முகப்புக் கட்டுரை: கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் முயற்சி!

2022 நவம்பர் 16-30 2022

மஞ்சை வசந்தன்

நேற்றிருந்த உலகம் இன்றில்லை; இன்றைய
உலகம் நாளை மாறும்; எதிர்காலத்தில் எல்லாமும்
புதிதாய் மாறும், வளரும், விரியும். உலகில் பரிணாமும் பரிமாணமமும் நடந்துகொண்டுதானிருக்கும். அப்படி நடந்தால் உலகு மாறும், உயரும், சிறக்கும். மக்களுக்கும் அதன்மூலம் அறிவு, திறன், ஆளுமை, வசதி வாய்ப்பு கூடும். புதியன கண்டுபிடிக்கவும், பயன்படுத்தவும் அதன்வழி மக்களின் வாழ்நிலைத்தரம், நோய்த்தடுப்பு, உயர்சிகிச்சை, தொழில்நுட்ப வளர்ச்சி, பாதுகாப்பு, வாகன வசதி, விரைவு, அறிவியல் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆய்வு என்று மேலும்மேலும் வளர்ச்சி பெற்று செல்ல பகுத்தறிவுடன் கூடிய கல்வி வளர்ச்சியும், சிந்தனைகளும், செயல் திட்டங்களுமே பயன்படும்.

மாறாத பழைய மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் அறிவியல் முலாம்பூசி, அவற்றையும் பாடத்திட்டத்தில் புகுத்துவது இதுவரை பெற்ற வளர்ச்சியைச் சிதைத்து மீண்டும் கற்காலத்திற்கு _ காட்டுமிராண்டிக் காலத்திற்குக் கொண்டு செல்லும். இதை “இந்திய மக்கள் மொழியியல் ஆய்வுக்கழகத்தின் தலைவர், தவே அவர்கள் கீழ்க்கண்டவாறு The Telegraph இதழில் அண்மையில் (11.11.2022) தெளிவுபடுத்தியுள்ளார்.
‘‘பா.ஜ.க.வின் ஆதிக்கத்தில் உள்ள ஒன்றிய கல்விக் கொள்கை உயர்கல்வி விதிமுறைகளை மாற்றியமைக்கும் செயல், உள்நோக்கத்துடன் புராதன இந்தியா குறித்தே பேசிக்கொண்டி-ருப்பது மற்றும் அதன் பண்பாட்டு அரசியல்-_ இவையாவுமே இந்தியாவை ஒரு ஞானபூமியாக மாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பையே காட்டுகிறது.

உலகம் இயங்கிவருவது பொதுவான உலக அறிவால். இந்த பொதுவான உலக அறிவும், சமஸ்கிருத அறிவு உலகமும் ஒன்றல்ல. இரண்டிற்கும் உறுதியான இணக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. இந்தப் புரிதல் ஏற்படும் வரை ஒன்றிய அரசின் எந்த ஒரு தீவிர முயற்சியும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். முடிவும் விருப்பத்திற்கு நேர் எதிராகவே இருக்கும் என்பது உறுதி. பி.ஜே.பி.யின் பிடிவாதமான தொடர் முயற்சியால் இந்தியா அறிவாண்மைக்கு எதிரான நாடாகவே மாறிவிடுவது கட்டாயமாகி விடக்கூடும்.
மானுட வரலாறு சொல்வது என்ன? உலகைப் புரிந்துகொள்ள மனிதன் பல்வேறு வழிகளை மதிநுட்பத்துடன் பின்பற்றி வந்துள்ளான். உலகின் பொதுவான இயல்பு
களையும் அவற்றின் மூலப்பொருளை-யும் பலவிதங்களில் புரிந்துகொண்டுள்ளான். காலப்போக்கில். பழங்கால எகிப்தியரின் சித்திர எழுத்துகளாகட்டும், முக்கோணக் கணித-மாகட்டும்_ அவற்றை மனிதன் பலவிதங்களில் முயன்று புரிந்துகொண்டுள்ளான்.

