இது ராமன் கட்டின பாலம் என்றும், 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமன் கட்டினான் என்றும் கதைக்கிறார்கள்.
17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்தானா என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கெல்
லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் அளிக்காமல் ‘நம்பிக்கை’ என்று சொல்லி சொதப்புகிறார்கள்.
நம்பிக்கை என்பதையெல்லாம் நம்பி கைகட்டிக் கொண்டு வெறுமனே இருக்கமுடியுமா? பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் என்கிற புராணங்களையெல்லாம் கூட நம்ப முடியுமா?
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இருக்கக்கூடியது வெறும் மணல் திட்டுகளே – அவற்றின்மீது பாசிப்படிமங்கள் தோன்றி பாலம் போன்ற அமைப்பாக உருவானதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். இதனை வெகு காலமாக ஆதாம் பாலம் என்றே வழங்கி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே நீண்ட நெடிய தூரத்திற்கு இத்தகைய பாலங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டியவர்கள் ராமன் போன்ற இன்னொரு அவதாரமா என்று பேராசிரியர் தமயந்தி ராஜதுரை எழுப்பிய வினாவுக்கு விடை என்ன?
17.3.2007 நாளிட்ட ‘இந்து’ ஏட்டில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி புவியியல் ஆய்வுத்துறைத் தலைவர் என்.ராமானுஜம் அவர்கள் ‘இது மனிதன் உருவாக்கிய அமைப்பு அல்ல – இது புவியியல் நிகழ்வால் ஏற்பட்டதே’ என்று எழுதியுள்ளார்.
பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர்.என்.சர்மா (ராம் சரண் சர்மா) கூறியுள்ளார் –
“இராமாயண காலப் பாலம் கட்டியதற்கு அகழ்வாராய்ச்சி சான்றோ, இலக்கியச் சான்றோ இல்லை. பாலம் போலத் தோன்றும் மணல் திட்டுகளின் காலம் பதினேழரை லட்சம் ஆண்டுகள் பழையது என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் காலத்தில் மனிதர்களேயில்லை. கிடைத்துள்ள சான்றுகளின்படி இராமாயணம் எழுதப்பட்ட மிகப் பழங்காலம் கி.மு. 400 ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளாரே.