சூலுக்குள்’ உள்ளடக்கிய சிறந்த பணியை நூலாசிரியர் செய்துள்ளார்! பெரியாரை நன்றாகப் படித்தால் மட்டும் போதாது… பெரியாரை நன்றாக உள் வாங்கினால் மட்டுமே இது போன்ற படைப்பைத் தர முடியும் !
­ பெரியாரை இன்று எல்லா தளங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வேலையை இந்த நூல் சிறப்பாகச் செய்யும் என நம்புகின்றேன். அதற்காக முனைவர் த. ஜெயக்குமார் நமது பாராட்டுக்களுக்கு உரியவராகிறார்!
­ நூலில் எத்தனையோ தகவல்கள் அறியக் கிடைக்கின்றன. அதிலிருந்து நினைவில் வைத்துக் கொள்ள சில அரிய கீழ்க்காணும் தகவல்களை இந்த அறிமுகவுரையில் பகிர்வது பயனாக அமையும் என எண்ணி தந்துள்ளேன்:
­

‘தமிழர் வாழ்வியலுக்கு அடித்தளமிட்டவர்’ – இந்தத் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில், கவிஞர்கள் பார்வையில் பெரியார் என்ற பகுதியில் பெரியாரின் சிறப்பைப் போற்றும் கவிதை வரிகள் நினைவில் கொள்ள வேண்டியவை!
­ கவிஞர் கா. வேழவேந்தன் கவிதையில் உள்ள நியாயமான தீர்ப்பு :

‘‘பெரியார் மட்டும் இம்மண்ணில் பிறக்காவிட்டால்?
நெடுஞ்சாலைக் கல்லெல்லாம் சாமியன்றோ?’’
­கவியரசு கண்ணதாசன் கவிதையில் உள்ள கண்ணீர் வரிகள்:
‘‘சரித்திரம் இறந்த செய்தி!
தலைவரின் மரணச் செய்தி!
மரித்தது பெரியாரல்ல!
மாபெரும் தமிழர் வாழ்வு!
* பாவேந்தர் பாரதிதாசனின் பாக்களில் உள்ள வைர வரிகள்:
‘‘பயிர் போன்றார் உழவர்க்கு
பால் போன்றார் குழந்தைகட்குப்
பசும் பால் கட்டித் தயிர் போன்றார் பசித்தவருக்கு
தாய் போன்றார் ஏழையர்க்கு
செந்தமிழ் நாட்டில் பிறந்த மக்கட்கெல்லாம் உயிர் போன்றார் பெரியார்!’’
­

‘பேரறிஞர் அண்ணாவை பகுத்தறிவுக் குடும்பத்தின் தலைமகனாக உருவாக்கியவர் பெரியார்’ என்னும் தலைப்பில் நிறைய தகவல்களைத் தருகின்றார். தந்தை பெரியாரைப் போலவே அண்ணாவும் ஏழை எளியோருக்குப் புரியும்வண்ணம் பகுத்தறிவுப் பாடங்களை மேடையில் நாள்தோறும் நடத்தியதை நினைவு படுத்துகின்றார்!
­

“மின்சார சக்தியைக் கண்டுபிடித்தவர் யார்? தெரியாது! ஆனால், எமனுக்கு வாகனம் எருமைக் கடா என்பது மட்டும் தெரியும்!” இவ்வாறு கிராமங்களிலுள்ள மக்கள் அறிவு விளக்கம் பெறாமல் மூட நம்பிக்கையில் வாழ்ந்தவர்கள் இடையே, பெரியாரின் தலைமைச் சீடர் பேரறிஞர் அண்ணா பேசியதை எடுத்துக் காட்டுகிறார்!
­ இதுபோன்று – பாரதிதாசன், அம்பேத்கர், காமராசர், அண்ணா, ஆபிரகாம் கோவூர், இங்கர்சால் ஆகியோரின் சிந்தனைகள், எழுத்துகள், செயல்பாடுகள் எவ்வாறு தந்தை பெரியாரின் கருத்துகளுடன் ஒன்றி, பரிணமித்து, பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்பதை ஆதாரங்களோடு எண்பிக்கின்றார் நூலாசிரியர்!
­ சிறிய நூலாக இருந்தாலும் – பெரியாரின் மாண்பை விளக்கும் சீரிய நூல் !
சுயமரியாதை, பகுத்தறிவு, மனிதாபிமானம், சமூக நீதி, விடுதலை இவற்றை உள்ளடக்கியதே பெரியாரியம் !
­ அதை,
தந்த பெரியாரை – எல்லோரும் அறிந்தும் அறியாராக இருந்தாலும்,
அவர் – எல்லோருக்கும் உரியார்!
அவர்தாம் பெரியார்!!

நூலாசிரியர் தோழர் முனைவர்
த. ஜெயக்குமாருக்கு நன்றியும் வாழ்த்துகளும்!
பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,