வரலாற்றின் இடைக்காலத்தில் (1100-_1500) அய்ரோப்பியாவில் ஒரு வகையான மர்மமொழி புழக்கத்தில் இருந்தது. அதையும் மனிதன் புரிந்துகொண்டுள்-ளான். அனுபவ முதிர்ச்சி பெறுவதும் அவற்றை அடுத்த தலைமுறைகளுக்குப் பரிமாற்றுவதும் மனிதனின் நோக்கமாக இருந்தது. அவன் கற்றவையாவுமே உயிரோட்டம் பெற்று பரவிப் படர்ந்தன. இதற்கென மனிதன் கையாண்ட வழிகளும் முறைகளும் சிறப்பானவை.
மனிதன் கற்றுக்கொண்டதையெல்லாம் பாதுகாத்து அடுத்துவரும் தலைமுறையினருக்கு வழங்கவேண்டும் என்ற ஆவல் பலருக்கும் ஏற்பட்டது. அதன் ஒரு விளைவாக 17-ஆம் நூற்றாண்டில் Gottfried wilhelm leibnizஷ் என்னும் ஜெர்மானிய அறிஞர், ‘பரிசுத்தமான மொழி’ என்ற ஒன்றை உருவாக்கி அறிமுகப்படுத்தினார். மறைமுகக் குறிப்புகள் மட்டுமே கொண்ட அந்த மொழி புறஉணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அமைந்திருந்தது. நிலையான பொருள் தரக்கூடியதாகவும் முழுமொழியாகவும் இருந்தது. இந்த வகையில் படிப்படியாக மனிதனின் அறிவாற்றல் வளர்ந்து வந்துள்ளது.

வரலாற்றின் பயணத்தில் லத்தீன் மொழி பயன்பாட்டிலிருந்து, நவீன அய்ரோப்பிய மொழிகளின் பயன்பாடு வரை மனிதன் கடந்து வந்துள்ளான். அகஉணர்வுகளையும் புற உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கேற்ற மொழியை உருவாக்க விரும்பினான் மனிதன். அறிவை வெளிப்படுத்த குறியீட்டு மொழி ஒன்றை உருவாக்கும் வேட்கை அவனை ஆட்கொண்டது. இதன் விளைவாக அய்ரோப்பிய அறிஞர்கள் காலப்போக்கில் “உலகளாவிய அறிவியல்’’ என்ற பெயரில் கருத்துப் பரிமாற்ற வழி ஒன்றை உருவாக்கினர். இது பரவலாக அனைவராலும் ஏற்றுக்-கொள்ளப்பட்டது.

1582ஆம் ஆண்டில் Giordano Bruno என்னும் அறிஞர், நம் எண்ணங்களையெல்லாம் எளிதாக குறியீடுகளுடன் இணைத்து ஏராளமான உலக அறிவு மனின் சிறிய நினைவாற்றலுக்குள் அடங்கும் வகையில் ஒரு மொழியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.
1675ஆம் ஆண்டில் ஜெர்மானிய அறிஞர் Leibniz “தர்க்கரீதி கணிப்புகள்’’ (Logical Calculi) என்ற பெயரில் தன் ஆய்வு முடிவை அறிவித்தார். “எல்லோருடனும் இணக்கம் கொண்டிருத்தலே நாம் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம்’’ என்ற முதுமொழியை அவர் உலகறியச் செய்தார். (“ஊருடன் ஒத்து வாழ்’’ என்று நாம் சொல்வது போல்), இவருடைய அந்த “தர்க்கரீதி கணிப்புகள்’’ இந்த முதுமொழியின் அடிப்படையில்தான் அமைந்திருந்தன.

ஏறத்தாழ நூற்றிஅய்ம்பது ஆண்டு கால வரலாற்றுப் பாதையில், Bruno முதல்
Leibniz  என்னும் அறிஞர்களின் காலகட்டத்தில் அய்ரோப்பா மனித மனங்களின் ஆற்றலை புதிய பார்வையில் புரிந்துகொண்டது. பல்வேறு எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் சுருக்கி ஓர் இணக்கமுள்ள புரிதலாக்கிக்-கொள்ளும் ஆற்றல் மனித மனங்களுக்கு இருப்பதை அய்ரோப்பிய அறிஞர்கள் உலகறியச் செய்தனர். தத்துவ ரீதியாகச் சொல்லப்போனால் அந்த ஆற்றலுக்குப் பெயர்தான் ‘பகுத்தறிவு’.
1596-_1650 காலக்கட்டத்தில் வாழ்ந்த அய்ரோப்பிய அறிஞர் Rene Descartes என்பவர் “என்னால் சிந்திக்க முடிகிறது. எனவே நான் இருக்கிறேன் என்பதும் உண்மையாகிறது’’ (I think, therefore I am) என்றார். அய்ரோப்பாவிலிருந்து

