முனைவர் கடவூர் மணிமாறன்
அதிகார வாய்ப்பாலே வரம்பு மீறி
ஆணவத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டு
குதிக்கிறது குள்ளநரிக் கூட்டம்! மூடக்
குழிக்குள்ளே வீழ்ந்தோரோ எழவே மாட்டார்!
புதிராக இருக்கிறது; தமிழ்நா டென்றே
புகன்றிடவே கூடாதாம்; முகவர் கூற்றை
மதியுள்ளோர் ஏற்பாரோ? சட்டம் தன்னை
மதிக்காதார் இழைப்பதுவும் மானக் கேடே!
எப்படியும் வென்றிடவே வேண்டும் என்னும்
எண்ணத்தில் பொழுதெல்லாம் இருப்போர், வீணே
செப்பரிய ஏமாற்றுச் செயல்கள் தம்மில்
சிறகினையே விரிக்கின்றார்; நாட்டு மக்கள்
ஒப்போலை பறிப்பதிலே முனைப்புக் கொள்வார்!
ஊர்க்குருவி ஒருநாளும் பருந்தாய் ஆமோ?
முப்பாலாம் திருக்குறளைப் பழித்துப் பேசி
மூடரெனும் முடிசூட்டி மகிழு கின்றார்!
பெரியாரின் மண்ணிங்கே களைகள் தோன்றா!
பேதைமையின் வயப்பட்டோர் பிதற்றல் யாவும்
எரிமுன்னர் வைத்தூறு போல மாயும்;
எரிமலையைத் தென்றலென இயம்பி நிற்கும்
புரியாதார் சாதிமத வெறுப்பைத் தூண்டிப்
புன்மைக்குப் பாய்விரிப்பார்; தமிழி னத்தைச்
சரியாக உணராதார் அவிழ்த்துக் கொட்டும்
சழக்கெல்லாம் பதராகப் பறக்கும் காற்றில்|
தன்மானம் இன்மானம் தமிழ்மா னத்தைத்
தம்முயிராய் எண்ணுபவர் தமிழர் ஆவர்¢;
இன்னாது செய்தார்க்கும் இனிய செய்யும்
இணையற்ற பண்புநலன் மிக்கோர் ஆவார்;
பன்னரிய கேடுகளை இழைக்கும் பொல்லாப்
பாவியரின் பாழ்மனத்தை நாட்டு மக்கள்
நன்றாக உணர்ந்துள்ளார்; மாற்றம் தோன்றும்;
நற்செயலால் நாடுய்யக் காண்போம் நாமே!