ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அண்மையில் மதவெறியர்களால் தாக்கப்பட்ட நாசர் நமக்களித்த பேட்டியில், “ஸ்டூடன்ட்ஸ் யூனியன்’’ என்ற அமைப்பு மாணவர்களின் கருத்துப் பரிமாற்றக் களமாகப் பயன்பட்டு வருகிறது. அதில் எல்லாதவிதமான கருத்துகளும் மனந்திறந்து விவாதிக்கப்படுகின்றன. இதன்மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆதிக்கவாதிகளின் செயல் திட்டங்கள்; அவர்களுக்குக் கருவியாகப் பயன்படும் மதம், கடவுள், சாஸ்திரங்கள், ஜாதி இவற்றைப்பற்றிய விவாதங்கள் சிந்தனைக் கிளர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி, தன்னம்பிக்கை, தளராத உறுதி, சமத்துவம், சமூகநீதி, மனித உரிமை போன்றவற்றில் பிடிப்பை உருவாக்க உதவுகிறது.
இந்த எழுச்சியும் விழிப்பும் மதவெளி அமைப்புகளால் உற்று நோக்கப்பட்டு, இவற்றைத் தடுத்துவிடவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள். ஜனவரி மாதம் 24ஆம் தேதியும் இதுபோன்ற ஒரு வன்முறையை நிகழ்த்தினர்.
அண்மையில் பி.பி.சி. ஆவணப் படத்தை திரையில் பார்க்கத் தடை செய்தபோது லேப்டாப் உதவியுடன் மாணவர்கள் தனித்தனிக் குழுக்களாகப் பார்த்தபோது, அங்கும் மதவெறிக் கூட்டம் தாக்குதலை நடத்தியது. குறிப்பாகக் கற்களை வீசிப் பார்க்க முடியாமல் தடுத்தனர்.
மதவெறியர்களின் முக்கிய இலக்கு, கலவரத்தை நிகழ்த்தி அதன்மூலம் ஸ்டூடன்ட்ஸ் யூனியனை மூடிவிடவேண்டும் என்பதே. அதன்படி, அண்மையில் நடந்த கலவரத்தைக் காரணங்காட்டி யூனியன் அறைக்குச் ‘சீல்’ வைத்துவிட்டனர்.
துணைவேந்தரிடம் புகார் அளித்தால் அதனை அவர் பொருட்படுத்துவதே இல்லை. மதவெறியர்களின் வன்முறைத் தாக்குதல் தொடர்வதற்கு, அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததுதான் காரணம்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கண்டனம் தந்த பலன்
மாணவர்கள்மீது, குறிப்பாகத் தமிழ்நாட்டு மாணவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகக் கண்டனம் தொவித்ததால், வன்முறையாளர்கள் அடங்கினர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தங்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டியதால் எதிர் தரப்பினர் அச்சத்தில் உள்ளனர். தமிழ்நாட்டுத் தலைவர்களின் எதிர்ப்பைப் பார்த்த மற்ற மாநிலத் தலைவர்களும், இந்த வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், மாணவர்களுக்கும், கருத்துரிமைக்கும் தற்போது ஒரு பாதுகாப்பு உருவாகியுள்ளது.
தமிழ் வளர்ச்சிக்கு 5 கோடி ரூபாய் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கியதன் மூலம் நல்ல பணிகள் நடக்கின்றன. தமிழ்துறைத் தலைவர்கள் இந்த வன்முறை குறித்து விசாரணை நடக்க உரிய ஏற்பாடு செய்யவேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மிகக் குறைந்த கல்விக் கட்டணம், மிகக் குறைந்த விடுதிக் கட்டணம். கல்விக் கட்டணம் 150 ரூபாய், மாத விடுதிக் கட்டணம் 3000 ரூபாய், மாணவர்களுக்கு மாதம் 8000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் ஏழை மாணவர்களும் உயர்கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் ஒடுக்கப்பட்ட, ஏழை மாணவர்கள் அதிகம் படித்து உயர வாய்ப்பு ஏற்படுகிறது. அதைத் தடுக்கவே கலவரத்தை மதவெறியர்கள் அடிக்கடி நடத்துகின்றனர். வன்முறைக்குப் பயந்து பல மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு விலகிச்செல்லும் நெருக்கடி உருவாக்கப்படுகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை அமைப்புகள் தங்கவும், செயல்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, பல்கலைக்கழக நிருவாகம் இதைத் தடுத்து, மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். வன்முறை அமைப்புகளை அப்புறப்படுத்தவேண்டும்.
இந்திய அளவில் உள்ள உயர்கல்வி மாணவர்கள்_ குறிப்பாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, மதவெறி அமைப்பின் வன்முறையை எதிர்கொண்டால் வன்முறை தொடராது தடுக்கப்படும்.’’ என்பது நாசர் எமக்களித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார்.