இந்த ஆழமான கருத்து உலகெங்கும் பரவிற்று. பகுத்தறிவுயின் அடிப்படையாகவே இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பகுத்தறிவே மனிதனின் அடையாளம் என்பதே அவர் கூறியதன் மய்யக்கருத்தும் பொருளும். மனிதனின் அறிவாற்றல் முழுவதற்கும் பகுத்தறிவே அடிப்படையாக இருக்கவேண்டும் என்ற பாடத்தை அய்ரோப்பிய நாடுகளுக்கு போதித்தவர்கள் ஙிக்ஷீuஸீஷீ, லிமீவீதீஸீவீக்ஷ் மற்றும் அவர்களுடைய சமகால அறிஞர்கள். அறிவை நீடித்து நிலைக்கச் செய்யும் மார்க்கமாக பகுத்தறிவை நாளடைவில் உலகமே ஏற்றுக்-கொண்டது.

சிந்தனைகளை வகைப்படுத்திப் பிரித்து சேமித்துப் பாதுகாக்கும் இந்த அய்ரோப்பியக் கலையின் வரலாறு இந்தியாவையும் கவரக்-கூடியதே என்றால் மிகையாகாது. பரம்பரை பரம்பரையாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட அறிவு, குறுகிய சமுதாய வட்டங்களோடு மட்டுமே இருந்துவிடாமல், மேலும் மேலும் பரவலாக்கப்பட்டு, உலகம் முழுவதற்கும் பயன்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள் உலகம் முழுவதும் அதைத்தான் செய்துகொண்டி-ருக்கின்றன; செய்யவும் வேண்டும். பகிர்ந்துகொள்ளப்பட்டு பரவேண்டியதே அறிவு, அது வெளிப்படாமல் மனிதனின் சிந்தனைக்கு கொண்டு வரப்படாமல் மறைந்துகிடப்பதால் உலகிற்கு என்ன பயன்?
மனித அறிவு வகைப்படுத்தப்பட்டு அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கவேண்டும் என்பதையே இந்த வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது. மனிதனின் நினைவகத்திலேயே அறிவு புதைந்துகிடக்காமல், உலகைச் சென்றடையும்படி, ஓர் உந்துதலால், ஏவுகணையின் வீச்சுபோல் அது வெளிப்பட வேண்டும். நினைவகத்தில் சேகரிக்கப்பட்டுக் கிடக்கும் அறிவு வெளிப்பட்டு அனைவருக்கும் பயனளிக்க வேண்டும்.

நம் நாட்டின் பழக்க வழக்கங்களின்படி கற்றலில் நினைவாற்றலுக்கு தொடக்க காலங்களிலிருந்தே முக்கியத்துவம் உள்ளது. நினைவாற்றல் பற்றிய ஆய்வில் பொதுவாகவே ஆர்வம் அதிகமாக இருந்து வந்துள்ளது.
பண்டைய இலக்கியங்களிலும் தொன்மை
யான புராணங்களிலும் முக்கியமான
பாத்திரங்களின் பெயர்களையும் நிகழ்வு
களையும் வாசகர்கள் மறந்துவிடாமல் இருக்க சில யுக்திகளையும் அவற்றைப் புனைந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிஸெரோ (Cicero) என்பவர் ரோமாபுரி காலத்து அறிஞர். சிறந்த சொற்பொழிவாளர். எது ஒன்றும் மறந்துவிடாமல் நம் நினைவில் நிற்க சில குறுக்கு வழிகளை அவர் மக்களுக்குக் கற்றுத் தந்தார். அவரும் அத்தகைய யுக்திகளைப் பயன்படுத்தி எதுவும் மறக்காமலிருக்கும் படியான ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

