கட்டுரை: இறந்த பிறகும் நம் கண்கள் பார்க்கும்!

2022 கட்டுரைகள் நவம்பர் 16-30 2022

வி.சி.வில்வம்

இந்தியாவில் கண் பார்வை இழப்பு சுமார் ஒன்றரைக் கோடி பேருக்கு உள்ளது. இவர்களில் 60 விழுக்காட்டினர் 12 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்கள் பார்வை பெற கண்தானம் பெரிதும் உதவுகிறது!

செய்ய வேண்டியது என்ன?
இறந்தவரின் கண்களை அப்படியே எடுத்து, மற்றவர்களுக்குப் பொருத்தமாட்டார்கள். கண்களில் உள்ள “கார்னியா” என்கிற கருவிழியை மட்டும் எடுத்து, பார்வை இழந்தவர்களுக்குப் பொருத்துவார்கள். இறந்தவர்களின் கண்களை எடுத்த பின் இமைகளை மூடித் தைத்து விடுவதால், அவர்களின் முகம் விகாரமாகத் தெரியாது!
இறந்த பிறகு மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ எவ்விதப் பயனும் இல்லாமல் போகக் கூடிய கண்களைத் தானமாகக் கொடுத்தால், அதனால் இருவர் ஒளி பெறுவர்!

கண்தான உறுதிமொழி!
நமக்குத் தெரிந்து யாரேனும் ஒருவர் மரணமடைந்தால், அவர்களின் நெருங்கிய உறவினர்கள் வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி, மரணமடைந்தவர் கண்தானம் செய்ய உறுதிமொழி எடுத்திருந்தால் உடனடியாகக் கண் வங்கியைத் தொடர்பு கொள்ளலாம்.
ஒருவேளை உறுதிமொழி எடுக்கவில்லை என்றாலும் நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக எடுத்துக்கூறி, “அவர்களின் கண்களைத் தானம் அளிப்பதால், இரண்டு பேருக்குப் பார்வை கிடைக்கும்!”, என்று எடுத்துக் கூறி, அவர்களின் சம்மதம் பெற்று கண்வங்கியைத் தொடர்பு கொள்ளலாம்.

கண் வங்கி செயல்பாடுகள்:
கண் வங்கி என்பது ஒரு சமுதாய அமைப்பாகச் செயல்படுகிறது. இது கண்தானம் மூலம் பெறப்படும் கருவிழிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதித்து அதைக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யும் கண் மருத்துவமனைக்கு அனுப்புவார்கள்.

கண் வங்கிகளின் பணிகள்:
பயிற்சி பெற்ற மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்களைத் தானமாகப் பெற்றிட தயார் நிலையில் இருப்பர். தானமாகப் பெற்ற கருவிழிகளைப் பரிசோதனை செய்து அவற்றைத் தரம் பிரித்து வைப்பர்.
நல்ல நிலையிலுள்ள கருவிழிகளை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருக்கு அனுப்புவார்கள்.
மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாத கருவிழிகளைப் பல்வேறு புதிய ஆராய்ச்சிப் பணிகளுக்கும், கண்களைப் பதப்படுத்தல் குறித்த ஆராய்ச்சிக்கும், கருவிழி மாற்று அறுவை சிகிச்சை பயிற்சிக்கும் அனுப்பி வைப்பார்கள்.
மேலும் கண்தானம் செய்வது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல் கண் வங்கிகளின் பணியாகும்.

கண் வங்கியைத்
தொடர்பு கொள்ளுதல்:
கண் வங்கியைத் தொடர்பு கொண்டு மரண-மடைந்தவரின் பெயர், வயது, ஆண், பெண், மரணத்தின் காரணம், மரணமடைந்த நேரம், தற்போது உடல் இருக்கும் இடத்தின் முகவரி ஆகியவற்றுடன் தகவல் அளிப்பவரின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்கள் போன்ற விவரங்களை அளித்தால் உரிய நேரத்திற்குள் கண் வங்கி மருத்துவர் குழு வருகை தருவார்கள்.
இறந்தவரின் உடலில் இருந்து 6 மணி நேரத்-
திற்குள் கண்களை எடுத்து பாதுகாக்க வேண்டு-மென்பதால், இறந்தவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்குத் தொலைப்பேசி மூலம் தகவல் சொல்ல வேண்டும்.
இறந்தவரின் கண்களை மூடி, அதன் மேல்
ஈரப் பஞ்சை வைக்கலாம். உடல் வைக்கப்பட்டி
ருக்கும் அறையின் மின்விசிறியை நிறுத்திவிட வேண்டும்.

யார் யார் கண்தானம் செய்யலாம்?
கண் வங்கியிலிருந்து வீட்டுக்கே வந்து மருத்துவர் கண்களை எடுத்துச் செல்வார். கண் விழிப்படலத்தை எடுக்க 10 நிமிடங்கள் போதுமானது. கருவிழியை எடுத்தவுடன் முகம் விகாரமாகத் தோன்றாது. ஆண், பெண், சிறுவர், பெரியவர், கண்ணாடி அணிந்தவர், கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்தவர் என யார் வேண்டுமானாலும் கண்தானம் செய்யலாம். ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற இரண்டு கண்கள், பார்வை இழந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்படும்.
கண்தானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், ஆண், பெண், வயது என எந்தப் பாகுபாடும் கிடையாது.
கண்ணாடி அணிந்தவர்களும், கண்ணில் கண்
புரை நீக்க அறுவைச் சிகிச்சை (காட்ராக்ட்) செய்து
கொண்டவர்களும் கண்தானம் செய்யலாம்.
ஒருவரது மரணத்தின் பின்னணியில் ஏதேனும் தொற்று நோய்க் கிருமிகள், வெறி நாய்க்கடி, கல்லீரல் அழற்சி, கண்களில் புற்றுநோய், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புற்றுநோய் பரவிய நிலை, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்களது கண்கள் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
எனவே, கண்தானம் என்பது இறந்த பிறகும் நாம் செய்யும் மிகப்பெரிய மனிதநேயச் செயலாகும்! அதேநேரம் நாம் இறந்த பிறகும் இவ்வுலகை நம் கண்களால் ரசிக்க முடியும்-_ இப்படி கண்தானம் செய்வதன் மூலம்!
மண்ணுக்குள் போகும் கண்களை, மனிதர்களுக்
குக் கொடுத்து மகிழ்வோம் _ மகிழ்விப்போம்!