ஆசிரியர்-பதில்கள்

2023 ஆசிரியர் பதில்கள் ஜனவரி 16-31 ,2023

விளக்கமும், விழிப்பும் பெற
விடுதலையைப் படியுங்கள்!

1. கே: சட்டத்தின்மூலம் “தமிழ்நாடு’’ என்று அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நிலையில், அதைத் தவிர்த்து தமிழகம் என்றே அழைப்பேன் என்று ஆளுநர் அடம் பிடிப்பது சட்டத்திற்கு எதிரான செயல் அல்லவா?
– ரமேஷ், திண்டுக்கல்.
ப: இதைவிட ஒரு மாநில ஆளுநரின் அரசமைப்புச் சட்ட விரோதப் பேச்சு வேறு இருக்கவே முடியாது. ‘தமிழ்நாடு’ என்பதுதான் அதிகாரப்பூர்வமாக 18.7.1967 அன்று சட்டமன்றத்தின் தீர்மானமாக நிறைவேறி, பிறகு ஒன்றிய அரசும் ஏற்று அரசிதழ் மூலம் வந்து நடைமுறையில் “Government of Tamil Nadu’’ என்றே அழைக்கப்படும் – வழமைக்கு மாறாக இப்படி அரசு ஊழியரான ஆளுநர் பேசுவது, குறுக்குச் சால் விடுவது – அவர் அந்தப் பதவியின் மாண்பைக் குலைத்த – சட்ட விரோத நடவடிக்கையே!“Irresponsible work of governor Ravi should be called back – by the Union Government’’ -என்ற (‘Hashtag’) Trending தேவை. குவியட்டும் – அடாவடித்தனத்திற்கு முதல் அடி_ அறவழியில்!
மேலும் அதுகுறித்து ‘விடுதலை’ நாளேட்டில் வெளிவந்துள்ள விரிவான அறிக்கைகளைப் படித்து, முழு விடை பெறுக.

2. கே: தந்தை பெரியார், அண்ணா, காமராசர், சமூகநீதி, திராவிட மாடல் என்பவையெல்லாம் கூறாமல் விலக்கி, அரசு தந்த உரையை மாற்றி உரையாற்றும் உரிமை சட்டப்படி ஆளுநருக்கு உண்டா?
– குணசீலன், மயிலாடுதுறை.
ப: மேலே சொன்ன பதிலே இதற்கும்.

3. கே: சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மாநிலம் தழுவிய அழுத்தத்தை ஏற்படுத்துவீர்களா?
– பாரி, கடலூர்.
ப: இம்மாதம் (27.1.2023) 27-ஆம் தேதியன்று முன்பு இத்திட்டம் துவக்கப்பெற்ற அதே மதுரை மாநகரில் மாபெரும் திறந்தவெளி மாநாடு _ பெருந்திரள் மாநாடு_ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்களும் தலைவர்களும் பங்கேற்கின்றனர். நம்முடைய முதல் அமைச்சரும் 7.1.2023 அன்று சென்னையில் நிகழ்த்திய உரையிலும் குறிப்பிட்டு துவக்கி வைத்துள்ளார். தொடரும்_ வாதாடுதலும் போராடுதலும்!

4. கே: கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துவிட்டு அடித்தட்டு மக்கள் பெறும் கடனுக்கு வட்டி வீதத்தை உயர்த்தும் ரிசர்வ் வங்கியின் செயலை நீதிமன்றம் தலையிட்டுத் தடுக்க முடியுமா?
– சிவகுமார், திருச்சி-1.
ப: நீதிமன்றங்களால் ஓரளவே இம்மாதிரி பிரச்சினைகளில் தலையிட முடியும். மக்கள் எழுச்சியே எதற்கும் இறுதித் தீர்வு.

5. கே: சென்ற ஆண்டு பொங்கல் விருந்து அழைப்பில் தமிழ்நாடு ஆளுநர் என்று அச்சிட்டு, தமிழ்நாடு அரசு முத்திரை பதித்த ஆளுநர் இந்த ஆண்டு அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று அச்சிட்டு, இந்திய அரசு இலச்சினையைப் பொறித்திருப்பது எந்தப் பின்னணியின் அழுத்தம், மாற்றம்?
– முத்துக்குமார், ஆவடி.
ப: ‘விடுதலை’ அறிக்கை (11.1.2023) காண்க. வேறு பக்கத்தில் உண்மை வாசகர் வசதிக்காக எடுத்துப் போடப்பட்டுள்ளது. படியுங்கள்!

6. கே: எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்னும்போது, அதற்கான நாடு தழுவிய ஆயத்தப் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனே கூடி முடிவு எடுக்க நமது முதல்வரும் தாங்களும் முயற்சி மேற்கொள்வீர்களா?
– பழனிவேல், திருப்பூர்.
நமக்கு ஏதோ சர்வசக்தி உடையதுபோல நம்பிக்கையுடனும் உரிமையுடனும் கேட்கிறீர்கள்_ இதுபோல் பல கேள்விகளை. முடிந்த அளவு இம்முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவோம் என்பது உறுதி!

7. கே: ஜாதி வன்மங்கள் இன்னமும் ஆங்காங்கே நடப்பது, திட்டமிட்ட சங்பரிவார் சதிப் பின்னணி தூண்டுதல் என்ற கருத்து பற்றித் தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
– காளிமுத்து, சீர்காழி.
ப: கடுமையான பிரச்சாரமும், போராட்டமும், இளைஞர்களை களத்தில் முனைப்புடன் இறக்குவதுமே தீர்வை ஏற்படுத்தும்.

8. கே: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை
கள், வன்புணர்வுகளை அரசோடு சமுதாய இயக்கங்களும் இணைந்து கைகோத்துச் செயல்பட்டால் தடுக்கலாம் அல்லவா?
– செல்வி, ஆத்தூர்.
ப: தங்களது கருத்து வரவேற்கத்தக்கது! அரசுகள் முன்வரவேண்டும். அரசுகளுக்கு அழுத்தம் முதலில் மகளிரிடமிருந்து கிளம்பினால் தீர்வு விரைந்து கிடைக்கக் கூடும்.

9. கே: ஆளுநரின் மரபு மீறிய செயலைக் கண்டிப்பதற்கு மாறாக, முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்ததைக் கண்டிக்கும் எடப்பாடி பழனிசாமியின் அடிமை விசுவாசம் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
– அருள்மொழி, விருதுநகர்.
ப: பொம்மைகளாக்கப்பட்டுவிட்டதால், பொம்மலாட்டக் கயிறு எப்படி யாரால் ஆட்டப்படுகிறதோ, அப்படித்தான் ஆடுவார்கள்_ மானம் மறந்து போய் வருமானம் காப்பாற்றல் மட்டுமே முன்னுரிமை பெற்றதால் இப்படிப்பட்ட நிலை.
அடமானம் வைக்கப்பட்ட பொருளுக்கு யார் அதுவரை சொந்தக்காரர்? அதனால்
தான் இந்தப் பரிதாப இழிநிலை – மகா வெட்கக்கேடு!