நினைவமுறை புரிந்துகொள்வதால் இருந்தது. குருவிடம் கற்றுக்கொண்டதை அப்படியே சிஷ்யர்கள் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் முறையே இந்தியாவில் கல்வி கற்கும் முறையாக வரவேற்பைப் பெற்றது. பண்டைய புராணக்கதைகளிலிருந்தும் சாஸ்திரங்களி லிருந்தும் வரிகளை ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க மட்டுமே மனிதனின் நினைவகம் பயன்படும் அவலநிலை இப்படித்தான் ஏற்பட்டது. அகஉணர்வுகளே அறிவின் தொடுவான எல்லை என்றாகி-விட்டது-_ இந்தியாவில் இத்தகைய குருகுலக் கல்வி முறையால். குருகுல மரத்தடியே பயிற்சிப்பட்டறை என்றாகிவிட்டது. இந்தியா
வில் நிலவிய வருத்தத்தக்க நிலை இது.

கல்வி உலகில் இது மிகப்பெரிய சவாலாயிற்று. நிலைமை மிகவும் மோசமான-தற்கு ஜாதிப் பாகுபாடுகளும் ஆண்_ பெண் என்னும் பால் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளும் காரணம். ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கும், பெண்களுக்கும் மறுக்கப்பட்டது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த அவலம் இந்திய சமுதாயத்தைச் சீரழிக்கத் தொடங்கியது. இது இன்றோ நேற்றோ ஏற்பட்ட பாதிப்பு அல்ல.
ஆணையும் பெண்ணையும் பிரித்துப் பார்க்கும் சமத்துவமற்ற கண்ணோட்டமும், ஜாதி, இனம் சார்ந்த பாகுபாடுகளும் ஓர் உலகளாவிய அறிவியல் உருவாகாதபடி முட்டுக்கட்டை போட்டுவிட்டது என்றே கூறலாம். குரு_ சிஷ்ய பயிற்சிப்பட்டறை பாணி கல்வி முறையால் தரமான கல்வியும் சரியான வழிமுறைகளும் தடைப்பட்டன.

மனப்பாடம் செய்யும் திறன் தான் மனதில் அறிவைப் பாதுகாத்து வைத்திருக்க உதவும் கருவியாக இங்கு இருந்து வருகிறது. எதையும் அப்படி நினைவில் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கவில்லை. ஜாதிப் பாகுபாடு கற்றலுக்கு மிகப்பெரிய தடையாயிற்று.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இருவகையான நினைவாற்றல் சார்ந்த பிரிவினர் இருந்தனர். எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களின் நினைவாற்றலும், கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் நினைவாற்றலும் தான் அந்த இரண்டு வகைகள். அறிவு பரிமாற்றலுக்கான வாய்ப்பு இல்லாத நிலை நீடித்தது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஒடுங்கி, அடங்கிப்போக நேரிட்டது.
பல்வேறு கற்றல் முறைகள் இருந்தாலும் அவற்றை வகைப்படுத்திப் பிரித்து முழுமையாகப் பயன்படுத்தும் நிலை இந்தியாவில் முழுமையாக வரவில்லை.

உலகளாவிய அறிவு என்னும் சாதனையை நிகழ்த்த இந்தியா கடந்த இரு நூற்றாண்டுகளாக முயன்று வந்தும் முழுப் பயனில்லை. 19ஆம் நூற்றாண்டில் சமூகத்தை நவீனப்படுத்தும் முயற்சி நடந்து. உலகளாவிய அறிவியலை உருவாக்க ஆய்வுகள் நடந்தன. மகளிருக்கு கல்வி வழங்குவதே மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. கெடு வாய்ப்பாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் நூலை பின்னோக்கிச் செல்கிறது. நூற்றைய்ம்பது ஆண்டுகளுக்குப்பின், பா.ஜ.க.வின் கல்வித் திட்டம் “சனாதனக் கல்வி’’ முறைக்கு முக்கியத்துவம் அளித்து அதை கவுரப்படுத்தும் செயலில் இறங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். “மேற்கத்திய அறிவால் நாட்டில் மாசு படர்ந்துவிட்டது” என்று புலம்பி வருகிறது. பா.ஜ.க. விஞ்ஞானிகளைப் பழங்கால கோட்டுபாடுகளின் பக்கம் திசை திருப்பி என்றோ மறக்கப்பட்ட சங்கதிகளை மறுபடியும் நினைவுபடுத்திக்கொள்ள வற்புறுத்தி வருகிறது. நாட்டை பின்னோக்கிப் பார்க்கச் சொல்கிறது பா.ஜ.க. பிற்போக்குத்தனமான செயல்களால் பலவிதமான குழப்பங்கள் இன்று ஏற்பட்டுள்ளன.

