எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை III

2022 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை நவம்பர் 16-30 2022

வேதம் வருணம்
 மஞ்சை வசந்தன்

ஆரிய இனக்கோட்பாட்டின் மூலவர்கள் தங்கள் கருத்தை நிலைநாட்டும் அளவு மீறின ஆர்வத்தில், தாங்கள் நிரூபிக்க விரும்புவதை எப்படியும் நிரூபித்தாக வேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள்; இந்த முயற்சியில் தங்களுக்கு நல்லதென்று தோன்றும் சான்றுகளை வேதங்களிலிருந்து சிரமப்பட்டுப் பொறுக்கியெடுக்க அவர்கள் சிறிதும் தயங்கவில்லை.
அனுமானம் என்பது விஞ்ஞானத்துக்கு உப்பு போன்று ஜீவாதாரமானது’ என்று பேராசிரியர் மைக்கேல் ஃபாஸ்டர் ஒரு சமயம் குறிப்பிட்டார். அனுமானமில்லாமல் பயனுள்ள முறையில் எதையும் துருவி ஆராய்வது சாத்தியமல்ல. ஆனால் அதே சமயம் ஒரு குறிப்பிட்ட அனுமானத்தை எப்படியும் நிலைநாட்ட வேண்டுமென்ற ஆர்வம் கட்டுக்கடங்காத முறையில் மேலோங்கி இருக்குமானால், அப்போது அந்த அனுமானமே விஞ்ஞானத்துக்கு நச்சாக மாறிவிடுகிறது. ஓர் அனுமானம் எவ்வாறு விஞ்ஞானத்துக்கு விஷமாக மாறமுடியும் என்பதற்கு மேலைய ஆராய்ச்சியாளர்களின் ஆரிய இனக்கோட்பாடு ஒரு கண்கண்ட உதாரணமாக அமைந்துள்ளது.

ஆரிய இனக்கோட்பாடு மிகவும் அபத்த-மானது; ஆனால் பிராமண அறிஞர்களோ இந்தக் கோட்பாட்டை வெறுத்தொதுக்கு வதற்குப் பதிலாக, அதனை தலைமீது தூக்கிவைத்துக் கொண்டு போற்றிப் புகழ்கின்றனர். இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. பிராமணர்கள் இரு -தேசக் கோட்பாட்டை ஆதரிக்கின் றனர்; தங்களை ஆரிய இனத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் பாவிக்கின்றனர்; ஏனைய இந்துக்களை ஆரியரல்லாதவர்களின் வழித் தோன்றலாகக் கருதுகின்றனர். அய்ரோப்பிய இனங்களுடன் தங்களுக்குள்ள குருதித் தொடர்புடைய உறவை நிலைநாட்டிக் கொள்வதற்கும், அந்த இனங்களுக்குள்ள அகந்தையையும், அவர்களது மேம்பட்ட நிலையையும் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தக் கோட்பாடு பிராமணர்களுக்கு உதவுகிறது. ஏனென்றால் பிராமணரல்லாதார் மீது தங்களுக்குள்ள ஆதிக்கத்தை நிலைநாட்டவும், நியாயப்படுத்தவும் இது துணைபுரிகிறது.

ஆரிய இனக்கோட்பாடு மரிக்காததற்கு இரண்டாவது காரணம் வருணம் என்னும் சொல் நிறத்தையே குறிக்கிறது என்று அய்ரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக வலியுறுத்தி வருவதும், இந்தக் கருத்தை பெரும்பாலான பிராமண அறிஞர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதுமேயாகும். உண்மையில் இதுதான் ஆரிய இனச் சித்தாந்தத் தின் பிரதான ஆதார அடிப்படையாக அமைந்துள்ளது எனலாம்.
ஆரியர்கள் எத்தகைய நிறபாகுபாட்டைக் கைக்கொண்டார்கள் என்பதற்கு ஏதேனும் அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய வேதங்களை ஆராயும்போது ரிக்வேதத்திலுள்ள பின்கண்ட பகுதிகள் நமது கவனத்தை ஈர்க்கின்றன:
ரிக்வேதத்தில் 1.117.8. சியவியனுக்கும் ருஷாதிக்கும் அசுவினி தேவர்கள் திருமணம் செய்துவைத்த குறிப்பு காணப்படுகிறது. இவர் களில் சியவியன் கறுப்பு; ருஷாதி சிவப்பு.

