மக்கள் போராட்டம் உறுதி!
1. கே: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் சரித்திர சாதனை வரவு-செலவு அறிக்கையைக் கண்டு பொறாத ஆரிய பார்ப்பனக் கூட்டம், அவர் படித்த விதம் குறித்து பரிகாசம் செய்து பத்திரிகை தலைப்புச் செய்தியாக்குவது கீழ்த்தர செயல் அல்லவா?
– தென்றல், ஆவடி
ப: பார்ப்பனர் கூட்டத்திற்கு திராவிட மாடலும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் தங்கள் இன எதிரிகள் என்று நினைப்பு அவர்களை அப்படி பிதற்றச் செய்கிறது! அவமானம் அவாளுக்குத்தான்!
2. கே: ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ரத்தாகக்கூடிய வாய்ப்பு நெருங்குவதால், வென்றெடுக்க வேறு முயற்சிகள் வேண்டுமா?
– சதீஷ், வல்லம்
ப: அவ்வளவு எளிதல்ல நண்பரே, ஆரியம் பல சூழ்ச்சி வலைகளையும் தயாராக வைத்திருக்கிறது. அதற்குள் அவசர மகிழ்ச்சி வேண்டாம்!
3. கே: வேளாண் நிதிநிலை அறிக்கை, விவசாயிகளின் வாழ்க்கையை உயர்த்தும் என்று விவசாயிகளே மகிழும் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– குமார், ஈரோடு
ப: மனுதர்மத்தின்-சனாதனத்தின் தோல்வி; சமதர்மத்தின்- திராவிடத்தின் வெற்றி. இப்படித்தான் பார்க்கவேண்டும்.
4. கே: ஆன்-லைன் சூதாட்டத்தைவிட ஆளுநரின் சூதாட்டம் மிக மோசமாகி வருகிறதே! இந்தமுறை ரத்தாவது உறுதி என்று நம்பலாமா?
– பாலாஜி, விருகம்பாக்கம்
ப : மக்கள் கிளர்ச்சி – சட்டப் போராட்டம் என்ற பல்முனைப் போராட்டங்களுக்கு அரசியல்-காரர்கள் ஆயத்தமாக வேண்டும். மயில் அவ்வளவு எளிதில் இறகு போடாது!
5. கே: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சார்ந்து நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்றை பெரிய அளவில் அமைக்க வலியுறுத்துவீர்களா?
– லலிதா, சாலிக்கிராமம்
ப: அதை இரு அரசுகளும் கலந்து நிச்சயம் வைக்கச் செய்வார்கள்.
6. கே: ஏழ்மையில் உள்ள இல்லத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதா மாதம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டதன் மூலம், எதிர்க்கட்சிகளின் வாய்கள் அடைக்கப்பட்டுவிட்டதாகக் கொள்ளலாமா?
– மார்த்தாண்டன், கும்பகோணம்
ப: வெறும் வாயையும் மெல்லுவார்கள், முழுமையாக அடைபடாது! எதையாவது பேசியாக வேண்டும். இல்லையென்றால், எதிர்க்கட்சி என்று அழைக்க முடியாதே! ஏதாவது குறை கண்டுபிடிப்பார்கள்.
7. கே: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை! எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப: ஜனநாயக உரிமைப் பறிப்பு_ சட்டவிரோத உள்நோக்கம் தீய நோக்க முடிவு. சட்டப் போராட்டமும் மக்கள் போராட்டமும் நடப்பது உறுதி!
8. கே: கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது நாடளவில் தலைவர்கள் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதால், 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த உறுதியான முடிவெடுக்க அப்போது முயற்சி மேற்கொள்ளப்
படுமா?
– ஜகஜீவபாண்டியன், அரக்கோணம்
ப : அப்படிக் கூடுவதே ஒருவகையில் அந்த உணர்வின் வெளிப்பாடுதானே!
9. கே: மம்தா தலைமையில் மூன்றாவது அணி என்பது ‘தினமலர்’ பரப்பும் வதந்திதானே?
– தில்லை, காட்பாடி
ப : ‘தினமல’ ஆசை – அரிப்பு கடைசியில் புஸ்வாணம் ஆகும்!