பா.ஜ.க.வுக்குத் துணைபோகும் சில பல்கலைக்-கழகத் துணைவேந்தர்களும், பாடத்திட்டக்குழு உறுப்பினர்களும் இந்த பிற்போக்குச் சிந்தனைகளுக்கெல்லாம் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். தங்கள் சுயநலத்திற்காகவும் ஆதாயங்களுக்காகவும் இவர்கள் பா.ஜ.க.வின் தவறான திட்டங்-களையும் முறைகேடான செயல்களையும் வரவேற்று அவற்றுக்காக பிரச்சாரமும் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
பா.ஜ.க.வின் புதியக் கல்த்¢த் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நம் நாடு அறிவாற்றலுக்கு எதிரான (anti-knowledge nation) நாடாகி விடும் அபாயம் உள்ளது. அந்த அவல நிலை ஏற்பட நீண்ட காலம் ஆகாது.

பல்கலைக்கழகங்கள் மீது பா.ஜ.க.வின் புதியக் கல்வித் திட்டம் திணிக்கப்பட்டால், பழமையாகிப்போன எல்லாவற்றையும் அவை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட்டால், அர்த்தமுள்ள கேள்வி எதையும் எவரும் கேட்கவே முடியாத நிலைதான் ஏற்படும். பல்கலைக்கழகங்கள் இருப்பதே கேள்வி கேட்கும் மனநிலையையும் துணிவையும் வளர்ப்பதற்குத் தான். இந்தத் தலையாயப் பணி பா.ஜ.க.வின் சனாதனக்கல்வி மூலம் முற்றிலும் பாதிக்கப்படும்.

தவே அவர்கள் மேலே கூறியுள்ளவை மிகவும் சரியானவை. ஒன்றிய பி.ஜே.பி. அரசு பழைய குருகுலக் கல்விமுறை, பழைய வேதம், ஸ்மிருதி, சாஸ்திரம் இவற்றை மாணவர்கள் கற்க வேண்டும் என்று கூறி கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சிகள், இந்தியாவை, அதன் மக்களை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நிலைக்குக் கொண்டு செல்வதோடு, மக்களின் உரிமை, வளர்ச்சி, உயர்வு, வசதி வாய்ப்பு, உலகநாடுகளுடன் போட்டியிட்டு முன்னேறும் முனைப்பு இவைகளையெல்லாம் தகர்த்துப் பாழாக்கிவிடும்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சிகளைப் பொறுத்தவரை இந்தியா எப்படி ஆனாலும், மக்கள் எப்படிக் கெட்டாலும் கவலையில்லை; வர்ணாஸ்ரம, சனாதன தர்மங்களை நிலைநிறுத்தி, ஆரிய ஆதிக்கத்தை மேலாண்மையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களின் ஒரே இலக்கு. இந்த இலக்கை அடைய, உலக நாடுகளின் போக்குகளுக்கு எதிரான, முரணான கொள்கைளைச் செயல்படுத்த முனைகிறார்கள்.
கருநாடகாவில் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சி பொறியியல் படிப்புகளில் வாஸ்து சாஸ்திரம் அறிமுகம்.
கட்டடக் கலை மற்றும் பொறியியல் படிப்புகளில், அடுத்த கல்வியாண்டு முதல் ‘வாஸ்து சாஸ்திரம்’ பாடத்திட்டத்தைக் கொண்டு வர கருநாடக அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய பொதுப்பணித் துறை அகாடமி, கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், தோட்டக்கலை வல்லுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வாஸ்து சாஸ்திரம், அதன் தத்துவம், முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே இரண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளது.
மூன்றாவது முறையாக வரும் 17ஆம் தேதி பெங்களூருவில் ‘ஆன்லைனில் பயிற்சி வகுப்பை நடத்துகிறது.
மத்திய பொதுப்பணித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “‘வாஸ்து’ நல்வாழ்வை உறுதிப்படுத்த நல்லது என்று கருதப்படுகிறது. பொறியாளர்கள் இதுவரை படித்து வரும் புத்தகங்கள், மேற்கத்திய நாடு
களைச் சேர்ந்த ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. அவர்களுக்கு வாஸ்து மீது நம்பிக்கையில்லை.