ரிக்வேதத்தில் 1.117.5 பொன்னிற மேனியான வந்தனாவைக் காப்பாற்றியமைக்காக அசுவினி தேவர்களுக்குத் துதி பாடப்பட்டதாக ஒரு குறிப்பு இடம் பெற்றிருக்கிறது
ரிக்வேதத்தில் ii.3.9. ஓர் ஆரியன் சில குறிப்பிட்ட நற்குணங்களுடனும் சாம்பல் நிறத்துடனும் (பிசாங்கா) தனக்கு ஒரு குழந்தை பிறக்கவேண்டும் என்று தேவர்களிடம் வேண்டுதல் செய்வதாக குறிப் பிடப்பட்டிருக்கிறது.
வேதகால ஆரியர்கள் எத்தகைய நிறவேற்
றுமையையும் பாராட்டவில்லை என்பதை இந்த நிகழ்ச்சிகள் புலப்படுத்துகின்றன. அவர்கள் எப்படி நிறவேற்றுமையைக் கைக்கொள்ளமுடியும்? வேத கால ஆரியர்கள் ஒரே நிறத்தினர் அல்ல.
வருணம் என்னும் பதம் ரிக்வேதத்தில் 22 இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது. இவற்றில் 17 இடங்களில் உஷா, அக்கினி, சோமன் போன்ற தெய்வங்களைக் குறிப்பிடுவதற்கு இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; மனித ஜீவன்கள் சம்பந்தமாக இந்த சொல் ரிக்வேதத்தில் நான்கு இடங்களில், அதிகபட்சம் அய்ந்து இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவை வருமாறு:
1. i.104.2;
2. i.179.6;
3. ii.12.4;
4. iii.34.5;
5. ix.71.2;
வருணம் என்னும் சொல் ரிக்வேதத்தில் நிறம், மேனி வண்ணம் என்னும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் குறிப்புகள் மெய்ப்பிக்கின்றனவா?
ரிக்வேதம் வீவீவீ. 34.5 இவ்வகையில் அய்யத்துக்கிடமான பொருள் கொண்டதாக இருக்கிறது. ‘சுக்கில வருணம் அதிகரிப்பதற்கு வகை செய்தது’ என்ற வாசகம் இரட்டை அர்த்தம் கொள்ளக்கூடியதாக உள்ளது. இந்திரன் உஷாவை தனது ஒளியை வீசச்செய்து வெண்மை நிறத்தை அதிகரிக்கச் செய்தான் என்று பொருள் கொள்ளலாம்.
சூக்தத்திலுள்ள செய்யுளின் பிற்பகுதி பின் வருமாறு கூறுகிறது: ‘அவன் தனது கறுப்பு நிறத்தைக் களைந்து விட்டு, ஒளிவீசும் நிறத்தை மேற்கொள்கிறான்.’ இதிலிருந்து வருணம் என்னும் சொல் இங்கு கறுப்பு நிறத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.
ரிக்வேதத்தில் 1.179.6 என்னும் செய்யுட்பகுதி ஓரளவு உதவிகரமாக உள்ளது.

குழந்தைகளையும் சக்தியையும் பெறும் பொருட்டு அகஸ்திய முனிவர் லோபா முத்திரையுடன் கூடி வாழ்ந் தார் என்றும், இதன் விளைவாக இரண்டு வருணத்தினர் பிறந்தார்கள் என்றும் இந்தச் செய்யட்பகுதி கூறுகிறது. ஆரியர்களையும் தாசர்களையும் குறிப்பிடுவதே நோக்கமாக இருந்தபோதிலும் இதில் கூறப்படும் இரு வருணத்தார் யார் என்பதை இந்தச் செய்யுட் பகுதி திட்டவட்டமாக வெளிப்படுத்தவில்லை. இது எப்படியிருந்தபோதிலும் இந்த செய்யுட் பகுதியில் குறிப்பிடப்படும் வருணம் என்பது வகுப்பை குறிக்கிறதே அன்றி நிறத்தைக் குறிக்கவில்லை என்பதில் அய்யம் ஏதும் இல்லை .
ரிக்வேதம் i.104.2 மற்றும் ரிக்வேதம் ii.12.4. ஆகிய இரண்டு செய்யுட்பகுதிகளில்தான் தாசர்களைக் குறிப்பிடுவதற்கு வருணம் என்னும்
சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.