கவிதை : வரலாற்றை மீட்போம்!

2022 நவம்பர் 16-30 2022

முனைவர் கடவூர் மணிமாறன்

குடியாட்சி மாண்பினையே குழிக்குள் தள்ளிக்
குரைக்கின்றார்; குள்ளநரி அரிமா ஆகா!
விடியாது நற்பொழுது இவர்க ளாலே!
விலங்கனையார் பகுத்தறிவை இழந்த கூட்டம்
அடிமையென மக்களையே ஆக்கு தற்கே
ஆனவரை வரம்பிகந்து முயலு கின்றார்!
வெடிக்கின்ற புரட்சித்தீ பரவும் வேளை
வீணர்தம் வெறியாட்டம் அனைத்தும் ஓயும்!

கொஞ்சுகிறார் இந்தியினை! புதிய கல்விக்
கொள்கையிலே சமற்கிருதம் திணிக்க எண்ணும்
நஞ்சனைய செயல்களிலே நாட்டம் கொண்டார்!
நலிவுறுத்தும் ‘நீட்‘தேர்வை விலக்க எண்ணார்;
நெஞ்சத்தில் வஞ்சத்தைச் சுமந்து நிற்போர்
நெருப்பனைய நால்வருண மடமை தன்னை
அஞ்சாமல் நாடெங்கும் பரப்பு தற்கே
ஆர்வமுடன் பலவழிகள் தேடு கின்றார்!

மரபார்ந்த இந்நாட்டின் மக்கள் ஆட்சி
மாண்புக்கே உலைவைத்து மகிழு கின்றார்!
உரம்வாய்ந்த செந்தமிழை இனத்தை வீழ்த்த
ஒரேநாடு, ஒருமொழிஓ ராடை என்றே
கரவுடையார் வீண்முயற்சி கானல் நீரே!
காவியர்கள் ஒருபோதும் திருந்தார் போலும்!
இரவுபகல் மாறிவரும் இயற்கை; துன்பம்
இழைப்போரோ ஆடட்டும்! காலம் மாறும்!

ஆரியரும் சங்பரிவார் கூட்டத் தாரும்
அறிவினையே எவருக்கோ அடகு வைத்தார்;
நாரென்றும் மலராகா; நச்சுப் பாம்பை
நடுவீட்டில் வைப்பாரும் உளரோ? நாமும்
வீரியமாய்க் களம்காணும் வீறு கொள்வோம்;
வேண்டாத சாதிமத வெறியை வீழ்த்தி
நேரியநல் ஆட்சியினை மலரச் செய்வோம்;
நீண்டபுகழ் வரலாற்றை மீட்போம் நாமே!