இதுவரை பாடத்திட்டத்தில் இதைக் கொண்டு வரவில்லை. ஆனால், தற்போது அதிகரித்து வரும் தேவை கருதி, அடுத்த கல்வியாண்டில் இந்தப் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறோம்.’’ இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா கூறுகையில், “அடிப்படைப் பாடங்கள் கட்டாயமாக இருக்கும். மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒருங்கிணைந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வாஸ்து சாஸ்திரம் விருப்பப் பிரிவில் இருக்கும்’’ என்றார்.

அரசு பொதுப்பணித்துறையில்
17ஆம் தேதி முதல் வாஸ்து பயிற்சி
அடுத்த ஆண்டு பொறியியல் படிப்பில் வாஸ்து பாடம் சேர்க்க அறிவிப்பு வெளியான நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கட்டடக்கலை, தோட்டக்கலைத்துறை, கழிவுநீர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் இந்தத் துறையில் பயிற்சி எடுப்பவர்களுக்கு வரும் நவம்பர் 17 ஆம் தேதி முதல் இணையவழி வாஸ்து வகுப்புகள் கொடுக்க கருநாடக மாநில பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

வாஸ்து பயிற்சி தொடர்பாக கருநாடக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நமது பாரம்பரிய வாஸ்து சாஸ்திரம் கட்டடம் மற்றும் வீடுகளுக்கான அழகுபடுத்துதல் மற்றும் தோட்டக்கலைக்கு மிகவும் முக்கியமானது. அனைவருமே இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், மனிதர்கள் நாகரிகமடைவதற்கு முன்பிருந்தே வாஸ்துசாஸ்திரத்தில் வீடுகள் எவ்வகையில் கட்டவேண்டும், எப்படி இருக்கவேண்டும் என்ற பல நுணுக்கங்கள் உள்ளன. இதற்கான கைதேர்ந்த வாஸ்து நிபுணர்களை வரவழைத்து, பயிற்சி நடத்தப்படும் என்றும் கூறுகின்றனர்.

இந்திய முற்போக்கு அறிவியல் அமைப்பின் கருநாடகப் பிரிவு அதிர்ச்சி.
இது தொடர்பாக கருநாடக முற்போக்கு அறிவியல் அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘‘அரசின் இந்த நடவடிக்கை மிகவும் பிற்போக்குத்தனமான ஒன்று ஆகும். வாஸ்து சாஸ்திரம் என்பது எந்த ஓர் அறிவியல் ஆதாரமும் இல்லாதது, அதற்கென்று ஒரு விதிமுறைகள் கிடையாது. அதைக் கற்றுத்தருபவர்கள் என்ன படித்திருக்கிறார்கள்? அவர்கள் பொறியாளர்களா? ஜோதிடர்கள் எப்படி அரசு சம்பளத்தில் வாஸ்து சொல்லித் தருவார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

வாஸ்து சாஸ்திரத்தில் அதிர்ஷ்டம், கெட்டது, தங்கம் வரும், இறப்பு உண்டு, கஷ்டம் வரும். பாம்பு பல்லி வரும், பேய் வரும் என்றெல்லாம் உள்ளது. அதே நேரத்தில் கழிப்பறைகள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் இல்லை. அப்படி இருக்கும்போது அரசு எதை வைத்து வாஸ்து சாஸ்திரத்தை அதிகாரிகளுக்குச் சொல்லிக் கொடுக்கப் போகிறது என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும் அரசின் இந்த அறிவிப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு விதி 51ஏ பிரிவிற்கு எதிரானது என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

வாஸ்து அறிவியலா?
கட்டடத் தொழில்நுட்பத்திற்கு நேர் எதிரானது வாஸ்து. கட்டடங்களே கட்டத் தெரியாத காலத்தில் குடிசையில் மனிதன் வாழ்ந்த காலத்தில் உருவாக்கப்பட்ட வாஸ்துவை கட்டட அறிவியல் என்பது கண்டிக்கத்தக்க கருத்தாகும்.
வர்ணாஸ்ரம அடிப்படையில், வீடு கட்டும் நிலத்தைத் தேர்வு செய்து வீடுகட்ட வேண்டும் என்று கூறும் வாஸ்து, எப்படி கல்வித் திட்டத்தில் சேர்க்கப்படத் தகுதியுடையதாகும்?
பிராமணர்கள் இனிப்புச் சுவையுள்ள மனையில்
வீடு கட்ட வேண்டும்; சூத்திரர்கள் உவர் மண்ணில் வீடுகட்ட வேண்டும் என்ற கொடுமையான, அநீதியான, மனித நேய மற்ற கோட்பாடுடைய வாஸ்துவை கல்வி நிலையங்களில் கற்பிக்க
முற்படுவது காட்டுமிராண்டி காலச் செயல்பாடாகும். உலக நாடுகள் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்
களா?

சோதிடக்கல்வி
சோதிடத்தை அறிவியல் என்று பா.ஜ.க. அரசு ஏற்று, அதைப் பாடமாக்கி, மாணவர்களுக்குக் கற்பிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். இது அறிவியலுக்கு எதிரான கருத்துகளை மாணவர்களிடையே புகுத்தி, அறிவியலுக்கும், போலி அறிவியலுக்கும் வேறுபாடு அறியாது மாணவர்களை குழப்பநிலைக்குக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சூரியன் நிலையாக நின்று தன்னைத்தானே சுற்றக்கூடியது. அப்படிப்பட்ட சூரியன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வதாய் சோதிடம் சொல்கிறது.
கோள்களுள் ஒன்றான பூமியை ஜோதிடத்தில் சேர்க்கவில்லை.
சோதிடம் உருவாக்கப்பட்டபோது உலகு அறியாத புதிய கோள்கள்(கிரகங்கள்) புதிதாய்
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும்
கண்டுபிடிக்கப்படாத கோள்கள் இருக்க வாய்ப்புண்டு. உண்மை இப்படியிருக்க, அறிவிய
லுக்கும், அண்டவெளிக் கோட்பாடுகளுக்கும் எதிரான கருத்துடைய சோதிடம் எவ்வாறு அறிவியலாகும்?
ஒன்பதுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட பின் ஒன்பது கோள்களை வைத்துக் கூறப்படும் சோதிடம் எப்படி உண்மைக்கும், அறிவியலுக்
கும் ஏற்புடையதாகும்?அறிவியல் வல்லுநர்கள் தீர்மானிக்க வேண்டிய, அறிவியல் பாடத்திட்
டத்தை ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் தீர்மானித்தால் கல்வி என்னாகும்? பெற்றோர், ஆசிரியர், மாணவர், கல்வியாளர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டிய, கண்டிக்க வேண்டிய செயல் இதுவாகும்.

புராணச் செய்திகளை அறிவியலாக்கும்
ஆர்.எஸ்.எஸ்.
வினாயகருக்கு யானைத்தலை வந்தது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைப்படி என்றும், இன்றைய மருத்துவத்துறைக்கு இந்து மதமே முன்னோடி என்றும் கூறிகின்றனர்.
காந்தாரி கருக்கலைந்தபோது 100 கலயங்களில் அந்தக் கருச்சிதைவு இரத்தத்தைச் சேர்த்துவைத்தனர். அதில் 100 பிள்ளைகள் பிறந்தனர். குளோனிங் அறிவியலுக்கு இது முன்னோடி என்கின்றனர்.
இப்படிப்பட்ட அறிவுக்கொவ்வாத உளறல்
பேர்வழிகளிடம் கல்வித்துறையும், மாணவர்களும் சிக்கிச் சீரழியும் நிலை அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தங்களது மத நம்பிக்கைகளை யெல்லாம் கல்வித்துறையில் புகுத்தி, கல்வி நிலையங்களை காவி நிலையங்களாக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் முயற்சிகள் உடனே கைவிடப்பட வேண்டும். இல்லையென்றால், நாடு தழுவிய அளவில் பெற்றோர், ஆசிரியர், மாணவர் போராட்
டம் பெரும் வீச்சில் எழும். எச்சரிக்கை!